valam tharum vallal

valam tharum vallal
shri shird sai baba

Thursday 5 January 2023

 ஷீர்டி சாயி சத்சரிதம்

அதை உண்டவர்கள் அனைவரும் ஒவ்வொரு கவளத்திற்கும் சாயி நாமத்தை சொல்லிக்கொண்டே அக்கினியில் ஆஹுதி (படையல்) இடுவதுபோல் வாயிலிட்டனர். ஆயினும், பாத்திரம் காலியானதே இல்லை. எப்பொழுதும் நிரம்பியே இருந்தது.

யாருக்கு எந்த உணவில் ஆசை அதிகமாக இருந்ததோ, அவருக்கு அந்த உணவு பிரேமையுடன் மறுபடியும் பரிமாறப்பட்டது. பலர் மாம்பழச் சாற்றை விரும்பினர். அவர்களுக்கு மாம்பழச் சாறு பிரிதியுடன் அளிக்கப்பட்டது.

இந்த உணவைப் பரிமாற நானா நிமோன்கரையோ மாதவராவ் தேஷ்பாண்டேவையோ பாபா தினமும் ஆணையிட்டார்.

அவர்களும் நைவேத்தியத்தை அனைவருக்கும் பரிமாறும் பணியை நித்திய நியமமாக ஏற்றுக்கொண்டனர். சிரமமான செயலாக இருந்தபோதிலும் மிகுந்த அன்புடன் அப்பணியைச் செய்தனர்.

ஒவ்வொரு பருக்கையும் மல்லிகை மொட்டுபோல் இருந்த 'ஜிரேசா' அரிசிச்சோறு அதன்மீதாக பொன்னிறத்தில் துவரம் பருப்பு சூப்பு, அதற்கும் மேல் ஒரு தேக்கரண்டி நெய் ஊற்றப்பட்டு எல்லாருக்கும் அளிக்கப்பட்டது.

பரிமாறப்படும்போதே இவ்வுணவின் நறுமணம் காற்றை நிரப்பும். பலவித சட்டினிகளுடன்- சேர்த்து உண்ணும்போது இவ்வுணவு காரசாரமாக இருக்கும். எந்த உணவும் அரைவேக்காடாகவோ சுவை குறைவானதாகவோ இருந்ததில்லை. எல்லோரும் யதேஷ்டமாக (திருத்தியாகும் வரை) உண்டனர்.

ஆத்மானந்தமாகிய தட்டில் சேமியா - பிரேமபக்தியாகிய தட்டில் இடியாப்பம் - இவ்வுணவை ஏற்க சாந்தியையும் சுகத்தையும் ஆத்மானந்தத்தையும் அனுபவிப்பர்களைத் தவிர வேறு எவர் வருவார்!

 அன்னமும் அன்னத்தின் சுவையும் அதை உண்பவரும் ஹரியே. அன்னத்தைப் பரிமாறுபவர் தன்யர். அன்னத்தை உண்பவர், அளிப்பவர், இருவருமே தன்யர்கள்.

இந்த இனிப்புக்கெல்லாம் மூலம் குருபாதங்களில் பலமான நிட்டை. இனிப்பது சர்க்கரையோ வெல்லமோ அன்று. இனிப்பது, ஆழமாக வேர்விட்ட சிரத்தையே !

அங்கிருந்த நித்யஸ்ரீயும் (எப்பொழுதும் உறையும் செல்வம்) நித்திய மங்களமும் அவ்வாறே! பாயசமும் ரவாகேசரியும் பல உணவுப்பண்டங்களின் கூட்டுக்கலவையும் ஏராளமாக இருந்த இடத்தில், தட்டை எதிரில் வைத்துக்கொண்டு உட்கார்ந்த பிறகு, தயக்கம் காட்டுவதோ முன்னும் பின்னும் பார்ப்பதோ முட்டாள்தனமான காரியம்.

நானாவிதமான உணவுப்பண்டங்களை உண்டபிறகும் மக்களுக்கு கொஞ்சம் தயிர்சாதம் சாப்பிடவில்லையென்றால் வயிறு நிரம்பிய திருப்தி ஏற்படாது. குடிப்பதற்கு கொஞ்சம் மோராவது கேட்பார்கள்!

ஒருசமயம் ஒரு லோட்டா சுத்தமான மோர் குருராயரின் கையாலேயே நிரப்பப்பட்டு பிரேமையுடன் எனக்கு அளிக்கப்பட்டது. லோட்டாவை என் உதடுகளுக்கிடையில் வைத்தபோது,

வெள்ளைவெளேரென்றிருந்த மோரைக் கண்ணால் கண்டு நான் மிக்க மகிழ்ச்சியடைந்தேன். லோட்டாவை உதடுகளில் வைத்தபோதே ஆத்மானந்த புஷ்டியை அடைந்தேன்.