valam tharum vallal

valam tharum vallal
shri shird sai baba

Thursday 9 May 2024

 ஷீர்டி சாயி சத்சரிதம்

தேவரீர் தொண்டை வறண்டுபோகும்வரை செய்த உபதேசங்கள் எங்களுடைய உதாசீனத்தால் பிரயோஜனமில்லாமால் போனது கண்டு மனமுடைந்துபோய், காதுகளின் வழியாகக் கபாலத்திற்கு போதனை ஏற்றும் முயற்சியைக் கைவிட்டுவிட்டீரோ!

நாங்கள் செய்த அசட்டையால் எங்கள்மீது முன்பிருந்த பிரேமையை மறந்துவிட்டீரோ? அல்லது பூர்வஜென்ம சம்பந்தம் இன்றோடு முடிந்துவிட்டதோ? ஒருவேளை, உமது அன்பெனும் தெய்வீக ஊற்று வறண்டுபோய் விட்டதா என்ன?

தேவரீர் இவ்வளவு சீக்கிரமாக மறைந்து விடுவீர்கள் என்பது முன்பாகவே தெரிந்திருந்தால், எவ்வளவு சிறப்பாக இருந்திருக்கும். மக்கள் ஆரம்பத்திலிருந்தே உஷாராக இருந்திருப்பார்கள்.

ஆனால், நாங்கள் அனைவரும் சோம்பியிருந்தோம். மந்தத்திலும் உற்சாகமின்மையிலும் மூழ்கி வெறுமனே உட்கார்ந்திருந்தோம். கடைசியில் ஏமாறிப்போனோம். நாங்கள் இருத்தலும் இல்லாமலிருத்தலும் சரிசமமாகிவிட்டது.

குருத் துரோகிகளாகிய நாங்கள் எச் செயலையும் நேரத்தோடு  செய்யவில்லை.  அமைதியாக அமர்ந்திருந்தபோதிலும் ஏதாவது பலன் கிடைத்திருக்கும். நாங்கள் அதையும் செய்யவில்லலை!

நெடுந்தூரம் பயணம் செய்து ஷிர்டிக்கு போய் அங்கு வெட்டிப்பேச்சு பேசிக்கொண்டு உட்கார்ந்திருந்தோம். ஒரு புனிதத் தலத்தில் இருக்கிறோம் என்பதை அடியோடு மறந்து அங்கும் இஷ்டப்படி நடந்து கொண்டோம். 

பக்தர்கள் பலவகை - புத்திமான், பற்றுடையோன், விசுவாசமுள்ள அடியவன், தர்க்கவாதி என்று நானாவிதமாக இருந்தனர். அவர்கள் அனைவருடைய குணங்களும் தெரிந்திருந்தும் பாபா எல்லாரையும் ஒன்றாகவே பாவித்தார். அதிகம், குறைவு என்னும் பேதமே அவரிடம் இருந்ததில்லை.

உலகத்தில் கடவுளைத் தவிர வேறெதையும் அவர் காணவில்லை. கண்ணோட்டம் அவ்வாறு  இருந்ததால், அவர் தம்மைத் தனிமைப்படுத்தியோ வேறுபடுத்தியோ இரண்டாவதாகக் கருதவில்லை.

பக்தர்கள் கூட கடவுள்தான். குருவும் அவர்களிடமிருந்து வேறுபட்டவர் அல்லர். இரு  சாராரும் தங்களுடைய உண்மையான சொரூபத்தை மறந்துபோவதால், தங்களைப் பரஸ்பரம் பேதம் பிரித்துக் காண்கின்றனர்.

சிந்தித்துப்பார்த்தால் நாமும் கடவுள்தான். ஆனால், நம்முடைய உண்மையான சொரூபம் மறந்துபோகும்போது, பேதத்தின் லக்ஷணங்கள் (இயல்புகள்) தோன்றுகின்றன. அதுவே, பெரும்வீழ்ச்சிக்கு வழிவகுக்கிறது.

வீடு வீடாகச் சென்று பிச்சை எடுப்பதுபோல ஒரு சக்ரவர்த்தி கனவு காண்கிறார். ஆயினும், விழிப்பு ஏற்பட்டவுடன் தம் சுயநிலை மாறாததை உணர்கிறார்.

விழிப்பு நிலையில் செய்யும் செயல்களெல்லாம் கனவு நிலையில் காணாமல் போய்விடுகின்றன. ஆனால், உண்மையான விழிப்பு பூரணமான அத்துவைத நிலையில் கரையும்போதுதான் ஏற்படுகிறது.