valam tharum vallal

valam tharum vallal
shri shird sai baba

Thursday 27 December 2018

ஷீர்டி சாயி சத்சரிதம் 

தம்முடைய பாதங்களைப் பிடித்துவிட்டுக்கொண்டிருந்த அவளுடைய கைகளைத் தம் கைகளால் பிடித்துவிட்டார். (பாபா), இறைவனும் பக்தையும் ஒருவருக்கொருவர் அன்புடன் செய்துகொண்டிருந்த சேவையைக் கண்ட சாமா கேலி செய்ய ஆரம்பித்தார். 

"ஆஹா, ஆஹா, பாபா! அற்புதம், அற்புதம்! கண்கொள்ளாக் காட்சி! இந்தப் பரஸ்பர பாவத்தைக் கண்டு நாங்கள் திகைப்படைகிறோம்!"

அவ்வம்மையாருடைய பக்திபூர்வமான சேவையால் மனம் குளிர்ந்த பாபா அவரிடம் மெதுவாகவும் மென்மையாகவும் கூறினார், "ராஜாராம், ராஜாராம் என்று எந்நேரமும் சொல்லிக்கொண்டே இருங்கள்.-

"தாயே! இவ்விதமாக சொல்லிக்கொண்டேயிருந்தால், உம்முடைய வாழ்க்கை நிறைவு பெறும்; உம்முடைய மனம் சாந்தமடையும்; அபரிதமான நன்மைகள் விளையும்".

எவ்வளவு அற்புதமான வார்த்தைகள் இவை! இந்த உபதேசத்தின் மூலமாக பக்தைக்கு தெய்வீகச் சக்தியை பாய்ச்சியது போல இவ்வார்த்தைகள் அம்மையாரின் இதயத்தினுள்ளே புகுந்தன. 

அன்பும் அடக்கமும் உள்ள பக்தர்களை பாலித்து அவர்களுடைய மனோரதங்களையும் பூர்த்திசெய்து ஆன்மீக முன்னேற்றத்திற்கும் அருள் பொழியும் கிருபாசமுத்திரம் அல்லரோ ஸ்ரீசமர்த்த சாயிநாதர்!

நான் மிகப்பணிவாகவும் பிரீதியுடனும் ஒரு வேண்டுகோளை வாசகர்கள் முன் அவர்களுடைய நன்மை கருதியே வைக்க விரும்புகிறேன். 

வெல்லக்கட்டியின் இனிமையை விரும்பும் எறும்பு, தன மண்டையை உடைத்துக் கொள்வதாயினும் சரி, அதை விடவே விடாது. சாயி பாதங்களில் உங்களுடைய சரணாகதியும் அதைப் போன்றே இருக்கவேண்டும். கிருபை செய்து சாயி உங்களை பாதுகாப்பார். 

குருவும் பக்தனும் வேறல்லர்; வெவ்வேறாகத் தெரிந்தாலும் இருவரும் ஒருவரே. பலத்தால் அவர்களைப் பிரிக்க முயல்பவன் கடைசியில் கர்வபங்க மடைவான். 

ஒருவரில்லாமல் மற்றொருவரைப் பார்க்க நம்மால் முடிந்தால், குரு குறையுள்ளவர்; சிஷ்யனும் குறையுள்ளவன். உத்தமமான குருவால் பயிற்சி அளிக்கப்பட்ட சிஷ்யன், குரு-சிஷ்ய வேற்றுமையைப்பற்றி நினைக்கவே மாட்டான். 

குரு ஒரு கிராமத்திலும் சிஷ்யன் வேறொரு கிராமத்திலும் வாசம் செய்வதால் அவர்களிருவரும் தனித்தனி என்று நினைப்பவன் உண்மையை அறியாதவன். 

அவர்கள் இருவேறு மனிதர்களே இல்லையென்றால், தனித்தனியாக எப்படி இருக்க முடியும்? ஒருவரின்றி மற்றவர் இருக்க முடியாது. அவர்களுடைய ஒருமை இவ்வாறானதே. 

குருவுக்கும் பக்தனுக்கும் இருமை ஏதும் இல்லை. அவர்கள் இருவரும் எப்பொழுதும் இணைந்தே இருக்கிறார்கள் (ஆன்மீக மட்டத்தில்). பக்தன் குருவின் பாதங்களில் தலைசாய்ப்பது உடலளவில் செய்யப்படும் உபசாரமே. 


Thursday 20 December 2018

ஷீர்டி சாயி சத்சரிதம் 

ஒருமுறை காபர்டேவின் மனைவி ஒரு தட்டில் பலவகையான சுவைமிகுந்த உணவுப் பொருள்களையும் இனிப்புகளையும் பாபாவுக்கு நைவேத்தியாமாகக் கொண்டுவந்தார். சாதம், பருப்பு, பூரி, ரவாகேசரி, சாஞ்சா, பாயாசம், அப்பளம், பூசணி வடகம், கோசுமல்லி ஆகிய பண்டங்கள் அந்தத் தட்டில் இருந்தன. 

அந்தத் தட்டு வந்தவுடனே பாபா தம் கப்னியின் கைகளை மடித்துவிட்டுக் கொண்டு மிகுந்த ஆர்வத்துடன் இறுக்கியில் இருந்து எழுந்துவிட்டார். 

சாப்பிடும் இடத்திற்குச் சென்று அமர்ந்துகொண்டார். அந்தத் தட்டைத் தம்மெதிரில் எடுத்துவைத்துக் கொண்டார். தட்டிலிருந்த உணவைச் சுவைக்கும் ஆர்வத்தில் மூடியை எடுத்து அப்பால் வைத்தார். 

சுவை மிகுந்ததாக எத்தனையோ நைவேத்தியங்கள் தினமும் வரும். அவையெல்லாம் பாபாவின் கவனிப்பின்றி அங்கேயே நெடுநேரம் கிடக்கும். இந்தத் தட்டின் மீது மாத்திரம் ஏன் இவ்வளவு ஆர்வம்? 
 
இது சாதாரணர்களின் நடத்தையன்றோ ! ஒரு ஞானி ஏன் இவ்வாறு நடந்துகொள்கிறார்? மாதவ்ராவ் சட்டென்று சமர்த்த சாயியைக் கேட்டார், "பாபா, ஏன் இவ்வாறு பாரபட்சம் காட்டுகிறீர்?-

"மற்றவர்களுடைய நைவேத்தியத்தைத் தள்ளிவைத்துவிடுகிறீர். சிலசமயங்களில் வெள்ளித்தட்டுகளையும் விசிறியடித்து விடுகிறீர். இந்தப் பெண்மணியின் (காபர்டேவின் மனைவியின்) நைவேத்தியம் வந்தவுடனே உற்சாகமாக எழுந்து உணவுகொள்ள ஆரம்பிக்கிறீர். உண்மையில் இது ஒரு வினோதம்!-

"ஓ தேவா! இந்தப் பெண்மணியின் உணவுமட்டும் எப்படி அவ்வளவு சுவை மிகுந்ததாக அமைகிறது என்பது எங்களுக்கெல்லாம் விளங்காத மர்மமாக இருக்கிறது. இதென்ன நீர் செய்யும் தில்லுமுல்லு வேலை? ஏன் இவ்வாறு விருப்பு வெறுப்புகளுக்கு இடம் கொடுக்கிறீர்?"

பாபா சொன்னார், "ஓ சாமா ! இந்த உணவு எவ்வளவு அபூர்வமானது என்பதை நான் எவ்வாறு விளக்குவேன்? முற்பிறவியில் இப் பெண்மணி ஒரு வியாபாரியின் பசுவாக இருந்தால். நல்ல ஊட்டமளிக்கப்பட்டு நிறைய பால் கொடுத்தாள்.-

"பிறகு அவள் எங்கோ காணாமற்போய் ஒரு விவசாயியின் குடும்பத்தில் பிறந்தால். அடுத்த ஜென்மத்தில் க்ஷத்திரிய வம்சத்தில் பிறந்து ஒரு வைசியனுக்கு மணம் செய்விக்கப்பட்டாள்.-

"இந்த ஜென்மத்தில் ஒரு பிராமணக் குடும்பத்தில் பிறந்திருக்கிறாள். பல காலத்திற்குப் பிறகு அவளை நான் கண்டேன். மிகுந்த பிரேமையுடன் அளிக்கப்பட்ட இந்த உணவில் இரண்டு கவளமாவது என்னை நிம்மதியாகவும் மகிழ்ச்சியுடனும் சாப்பிட விடு!"

இவ்வாறு பதிலளித்தபின், பாபா தாம் திருப்தியடையும்வரை உணவுண்டார். கைகளையும் வாயையும் அலம்பிக்கொண்டபின், வயிறு நிரம்பியதன் அறிகுறியாக ஏப்பம் விட்டார். பிறகு அவர் தம்முடைய இருக்கைக்குச் சென்று அமர்ந்துகொண்டார். 

காபர்டேவின் மனைவி பாபாவுக்கு நமஸ்காரம் செய்துவிட்டு அவருடைய பாதங்களை பிடித்துவிட ஆரம்பித்தாள். இந்த நல்வாய்ப்பைப்  பயன்படுத்திக்கொண்டு அவளிடம் பரிவுடன் இனிமையாகப் பேசினார் பாபா.  



Thursday 13 December 2018

ஷீர்டி சாயி சத்சரிதம்

காபர்டே சாமானியர் அல்லர்; அவர் ஒரு பெருங்குடிமகன்; பேரறிஞரும் ஆவார். ஆனால், சாயியின் சந்நிதியில் பயபக்தியுடன் கைகூப்பித் தலைவணங்கி நிற்பார்.

ஆங்கிலத்திலும் சிறந்த பாண்டித்தியம் படைத்த காபர்டே, புட்டி, நூல்கர் இம்மூவரைத் தவிர மற்றவர்கள் எவரும் பாபாவின் சந்நிதியில் மௌனத்தை கடைப்பிடித்தார்கள் அல்லர்.

மற்றவர்கள் அனைவரும் பாபாவிடம் உரையாடினர். சிலர் பயமோ பக்தியோ இன்றி வாதாடவும் செய்தனர். இவர்கள் மூவர் மாத்திரம் சந்நிதியில் மௌனவிரதமாக இருந்தனர்.

பேச்சில் மாத்திரமின்றி நடத்தையிலும் இவர்கள் மூவரும் செம்மையாக விளங்கினர். பாபாவின் சந்நிதியில் எப்பொழுதும் தலைதாழ்ந்தவாறே இருப்பர். பாபாவின் திருவாய்மொழியை இவர்கள் செவிமடுக்கும்போது காட்டிய அடக்கமும் பணிவும் பயபக்தியும் விவரணத்திற்கு அப்பாற்பட்டவை.

வித்தியாரண்யர் சமஸ்கிருதத்தில் இயற்றிய பஞ்சதசியை (அத்வைத சித்தாந்த நூல்) காபர்டேவிடம் இருந்து பாடம் கேட்பது ஒரு பெருமையாகவும் கௌவரமாகவும் கருதப்பட்டது. அத்தகைய புலமை வாய்ந்த காபர்டே, மசூதிக்கு வந்துவிட்டால் வாயைத் திறக்கமாட்டார்!

சப்த பிரம்மத்தின் (வேதத்தின்) ஒளி, சுத்த பிரம்மத்தின் பேரொளியின் முன்னிலையில் மங்கிவிடும். பர பிரம்ம மூர்த்தியான சாயியின் எதிரில் வித்தைகள் அனைத்தும் தலைவணங்கி நிற்கும்.

ஷிரிடியில் காபர்டே நான்கு மாதங்களும் அவர் மனைவி ஏழு மாதங்களும் வாசம் செய்தனர். ஒவ்வொரு நாளையும் அவர்கள் மிக்க மகிழ்ச்சியுடன் கழித்தனர்.

காபர்டேவின் மனைவி சாயிபாதங்களின் மீது அசைக்கமுடியாத நம்பிக்கையும் அத்தியந்த பிரேமையும் உடையவராக இருந்தார். தினமும் மசூதிக்குத் தம்முடைய கைகளாலேயே ஏந்தியவாறு நைவேத்தியம் கொண்டுவருவார்.

இப்பெண்மணி, தம்முடைய நைவேத்தியத்தை பாபா ஏற்றுக்கொள்ளும் வரை உணவைக் கையால் தொடமாட்டார். சாயி மஹராஜ் உணவேற்றுக்கொண்ட பிறகே, தாம் உண்ணச் சொல்வார்.

இவ்வாறிருக்கையில் ஒருநாள் நல்லகாலம் பிறந்தது. பக்தர்களின்பால் தாய்போல் அன்புகாட்டும் சாயி, இப் பெண்மணியின் சிரத்தையும் பக்தியையும் கண்டு மகிழ்ச்சியடைந்து அவருக்கு ஒளிமயமான ஆன்மீக மார்க்கம் காட்டினார்.

ஒவ்வொருவருக்கு ஒவ்வொரு வழி; ஆனால், பாபாவின் வழியோ அலாதியானது. கேலிக்கும் சிரிப்பிற்குமிடையே செய்யப்பட்டாலும், அனுக்கிரஹம் பக்தரின் மனத்தில் ஆழமாகப் பதிந்துவிடும்.  


Thursday 6 December 2018

ஷீர்டி சாயி சத்சரிதம்

இவ்வளவு முயற்சி எடுக்கவில்லையென்றால் மாதவாரவுக்கு போதியின் பால் விசுவாசம் ஏற்பட்டிருக்காது; அதைக் கையால் தொட்டிருக்கமாட்டார். வாயால் சொல்லியுமிருக்க மாட்டார்; மனப்பாடமும் ஆகியிருக்காது.

அன்பொழுகும் ஸாயிதான்; ஆனால், அவரை அடைவது கடினம். லீலை புரிவதையே தொழிலாக கொண்ட அவர், எப்பொழுது எந்தவிதமாக சூத்திரங்களை (பொம்மலாட்ட நூல்களை) இழுப்பார் என்பதை அறிந்துகொள்வது கடினம்.

காலப்போக்கில் சாமாவுக்குப் போதியின்மீது நிஷ்டை ஏற்பட்டது. ஹரி சீதாராம் தீக்ஷிதரும் பேராசிரியர் கணேச கோவிந்த நரகேவும் அவருக்குச் சரியான உச்சரிப்புடன் சுலோகங்களை படிக்கக் கற்றுக்கொடுத்தனர். சாமா நன்கு கற்றுக்கொண்டார். காலக்கிரமத்தில்  அவருக்கு விஷ்ணு சஹஸ்ரநாமம் மனப்பாடம் ஆகிவிட்டது.

மாதவராவை விவாதம் செய்யவைத்தது சாயியின் சுத்த போதனை முறைக்கு ஒரு விவரணம். பரமானந்தம் நிறைந்த நகைச்சுவையே விவாதமேதுமில்லாத சுகத்தை அளித்தது!

