valam tharum vallal

valam tharum vallal
shri shird sai baba

Thursday 14 December 2017

ஷீர்டி சாயி சத்சரிதம்

ஆயினும், இதுவும் மக்களுக்கு போதனை அளிப்பதற்காகவே தாமே முன்மாதிரியாக இருந்து, பாபாவால் செய்துகாட்டப்பட்டது. அதிதியை (விருந்தாளியை) அழைக்காமல் உணவுண்பது என்பது நற்செயல் அன்று, என்பதை பாபா செய்முறையால் மற்றவர்களுக்கு உணர்த்தினார்.

எந்த ஆபத்தும் வராமல் தடுத்துக் காப்பாற்றக்கூடிய இந்த சாஸ்திர விதி இல்லறத்தாருக்கே நியமிக்கப்பட்டிருக்கிறது. ஆயினும், இந்த விதியை பாபா எந்நாளும் மீறியதில்லை; குற்றமேற்படாத வகையில் அனுசரித்தார்.

அதிதிகளை வணக்கமாகவும் மரியாதையுடனும் நடத்துவதால் இஷ்டப்பட்டவை கிடைக்கின்றன; விரும்பத்தகாத நிகழ்ச்சிகள் விலகுகின்றன. அதிதிகளை புறக்கணித்தால் தீமை விளையும். ஆகையினால், நல்லொழுக்கமுடைய மேன்மக்கள் அதிதிகளை தேவர்களாகக் கருதி பூஜை செய்கின்றனர்.

அதிதிக்கு போஜனமளிக்காது விட்டுவிடுவது, பசு, புத்திரன், தானம், தானியம் இவற்றின் நாசத்திற்கு அறிகுறியாகும். அதிதியைப் பட்டினி கிடைக்க விடுவது, கெடுதல்களுக்கு அழைப்பு விடுவதாகும்.

சாயி பாபா தினமும் படே பாபாவுக்கு ஐம்பது ரூபாய் தக்ஷிணை கொடுத்து அவர் பிரிந்து செல்லும்போது நூறு அடிகள் அவருடன் கூட நடந்து செல்வார்.

இந்த படே பாபாவின் வாயில் இருந்துதான், ஆட்டுக்கடாவை வெட்டச் சொன்னபோது, "காரணமில்லாமல் எதற்காக கொல்ல வேண்டும்" என்ற சால்ஜாப்பு பளிச்சென்று வெளிவந்தது.

மாதவராவும் அப்பொழுது அங்கே இருந்தார். ஆகவே, பாபா அவருக்கு ஆணையிட்டார். "சாமா, நீயாவது சடுதியாகச் சென்று ஆட்டை வெட்டுவதற்கு ஒரு கொடுவாளைக் கொண்டு வா; சீக்கிரமாகப் போ".

பயமில்லாத பக்தராகிய சாமா, ராதாகிருஷ்ண பாயியிடமிருந்து ஒரு கத்தியை வாங்கி கொண்டுவந்து பாபாவின் எதிரில் வைத்தார்.

வெட்டுக்கத்தியை கொண்டுவருவதென்பது மாதவராவுக்கு மனவேதனை அளிக்கும் செயல்தான். ஆயினும், மாதவராவ் வெறுங்கையுடன் திரும்பிவருவதை பாபா விரும்பி இருக்கமாட்டார்.

இதனிடையே, செய்தி ராதாகிருஷ்ண பாயியின் செவிகளை எட்டியது. அவர் தயையால் உந்தப்பட்டுக் கத்தியை உடனே திரும்பப் பெற்றுக் கொண்டார்.

மாதவராவ் வேறொரு கத்தி கொண்டுவருவதற்காக மறுபடியும் கிளம்பினார். ஆனால், தம் கையால் ஆடு கொல்லப்படுவதை தவிர்ப்பதற்காக, இம்முறை வாடாவில் கொஞ்சநேரம் தலைமறைவாக உட்கார்ந்து தாமதம் செய்தார்.

காகாவின் மனதை சோதிப்பதற்காக பாபா ஆருக்கு ஆணையிட்டார், "போங்கள், ஆட்டை வெட்டுவதற்கு ஒரு வெட்டுக்கத்தி கொண்டு வாருங்கள். வேதனையிலிருந்தும் வெளியிலிருந்தும் ஆட்டிற்கு முக்தி அளித்து விடுங்கள்".

காகா (ஹரி சீதாராம் தீக்ஷிதர்) சொக்கத்தங்கம் என்பது பாபாவுக்கு நன்கு தெரியும். ஆயினும் புடம்போட்டு எடுக்காவிட்டால் மக்கள் நம்பமாட்டார்களே!