ஷீர்டி சாயி சத்சரிதம்
இவ்வுலகில் வாழும் அனைத்து உயிரினங்களும் ஆதியந்தமில்லாத மாயையால் சூழப்பட்டிருக்கின்றன. விருப்பு, வெறுப்பு போன்ற மனவிகாரங்களின்மீது மோகம் கொண்டு அனைத்து உயிரினங்களும் அஞ்ஞானத்தில் மூழ்கியிருக்கின்றன.
ஜீவன் அஞ்ஞானத்தால் கட்டப்பட்டிருக்கிறது. அஞ்ஞானத்தையும் ஆசைகளையும் கர்மபந்தகளையும் துண்டித்துவிட்டால், ஜீவனின் சுத்தமான உருவம் வெளிப்படும்.
பசுவின் மடி நிறைந்து முலைக்காம்புகளில் பால் ஒழுகிக்கொண்டிருக்கிறது. இறுக்கமாக மடியில் ஒட்டிக்கொண்டிருக்கும் உண்ணிகளுக்கோ, அசுத்தமான ரத்தத்தின்மீது தான் பேராசை. பாலின்மேல் அவற்றுக்கென்ன இச்சை?
தவளையையும் வண்டையும் கவனியுங்கள். அழகான தாமரை மலர்களே அவை வாழும் சூழல். வண்டு, வாசனை மிகுந்த மகரந்தத்தைச் சுவைக்கிறது. தவளையோ சேற்றில் இருப்பதைத்தான் புசிக்கிறது.
தனக்கு எதிரிலேயே ஞானப் பொக்கிஷம் இருப்பதை மூடன் காண்கிறான். ஆயினும், அஞ்ஞானத்தின்மீதே அவன் ஆவல் காட்டுகிறான். மூடனுக்கு அஞ்ஞானமே ஞானமாகத் தெரிகிறது!
அஞ்ஞானத்தை நிர்மூலமாக்கிவிட்டால், பிரம்ம ஞானம் தானாகவே தோன்றுகிறது. ஆதலின், அஞ்ஞானம் எது என்று ஆரம்பித்திலேயே தீர்மானம் செய்வது அவசியம் என்று அறிவீர்களாக.
பிரம்ம ஞானத்திற்கு சமமாகப் பவித்திரமானது மூவுலகங்கிலும் எதுவும் இல்லை. அதனுள் உயிரையும் உபதேசம் மாபெரும் முக்கியவத்துவம் வாய்ந்தது. அது இன்று ஜீவனுக்குப் பயனில்லை.
அறிவு சம்பந்தமான விஷயமாக பிரம்மம் இருந்திருந்தால், புலன்களில் ஏதாவது ஒன்று அதைக் காட்டியிருக்கும்; அல்லது நிரூபித்திருக்கும்.
'பிரம்ம தத்துவம் புலன்களுக்கு அப்பாற்பட்டதெனினும், அரிவாள் கிரஹிக்கக்கூடியது' என்று ஸ்ம்ருதிகள் (வாழ்நெறி நூல்கள்) அதிகாரபூர்வமாக அறிவித்திருக்கின்றன. ஆயினும், சுருதிக்கு (வேதத்திற்கு) இக் கருத்து சம்மதம் இல்லை.
புத்திசக்தி போன்றவை இல்லாது போய்விட்டால், எதையும் கிரஹித்துக் கொள்ளவேண்டிய தேவையே இல்லாமல் போகிறது; முழுமுதற்பொருள் என்று ஒன்று இருக்கிறது என்று ஒத்துக்கொள்ள இடமில்லாமல் போகிறது.
'எவையெவையெல்லாம் புலன்களால் உணரக்கூடியனவோ, அவையவையெல்லாம் இருக்கின்றன; மற்றவை இல்லை' என்பது எல்லாரும் அறிந்த பிரசித்தியான ஒரு கோட்பாடு. இக் கோட்பாட்டை முழுமையாக ஏற்றுக்கொண்டால், பிரம்மம் என்று ஒன்று எப்பொழுதுமே இருந்திருக்கமுடியாது என்றாகிறது.
விளக்கம் இவ்வாறு அமைகிறது. ஆனால், இது அனர்த்தம்! புத்தி, என்றும் அழிவின்றி நிரந்தரமாக இருக்கிறது என்பதே ஆழ்ந்ததும் பரந்ததுமான ஆராய்ச்சி சிந்தனையால் விளைந்த பாரம்பரியமான விளக்கம்.
பிரளய காலத்தில் புத்தி மறைந்து போகலாம். ஆனாலும், தான் இருந்த அனுபவத்தால் அது தொடர்ந்து வாழ்கிறது. ஆத்மாவே, பிரபஞ்சத்தின் மூலம். இதில் சந்தேகமே இல்லை.