அதுபோலவே, ப்ரம்ம வித்தையை(இறைவனை அறியும் கல்வி) அப்பியாசம் செய்யும் பக்தர்களிடம் பாபாவுக்கு அதிகப் பிரீதி. தக்க சமயத்தில் இதை எவ்விதமாக தெளிவாக நடைமுறையில் செய்துகாட்டினார் என்று பாருங்கள்.

ஒரு சமயம் ஜோக்குக்கு தபால் மார்க்கத்தில் ஷீர்டி தபால் நிலையத்திற்கு ஒரு பார்சல் வந்தது. ஜோக் அதை பெற்றுக்கொள்வதற்காக உடனே தபால் நிலையத்திற்கு சென்றார்.

பிரித்துப் பார்த்தபோது அது பாலகங்காதர திலகர் எழுதிய 'கீதாரஹஸ்யம்' (பகவத் கீதைக்கு திலகர் எழுதிய விரிவுரை) புத்தகமாக இருந்தது. பார்சலைக் கையில் இடுக்கிக் கொண்டவாறு அவர் உடனே தரிசனத்திற்காக மசூதிக்கு வந்தார்.

பாபாவின் பாதங்களில் நமஸ்காரம் செய்தபோது, 'பார்ஸல் பாபாவின் பாதங்களில் விழுந்தது. பாபா அப்பொழுது கேட்டார், "என்ன பாபுசாஹெப் ! இது என்ன?"

பார்ஸல் பாபாவின் எதிரில் மறுபடியும் பிரிக்கப்பட்டது. ஜோக், உள்ளே என்ன இருந்ததென்பதையும் சொன்னார். பிரிக்கப்பட்ட பார்ஸல், புத்தகத்தோடு பாபாவிடம் சேர்ப்பிக்கப்பட்டது. பாபா அதை பார்த்தார்.

பாபா புத்தகத்தைக் கையில் எடுத்து பக்கங்களை மேலோட்டமாக புரட்டினார். பாக்கெட்டில் இருந்து ஒரு ரூபாயை எடுத்து அதன்மேல் மகிழ்ச்சியுடன் வைத்தார்.

புத்தகத்தை ரூபாயுடன் சேர்த்து, "இதை முதலிலிருந்து கடைசிவரை படியும்; மங்களமடைவீர்" என்று ஆசி கூறிக்கொண்டே ஜோக்கின் மேல்துண்டில் வைத்தார்.

பாபா இவ்வாறு அனுக்கிரஹம் செய்த கதைகள் எண்ணற்றவை. இப் புத்தகம் மிகப் பெரியதாகிவிடும் என்னும் காரணத்திற்காகவே சில கதைகளை மட்டும் சுருக்கமாகச் சொல்லியிருக்கிறேன்.

ஒரு சமயம் தாதாசாஹெப் காபர்டே ஷிரிடிக்குக் குடும்பத்துடன் வந்தார். பாபாவின் அன்பையும் ஆதரவையும் அனுபவித்துக்கொண்டு சிலகாலம் அவர் ஷிர்டியில் வாசம் செய்யும்படி நேர்ந்தது.


Friday 30 November 2018

ஷீர்டி சாயி சத்சரிதம்

"ஒரு ராமதாசிக்கு 'என்னுடையது' என்ற எண்ணமே உதவாது. எதையும் எல்லாரையும் சமபாவனையாகப் பார்க்க வேண்டும். நீரோ இந்தப் பையனின் மேல் அபரிமிதமான விஷத்தைக் கொட்டிவிட்டீர். போதியைப் பிடுங்குவதற்கு அவனுடைய கையை விடாமல் பிடித்துக் கொண்டிருக்கிறீர் ! -

"போய், உம்முடைய இடத்தில அமர்ந்துகொள்ளும். போதிகளை டஜனாக வாங்கினால் மலிவாகவே வாங்கலாம். ஆனால், உலகமெங்கும் தேடினாலும் ஆத்மவிசாரம் செய்யும் ஒரு நல்ல மனிதன் கிடைப்பது கடினம். -

"உம்முடைய போதி எவ்வளவோ மஹத்தானதாக இருக்கலாம்; ஆனால், சாமா எதையும் அறிந்தானில்லை. மேலும், நான்தான் அதைத் தேர்ந்தெடுத்தேன்; நான்தான் அதை அவனுக்கு கொடுத்தேன்.-

"தவிர, உமக்கு அது மனப்பாடமாகத் தெரியும். ஆகவே நான் அதை சாமாவுக்கு கொடுக்கவேண்டுமென்று நினைத்தேன். அவன் அதைத் திரும்ப திரும்ப வாசித்து சகல மங்களங்களையும் அடையவேண்டும் என்பதே என் நோக்கம்."

ஆஹா! என்ன ரசமான பேச்சு! இனிமையானதும் புத்துணர்ச்சியை ஊட்டக் கூடியதுமான வார்த்தைகள். ஆத்மானந்தத்திற்கு நிகராகக் குளிர்ச்சியளிக்கும் மிக அபூர்வமான வார்த்தைகள்!

ராமதாசி மனத்தளவில் தம்முடைய குற்றத்தை உணர்ந்துவிட்டார். மாதவாரவிடம் கடுகடுவென்று சொன்னார், "இதோ பார், நான் உனக்குச் சொல்கிறேன்; உன்னிடமிருந்து போதிக்குப் பதிலாக 'பஞ்சரத்னி கீதையை' எடுத்துக் கொள்ளப் போகிறேன்!"

ராமதாசி இம்மட்டிற்கு சாந்தமடைந்ததைக் கண்ட மாதவராவ் மகிழ்ச்சி அடைந்தார். அவர் சொன்னார், "ஒன்றென்ன, பத்து கீதைப் பிரதிகளை போதிக்குப் பதிலாக அளிக்கிறேன்!"

பின்னர், பஞ்சரத்னி கீதை ஜாமீனாக விளங்க, இச்சண்டை மெதுவாக ஓய்ந்தது. கீதையினுள் இருக்கும் இறைவனை அடையாளம் காணமுடியாதவர்க்கு அந்த நூல் எதற்கு?

பாபாவின் அருகில் அமர்ந்துகொண்டு அத்யாத்ம ராமாயணத்தைத் திரும்பத் திரும்ப பாராயணம் செய்யும் ராமதாசி, பாபாவிடமேவா இவ்வாறு சண்டைக்குப் போக வேண்டும்?

ஆயினும், நான் எப்படி இதைகூடச் சொல்லலாம்? நான் எப்படி யார்மீதும் பழி சொல்லமுடியும்? ஏனெனில், இந்நிகழ்ச்சிகள் நடந்திராவிட்டால் மற்றவர்களுக்கு விஷ்ணு சஹஸ்ர நாமத்தின் மகத்துவம் எவ்வாறு சென்றடையும்?

பாபாவின் இன்னலைக் களைந்ததும் (இதய படபடப்பு), எனக்கு அநேக நற்பயன்களை அளிப்பதும், இந்தச் சண்டையைக் கிளப்பிவிட்டதுமான விஷ்ணு சஹஸ்ர நாமம் உண்மையிலேயே இவ்வுலகத்தியது அன்று; சாயியால் அளிக்கப்பட்ட பரிசே. 


Thursday 22 November 2018

ஷீர்டி சாயி சத்சரிதம்

இயல்பாக அந்த ராமதாசி குதர்க்கமே உருவானவர். ஒரு நொடியில் அவருக்கு மாதவராவின் மேல் சந்தேகம் வந்துவிட்டது. ராமதாசி சொன்னார், "என்னுடைய போதியைப் பிடுங்கிக்கொள்வதற்காகவே பாபாவை மத்யஸ்தத்திற்கு (நடுநிலையாளராக) இழுத்தாய்".

வாங்கிக்கொண்டுவந்த சோனாமுகி மருந்தை மறந்துவிட்டு மாதவராவின்மேல் வசைமாரியை ஆரம்பித்தார். பொங்கிவந்த கோபத்தால் பெருஞ்சத்தம் போட்டு, அர்த்தமற்ற வார்த்தைகளை சரமாரியாக பொழிந்தார்.

"வயிற்றுவலி ஒரு பாசாங்கு என்று எனக்கு நன்கு தெரியும். என்னுடைய போதியின்மீது நீ கண்வைத்துவிட்டதால், நீதான் பாபாவை இவ்வாறு பாசாங்கு செய்யத் தூண்டியிருக்கிறாய். நான் இதை பொறுத்துக்கொள்ளப் போவதில்லை.-

"நான் ராமதாசியென்று  பெயர் பெற்றவன்; தைரியசாலி; பயமேயில்லாதவன். என்னுடைய போதியை மரியாதையாகத் திருப்பிக் கொடுத்துவிடு. இல்லையேல், நான் உன்னெதிரிலேயே மண்டையை உடைத்துக்கொண்டு ரத்த வெள்ளத்தில் மிதப்பேன்.-

"என்னுடைய போதியின்மீது நீ குறிவைத்துவிட்டாய். ஆகவே, நீதான் இந்த கபட நாடகத்தை ஜோடித்து பாபாவின் மேல் பழி வருமாறு செய்து நல்ல பிள்ளைபோல் ஒதுங்கிவிட்டாய்".

மாதவராவ் அவரைப் பலவிதமாக சமாதானம் செய்ய முயன்றார். ஆனால், ராமதாசியோ விடுவாரில்லை. பிறகு, மாதவராவ் மென்மையாக என்ன சொன்னார் என்று கேளுங்கள்.

"நான் ஏமாற்று வேலை செய்தேன் என்று அனாவசியமாக பழி சுமத்த வேண்டா. என்ன உம்முடைய போதியின் கதை? சுலபமாக கிடைக்கக் கூடிய புத்தகந்தானே!-

"பாபாவையே சந்தேகப்படும் அளவிற்கு உம்முடைய போதியென்ன தங்கமா, வைரமா, வைடூரியமா? வெட்கம், வெட்கம்!"

ராமதாசியின் அட்டகாசத்தை பார்த்த பாபா இனிமையாகக் கேட்டார். "ஓய், ராமதாசி! இப்பொழுது என்ன தவறு நடந்துவிட்டது? ஏன் காரணமேதுமின்றி உம்மையே நீர் வருத்திக் கொள்கிறீர்?-

"சாமாவும் நம் பையன் அல்லனோ! ஏன் இவ்வளவு சிரமப்பட்டு அவனைத் திட்டுகிறீர்? அர்த்தமில்லாமல் ஏன் சோகப்படுகிறீர்? உம்முடைய கோபத்தைக் காட்டி எல்லாரையும் வேடிக்கை பார்க்க வைக்கிறீர்! -

"ஓ, நீர் எப்படி இவ்வளவு சண்டை விரும்பியாக இருக்க முடியும்? நீர் ஏன் மென்மையாகவும் இனிமையாகவும் பேசக்கூடாது? எந்நேரமும் போதி படித்தும் உம்முடைய இதயம் அசுத்தமாக இருக்கிறதே!-

"தினமும் நீர் அத்யாத்ம ராமாயணம் வாசிக்கிறீர்; சஹஸ்ர நாமாவளி பாராயணம் செய்கிறீர். ஆயினும் உமது முரட்டு சுபாவத்தை விடமாட்டேன் என்கிறீரே. இந்த லட்சணத்திற்கு உம்மை நீர் ராமதாசி என்று வேறு சொல்லிக்கொள்கிறீர்!

"நீர் என்ன விதமான ராமதாசி ? நீர் உலகியல் பொருள்களை உதாசீனம் செய்பவராக அல்லீரோ இருக்கவேண்டும்? மாறாக, ஒரு புத்தகத்தை கெட்டியாகப் பிடித்துக்கொண்டு விடமாட்டேன் என்று அடம்பிடிக்கிறீரே ! உம்முடைய நடத்தையைப்பற்றி யார் என்ன சொல்லமுடியும்?-


Thursday 15 November 2018

ஷீர்டி சாயி சரிதம்

நம் முன்னோர்கள் செய்த புண்ணியங்களின் கூட்டுவலிமையே சாயியின் கிருபை என்னும் பலனை விளைவிக்கிறது. நம்மைத் தூயவர்களாக்கி இவ்வுலக வாழ்வின் தொந்தரவுகளில் இருந்தும் துன்பங்களிலிருந்தும் மயக்கங்களிலிருந்தும் விடுவிக்கும் மஹிமை பெற்றது விஷ்ணு சஹஸ்ர நாமாவளி தோத்திரம்.

மற்ற மதச் சடங்குகளுக்கு எத்தனையோ விதிகளை அனுசரிக்க வேண்டியிருக்கிறது. ஆனால், நாமஜெபத்தையோ எந்நேரமும் இடைவிடாது செய்யலாம். நாமஜபத்திற்குத் தடங்கல் என்பதே கிடையாது. வேதம் ஓதக்கூடாத நாள்களிலும் நேரங்களிலும் கூட, நாம ஜபம் செய்யலாம். அதைவிட எளிமையானதும் சுலபமானதுமான வழிபாட்டுமுறை வேறேதுமிவுமில்லை.

மராட்டி ஞானி ஏகநாதருங்கூட இதே ரீதியில் தம் அண்டைவீட்டுக்காரர் ஒருவரின் மீது விஷ்ணு சஹஸ்ர நாமாவலையைத் திணித்து அவருடைய வாழ்க்கையை ஆன்மீகப் பாதைக்குத் திருப்பினார்.

ஏகநாதரின் இல்லத்தில் தினமும் விஷ்ணு சஹஸ்ர நாமாவளி பாராயணமும் புராணங்கள் வாசிப்பதும் பஜனையும் நடந்துகொண்டிருந்தன. ஆயினும், பக்கத்து வீட்டுப் பிராமணர், நீராடுதல் சந்தியாவந்தனம் போன்ற நித்திய விதிகளை கூடத் துறந்துவிட்டு மனம் போனபடி துராசாரத்தில் மூழ்கி வாழ்ந்துவந்தார்.

புராணப் பிரவசனத்தை ஒருபோதும் செவிமடுத்தாரில்லை. மேலும் சொல்லப்போனால், அக் கெட்ட மனிதர் ஏகநாதர் வீட்டினுள் என்றுமே நுழைந்தாரில்லை. ஆயினும் ஏகநாதர் கருணைகூர்ந்து அவரைத் தம்மிடம் வரவழைத்தார்.

உயர்குல பிராமணராகப் பிறந்திருந்தபோதிலும் அவர் தடம் புரண்டு வாழ்ந்துவந்தார். இவ்வுண்மை தெரிந்த ஏகநாதர் பரிதாபப்பட்டு, அவரைச் சீர்திருத்திச் செம்மையாக்குவது எப்படி என்று யோசித்தார்.

அவர் 'வேண்டா' என்று சொன்னபோதிலும், தாம் விஷ்ணு சஹஸ்ர நாமாவளியை ஒவ்வொரு சுலோகமாக உரக்கச் சொல்லி, அவரைத் திருப்பி ஒப்பிக்க வைத்தார். ஒவ்வொரு சுலோகமாகப் பாடம் ஏற ஏற படிப்படியாக அவர் உத்தாரணம் (தீங்கிலிருந்து மீளுதல்) அடைந்தார்.

