ஷீர்டி சாயி சத்சரிதம்
"தாங்கள் என்னுடைய இல்லத்திலேயே கொஞ்சம் சோளரொட்டி உண்ணலாம். பின்னர் சிறிது ஓய்வெடுக்கலாம். வெயில் தாழ்ந்த பின் சௌகரியமாகத் திரும்பி செல்லலாம்.
"திரும்புகாலில் நானும் உங்களுடன் வருகிறேன்". இவ்வாறு என்னிடம் அந்த வழிப்போக்கர் சிலீமைத் தயார் செய்து, பயபக்தியுடன் என்னிடம் புகைகுடிக்கக் கொடுத்தார்.
அங்கோ, தவளை பரிதாபகரமான குரலில் கதற ஆரம்பித்தது. ஆகவே, அந்த வழிப்போக்கர் என்னை வினவினார், "யார் இப்படி அலறுவது?".
அவருக்கு நான் பதில் சொன்னேன், "ஒரு தவளை நதிக்கரை அருகில் ஆபத்தில் சிக்கியிருக்கிறது. அவனுடைய கர்மவினை அவனைத் துரத்துகிறது. நான் உமக்குச் சொல்லப் போகும் கதையைக் கேளும்."
போன ஜென்மத்தில் என்ன செய்தாயோ அதற்கேற்ப இந்த ஜென்மத்தில் அனுபவி. கர்மவினையின் விளைவுகளை அனுபவித்துத்தான் தீர்க்க வேண்டும். இப்பொழுது அலறுவதால் என்ன பயன்? (தவளைக்கு உபதேசம்)
இதைக் கேட்ட வழிப்போக்கர் சிலீமை என் கையில் கொடுத்துவிட்டு அங்கிருந்து நிதானமாக நடந்தவாறே சொன்னார், "நான் போய்ப் பார்க்கிறேன்.-
"இவ்விதம் கத்துவது தவளையா அல்லது வேறு ஏதாவது பிராணியா? மனத்திலிருந்து சந்தேகம் நீங்க வேண்டும். அதற்கு நேர்ந்திருக்கும் ஆபத்து என்னவென்றும் தெரிந்துகொள்ள வேண்டும்."
அவருடைய நாட்டம் அதுவே என்று தெரிந்து கொண்ட பின் நான் சொன்னேன், "நீரே போய்ப்பாரும். பெரிய பாம்பு ஒன்றின் வாயில் பிடிபட்டு ஒரு தவளை ஓலமிடுகிறது. -
"இருவருமே மஹா கொடியவர்கள். பூர்வஜென்மத்தில் பயங்கர பாவம் செய்தவர்கள். அந்த வினையை அனுபவிக்க இப்பொழுது வேறு சரீரங்களை அடைந்திருக்கின்றனர்."
இதைபற்றிச் சிந்தித்துக்கொண்டே அந்த வழிப்போக்கர் அவ்விடத்திற்குச் சென்று அங்கு நடந்துகொண்டிருந்ததை பிரத்யட்சமாக பார்த்துவிட்டுத் திரும்பி வந்தார். அவர் சொன்னார், "நீக்கினால் சொன்ன விவரம் உண்மைதான்.-
"விசாலமான வாய் படைத்த அப் பாம்பு யமனைப் போலத் தோன்றுகிறது. தவளையும் பயமுறுத்தும் தோற்றம் உடையது. ஆயினும், தவளை பாம்புக்கு இரையாகிவிட்டது. -
"இன்னும் அரை அல்லது ஒரு மணி நேரத்திற்குள், தவளை பாம்பின் வாய்க்கு ஆஹுதி (அக்கினியில் இடும் படையல்) ஆகிவிடும். என்னே கர்மவினையின் விசித்திரமான வழி! சீக்கிரமே அந்தத் தவளை கவலையற்ற நிலையை (மரணம்) அடையும்!"
ஆகவே, நான் அவரிடம் கூறினேன்,"ஓ, அவனை (தவளையை) எப்படி மரணமடையச் செய்யமுடியும்! பிதாவாகிய நான் (ரட்சகர்) அவனுக்காகவே இங்கு வந்திருக்கிறேனா, இல்லையா? நான் இப்பொழுது என்ன செய்யப்போகிறேன் என்று பாரும்.-