valam tharum vallal

valam tharum vallal
shri shird sai baba

Thursday 15 September 2022

 ஷீர்டி சாயி சத்சரிதம்

சிலீம் மஹா கடினமான தவத்தைச் செய்த பொருளாகும். சிறுவயதில் அது காலால் மிதித்துத் துவைத்துத் துவம்சம் செய்யப்பட்டது. பிறகு வெயிலின் காய்ச்சலைத் தாங்கிக்கொண்டது. கடைசியாக சூளையில் அக்கினிப் பிரவேசமும் செய்தது.

பாபாவின் கையால் தொடப்படும் பாக்கியத்தைப் பெற்றது. மறுபடியும், எரியும் புகையிலையின் சூட்டைப் பொறுத்துக்கொண்டது. சூளையிலிடப்பட்ட பிறகு, செம்மண் பூசப்பட்டு மரியாதைக் குறைவாக நடத்தப்பட்டாலும், பின்னர் பாபாவின் உதடுகளால் முத்தமிடப்படும் கௌரவத்தைப் பெற்றது.

கற்பூரமும் குங்குமப்பூவும் சந்தனமும் சேர்த்து அரைத்த குழம்பை பக்தர்கள் பாபாவின் கைகளில் பூசுவர். கழுத்தில் பூமாலைகளை அணிவித்து கைகளில் ஒரு பூச்செண்டையும் அளிப்பர்.

சதா புன்னைகைபூத்த முகத்துடன், மிகுந்த பிரேமையுடனும் தயையுடனும் பக்தர்களை நோக்கியவருக்குத் தம்மைச் சிங்காரித்துக்கொள்வதில் என்ன அபிமானம் இருந்திருக்கமுடியும்? பக்தர்களைத் திருப்திசெய்வதற்காகவே இவையனைத்தையும் பாபா ஏற்றுக்கொண்டார்.

பக்தியென்னும் விலைமதிப்பற்ற ஆபரணத்தை அணிந்து சாந்தியென்னும் அழகில் மூழ்கியவர்க்கு, மாலைகளாலும் மணிகளாலும் செய்யப்பட்ட உலகநடையான அலங்காரத்தில் என்ன நாட்டம் இருந்திருக்க முடியும்?

துறவின் உருவாக வாழ்ந்தவருக்கு மரகத கற்களாலான அட்டிகை எதற்கு? ஆயினும், பக்தர்களால் அர்ப்பணம் செய்யப்பட்டபோது அவர்களுடைய களிப்பு நாட்டத்தைத் திருப்திசெய்வதற்காகக் கழுத்தில் அவற்றை அணிந்துகொள்வார்.

மரகதம் இழைத்த தங்கச் சங்கிலிகளும் பதினாறு சாரம் முத்துமாலைகளும் அன்றலர்ந்த தாமரைகளுடனும் சேர்ந்து அவருடைய கழுத்தை அலங்கரித்தன.

மல்லிகையும் முல்லையும் துளசியும் சேர்த்துக் கட்டப்பட்ட மாலைகள் அவருடைய கழுத்திலிருந்து கால்வரை நீண்டு புரண்டன. கழுத்தைச் சுற்றி முத்தாலான ஆபரணங்கள் அபூர்வமாக ஜொலித்தன.

அவருடைய மார்பில் தங்கப்பதக்கம்  பதிக்கப்பட்ட மரகத அட்டிகை தவழ்ந்தது. நெற்றியில் இடப்பட்ட கறுப்பு நிறுத்த திலகம் அழகுக்கு அழகு சேர்த்தது.

அவர் ஒரு சிறந்த வைஷ்ணவரைப்போல ஜொலித்தார். தலைக்குமேல் குடை சுழன்றது; சாமரங்கள் வீசின. தங்கச்சரிகை கரை போட்ட சால்வை போர்த்தியிருந்தார். அவரை எப்படிப் பக்கீர்  என்று  சொல்ல   முடியும்?

மங்கள வாத்தியங்கள் பின்புலத்தில் முழங்க, ஜோக் தான் பெரும்பாலும் ஐந்து விளக்குகள் பிரகாசமாக எரியும் ஆரதியைச் சுற்றுவார்.

ஐந்து உபச்சாரங்களுடன் கூடிய பூஜை முடிந்த பிறகு, பளபளக்கும் பெரிய பஞ்சாராத்தித்தட்டை பத்திரமாக எடுத்து ஐந்து திரிகளையும் கற்பூரத்தையும் ஏற்றி பாபாவுக்கு ஆரத்தி சுற்றுவார்.

ஹாரதி நடந்து முடிந்த பிறகு எல்லா பக்தர்களும் ஒவ்வொருவராக வந்து பாபாவுக்கு சாஷ்டாங்க நமஸ்காரம் செய்வர். பின்னர் தம் தம் வீடுகளுக்குச் செல்வர்.