விஷ்ணு சஹஸ்ர நாமாவளியை படிப்பதோ பாராயணம் செய்வதோ நம் மனத்தைத் தூய்மை செய்துகொள்வதற்கு சுலபமான நேர்வழிப் பாதை ஆகும். இவ்வழிபாட்டுமுறை நமக்குப் பரம்பரை சொத்தாக கிடைத்திருக்கிறது. பாபா மேற்கொண்ட பெருமுயற்சி இக் காரணம்பற்றியே.

இதற்கிடையே ராமதாசை சோனாமுகி மருந்துடன் விரைவாகத் திரும்பி வந்தார். சண்டை மூட்டிவிடுவதில் நாரதரைப் போல் மகிழ்ச்சி கண்ட அண்ணா பாபரே தயாராக காத்திருந்து, நடந்தது அனைத்தையும் ராமதாசியிடம் விவரமாகத் தெரிவித்தார்.

ஏற்கெனவே ராமதாசி ஒரு முரட்டு மனிதர். போதாக்குறைக்கு அண்ணா பாபரேவின் நாரதர் வேலையும் சேர்ந்துகொண்டது. இந்த அபூர்வமான சூழ்நிலையின் உண்மை நிலையை எவரால் விவரிக்க முடியும்? 


Thursday 1 November 2018

ஷீர்டி சாயி சத்சரிதம்

"மேலும், இந்தப் போதியின் மொழியோ சமஸ்க்ரிதம். என்னுடைய பேச்சும் உச்சரிப்பும் குறைபாடுடையன. பேச்சில் கிராமவாடை ; உச்சரிப்பில் மெருகில்லை. கூட்டெழுத்தை உச்சரிக்கும்போது நாக்குக் குழறி, பேச்சு தெளிவிழந்து போகிறது".

பாபாவினுடைய செயல், சண்டை மூட்டிவிடுவதற்காகவே குறிவைக்கப்பட்டது என்று சாமா நினைத்தால் போலும். அந்தோ பாபாவுக்குத் தம்மீது இருந்த அன்பையும் அக்கறையையும் அவர் உணர்ந்தாரில்லை.

"என் சாமா ஒரு கிறுக்கன் போலும்! ஆனால், எனக்கு அவன்மேல் ஆசையும் பாசமும் உண்டு. என்னுடைய இதயத்தில் ஒரு தனியிடம் பிடித்துவிட்டான். அதுவே என் அன்புதோய்ந்த அனுதாபத்திற்கு காரணம்.-

"என்னுடைய கைகளாலேயே இந்த விஷ்ணு சஹஸ்ர நாம் மாலையை அவன் கழுத்தில் இடுகிறேன். உலகியல் தொல்லைகளில் இருந்தும் துயரங்களில் இருந்தும் இது அவனை விடுவிக்கும். இந்த நாமாவளியைப் பாராயணம் செய்வதில் அவனுக்கு ஆவலை உண்டு செய்கிறேன்.-

"நாமம் மலைபோன்ற பாவங்களையும் அழிக்கும்; நாமம் தேகாபிமானத்தை உடைக்கும்; நாமம் கோடிக்கணக்கான தீயநாட்டங்களை நாசம் செய்து நிர்மூலமாக்கும்.-

"நாமம் காலனின் கழுத்தை நெறிக்கும்; ஜனனமரணச் சுழலிருந்து விடுவிக்கும். இவ்வளவு மஹிமை வாய்ந்த விஷ்ணு சஹஸ்ர  நாமாவளியின் மீது சாமா ஆர்வத்தையும் ஆசையையும் அன்பையும் வளர்த்துக்கொள்ள வேண்டும். -

"பிரயத்தனமாக, செய்கிறோம் என்ற உணர்வுடன் செய்யப்படும் நாமஜபம் மிக உன்னதமானது. பிரயத்தனம் இன்றிச் செய்யப்படும் நாமஜபமும் சோடைபோவதில்லை. எதிர்பாராமல் நாக்கில் தொந்திரனாலும், நாமம் தன்னுடைய பிரபாவத்தை வெளிப்படுத்தும். -

"நம்மைப் பரிசுத்தமாக்கிக்கொள்ள நாமஜெபத்தைவிட சுலபமான வழி வேறெதுவும் இல்லை. நாமமே நாக்குக்கு அணிகலன்; நாமமே ஆன்மீக வாழ்வைச் செழிப்பாகும் உரம். -

"நாமத்தை தியானம் செய்வதற்கு நீராடல் தேவையில்லை. நாமம் சடங்குகளுக்கும் சாஸ்திர விதிகளுக்கும் உட்பட்டதன்று. நாமம் எல்லாப் பாவங்களையும் அழிக்கும். நாம என்றும் எப்பொழுதும் பவித்திரமானது.-

"என்னுடைய நாமத்தை இடைவிடாது ஜபம் செய்துவந்தால், அக்கறை சேர்ந்து விடுவீர்கள்; வேறு உபாசனை ஏதும் தேவையில்லை; அதுவே மோக்ஷத்தை அளிக்கும்.-

"எவர் என்னுடைய நாமத்தை சதாசர்வகாலமும் ஜபிக்கிறாரோ, அவர் எல்லாப் பாவங்களில் இருந்தும் விடுபடுகிறார். எனக்கு அவர் மிகச் சிறந்த மனிதரைவிடச் சிறந்தவராகின்றார்."

பாபாவின் இதயத்தில் ஆழமாகப் பதிந்திருந்த எண்ணமும் நோக்கமும் இவையே. அதற்கேற்றவாறே அவர் செயல் புரிந்தார். வேண்டா, வேண்டா, என்று சொன்னபோதிலும் சாமாவின் பாக்கெட்டில் போதியைத் திணித்துவிட்டார்!


Thursday 25 October 2018

ஷீர்டி சாயி சத்சரிதம்

பாபாவின் மனத்தில் எழுந்த எண்ணம் இதுவே. ராமதாசியைத் தம்மிடம் கூப்பிட்டுச் சொன்னார், "எனக்குத் தாங்க முடியாத வயிற்றுவலி வந்துவிட்டது; குடலே வெடித்துவிடும்போல் இருக்கிறது. -

"இந்த வயிற்றுவலி நிற்கப் போவதில்லை. போம், சீக்கிரமாகச் சென்று கொஞ்சம் சோனாமுகி சூரணம் (பேதி மருந்து) வாங்கி வாரும். ஒரு சிட்டிகை வாயில் போடாவிட்டால் இந்தப் பிடிவாதமான வயிற்றுவலி போகாது".

அப்பாவி ராமதாசி இதை நம்பிவிட்டார்! உடனே தாம் படித்துக்கொண்டிருந்த போதியில் பக்க அடையாளம் வைத்துவிட்டு பாபாவின் ஆணைக்கு கீழ்ப்படிந்து பஜாருக்கு ஓடினார்.

ராமதாசி படியிறங்கியவுடனே பாபா என்ன செய்தாரென்றால், தம்முடைய இருக்கையில் இருந்து எழுந்து வந்து பாராயணப் புத்தகக்கட்டுக்கு அருகே சென்றார்.

பல புத்தகங்களுக்கிடையில் விஷ்ணு சஹஸ்ர நாம போதி அதில் இருந்தது. அதைக் கையிலெடுத்திக்கொண்டு தம்முடைய இருக்கைக்கு  திரும்பி வந்தார்.

பாபா சொன்னார், "சாமா, உனக்குத் தெரியுமா? இந்த போதி பரம மங்களத்தை அளிக்கக் கூடியது. ஆகவே, நான் இதை உனக்குத் தருகிறேன். நீ இதை இன்றிலிந்து வாசிக்க ஆரம்பி.-

"ஒருசமயம் நான் பெருந்துன்பத்தால் பீடிக்கப்பட்டேன். அமைதியிழந்து கொதிப்படைந்த நிலையில் இதயம் படபடவென்று அடித்துக்கொண்டது. உயிர் பிழைப்பேன் என்ற நம்பிக்கையை இழந்தேன். -

"அந்த நேரத்தில், ஓ! உனக்கெப்படிச் சொல்லுவேன் சாமா! இந்தப் போதி மிகவும் உபயோகமாக இருந்தது; இது இல்லாமல் நான் உயிர்பிழைத்திருக்க மாட்டேன்! இதுவே என்னுயிரைக் காத்தது!-

"போதியை ஒருகணம் மார்பின் மேல் வைத்துக்கொண்டேன். ஆஹா! உடனே என்னுடைய இதயத்தின் படபடப்பு அடங்கியது. அல்லாவே போதியுனுள் இறங்கியிருப்பது போல் உணர்ந்தேன். நான் உயிர்பிழைத்தது போதியினாலேயே!-

"ஆகவே, சாமா, இதை உன்னுடையதாக எடுத்துக்கொள். மெதுவாகக் கொஞ்சம் கொஞ்சமாக தினமும் வாசிக்க ஆரம்பி. ஒரு நாளைக்கு ஒரு நாமாவின் மீது மனதை ஈடுபடுத்தினாலும் இது உனக்கு மிகுந்த ஆனந்தத்தை அளிக்கும்."

 சாமா பதில் கூறினார், "பாபா, எனக்கு இந்தப் போதி வேண்டா! அந்த ராமதாசி என்மீது கடுங்கோபம் கொள்வார். அவர் இல்லாமலிருந்த நேரத்தில் நான்தான் இந்தத் தகாத செயலைச் செய்து விட்டதாக நினைப்பார்.-

" அவர் இயற்கையாகவே துஷ்டர்; முன்கோபி; பிடிவாதக்காரர்; சுலபமாகத் தன் வயமிழக்கக் கூடியவர். அனாவசியாமாக ஏன் ஒரு சண்டையைக் கிளப்ப வேண்டும்? வேண்டா, வேண்டா, எனக்கு எந்தச் சச்சரவும் வேண்டவே வேண்டா !-


Thursday 18 October 2018

ஷீர்டி சாயி சத் சரிதம்

அந்தக் காலத்தில்தான் இப்புத்தகங்கள் உபயோகத்திற்கு வரும். நாம் அப்பொழுது மேலுலகத்தில் இருப்போம். ஆயினும், சாமா தம்முடைய புத்தக சம்மேளனத்தில் இருந்து (குவிப்பதிலிருந்து) எடுத்துக் கொடுப்பார். இயற்றிய ஆசிரியர்களின் பிரதிநிதிகளாகப் புத்தகங்கள் அப்பொழுதும் இயங்கும்!

இந்நூல்கள் பரம பவித்திரமானவை. ஷிர்டியிலோ அல்லது மற்ற இடங்களிலோ பக்தர்கள் இப் புராணநூல்களை வாசிக்க வேண்டும் என்பதே பாபாவினுடைய விருப்பமாக இருந்திருக்க வேண்டும். பத்திரமாக பாதுகாக்கச் சொன்னது அதற்காகவே.

ராமனுடைய சரித்திரமான ராமாயணத்தையோ, கிருஷ்ணனுடைய சரித்திரமான பாகவதத்தையோ வாசிக்கிறோம். அப்பொழுதும் முன்னும் பின்னும் சாயியே கண்ணுக்குத் தெரிகிறார்.

இந்நூல்களின் கதாநாயகர்கள், வேறு உருவம் ஏற்றுக்கொண்ட சாயியே என்று உணர்ந்த நிலையில், கதையை பிரவசனம் செய்பவரும் காதுகொடுத்துக் கேட்பவர்களும் சாயியின் உருவத்தையே கண்முன் காண்கிறார்கள்.

புத்தகங்கள் குருவுக்கு அர்ப்பணம் செய்யப்படுகின்றன; அல்லது பிராமணர்களுக்கு தானமாக அளிக்கப்படுக்கின்றன. இச் செய்கை, கொடுத்தவர்களுக்கு மங்களைத்தை விளைவிக்கின்றது என்பது சாஸ்த்திர பிரமாணம்.

"இப் புத்தகங்களை நீ வீட்டுக்கு எடுத்துக்கொண்டு போய், உன்னுடைய தொகுப்பில் சேர்த்து சம்ரட்சணம் செய்" என்று சாமாவுக்கு பாபா இட்ட ஆக்கினையின்பின், ஒரு மிகவும் முக்கியமான நோக்கம் இருந்தது.

சாமாவின் பக்தி எவ்வாறு ஒப்பில்லாததோ, அவ்வாறே பாபாவுக்கு சாமாவின் மீது இருந்த பிரேமை கரைகடந்தது. ஆகவே, அவரை ஓர் ஆன்மீக நியமத்துக்கு உட்படுத்தவேண்டுமென்ற விருப்பம் சாயியின் மனதில் எழுந்தது.

இதனால் பாபா என்ன செய்தாரென்று பாருங்கள்! சாமாவுக்கு இச்சையே இல்லாத போதிலும், அவருக்குச் சிறந்ததொரு அனுக்கிரத்தை செய்தார். சந்தர்ப்பச் சூழ்நிலையைப் பற்றிக் கேளுங்கள்!

ஒருநாள் மசூதிக்கு ராமதாசி புவா ஒருவர் வந்துசேர்ந்தார். ராமாயண பாராயணம் செய்வது அவருடைய நித்திய நியமம். (தினப்படி வழிபாட்டு ஒழுக்கம்).

விடியற்காலையில் எழுந்து காலைக்கடன்களை முடித்தபின் ஸ்நானம் செய்துவிட்டு, விபூதி தாரணம் செய்துகொண்டு காவியாடை தரித்து அனுஷ்டானத்துக்கு அமர்ந்துவிடுவார்.

பரிபூரணமான சிரத்தையுடன் அத்யாத்ம ராமாயணத்தை நெடுநேரம் வாசித்த பிறகு விஷ்ணு சஹஸ்ர நாமாவளியை பாராயணம் செய்வார்.

இவ்வாறு பலநாள்கள் நித்திய அனுஷ்டானம் நடந்து வந்தது. மாதவராவுக்கு நல்ல காலம் பிறந்தது; சமர்த்த சாயியின் மனதில் அவருக்கு அருள் செய்யவேண்டுமென்ற எண்ணம் உதித்தது. அதுபற்றிய விவரம் கேளுங்கள்.

மாதவராவின் சேவைக்குப் பலன் பழுக்கும் நேரம் வந்துவிட்டது. 'மாதவராவ் சமயாசார (மத ஒழுக்க) நியமம் ஒன்றைக் கடைப்பிடித்து பக்திமார்க்கத்தின் பிரசாதத்தை பெறவேண்டும். இவ்வழியாக உலகியல் வாழ்வின் தொல்லைகளில் இருந்து விடுபட்டு, சாந்தியடைய வேண்டும்.'-


Thursday 11 October 2018

ஷீர்டி சாயி சத் சரிதம்

ஒரு சமயம், பாகவத பாராயணம் செய்வதில் பேரார்வம் கொண்ட சாயி பக்தரொருவர், காகா மஹாஜனி என்ற பெயர் கொண்டவர், பாகவத புத்தகப் பிரதியொன்றை எடுத்துக்கொண்டு ஷிர்டிக்கு வந்தார்.

