valam tharum vallal

valam tharum vallal
shri shird sai baba

Thursday 14 July 2022

 ஷீர்டி சாயி சத்சரிதம்


தேவையானவை என்னவென்றால், கடமையைச் செய்தும் தூய்மை தரும் சடங்குகளை செய்தும் கிடைக்கும் பலமும், பிறந்ததிலிருந்தே செய்யும் ஆன்மீக அப்பியாசங்களால் விளையும் விவேகபுத்தியுந்தான்.  பயிற்சின்றி சித்தம் சுத்தமடையாது; மனம் தூய்மையடையாது; ஞானம் பிறக்காது.

நிர்மலமான சித்தத்தை விருத்தி செய்துகொள்ளாவிட்டால் ஆத்மஞானம் பிறக்காது. ஆகவே, தன்னை அறிந்த நிலையை அடையும்வரை பக்திமார்க்கத்தை கைவிடலாகாது.

நான்கு முக்திநிலைகள் என்னும் கலசங்களுக்குமேல் துறவென்னும் கொடி உயரப் பறக்குமாறு ஆத்மஞானமாகிய கோயிலை எழுப்புவதற்கு  பகவானின்மீது பக்தியென்பதே அஸ்திவாரம்.

நாய்களும் பன்றிகளும் மலத்தைத் தின்றுவிட்டு இரவுபகலாக குப்பைமேட்டில் புரளுகின்றன. அவையும் விஷயபோகங்ளை அனுபவிக்கின்றன. மனிதப்பிறவி எடுத்த பிறகும் நாம் அவற்றைப் போலவே செயல்படுவது முறையா?

மனித தேகத்தில் வாழும்போது, கடமைகளைச் செவ்வனே செய்தும் சுயதர்ம அனுஷ்டானங்களை செய்தும் தவம் செய்தும் மனத்தைத் தூய்மைப்படுத்திக்கொள்ள வேண்டும். தூய்மையான மனம் அகண்டமான பிரம்ம சித்தியை அளிக்கும்.

'சாதுக்களுக்கு சேவை செய்வது முக்தி மார்க்கத்தின் வீடு; சிற்றின்பம் நரகத்தின் நுழைவாயில்'. பூஜைக்குரிய ஆன்றோர்களின் இந்த வாக்கு எப்பொழுதும் சிந்தனையில் வைக்கத்தக்கது.

எப்பொழுதும் நன்னெறியில் நடந்து உயிரைக் காப்பதற்கு மட்டும் உணவுண்டு வீடும் குடும்பமும் வேண்டாவென்று ஒதுக்கி வாழும் சாது தன்னியராவார்.

எவர்களெல்லாம் கண்களையும் சிமிட்டாமல் சாயியைபற்றிச் சிந்தனை செய்கிறார்களோ, அவர்களெல்லாம் அற்புதமான அனுபவத்தைப் பெறுகிறார்கள். அவர்களிடம் விசுவாசம் ஏற்பட்டு ஏற்பட்டு சாயி அவர்களின் மேல் தியானம் செய்கிறார்.

குரு நாமஸ்மரணம்  மகத்தான முக்கியத்துவம் வாய்ந்தது. ஏனெனில், குருவும் பக்தஸ்மரணம்  செய்கிறார்! தியானம் செய்பவர், தியானம் செய்யப்படுபவருடன் ஒன்றிவிடுகிறார்! இருவரும் பூரணமாகத் தம்மை மறந்துவிடுகின்றனர்.

'நீங்கள் என்ன செய்கிறீர்கள் என்பது உங்களுக்குத்தான் தெரியும். நானோ இரவுபகலாக உங்களையே நினைத்துக்கொண்டிருக்கிறேன்." இது பாபாவின் பிரேமை பொதிந்த திருவாய்மொழி; பலருக்கு ஞாபகமிருக்கும்.

நமக்கு ஞானக்கதைகள் ஏதும் வேண்டா. இந்த சாயியின் போதியே (தினமும் பாராயணம் செய்யும் நூலே) நமக்குத் போதுமானது. எத்தனையோ பாவங்கள் நம் தலையில் இருந்தாலும் சங்கடங்களிலிருந்து விடுவிப்பவர் அவரே.

தினமும் முழுமையாகப் பாராயணம் செய்யமுடியாவிட்டாலும், குருபக்தி சம்மந்தப்பட்ட அத்தியாயங்களையாவது தினமும் காதால் கேட்டு இதயத்தின் ஆபரணமாக அணிந்துகொள்ள வேண்டும்.

ஒரு நாளின் எப்பகுதியிலாவது தினமும் இந்தச் சரித்திரத்தைப் படிப்பவருக்கு ஸ்ரீஹரி குருராஜருடன் சேர்ந்து காட்சியளிப்பார்.