அவரை சந்திப்பதற்கு வந்த மாதவ்ராவ், தற்செயலாக அப் புத்தகத்தைப் படிப்பதற்காக எடுத்தார். மசூதிக்கு சென்ற போதும் கையில் புத்தகம் இருந்தது. பாபா அவரைக் கேட்டார். -

"சாமா, இதென்ன புத்தகம் உன் கையில்?" சாமா பதில் சொன்னார். பாபா புத்தகத்தை தம் கையில் எடுத்துப் புரட்டி பார்த்துவிட்டுத் திருப்பித் கொடுத்தார்.

ஒரு காலத்தில் காகா மஹாஜனி பாபாவிடம் இருந்து பிரசாதமாக பெற்றுக்கொண்ட ஏகநாத பாகவதத்தின் பிரதியே அப்புத்தகம்.

மாதவராவ், புத்தகம் தம்முடையதில்லையென்றும் காகா மஹாஜனி யினுடையது என்றும் பாபாவுக்குத் தெளிவுபடுத்தினார். படிக்க வேண்டுமென்ற ஆவல் யதேச்சையாக தோன்றியதால், கையிலெடுத்திக்கொண்டு வந்ததாகவும் விளக்காமாகச் சொன்னார்.

இருந்தபோதிலும் பாபா சாமாவிடம் கூறினார், "நான் இதை உனக்கு கொடுக்க நேர்ந்ததால் உன்னுடைய சேகரிப்பில் இதை வைத்துக்கொள். உனக்கு உபயோகப்படும்".

இவ்வாறு நடந்ததால், சிலகாலம் கழித்துக் காகா மஹாஜனி ஷிர்டிக்கு மறுபடியும் விஜயம் செய்தபோது, தாம் வாங்கிக்கொண்டு வந்த புதியதொரு ஏகநாத பாகவதப் பிரதியை சாயியின் கரங்களில் வைத்தார்.

பாபா அவருக்கு அதை பிரசாதமாகத் திருப்பிக் கொடுத்தார். கொடுக்கும்போது ஆக்கினையாகச் சொன்னார், "இதை மிக பத்திரமாக வைத்துக்கொள்ளும். இது உமக்கு உண்மையாகவே மிகவும் உபயோகமாக இருக்கும்". இவ்வாறு காகா மஹாஜனி ஆறுதல் அளிக்கப்பட்டார்.

பாபா மிகவும் மனம் கனிந்து மேலும் கூறினார், "இதுதான் உமக்கு நன்கு பணி புரியும்; இதை வேறு யாரிடமும் கொடுக்காதீர்". இதைக் கேட்ட காகா மஹாஜனி பிரேமையுடன் வந்தனம் செய்தார்.

பாபா எல்லா விருப்பங்களும் நிறைவேறியவர் ஆதலால், முழுக்க முழுக்க விருப்பமேதுமில்லாதவர். இயற்கையாகவே துறவு தர்மத்தை அனுசரித்த பாபா, உலகியல் பொருள்களை (புத்தகங்களை) சேகரிப்பதில் ஏன் சிரமம் எடுத்துக்கொண்டார்?

பாபாவின் மனதில் இருப்பதை யார் அறிவார்? நடைமுறை ரீதியில் பார்த்தால், இப் புத்தக வங்கி பக்தர்கள் புராணங்களைக் காதால் கேட்டு  இன்புறவும் பயனடையவும் உதவியாக இருந்தது.

ஷீர்டி இப்பொழுது ஒரு பவித்திரமான தலமாக ஆகிவிட்டது. பாபாவின் சிஷ்யர்கள் பல தேசங்களில் இருந்து வந்து இங்கே திரும்பத் திரும்ப கூடுவர்; ஆன்மீக விஷயங்களை பற்றிக் கலந்து ஆலோசிப்பர். 


Thursday 4 October 2018

ஷீர்டி சாயி சத்சரிதம்

பக்தர் எவருக்காவது ஒரு குறிப்பிட்ட நூலை வாசிக்கவேண்டுமென்ற ஆவல் ஏற்பட்டால், முதலில் அதை பாபாவிடம் கொடுத்து, அவர் கைகளில் இருந்து பிரசாதமாக திரும்பப் பெற்றுக்கொள்வது வழக்கமாக இருந்தது.

அந்நூலைப் பாராயணம் செய்யும் காலத்தில், செய்பவருக்கு அபாரமான புண்ணியம் கிடைக்கும் என்ற நம்பிக்கையிலேயே இவ்வாறு செய்யப்பட்டது. அவ்வாறே, அப்புத்தகத்தை போதியாகப் படித்து விரிவுரை சொல்பவருக்கும் கதை கேட்பவர்களுக்கும் பூரணமான பிரசாதமாக பரம மங்களம் விளையும் என்ற நம்பிக்கையும் இருந்தது.

சிலர் பாபாவிடம் பெருமாளின் தசாவதாரச் (பத்து அவதாரங்கள்) சித்திரத்தைக் கொணர்ந்தனர்; சிலர் தசாவதாரத் தோத்திரப் புத்தகங்களை கொணர்ந்தனர். மேலும் சிலர், பஞ்சரத்தினி கீதை போன்ற புனிதமான நூல்களையும் புண்ணிய சரித்திரங்களையும் அர்ப்பணம் செய்தனர்.

சிலர் தாசகணு இயற்றிய சந்தலீலாமிருதம், பக்தலீலாமிருதம் ஆகிய புத்தகங்களை கூட அர்ப்பணம் செய்தனர். வேறு சிலர் 'விவேக சிந்து' என்னும் நூலைக் கொண்டுவந்தனர். பாபா இவையனைத்தும் சாமாவிடம் ஒப்படைத்தார்.

பாபா அப்பொழுது கூறுவார், "சாமா, இந்தப் புத்தகங்களெல்லாம் உன்னிடம் இருக்கட்டும். வீட்டில் பத்திரமாக வைத்துக் காப்பாற்று." சாமா இந்த ஆணையைச் சிரமேற்கொண்டு, புத்தகங்களை ஜாக்கிரதையாக பாதுகாத்துவந்தார்.

பக்தர்கள் கடைகளில் இருந்து இம்மாதிரியான புத்தகங்களை வாங்கிக்கொண்டு வந்து, பிரசாதமாகத் திரும்ப பெற்றுக்கொள்ளும் நோக்கத்துடன் பாபாவின் கைகளில் வைப்பர்.

சுபாவத்தில் பாபா உதாரகுணம் படைத்தவரெனினும், இதைச் செய்வதற்கு தைரியம் தேவைப்பட்டது. ஆகவே, பக்தர்கள் தங்களுடைய ஆசையைத் தெரிவிப்பதற்கு மாதவராவை உடன் அழைத்துச் சென்றனர்.

ஆகவே, அவர் மூலமாகத்தான் பாபாவின் கைகளில் தக்க தருணத்தில் புத்தகங்கள் வைக்கப்பட்டன. பாபாவுக்குப் புத்தகத்தின் மஹிமையை மட்டுமின்றி, பக்தரின் ஆன்மீகப் பரிணாமநிலையும் தெரிந்திருந்தது.

பக்தர்கள் புத்தகங்ளை பாபாவின் கைகளில் வைப்பர். பாபா புத்தகங்களை மேலிருந்த வாரியாகப் புரட்டுவார். அதன் பிறகு, பக்தர்கள் புத்தகங்ளை திரும்பப் பெற்றுக்கொள்வதற்காகக் கைநீட்டுவர்.

ஆனால், பாபா பல சந்தர்ப்பங்களில் புத்தகங்களை பக்தர்களிடம் திருப்பிக் கொடுக்கமாட்டார். மாறாக, புத்தகங்களை மாதவராவிடம் கொடுத்து, "சாமா, இந்தப் பிரதிகளை வைத்துக்கொள். தற்சமயம் இவை உன்னிடமே இருக்கட்டும்" என்று சொல்லிவிடுவார்.

சாமா பட்டவர்த்தனமாகவே (வெளிப்படையாகவே )வினவுவார், "ஆர்வத்துடன் கை நீட்டிய இவர்களுடைய புத்தகங்களை திருப்தியளித்து விடட்டுமா?" அப்பொழுதும் பாபா சொல்வார், "நீயே வைத்துக்கொள்."


Wednesday 26 September 2018

                                                                 ஷீர்டி சாயி சத்சரிதம்

மற்றொரு பக்தருடைய தற்கொலை முயற்சி சாமர்த்தியமான திட்டமொன்றால் முறியடிக்கப்பட்டது. அவரைக் கடைசி நிமிடத்தில், எதிர்பாராதவிதமாக, மரணத்தின் வாயிலில் இருந்து வெளியே இழுத்து நல்வாழ்வளித்தார் பாபா. இது எவ்வாறு நிகழ்ந்ததென்று விவரமும் கடந்த அத்தியாயத்தில் அளிக்கப்பட்டது.

இந்த அத்தியாயத்தில், பக்தர்களுக்கு அருள் செய்வதிலும் அவர்களுக்கு சந்தோஷமும், திருப்தியும் அளிப்பதிலும் அவர்களை மேன்மையுறச் செய்வதிலும் பாபா பிரீதியடைந்த விவரம் சொல்லப்படும்.

பாபா அருள் செய்த பாணியே அலாதியானது. பலனைடையும் பக்தருக்கு தீட்ச்சை (மந்திர உபதேசம்) பெறுகிறோம் என்று தெரியாமற்கூடப் போகலாம். சிலருக்கு கேலிக்கும் சிரிப்பிற்கும் இடையே தீட்சை அளிக்கப்பட்டது. கேட்பவர்கள் இதை நுணுக்கமாக கவனியுங்கள்.

உபதேசம் அளித்ததும் அருள்மழை பொழிந்ததும் அநேக ரீதிகளில் நடந்தன. இதை ஏற்கனேவே இந்நூலில் விவரித்திருக்கிறேன். யாரால் எதை கிரகிக்க (சாரம் வாங்க) முடிந்ததோ, அந்த வழி அவருக்கு உபதேசிக்கப்பட்டது.

வைத்தியர்தான் நோயின் தன்மையையும் மருந்தின் குணத்தையும் அறிவார். இவ்விரண்டையுமே அறியாத நோயாளியோ வெல்லம் தின்னவேண்டுமென்று விரும்புகிறார்.

வெல்லம் இனிப்புதான்; சந்தேகமில்லை. ஆனால், அது நோயாளியின் உடல்நலத்துக்கு கெடுதல் விளைவிக்கும். உண்மை இவ்வாறிருப்பினும், நோயாளி வெல்லம் பெறாமல் கஷாயாத்தை குடிக்கமாட்டேன் என்று பிடிவாதம் பிடிக்கிறார். கையில் முதலில் வெல்லக் கட்டி வைக்கப்பட வேண்டும்!

நோயாளியிடம் பலாத்காரம் செல்லுபடியாகாது. ஆகவே, வைத்தியர் ஒரு யுக்தி செய்து, முதலில் வெல்லக்கட்டியையும் பிறகு கஷாயத்தையும் கொடுக்கிறார். இவ்வாறு வைத்தியர் காரியத்தை சாதித்து விடுகிறார்.

வெல்லத்தின் தோஷத்தை முறியடிக்கும் வகையில், கஷாயத்தில் முறிவுமருந்தையும் சேர்த்துக் கஷாயத்தின் குணப்படுத்தும் சக்தி குறையாதவாறு வைத்தியர் செய்துவிடுகிறார். பாபாவின் வழிமுறையும் இவ்வாறே!

ஆயினும், இப்படித்தான் ஒவ்வொருமுறையும் செய்தாரென்றில்லை. அவருடைய தீட்சை அளிக்கும் முறையைக் குறிப்பிட்ட பக்தரின் மனோதர்மம், பக்தி, சேவை, பிரேமை, விசேஷ குணம் இவற்றுக்கேற்றவாறு தேர்ந்தெடுத்தார்.

பாபாவின் அற்புதமான லீலைகள் திகைப்பூட்டக் கூடியவை! யாரிடமாவது பிரயமேற்பட்டால், அவருக்கு தீட்சை அளித்து அனுக்கிரகம் செய்வார். அவ்வாறு செய்த சந்தர்ப்பச் சூழ்நிலைகளை பற்றிக் கேளுங்கள்.

யாருக்காவது அனுக்கிரஹம் செய்யவேண்டுமென்று அவருக்குத் தோன்றிவிட்டால், சம்பத்தப்பட்ட பக்தர் அதுபற்றி கனவிலும் நினைத்திருக்கவிட்டாலும் சரி, அவருக்கு வாழ்க்கையில் நிறையுணர்வையும் சாதனைகளால் ஏற்படும் திருப்தியையும் அளித்துவிடுவார். இதுவும் அதிகப் பிரயாசையின்றி நகைச்சுவைக்கும் கேலிக்கும் இடையே நடந்துவிடும். 


Thursday 20 September 2018

ஷீர்டி சாயி சத்சரிதம்

குருவினிடத்தில் பக்தி பாவமும் கரைகாணாத அன்பும் அசையாத நிட்டையும் இல்லையெனில், ஆறு உல் எதிரிகளை (காமம், கோபம், லோபம், மோகம், மதம், மாச்சரியம்) வெல்ல முடியாது. அஷ்டபாவங்களை அடையவும் முடியாது.

பக்தனுடைய ஆத்மசுகம் குருவுக்குப் பெருமகிழ்ச்சியை அளிக்கிறது. பக்தன் எவ்வெளவுக்கு எவ்வளவு ஆன்மீக முன்னேற்றம் அடைகிறானோ அவ்வவளக்கு அவ்வளவு குரு குதூகலம் அடைகிறார்; பக்தனைக் கொண்டாடுகிறார்.

'தேகம், வீடு, மனைவி, மக்கள் - இவையனைத்தும் என்னுடையவை' என்று நினைப்பது விவேகமற்ற செயல். இவையனைத்தும் பிற்பகல் நிழலைப் போல் வேகமாய் இடம் மாறும் தன்மையுடையவை; கணநேரத்தில் மறையக்கூடிய மாயை.

இந்த மாயையின் சுழலில் மாட்டிக்கொள்ளக் கூடாது என்று விரும்புவர் வேறெதிலும் நாட்டமில்லாது சாயியிடம் சரணடைந்துவிட வேண்டும்.

மாயையின் மர்மத்தை முடிச்சவிழ்க்க முயன்ற வேத சாஸ்திரங்கள் கையை விரித்துவிட்டன. சிருஷ்டி அனைத்திலும் இறைவனை காண முடிந்தவரே மாயையை வெல்ல முடியும்.

நிஜாம் ராஜ்யத்தில் இருந்து பக்கீர் சாயியைத் தம்முடன் முதலில் நெவாஸாவுக்கு அழைத்துவந்த சாந்த் பாய் பாடீல் பாக்கியசாலி.

அங்கே பக்கீர் சாயி கிட்டத்தட்ட ஓராண்டு காலம் வாசம் செய்தார். அங்கேதான் அவர் காணட் கிராமவாசியான கமா என்பவருடன் சகவாசமாக இருந்தார்.

இருந்தபோதிலும், சிறிதுகாலம் கழித்து, கமாவும் பிரசித்தி பெற்ற டாக்ளீ கிராமத்தைச் சேந்த தகடூ தாம்போலியும் (தாம்பூல வியாபாரியும்) பாபுவுடன் நெவாஸாவில் இருந்து ஷிர்டிக்கு வந்துசேர்ந்தனர்.

நாடெங்கும் புண்ணியத் தலங்களும் புண்ணிய தீர்த்தங்களும் அபரிதமாக இருக்கின்றன. ஆயினும், சாயி பக்தர்களுக்கு ஷிர்டியே மிக பவித்திரமானது.

இந்த யோகம் நேர்ந்திராவிட்டால் (பாபாவின் ஷீர்டி வருகை) தீனர்களாகிய நமக்கு அவருடைய கூட்டுறவு எப்படிக் கிடைத்திருக்கும்? இது நம்முடைய கிடைத்ததற்கரிய பெரும் பேறன்றோ!

பக்தர்களில் எவரெல்லாம் முழுமையாக சரணடைகிறார்களோ, அவர்கள் எல்லாருடைய நன்மையையும் கருதி சாயி அவர்களை சன்மார்க்கத்தில் செலுத்துகிறார்.

ஆகவே, கதை கேட்பவர்களே! ஊன்றிய மனதுடன் சத் சரித்திரத்தை படியுங்கள். சாயியின் புண்ணிய சரித்திரமே அவரருளை பெறச் சிறந்த வழியாகும்.

கடந்த அத்தியாயத்தில், ஒரு பக்தருக்கு குலகுருவினிடம் இருந்த விசுவாசம் ஊர்ஜிதப்படுத்தப்பட்டதும் மற்றொருவருக்கு அக்கல்கோட் சுவாமியை பற்றிய சூசகம் அளிக்கப்பட்டு அவருடைய நம்பிக்கையும் விசுவாசமும் மறுமலர்ச்சி செய்யப்பட்டதும் விவரிக்கப்பட்டது. 

Thursday 13 September 2018

                                                    ஷீர்டி சாயி சத்சரிதம்

                                          27 . அருட்பெருக்கு - உபதேசம்

ஓம் ஸ்ரீ விநாயகனே போற்றி! ஸ்ரீ சரஸ்வதியே போற்றி!
ஸ்ரீ குருமஹாராஜனே போற்றி! குலதேவதைக்கும் ஸ்ரீ சீதாராமச்சந்திரனுக்கும் என்னுடைய பணிவான வணக்கங்கள். பூஜ்யகுரு ஸ்ரீசாயிநாதனை பக்தியுடன் சிரம் தாழ்த்தி வணங்குகிறேன்.

சத் குருவின் பாதங்களைப் பற்றிக்கொள்ளும்போது, பிரம்மா, விஷ்ணு, சிவன் ஆகிய மும்மூர்த்திகளின் பாதங்களையே நாம் வணங்குகிறோம்; கண்கூடாகப் பர ப்ரம்மத்தையே வந்தனம் செய்கிறோம்; பரமானந்தம் அடைகிறோம்.

சமுத்திரத்தில் ஒருமுறை முழுகிவிட்டால், எல்லாப் புண்ணிய தீர்த்தங்களிலும் நீராடிய புண்ணியம் கிடைக்கிறதன்றோ! அதுபோலவே, குருவின் பாதங்களை கெட்டியாகப் பிடித்துக்கொண்டால், சகல தேவதைகளையும் அங்கு அடையலாம்.

ஜய ஜய சத் குரு சாயி! சாயுஜ்ஜிய முக்தி (இறையுடன் ஒன்றிய நிலை) அளிக்கும் கல்பதருவே ஜய ஜய! சத்திய ஞானக் கடலே ஜய ஜய! கதை கேட்பவர்களுக்கு பயபக்தியுடன் கேட்க வேண்டுமென்ற உணர்வை ஊட்டுமாறு வேண்டுகிறேன்.

சாதகப்பட்சி மேகத்தில் இருந்து விழும் நீர்துளிகளாகக் காத்திருப்பதுபோல, ஆன்மீக நாட்டமுள்ள பக்தர்கள் இந்த அமிருத மயமான கதைக்காக காத்திருக்கின்றனர். சகலமான பாபா பக்தர்களுக்கும் இந்த அமிருதத்தை அருந்தி எக்காலத்திலும் சுகத்தை அனுபவிப்பார்களாக !

தங்களுடைய நிர்மலமான கதையைக் கேட்பதால் அவர்களுக்கு உடல் முழுவதும் வியர்த்து கொட்டட்டும். பிரேமையால் விழிகளில் கண்ணீர் ததும்பட்டும்; பிராணன் உமது பாதாரவிந்தங்களில் லயிக்கட்டும்;-

அபரிமிதமான அன்பினால் மனம் கனியட்டும்; பெருமகிழ்ச்சியால் திரும்பத் திரும்ப மெய்சிலிர்க்கட்டும். குடும்பத்துடன் கதை கேட்பவர்கள் உணச்சிவசப்பட்டு விம்மி விம்மி ஆனந்தக்கண்ணீர் பெருக்கட்டும்;-

(கதை கேட்பவர்களுடைய) பரஸ்பர விரோதங்கள் ஒழியட்டும்; பேதங்கள் நலியட்டும். தமக்குள்ளே சோதனை செய்து பார்த்தால், இதுதான் குருவின் கிருபை உண்டாக்கும் எழுச்சியும் விழிப்பும் என்று அவர்கள் நன்கு அறிவர்.

குருவின் கிருபையால் ஏற்படும் எழுச்சியும் விழிப்பும் கண்களுக்கு புலப்படாது. ஏனெனில், அது எல்லா இந்திரியங்களுக்கும் அப்பாற்பட்டது. மூவுலகங்களிலும் தேடினாலும் சத் குருவை தவிர இதை அளிக்கக்கூடியவர் வேறெவரையும் காண முடியாது.  


Thursday 6 September 2018

                                                               ஷீர்டி சாயி சத்சரிதம்

ஆம்ப்ட்டேக்கரின் தந்தை அக்கல்கோட் சுவாமியின் சிறந்த பக்தராக விளங்கினார். இவ்வனுபவத்தின் மூலமாக, அவ்வழிபாடு தொடர்ந்து அது மாதிரியாகவே செய்யப்பட வேண்டும் என்பதையும் பாபா அறிவுறுத்தினார்.

இவ்விதமாகக் காலப்போக்கில் எல்லாம் நல்லபடியாக நடந்தன. கெட்டகாலம் கழிந்தது. ஆம்ப்ட்டேக்கர் பெருமுயற்சி செய்து ஜொலித்திடம் கற்றுக்கொண்டார். அதற்கான பலனும் கிடைத்தது.

சாயிகிருபையாகிய பிரசாதத்தை பெற்ற அவருக்கு நல்ல காலம் பிறந்தது. ஜோதிட சாஸ்திரத்தில் பாண்டித்தியம் பெற்றார். பழைய வறுமை பறந்தோடியது.

குருவினிடம் பிரேமை வளர்ந்தது. செல்வச் செழிப்பும் சந்தோஷமும் பின் தொடர்ந்தன. குடும்பத்தில் நிம்மதியும் சுகமும் நிலவின. எல்லாவிதத்திலும் ஆனந்தமுடையவராக வாழ்ந்தார்.

ஒன்றைவிட மற்றொன்று சுவையில் மீறும் இம்மாதிரியான லீலைகள் எண்ணிலடங்கா. அவையனைத்தையும் சொல்லப் புகுந்தால், கிரந்தம் (நூல்) மிக விஸ்தாரமாக ஆகிவிடும். ஆகவே, சாரத்தை மட்டும் சொல்கிறேன்.

ஹேமாட் சாயி பாதங்களில் சரணடைகிறேன். பாபா விஷ்ணு சஹஸ்ர நாமத்தை (புத்தகத்தை) சாமாவுக்கு அன்பளிப்பாகத் தந்த சுவையான நிகழ்ச்சியை அடுத்த அத்தியாயம் விவரிக்கும்.

சாமா, 'வேண்டா, வேண்டா' என்று சொன்ன போதிலும், அவர் மீதிருந்த அளவற்ற பிரேமையால் விஷ்ணு சஹஸ்ர நாமத்தின் சுந்தரமான மஹாத்மியத்தை வர்ணித்த பின், அதை சாமாவின்மீது பாபா திணித்தார்.

சிஷ்யனுக்கு இச்சை இல்லாமலிருந்த போதிலும், அனுக்கிரஹம் செய்யக்கூடிய சமயம் வந்தபோது உபதேசம் அளித்த பாபாவின் கருணையை அடுத்த அத்தியாயத்தில் காணலாம். அக் கதையை பயபக்தியுடன் கேளுங்கள்.

அத்தியாயத்தின் முடிவில், சத்குரு உபதேசம் செய்யும் முறை எவ்வளவு விசித்திரமானது என்பதும் விளங்கும். செவிமடுப்பவர்களே! கவனத்துடன் கேளுங்கள்.

மங்களங்களுக்கெல்லாம் மங்களமான சாயி தலைசிறந்த குணங்களின் சுரங்கம். அவருடைய புனிதமான கதையைக் கேட்கும் வாய்ப்பை பாக்கியவான்களே பெறுகின்றனர்!

எல்லாருக்கும் க்ஷேமம் உண்டாகட்டும்! ஞானிகளாலும் சான்றோர்களாலும் உணர்வூட்டப்பட்டு, சாயி பக்தன் ஹேமாட் பந்தால் இயற்றப்பட்ட, 'ஸ்ரீ சமர்த்த சாயி சத் சரித்திரம்' என்னும் காவியத்தில், 'குலகுருவிடம் விசுவாசத்தை நிலைபெறச் செய்த செம்மை - காக்காய் வலிப்பு நோய் தீர்த்த அருள் - தற்கொலை முயற்சியை தடுத்தாட்கொண்ட கருணை' என்னும் இருபத்தாறாவது அத்தியாயம் முற்றும்.

                           ஸ்ரீ சத்குரு சாயிநாதருக்கு அர்ப்பணம் ஆகட்டும்.

                                                        சுபம் உண்டாகட்டும்.   

 

Thursday 30 August 2018

ஷீர்டி சாயி சத்சரிதம்

வியாதிகளில் இருந்து விடுதலை பெறும் நோக்கத்தில் அவர் அக்கல் கோட் மஹாராஜருக்குப் பல தினங்கள் சேவை செய்தார். துன்பத்தை பொறுத்துக்கொள்ள முடியவில்லை. மனம் கலங்கி  சோகத்தில் ஆழ்ந்தார்.

ஆத்மஹத்தி (தற்கொலை) செய்துகொள்வது என்று நிர்ணயம் செய்துகொண்டு, இரவு நேரத்தில் சுற்றிலும் நிசப்தமாக இருந்தபோது ஒரு கிணற்றிற்குச் சென்று அதனுள் குதித்து விட்டார்.

திடீரென்று அக்கல்கோட் மஹராஜ் அங்கே தோன்றினார். தம்முடைய கைகளாலேயே பக்தரை வெளியே கொண்டுவந்து போட்டார்; உபதேசமும் செய்தார். "எதை அனுபவிக்க வேண்டுமென்றிருக்கிறதோ, அதை அனுபவித்தே தீர வேண்டும்.-

"நம்முடைய பூர்வஜென்ம வினைகளை ரோகங்களாகவும் குஷ்டமாகவும் வலியாகவும் கவலையாகவும் முழுவதும் அனுபவித்துத் தீர்க்கும்வரை தற்கொலை எதை சாதிக்க முடியும்?-

"மேலும், துன்பத்தையும் வலியையும் முழுமையாக அனுபவித்துத் தீர்க்காவிட்டால், அதை முடிப்பதற்காகவே இன்னும் ஒரு ஜென்மம் எடுக்க வேண்டும். ஆகவே, இந்தத் துன்பத்தை இன்னும்கொஞ்சம் பொறுத்துக்கொள். உன்னுடைய உயிரை நீயே அளித்துக் கொள்ளாதே."

தம்முடைய மனநிலைக்கு மிகப் பொருத்தமான இக் கதையைப் படித்த ஆம்ப்டேகர் மெய்சிலிர்த்துப் போனார். உடனே, "எங்கும் நிறைந்திருக்கும் பாபாவின் சமூகத்தில் நாம் இக் காரியத்தைச் செய்யத் துணிந்தோமே ' என்று நினைத்து மனம் நொந்தார்.

ஆம்ப்டேகர் உடைய மனதிற்கு, 'விதிக்கப்பட்டதை அனுபவித்தே தீர வேண்டும்' என்பது நன்கு விளங்கியது. சரியான சமயத்தில் அதுவே குறிப்பாக அருளப்பட்டது. தாம் செய்ய நினைத்த சாகச செயல், தமக்கு நன்மை தரக்கூடியதன்று என்பதும் தெளிவாகியது.

அவர் படித்த கதை, உண்மையில் வானத்தில் இருந்து தோன்றிய அசரீரியே. செயற்கரிய செயலான இந்த லீலையைக் கண்ட ஆம்பிடேகருக்கு சாயி பாதங்களில் நம்பைக்கையும் விசுவாசமும் மேலும் பலப்பட்டன.

சற்றும் எதிர்பாராத  வகையில், சற்குணமேரு நாயக்கரின் வாய்மொழி மூலமாகவும் போதி புத்தகத்தின் மூலமாகவும் வந்த எச்சரிக்கை, கொஞ்சம் தாமதப்பட்டிருந்தாலும் அவருடைய ஜென்மமே அழிந்துபோயிருக்கும்.

அவர் நினைத்தார், "என்னுடைய உயிரே போயிருக்கும். என்னுடைய குடும்பத்திற்குப் பெரும் தீங்கும் என் மனைவிக்குத் தாங்கொணாத கஷ்டங்களும் விளைந்திருக்கும். இகத்திலும் பரத்திலுமாக இரட்டை நஷ்டம் அடைந்திருப்பேன்.-

"சகுணமேரு நாயக்கரின் மனத்தைத் தூண்டிவிட்டுப் போதியைக் கருவியாக வைத்துத் தற்கொலைத் திட்டத்தில் இருந்து என்னை மனம் மாற வைத்திருக்கிறார் பாபா. "

அவ்வாறு நிகழ்ந்திராவிட்டால், அந்த ஏழை (ஆம்டேகர்) வீணாக மரண மடைந்திருப்பார். ஆனால், சாயியை போன்ற ரட்சகர் இருக்கும்போது சாவு எப்படி நெருங்கும்?


Thursday 9 August 2018

ஷீர்டி சாயி சத்சரிதம்

1916 ஆம் ஆண்டில் அவருடைய துன்பங்களும் வாழ்க்கையின் மீது வெறுப்பும் உச்சநிலையை எய்தின. புனிதமான ஷிர்டியிலேயே பிராணனை விட்டுவிடுவது என்ற முடிவுக்கு வந்தார்.

அச்சமயத்தில் அவர் குடும்பத்துடன் ஷிர்டியில் இரண்டு மாதங்கள் தங்கியிருந்தார். ஓரிரவு என்ன நடந்ததென்று கேளுங்கள்.

தீக்ஷிதர் வாடாவுக்கு எதிரே நிறுத்தியிருந்த ஒரு மாட்டு வண்டியின் மேல் ஆம்ப்ட்டேகர் உட்கார்ந்திருந்தார். மனத்துள்ளே கட்டுக்கடங்காத எண்ணங்கள் ஓடின.

ஆர்வம் இழந்துபோய் மனமுடைந்து வாழ்க்கையையே வெறுத்தார். அவர் எண்ணினார், "போதும், போதும், இந்தத் துன்பங்கள். எனக்கு வாழ்க்கையில் நம்பிக்கையே இல்லாமல் போய்விட்டது."

இவ்வாறு நினைத்து வாழ்க்கையையே வெறுத்து ஆம்ப்ட்டேகர் கிணற்றில் குதித்துவிடத் தயாரானார்.

அவர் நினைத்தார், "யாரும் அருகில் இல்லை. அமைதியான இந்த நேரத்தைப் பயன்படுத்திக்கொண்டு என்னுடைய திட்டத்தை நிறைவேற்றிக் கொள்வேன். துன்பங்களில் இருந்தும் துக்கத்தில் இருந்தும் விடுபடுவேன்."

தற்கொலை செய்துகொள்வது மஹாபாவம்; ஆயினும் அவர் இந்த உறுதியான முடிவை எடுத்தார். ஆனால், சூத்ரதாரியான சாயி பாபா இந்த மூடத்தனமான செயலைத் தடுத்துவிட்டார்.

ஆம்ப்ட்டேகர் உட்கார்ந்திருந்த இடத்திற்கு மிக அருகில், உணவுவிடுதி முதலாளியான சகுணமேரு நாயக்கரின் வீடு இருந்தது. சகுண, பாபாவின் நெருங்கிய பக்தர்; சேவகர்.

சகுண திடீரென்று வீட்டின் வாயிற்படிக்கு வந்து, உடனே ஆம்பிடேகரை வினவினார். "அக்கல்கோட் மஹாராஜின் இந்த போதியை (புராணம்) நீர் எப்பொழுதாவது வாசித்திருக்கிறீரா?"

"எங்கே? பார்க்கிறேன்; பார்க்கிறேன்!" என்று சொல்லிக்கொண்டே ஆப்பிடேக்கர் ஆர்வத்துடன் அப் புத்தகத்தை கையில் வாங்கி கொண்டார். மேலெழுந்த வாரியாக ஒரு முறை புரட்டினார். பிறகு, நடுவில் ஏதோ ஒரு பக்கத்தில் இருந்து படிக்க ஆரம்பித்தார்.

கர்மமும் தர்மமும் நன்கு பிணைந்தது போல (அதிர்ஷ்டவசமாக), அவர் எடுத்துக் படிக்க ஆரம்பித்த பகுதி அவருடைய அந்தரங்கமான எண்ணங்களுக்கு கச்சிதமாக பொருந்தும்படி இருந்தது; மின்னலைப்போல் அவருடைய மனத்தில் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தியது.

ஆம்டேகர் தற்செயலாக படிக்க நேர்ந்த கதையை இப்பொழுது விவரிக்கிறேன்; எல்லாரும் கேளுங்க. இந்நூல் பெரிதும் விரிந்துவிடும் என்ற பயம் காரணமாகச் சுருக்கமாக சாராம்சத்தை மட்டும் சொல்கிறேன்; கேளுங்கள்.

அகமுக நிட்டையில் சிறந்த ஞானியான மஹாராஜ் அக்கல்கோட்டில் வாழ்ந்து கொண்டிருந்தபோது, அவருடைய பக்தர்களில் ஒருவர் கடுமையான வியாதிகளால் பீடிக்கப்பட்டு பொறுக்கமுடியாத அளவிற்கு துன்பத்திலாழ்த்தப்பட்டார். 


Thursday 2 August 2018

ஷீர்டி சாயி சத்சரிதம்

தாயாரிடமிருந்து இக் கதையைக் கேட்ட பிதலே பரமானந்தம் அடைந்தார். சாயியின் எங்கும் நிறைந்திருக்கும் தன்மையும் தரிசனத்தால் விளைந்த நன்மையும் அவருடைய மனத்தில் அழியாத முத்திரை பதித்துவிட்டன.

தாயாரின் அமிருதமயமான வார்த்தைகள், பல ஆண்டுகளாக நசித்துப்போன தெய்வபக்தியை புத்துயிர் பெறச் செய்தன. பிராயச்சித்தம் (பாவத்தை போக்குவதற்கான சடங்கு) செய்யவேண்டுமென்ற மனோபாவமும் பச்சாதாபமும் எதிர்கால நல்வாழ்வுக்கு வழிவகுத்தன.

ஆகவே, எது நடக்கவேண்டுமோ அது நடந்துவிட்டது! தூங்கிக்கொண்டிருந்த தமது கடமையுணர்வை  சாயி பாபா எழுப்பிவிட்டது பற்றி பிதலே மிக்க நன்றியுடைவரானார். தம்முடைய கடமைகளை செய்வதில் கண்ணுங்கருத்தமாக வாழ்க்கை நடத்தினார்.

இப்பொழுது அதே போன்ற இன்னொரு நிகழ்ச்சிபற்றி சொல்கிறேன்; நிறைந்த மனத்துடன் கேளுங்கள். கட்டவிழ்ந்து தெறித்தோடிய பக்தர்களின் மனத்தை பாபா எவ்வாறு அடக்கி அமைதியுறச் செய்தார் என்பதை இக்காதை காட்டும்.

கோபால் ஆம்ப்ட்டாகர் நாராயண் என்றொரு சிறந்த பக்தர் பூனாவில் வாழ்ந்து வந்தார். அவருடைய கதையை பயபக்தியுடன் கேளுங்கள்.

அவர் பிரிட்டிஷ் ராஜாங்கத்தின் கலால் வரி இலாகாவில் (Excise Department ) உத்தியோகம் பார்த்து வந்தார். பாத்து ஆண்டுகள் வேலை பார்த்த பிறகு உத்தியோகத்தை விட்டுவிட்டு, வேறு வேலை ஏதும் பாராமல் வீட்டிலேயே இருந்தார்.

அவருக்கு கெட்டகாலம் தொடங்கியது. வாழ்நாள் முழுவதும் சீராக ஒரே மாதிரியாக அமையுமோ? நவகிரகங்கள் விளைவித்த சுழற்சியில் மாட்டிக்கொண்டார். யார்தான் விதியின் பயனை அனுபவிக்காது தப்பிக்க முடியும்?

அவர் ஆரம்பகாலத்தில் தானே ஜில்லாவில் வேலை செய்தார். பிறகு, ஜவஹர் ஜில்லாவில் வேலை செய்ய நேர்ந்தது. அங்கு அவர் ஆஃபீசராக உத்தியோகம் பார்த்தார். பிறகு வேலையே இல்லாமல் போய்விட்டது.

உத்தியோகம் என்பது தாமரை இலையின்மேல் ததும்பும் நீர்த்துளி அன்றோ! அது எவ்வாறு பழைய இடத்துக்கே திரும்பும்? அந்த சமயத்தில் தீவிரமாக பிரயத்தனங்கள் செய்தார்.

ஆனால், அவருக்கு அதிருஷ்டமில்லை! ஆகவே, அவர் தமது சுதந்திரத்தை காத்து கொள்வதென்று முடிவு செய்தார். துன்பத்திற்குப் பின் துன்பம் தொடர்ந்தது; அவர் எல்லாவிதத்திலும் சோர்வடைந்து விட்டார்.

வருடாவருடம் நிதிநிலைமை படிப்படியாக க்ஷணமடைந்தது.(நசித்தது). ஆபத்துகள் வரிசையாக தொடர்ந்தன. குடும்ப நிலைமை சகிக்கமுடியாதபடி ஆகிவிட்டது.

ஏழு ஆண்டுகள் இவ்வாறு கழிந்தன. ஒவ்வோர் ஆண்டும் ஷிர்டிக்குச் சென்று பாபாவிடம் தம்முடைய துன்பங்களை பற்றி ஒப்பாரி வைத்தார். இரவுபகலாக பாபாவை வணங்கினார். 


Thursday 26 July 2018

ஷீர்டி சாயி சத்சரிதம்

அதைப்பற்றிச் சிறிது நேரம் யோசித்த மூதாட்டிக்கு திடீரென்று ஞாபகம் வந்தது. மூதாட்டி பிதலேவிடம் கூறினார், "ஆ, இப்பொழுது ஞாபகம் வந்துவிட்டது. பாபா சொன்னது சாத்தியமே!-

"இப்பொழுது நீ உன் புதல்வனை பாபாதரிசனம் செய்வதற்காக ஷிர்டிக்கு அழைத்துக்கொண்டு சென்றாய். இதுபோலவே, நீ சிறுவனாக இருந்தபொழுது, உன் தகப்பனாரும் உன்னை அக்கல்கோட்டிற்கு அழைத்துச் சென்றார். -

"அக்கல்கோட் மஹராஜ் ஒரு சித்தர்; பரோபகாரி; அந்தரஞானி; அறிவொளி படைத்த யோகி; மிகப் பிரசித்தமானவர். உன் தகப்பனாரும் தூயவர்; நல்லலொழுக்கம் மிகுந்தவர். -

"உன் பிதா செய்த பூஜையைக் கண்டு மகிழ்ந்த யோகிராஜா, பிரசாதமாக இரண்டு ரூபாய்களை (நாணயங்கள்) அளித்து அவற்றைப் பூஜித்துவரச் சொன்னார். -

"ஏற்கெனவே கொடுக்கப்பட்ட அந்த இரண்டு ரூபாய்களுங்கூட, பிரசாதமாகவும் நித்திய பூஜைக்காகவுமே அக்கல்கோட் சுவாமியால் கொடுக்கப்பட்டன. -

"அந்த இரண்டு ரூபாய்கள் இல்லத்து வழிபாட்டு விக்கிரங்களுடன் வைக்கப்பட்டு நியம நிஷ்டையுடன் பூஜிக்கப்பட்டன. -

"இது விஷயமாக உன் தந்தைக்கிருந்த பக்தியும் சிரத்தையும் எனக்கு மட்டுமே தெரியும். இந்த நம்பிக்கைதான் அவருக்கு அன்றாட நடவடிக்கைகளில் வழிகாட்டியது. அவருக்கு பிறகு, பூஜை சாமான்கள் குழந்தைகளின் விளையாட்டுப் பொருள்களாகிவிட்டன. -

"கடவுள் நம்பிக்கை தேய்ந்துபோய், பூஜை செய்வதென்பது கூச்சப்படும்  செயலாகிவிட்டது. குழந்தைகள் பூஜை செய்ய ஏவப்பட்டனர். அந்நிலையில் , ரூபாய் நாணயங்கள் இரண்டைப் பற்றி யாருக்கென்ன கவலை ?-

"பல வருடங்கள் இவ்வாறு உருண்டோடின. ரூபாய் நாணயங்கள் அலட்சியம் செய்யப்பட்டன. காலப்போக்கில் அவற்றைப் பற்றிய நினைவே அழிந்து போயிற்று. இவ்விதமாக அந்த ரூபாய் நாணயங்கள் இரண்டும் தொலைந்துபோயின.-

"இருந்தபோதிலும் உன்னுடைய பாக்கியம் பெரிது. நீ சாயி ரூபத்தில் அக்கல்கோட் மஹாராஜையே சந்தித்திருக்கிறாய். பல்லாண்டுகளாக மறந்துபோன விஷயத்திற்குப் புத்துயிர் அளிக்கவும் தீங்குகளை விலக்கவும் வாய்ப்பு ஏற்பட்டிருக்கிறது. -

"ஆகவே, இப்பொழுதிலிருந்தாவது  சந்தேகங்களையும் தர்க்கவாதத்தையும் ஒதுக்கி வைத்துவிட்டு முன்னோர்கள் சென்ற பாதையில் நடப்பாயாக. உலக விவகாரங்களில் குறுக்குவழி வேண்டா.-

"இந்த ரூபாய் நாணயங்களை முறைதவறாது வழிபட்டு வருவாயாக. ஞானி அளித்த இந்த பிரசாத்தை ஓர் ஆபரணமாகக் கருதுவாயாக. சமர்த்த சாயி உன்னுடைய பக்தியைப் புனருஜீவனம் (மறுபடி உயிர்பெறச்) செய்வதற்கு இதை ஒரு சூசமாக அளித்திருக்கிறார்.

Thursday 19 July 2018

ஷீர்டி சாயி சத்சரிதம்

பிதலேவின் மனைவி பரம சாது; பிரேமையும் பக்தியும் சிரத்தையும் நிரம்பியவர். அவர் தூணுக்குப் பக்கத்தில் அமர்ந்தவாறு பாபாவையே இமைகொட்டாமல் பார்த்துக் கொண்டிருப்பார்.

அவ்வாறு பார்த்துக் கொண்டிருந்தபோதே அவருடைய கண்களில் நீர் நிரம்பிவிடும். இது தினமும் நிகழ்ந்தது. அவருடைய அற்புதமான அன்பைப் பார்த்து, பாபா மிகுந்த சந்தோஷமடைந்தார்.

இறைவன் எப்படியோ அப்படியே ஞானிகளும், இருவருமே அன்புக்குக் கட்டுப்பட்டவர்கள். பராதீனமாகவும் (சுதந்திரத்தை இழந்தும்) வேறெதிலும் நாட்டமின்றியும் எவரெல்லாம் வழிபாடு செய்கிறார்களோ , அவர்களெல்லாருக்கும் அருள்புரிகின்றனர்.

பிதலே குடும்பத்தினர் பம்பாய் திரும்புவதற்கு முன், பாபாவை தரிசனம் செய்வதற்காக மசூதிக்கு வந்தனர். பாபாவிடம் இருந்து உதீயும் அனுமதியும் பெற்றுக்கொண்டு கிளம்புவதற்கு ஆயத்தமானவர்கள்.

திடீரென்று பாபா பிதலேவை கூப்பிட்டுக்கொண்டே மூன்று ரூபாய்களை (நாணயங்களை) தம்முடைய பாக்கெட்டில் இருந்து எடுத்தார். அப்பொழுது பாபா என்ன சொன்னார் என்பதை கேளுங்கள்.

"பாபு! நான் இரண்டு ரூபாய் ஏற்கனேவே கொடுத்திருக்கிறேன். இந்த மூன்றையும் அவற்றுடன் சேர்த்து வைத்துக்கொண்டு முறை தவறாது பூஜை செய்வீராக. அது சகல மங்களங்களையும் அளிக்கும்".

ஹரிச்சந்திர பிதலே பெருமகிழ்ச்சியுடன் அந்த நாணயங்களை பிரசாதமாக ஏற்றுக்கொண்டார். பாபாவின் பாதங்களை நமஸ்காரம் செய்த பின், "கிருபை செய்வீர் மஹாராஜா!" என்று வேண்டினார்.

இருந்த போதிலும், அவருடைய மனதில் ஒரு கேள்வி உடனே எழுந்தது. "இப்பொழுதுதான் நான் முதன்முறையாக பாபாவிடம் வந்திருக்கிறேன். அப்படியிருக்க, பாபா சொன்னதற்கு என்ன பொருள்? எனக்குப் புரியவில்லையே !-

"நான் பாபாவை இதற்கு முன்பு பார்த்ததே இல்லை. எனக்கு எப்படி ஏற்கனவே அவர் இரண்டு ரூபாய் கொடுத்திருக்க முடியும்!" பிதலே மனதுள் வியப்படைந்தார்.

பாபா சொன்ன வார்த்தைகளுக்கு என்ன அர்த்தம்? தெரிந்துகொள்ள வேண்டும் என்ற ஆர்வம் மேலோங்கியது. ஆனால், பாபா வேறு குறிப்பு ஏதும் அளிக்காததால், அந்தப் புதிர் விடுவிக்கப்படாமல் அப்படியே இருந்தது.

ஞானிகள் சகஜமாக ஏதாவது பேசுவார்கள்; ஆயினும் அவர்கள் சொல்வது உண்மையாகிவிடும். பிதலேவின் உள்மனத்திற்கு இது தெரிந்திருந்ததால், அவருடைய ஆர்வம் அதிகமாகியது.

அவர் பம்பாய்க்கு திரும்பி வீடு சேர்ந்தவுடன் அகத்தில் இருந்த ஒரு மூதாட்டி இப்புதிருக்கு விளக்கமளித்தார்.

அம் மூதாட்டி பிதலேவின் தாயார். ஷீர்டி சென்று வந்த அனுபவங்களை பற்றி அவர் கேட்டறிந்தபொழுது மூன்று ரூபாய் சமாசாரம் வெளிவந்தது. அதற்கும் , ஏற்கெனவே கொடுக்கப்பட்டதாகச் சொல்லப்பட்ட இரண்டு ரூபாய்க்கும் இருந்த சம்பந்தன்தான் பிடிபடவில்லை.  


Thursday 12 July 2018

ஷீர்டி சாயி சத்சரிதம்

பாதங்கள் அழிவைத் தருவனவா என்ன? வீண், வீண், வீண்; முயற்சிக்களனைத்தும் வீணாகிப் போயின!-

"திருடனுக்கு பயந்து ஒரு வீட்டில் நுழைந்தால் அந்த வீடே நம் தலையில் இடிந்து விழுமோ ! நாம் இங்கு வந்தது அதற்கொப்பானதே .-

"புலி அடித்துத் தின்றுவிடும் என்று பயந்தோடிய பசு, வழியில் கசாப்புக் கடைக்காரனிடம் மாட்டிக்கொண்டது! நமக்கு நிகழ்ந்தது இதுவே" என்று தாயார் புலம்பினார்.

வழிப்போக்கன் கடுமையான வெளியிலிருந்து தப்பிக்க மர நிழலில் ஒதுங்கியபோது மரமே வேர் அறுந்து சாய்ந்து அவன் மீது விழுந்தது போலிருந்தது அவர்களுடைய நிலைமை.

பயபக்தியுடன் இறைவனுக்கு பூஜை செய்யக் கோயிலிக்குச் சென்றவன் மேல் கோயிலே இடிந்து விழுந்தாற்போலிருந்து அவர்களுடைய நிலைமை.

ஆயினும், பாபா அவர்களுக்கு ஆறுதளித்தார், "மனத்தில் பொறுமையும்  தைரியம் கொள்ளுங்கள். பையனை ஜாக்கிரதையாகத் தூக்கி எங்காவது எடுத்துச் செல்லுங்கள். அவன் மறுபடியும் உணர்வு பெறுவான். -

"பையனை நீங்கள் தங்கியிருக்கும் இடத்திற்கு எடுத்துச் செல்லுங்கள். இன்னும் ஒரு நாழிகையில் (24  நிமிடங்களில்) ஜீவனுள்ளவனாவேன். அவசரப்பட்டு எக்காரியத்தையும் செய்யாதீர்கள்".

ஆகவே அவர்கள் அப்படியே செய்தனர். பாபாவின் வார்த்தைகள் உண்மையாயின. குடும்பத்துடன் பிதலே ஆனந்தமடைந்தார். கோணல் சிந்தனைகளும் சந்தேகங்களும் அடியோடு மறைந்தன.

வாடாவுக்குக் கொண்டுசெல்லப்பட்ட உடனே பையனுக்கு மறுபடியும் பிரக்ஞய் வந்தது. தாயும் தந்தையும் முதலில் நிம்மதி பெருமூச்சு விட்டனர்; பிறகு ஆனந்தமடைந்தனர்.

பின்பு, பிதலே மனைவியுடன் பாபாவை தரிசனம் செய்ய வந்தார். மிகுந்த பணிவுடன் சாஷ்டாங்கமாக நமஸ்காரம் செய்தார்.

தம் மகன் பிழைத்தெழுந்ததை கண்ட பிதலே, நன்றியும் மகிழ்ச்சியும் பொங்க பாபாவின் பாதங்களை பிடித்து விட்டார். பாபா அப்பொழுது புன்னகை பூத்த முகத்துடன் கேட்டார்.

"என்ன, உம்முடைய கோணல் சிந்தனையும் சந்தேக அலைகளும் இப்பொழுதாவது அடங்கினவா? யார், முழு நம்பிக்கை வைத்து தைரியமாக பொறுமை காக்கிறாரோ அவரை ஸ்ரீ ஹரி ரக்ஷிக்கிறார். "

செல்வரும் பெருங்குடிமகனுமாகிய பிதலே, இந்த சந்தர்பத்தைப் பொருத்தமாகவும், சிறப்பாகவும் கொண்டாடினர். அனைவருக்கும் இனிப்புகளும் தின்பண்டங்களும் வழங்கினார். பாபாவுக்கு பழங்களையும் பூக்களையும் தாம்பூலத்தையும் சமர்ப்பணம் செய்தார். 


Thursday 5 July 2018

ஷீர்டி சாயி சத்சரிதம்

எங்களுடைய விருப்பங்கள் நிறைவேற, 'சமர்த்த சாயி' என்னும் மந்திரத்தை சதா ஜபம் செய்வோம். அதுவே எங்களுக்கு ஆன்மீக முன்னேற்றத்தையும் அளிக்கும். நிட்டையின் மூலமாக நற்செயலை செய்த திருப்தியையும் பெறுவோம்.

முந்தைய அத்தியாயத்தில், தயாபரரான சமர்த்த சாயி எவ்வாறு பக்தர்களின் மங்களம் கருதி சிக்ஷை (போதனை - பயிற்சி) அளித்தார் என்பது விவரிக்கப்பட்டது.

இந்த அத்தியாயத்தில், அவர் ஒரு பக்தருக்கு குலகுருவின் மீதிருந்த நம்பிக்கையையும் விசுவாசத்தையும் எவ்வாறு நிலைபெறச் செய்தார் என்பது விவரிக்கப்படும். விந்தையான இக் காதையை கேளுங்கள்.

செவிமடுப்பவர்களே! சித்தம் சிதறாமல் மனமொன்றி, பந்த் என்னும் பெயர் கொண்ட பக்தரின் இனிமையான காதையைக் கேளுங்கள். தத்துவம் மனத்தில் ஆழமாகப் பதியும்.

எந்த விதமான அனுபவம் எப்படிக் கொடுக்கப்பட்டது. நம்பிக்கை என்னும் அஞ்சனம் (மை) எவ்வாறு அவருடைய கண்ணுக்கிடப்பட்டது. குலகுருவிடம் கொண்ட விசுவாசம் எவ்வாறு ஊர்ஜிதப்படுத்தப் பட்டது. அவருடைய மனம் சாந்தியடைய விவரம், இவற்றையெல்லாம் விளக்குகிறேன்; கேளுங்கள்.

ஒரு சமயம் பந்த் என்ற பெயர் கொண்ட பக்தரொருவர் மிக சிரமப்பட்டு தம் நண்பர்களுடன் சாயி தரிசனம் செய்யும் ஆவலுடன் ஷிர்டிக்கு வந்தார்.

அவர் ஏற்கெனவே தம் குலகுருவிடம் தீட்சை (மந்திர உபதேசம்) பெற்றவர். குருவிடம் மிகுந்த பக்தி கொண்டிருந்தார். ஆகவே, அவருடைய மனத்தில் ஷிர்டிக்கு எதற்காக செல்லவேண்டும் என்ற ஐயம் இருந்தது.

ஆயினும், ஏற்கெனவே விதிக்கப்பட்டது எதிர்பாராதவிதமாக எப்படியாவது நடந்தே தீரும். சாயிதரிசனம் செய்யும் நல்வாய்ப்பு, முயற்சி ஏதும் செய்யாமலேயே வந்தது; அதனால் அமோகமான நன்மையும் விளைந்தது.

மனிதன் ஒன்று நினைக்க, தெய்வம் வேறுவிதமாக நினைக்கிறது. விதியை எதிர்த்து எதுவும் நடக்காது. அமைதியான மனத்துடன் இந்த அனுபவத்தை கேளுங்கள்.

ஷிர்டிக்கு போவதென்றே திட்டத்துடன் சில பக்தர்கள் தத்தம் இடங்களில் இருந்து சந்தோஷமாக கிளம்பி ஒரு கோஷ்டியாகப் புகைவண்டியில் ஏறினர்.

ரயில் பெட்டியில் ஏறும்பொழுது பந்த் உள்ளே உட்கார்ந்திருந்ததை பார்த்தனர். அவர்கள் ஷிர்டிக்கு பயணப்பட்டிருந்தார்கள் என்று பந்த் அறிந்து கொண்டார்.

அந்த கோஷ்டியில் பந்தின் நண்பர்களும் நெருங்கிய உறவினர்கள் சிலரும் இருந்தனர்! இதன் விளைவாக, ஷிர்டிக்கு செல்ல நாட்டமேதும் இல்லாத பந்தும் அவர்களுடைய நிர்பந்தத்திற்கு இணங்கி, கோஷ்டியுடன் சேர்ந்துகொள்ள நேர்ந்தது.

பார்க்கப்போனால், அவரிடம் ஆரம்பத்தில் செல்ல நினைத்த இடம் வரைக்குமே பயணசீட்டு இருந்தது. ஆனால், அவர் சூழ்நிலையால் மனத்தை மாற்றிக் கொண்டார்.

"நாமெல்லோரும் ஒன்றாக ஷிர்டிக்கு பயணம் செல்வோம்" என்று நண்பர்களும் உறவினர்களும் கூறினர். தம்முடைய விருப்பத்திற்கு மாறாக, அவர்களுடைய வற்புறுத்தலுக்கு பந்த் இணங்க வேண்டியதாயிற்று.

Thursday 28 June 2018

ஷீர்டி சாயி சத்சரிதம்

பாபா! தாங்கள் ஷிர்டிக்கு வந்ததும் இங்கேயே வசிப்பதும் ஷீர்டி செய்த சுகிர்தம் (நல்வினை) அன்றோ! தாங்கள் வாழ்வதால் ஷீர்டி புண்ணியத் தலம் ஆகிவிட்டது.

ஷிர்டி கிராமம் புண்ணியம் செய்தது. கிருபாமூர்த்தியான சாயி ஷிர்டியைத் தாம் வாழும் இடமாக அலங்கரித்து இக்கிராமத்திற்கு பாக்கியத்தையும் பேரதிர்ஷ்டத்தையும் வழங்கியிருக்கிறார்.

நீரே எனக்கு உணர்வூட்டி ஊக்கப்படுத்துகிறீர்; நீரே என்னுடைய நாவை அசைக்கிறீர். அவ்வாறிருக்க உம்முடைய புகழைப்பாட நான் யார்? நீரே வினையாற்றுபவரும் வினையாற்ற வைப்பவரும் அல்லீரோ!

தேவரீர் கூட்டுறவே எங்களுக்கு ஆகமங்களும் நிகமங்களும் ஆகும். தினந்தோறும் உங்களுடைய சரித்திரத்தை கேட்பதே எங்களை பாராயணமாகும்.

ஒரு கணமும் வீணாக்காமல் உமது நாமத்தை ஜபம் செய்வதே எங்களுக்கு கதாகீர்த்தனமாகும்; அதுவே எங்களது இடையறாத ஓதுகை; அதுவே எங்களுக்கு மன நிம்மதி.

உங்களுடைய வழிபாட்டில் இருந்து மனத்தைத் திருப்பி விடும் எந்தவிதமான சுகமும் எங்களுக்கு வேண்டா. ஆன்மீக மார்க்கத்தில் அதைவிடப் பெரிய வீழ்ச்சி ஏதுமுண்டோ?

எங்களுடைய ஆனந்தக்கண்ணீரே உமது பாதங்களை கழுவும் வெந்நீர்; சுத்தமான பிரேமையை சந்தனப்பூச்சு; தூய்மையான சிரத்தை உங்களுக்கு அணிவிக்கப் படும் ஆடை.

சடங்குகளுடன் கூடிய பூஜையை விட மேற்கூறியவிதமான மானசீக (மனத்தால் செய்யும்) பூஜையாலேயே உங்களை மகிழ்ச்சியடையச் செய்வோமாக.

அஷ்டபாவங்களையே நிர்மலமான எட்டு இதழ்களுடைய தாமரையாக ஒருமுகப்பட்ட தூய்மையான மனத்துடன் உமது பாதங்களில் சமர்ப்பித்து அதற்குண்டான பலன்களைப் பெறுவோம்.

எளிமையான விசுவாசமென்னும் கஸ்தூரி திலகத்தை நெற்றியில் இடுவோம். திடமான பக்தியை மேகலையாக அணிவிப்போம். பரிபூரண சரணாகதியாகத் தலையைப் பாதங்களின் கட்டைவிரல்களில் தாழ்த்துவோம். அசாதாரமான இப் பூஜையை மகிழ்ச்சியுடன் அனுபவிப்போம்.

அன்பை ரத்தினங்கள் பதித்த ஆபரணங்களாக அணிவிப்போம். பஞ்ச பிராணன்களை விசிறியாக்கி விசிறுவோம். உம்மிலேயே முழுமையாக மூழ்குதலை குடையாக ஆக்கி உஷ்ண நிவாரணம் செய்வோம். எல்லாரும் சேர்ந்து உமக்கு திருஷ்டி கழிப்போம்.

இவ்விதமாக நாங்கள் தங்களுக்கு சந்தனம், அக்ஷதை இத்தியாதி பொருள்களால் அஷ்டாங்கமாக பூஜையை ஆனந்தமாக செய்வோம். ஓ சாயி ராஜா! எங்களுடைய நன்மைக்காக தேவரீர் கடாக்ஷத்தை சம்பாதிப்போம்.  



Thursday 21 June 2018

ஷீர்டி சாயி சத்சரிதம்

மகனுடைய காக்காய்வலிப்பு நோயைத் தம் அருட்பார்வையாலேயே குணம் செய்து பெற்றோருடைய வேண்டுதலை எவ்வாறு நிறைவேற்றி வைத்தார் என்பதையும் தந்தையின் பழைய அனுபவங்களை எவ்வாறு ஞாபகப்படுத்தினார் என்பதையும் கூறுகிறேன்; கேளுங்கள்.

ஹேமாட் சாயியிடம் சரணடைகிறேன். கதை கேட்பவர்களை சாயியின் கதைகளை ஆர்வத்துடன் கேட்கும்படி வேண்டுகிறேன். கேட்பவர்களின் வாழ்க்கை அர்த்தமுள்ளதாக மலரும்.

எல்லாருக்கும் க்ஷேமம் உண்டாகட்டும்! ஞானிகளாலும் சான்றோர்களாலும் உணர்வூட்டப்பட்டு, சாயி பக்தன் ஹேமாட் பந்தால் இயற்றப்பட்ட, 'ஸ்ரீ சமர்த்த சாயி சத் சரித்திரம்' என்னும் காவியத்தில், 'பக்தர்களுக்கு க்ஷேம லாபம் அருளிய மாண்பு' என்னும் இருபத்தைந்தாவது  அத்தியாயம் முற்றும்.

                      ஸ்ரீ ஸத்குரு சாயிநாதருக்கு அர்ப்பணம் ஆகட்டும்.

                                               சுபம் உண்டாகட்டும். 



Thursday 14 June 2018

ஷீர்டி சாயி சத்சரிதம்

புலன்கள் கட்டவிழ்ந்து ஓடி துராசாரத்தில் (கெட்ட நடத்தையில்) கொண்டுபோய் விடுகின்றன. காட்டாற்றைத் தடுத்து அணைகட்டிப் புலன்களை திரும்பி பார்க்கச் செய்யுங்கள்.

புலன்கள் கட்டுப்பாட்டுக்குள் அடங்கி உள்முகமாகத் திரும்பவில்லையென்றால், ஆத்மதரிசனம் பெறமுடியாது. ஆத்மாவை அறிந்துகொள்ளாமல் உன்னத சுகம் ஏது? பிறவியே அர்த்தமில்லாததாக ஆகிவிடும் அன்றோ?

மனைவி, மக்கள், நண்பர்கள் கூட்டம் -கடைசிக் காலத்தில் இவர்களில் யாராலும் எந்தப் பயனும் கிடைக்காது. நீர் மாத்திரமே கடைசிவரை கூடவரும் துணைவர். உம்மால்தான் சுகத்தையும் முக்தியையும் அளிக்க இயலும்.

மஹாராஜரே! உம்முடைய கிருபையின் பலத்தால் நாங்கள் செய்த வினைகளாலும் செய்யத் தவறிய வினைகளாலும் பின்னிக்கொண்ட வலையை அறுத்தெறியுங்கள். தீனர்களையும் பலவீனங்களையும், துக்கத்தில் இருந்தும் வேதனையில் இருந்தும் விடுவித்தருளுங்கள்.

நிர்மலமான சாயிராயரே! தீங்கு விளைவிக்கும் வாக்குவாதங்களையும் சர்ச்சைகளையும் உம்முடைய கருணையால் நிர்மூலமாக்கிவிடுங்கள். நாக்கு நாமஜபம் செய்வதிலேயே இனிமை காணட்டும்.

சங்கற்பங்களும் விகற்பங்களும் என் மனதில் இருந்து அழிந்து போகுமாறும், உடல், உற்றார், உறவினர், சொத்து, சுகம் இவையனைத்தையும் நான் அறவே மறந்து போகுமாறும் என்னுடைய இதயத்தில் இறையன்பை பொங்கச் செய்வீராக.

மற்ற விஷயங்கள் அனைத்தும் மறந்துபோகுமாறு உம்முடைய நாமஸ் மரணமே எந்நேரமே மனதில் ஓடட்டும். என்னுடய மனம் அலைபாய்வதையும்  சபலத்தையும் தொலைத்து விட்டு சாந்தமாக  ஒருமுகப்படட்டும்.

உங்களுடைய நிழலில் எங்களுக்கு இடம் கிடைத்தால் அஞ்ஞானமாகிய இரவு மறைந்து போகும். உம்முடைய பிரகாசமான ஒளியில் சுகமாக வாழ்வதைவிட வேறென்ன எங்களுக்கு தேவைப்படும்?

எங்களை முதுகில் தட்டியெழுப்பி தேவரீர் ஊட்டிய சரித்திரமாகிய அமிருதம் சாமானியான சுகிருதமா (நற்செயலா) என்ன?

அடுத்த அத்தியாயம் இதைவிட இனிமையானது! செவிமடுப்பவர்களின் ஆவலை திருப்தி செய்யும். சாயியின் மீதிருக்கும் அன்பு பெருகும்; சிரத்தை திடப்படும்.

தம் குருவின் பாதங்களை கைவிட்டுவிட்டு ஒருவர் சாயி தரிசனத்திற்கு வந்தார். ஆயினும், அவர் தம்முடைய பாதங்களில் வணங்கிய பிறகு, வந்தவரின் குருவின் ஸ்தானத்தை (உயர்வை) நிலைப்படுத்தியும் உறுதிப்படுத்தியும் ஆசீர்வதித்தார் சாயி.

அதுபோலவே, செல்வம் மிகுந்திருந்தும் வருத்தத்திலாழ்ந்த இல்லறத்தார் ஒருவர் மனைவியுடனும் மகனுடனும் சாயி தரிசனத்திற்கு  வந்தார். 



Thursday 7 June 2018

ஷீர்டி சாயி சத்சரிதம்

பாபாவின் கண்ணிற்படாமல் எங்கும் எதுவும் நிகழ்வதில்லை! வானமும் பூமியும் எல்லா திக்குகளும் அவருடைய பார்வைக்குத் திறந்து கிடக்கின்றன.

தாமு அண்ணாவிடமிருந்து பதில் ஏதும் வராததால், மறுமுனையில் தாமு அண்ணாவின் நண்பர் என்ன செய்வது என்றறியாது திகைத்தார்.

இதற்கிடையே நடந்ததையெல்லாம் விவரித்து சேட் (தாமு) ஏற்கெனவே ஒரு கடிதம் தம் நண்பருக்கு எழுதியிருந்தார். அதை படித்த நண்பர் வியப்பில் ஆழ்ந்தார்! 'விதியின் செயல்பாடு விசித்திரமானது' என்றும் நினைத்தார்.

"எவ்வளவு அருமையான வியாபார பேரம் நம் வழியே வந்தது! ஏன் அதுபற்றி அவரே முடிவெடுக்கவில்லை? ஒரு பக்கீரைத் தேடி எதற்காக அலையவேண்டும்? பெரும் லாபமளிக்க கூடிய பேரத்தை வீணாக்கி விட்டாரே!-

"இறைவன் அளிக்கிறான்; கர்மவினை அதைத் தடுத்துவிடுகிறது. விதிப்படி என்ன நடக்கவேண்டுமோ அதற்கேற்ற புத்திதான் அமைகிறது. வியாபார வாய்ப்பு இவ்வளவு அருமையாக இருக்கும்பொழுது, பக்கீர் ஏன் குறுக்கே நிற்கிறார்?

"உலக விவகாரங்களை துறந்துவிட்ட இந்தப் பக்கிரிகள் வீடு வீடாகச் சென்று பிச்சையெடுத்து வயிறு வளர்க்கிறார்கள். இந்தப் பைத்தியகாரக் கூட்டம் வியாபார சம்பந்தமாக என்ன யோசனை அளிக்க முடியும்?

"அப்படியே போகட்டும் விடு! அவருக்கு லாபம் கிடைக்கவேண்டுமென்று தெய்வ அருள் இல்லை. அதனால்தான் அவருடைய புத்தி அவ்வாறு வேலை செய்தது. நான் வேறு யாரையாவது பங்குதாரராக சேர்ப்பதே சிறப்பு. நடக்கவேண்டுமென்று எது விதிக்கப்படவில்லையோ அது நடக்கவே நடக்காது என்பது பழமொழியன்றோ?"

கடைசியில் தாமு அண்ணா பேசாமல் 'சிவனே' என்றிருந்துவிட்டார். விதிவசத்தால் மாட்டிக்கொண்டவர்கள் நன்பருக்கு வியாபாரத்தில் கூட்டாளிகளாக சேர்ந்தனர்; வம்பை விலைக்கு வாங்கினர்!

வியாபாரத்தில் முழுமுயற்சியுடன் இறங்கினர்; ஆனால், நிலைமை தலைகீழாகியது. துரதிர்ஷ்டவசமாக பெரும் நஷ்டம் ஏற்பட்டது. பக்கீருடைய பிரம்பு (தீர்ப்பு) அத்தகையது.

"ஆஹா! தாமு அண்ணா எவ்வளவு அதிர்ஷ்டசாலி, புத்திசாலி! பக்தர்களின் மீது சாயியின் கருணைதான் என்னே! அவருடைய வாக்கின் சத்தியந்தான் என்னே! - (82 லிருந்து 85 வரை நண்பரின் புலம்பல்)

"என்னுடன் இந்தத் துணிகர செயலில் பங்காளியாக சேர்ந்திருந்தால், அவர் பெரும் நஷ்டமடைந்து ஏமாறிப் போயிருப்பார். பக்கீர் சொன்னபடி செயல்பட்டதால் தப்பித்துக்கொண்டார். அவருடைய விசுவாசம் போற்றுதற்குரியது !-

"தாமு பைத்தியம் பிடித்தவர் என்று நான் ஏளனம் செய்தேன். என்னுடைய புத்திசாலித்தனத்தால் எனக்கிருந்த கர்வம் என்னை வீழ்த்திவிட்டது. இதுவே நான் கண்ட அனுபவம். -

"அனாவசியமாக அந்தப் பக்கீரைத் தூற்றுவதற்கு பதிலாக அவருடைய பரிந்துரையை ஏற்றுக்கொண்டிருந்தால், நான் நஷ்டமும் ஏமாற்றமும் அடைந்திருக்க மாட்டேன்". 


Wednesday 30 May 2018

ஷீர்டி சாயி சத்சரிதம்

குழந்தை இனிப்புகளை வேண்டுகிறது; ஆனால், தாயோ தற்கு மருந்துக் கஷாயத்தை புகட்டுகிறாள். குழந்தை அழுதாலும் முரண்டுபிடித்தாலும், தான் கொண்ட அன்பினாலும் அக்கறையாலும் தாய் கஷாயத்தை புகட்டியே தீருவாள்.

கசப்பான கஷாயம் சரியான சமயத்தில் பலனைத் தரும். ஆனால், குழந்தைக்கு கஷாயத்தின் நற்குணங்கள் எப்படித் தெரியும்? தாய்க்குத்தான் தெரியும் கஷாயத்தின் அருமை.

தாமு அண்ணா லாபத்தில் ஒரு பங்கை சமர்ப்பிக்கத் தயாராக இருக்கலாம். ஆனால், பாபா இந்த ஆசைகாட்டலுக்கு மயங்கிவிடுவாரா  என்ன? அவருடைய பிரீதியனைத்தும் சுயநலம் பாராத அன்பும் பக்தர்களின் சேமமும் அல்லவா!

பொன்னையும் பொருளையும் ஓட்டாஞ்சலியாக மதித்தவருக்கு லாபத்தில் பங்கு எதற்காக? ஏழை எளியவர்களையும் திக்கற்றவர்களையும் ரட்சிப்பதற்காகவன்றோ ஞானிகள் அவதாரம் செய்கின்றனர்!

யமம், நியமம் ஆகிய அஷ்டாங்க யோகப் பயிற்சிகளை செய்பவரும், சமம் (பொறுமை), தமம் (புலனடக்கம்) ஆகிய நற்குணங்களை உடையவரும் தாம் உண்மையில் ஞானியாவார். மாயையில் இருந்தும் பொறாமையில் இருந்தும் விடுபட்டு மற்றவர்களுக்கு அனுக்கிரஹம் செய்வதற்காகவே வாழ்பவர்தம் ஞானி ஆவார்.

பாபாவுக்கு லாபத்தில் பங்கு கொடுத்துவிடலாம் என்ற தாமு அண்ணாவின் யோசனை அவருடைய ஆழ்மனதில் இருந்த ரகசியமே. ஆயினும், பாபா எல்லாரும் அறியும்படி அவருக்கு அளித்த பதில் என்ன என்பதை கவனமாகக் கேளுங்கள்.

ஒவ்வொரு ஜீவனின் மனோகதியையும் (எண்ண ஓட்டத்தையும்) பாபா அறிந்து வைத்திருந்தார். கடந்த காலமும் நிகழ்காலமும் எதிர்காலமும் அவருக்கு உள்ளங்கை நெல்லிக்கனிபோல் தெளிவாகத் தெரிந்திருந்தது.

தம் பக்தனுக்கு என்ன நடக்கப் போகிறது என்பது பாபாவுக்கு நன்கு தெரிந்திருந்தது. சரியான நேரத்தில் தெளிவான வார்த்தைகளால் பக்தனுக்கு எவ்வாறு எச்சரிக்கை விடுத்தார் என்பதைக் கேளுங்கள்.

பாபா பிரேமையுடன் சூசகமாக தெரிவித்தார், "இதோ பாரும், இந்த விவகாரத்தில் எல்லாம் என்னை இழுக்காதீர்".  அருமையான வியாபார பேரத்தை பாபா அனுமதிக்கவில்லை என்று தெரிந்துகொண்ட தாமு அண்ணா மனமுடைந்து போனார்.

இருப்பினும், பாபாவின் சொற்களை கேட்ட தாமு அண்ணா உட்பொருளை நன்கு புரிந்துகொண்டார். மனதளவில் பருத்தி வியாபார பேரத்தை கைவிட்டு விட்டுத் தலைகுனிந்து சோகமாக உட்கார்ந்திருந்தார்.

மறுபடியும் வேறொரு யோசனை தோன்றியது. "அரிசி, கோதுமை போன்ற தானியங்களில் வியாபாரம் செய்யலாமா?" இந்த எண்ணத்திற்கு பாபா என்ன பதில் கூறினார் என்று கேளுங்கள்.

"ரூபாய்க்கு ஐந்து சேர் என்று வாங்கி ரூபாய்க்கு ஏழு சேர் வீதம் விற்பீர்!" இந்த வார்த்தைகள் தாமு அண்ணாவை அவமானத்தில் ஆழ்த்தின.