ஷீர்டி சாயி சத்சரிதம்
"நீரும் நானும் ஒன்றே என்று பார்க்க ஆரம்பித்து, அப்பார்வையை விஸ்தாரப்படுத்தினால், உலகில் உள்ளதனைத்தும் உம் குருவாகத் தெரியும். நான் இல்லாத இடமாக எதுவும் தெரியாது.-
"இவ்வாறான ஆன்மீகப் பயிற்சியைத் தொடர்ந்து செய்துவந்தால், நான் எங்கும் வியாபித்திருக்கும் அனுபவம் உமக்குக் கிட்டும். பின்னர் நீர் என்னில் கலந்துவிடுவீர். அந்நியம் என்று ஒன்று இல்லை என்ற உணர்வை அனுபவிப்பீர்.-
"பிரபஞ்சப் பேருணர்வீன்மீது தியானம் செய்வீராக. உம்முடைய அந்தக்கரணம் (மனம், புத்தி, சித்தம், அஹங்காரம் ) சுத்தமடையும். கங்கை நீரைத் தொடாமலேயே கங்கை ஸ்னானம் செய்துவிடுவீர்!-
"இயற்கையான கர்மாக்களின்மேல் ஏற்படும் அபிமானம் திடமான பந்தங்களைக் கொண்டுவரும். ஆகவே, ஞானமுள்ளவர்கள் மனத்தளவில் இதுபற்றிக் கவனத்துடன் இருந்து அபிமானத்தை ஒட்டிக்கொள்ள விடமாட்டார்கள். -
"தம்முடைய சொரூபத்திலேயே மூழ்கி அனுப்பிரமானமும் அதிலிலிருந்து விலகாமல் இருப்பவருக்கு, சமாதிநிலைக்குப் போவதாலும் அதிலிருந்து திரும்பி வருவதாலும் எந்தப் பிரோயஜனமும் இல்லை".
(போதனை இங்கு முடிகிறது)
ஆகவே, கதைகேட்பவர்களே! உங்களுடைய பாதங்களில் மிகுந்த அன்புடன் வணங்கிக் கேட்டுக்கொள்கிறேன். தேவர்கள், ஞானிகள், பக்தர்கள், சமத்த மக்கள் - அனைவரிடமும் பிரேமை காட்டுங்கள்.
"யாராவது யாரையாவது மனம் நோகும்படி பேசினால், அவர் என்னைத்தான் மர்மஸ்தானத்தில் தாக்குகிறார்; என்னுடைய இதயத்தில்தான் வேல் பாய்ச்சுகிறார்.-
"யாராவது யாரையாவது கெட்ட வார்த்தைகளால் திட்டும்போது அது உடனே என்னைத் துன்பத்தில் ஆழ்த்துகிறது. அதை ஒருவர் தைரியத்துடன் சகித்துக் கொண்டால், அச் செய்கை என்னை வெகுகாலத்திற்குத் திருப்தியுள்ளவனாகச் செய்கிறது." இவ்வாறு பாபா நமக்கு அடிக்கடி சொல்லியிருக்கிறார்.
இவ்வாறாக, சாயி அனைத்து உயிர்களிலும் உள்ளும் புறமும் நிரம்பியிருக்கிறார். பிரேமையைத் தவிர அவர் வேறெதையும் நாடவில்லை!
சாயியின் முகத்திலிருந்து எந்நேரமும் வெளிவந்த பரம மங்களங்களை அளிக்கக்கூடியதும், தேவாமிருதம் போன்றதுமான திருவாய்மொழி இதுவே. பக்தர்களிமீது சாயீ அத்தியந்த (மிகுந்த) பிரேமை வைத்திருந்தார். இதை அறியாத பாக்கியவானும் உளனோ!
அவருடன் சேர்ந்து அமர்ந்து உணவுண்ணும் லாபம் அடைந்தவர்கள் - எவர்களுடன் அவர் சிரித்தும் விளையாடியும் பழகினாரோ அவர்கள் - அவர் திரும்பி வரமாட்டாரா என்று ஏங்குபவர்கள் - ஓ! அவர்களுடைய உணவர்வுகள் தாம் எப்படியிருக்கும்!
அந்தச் சான்றோர்களுக்கு உணவளிப்பதற்காக நான் மீந்ததைத்தான் தொகுத்து வைத்திருக்கிறேன். ஒவ்வொரு மணியாகப் பொறுக்கிச் சேர்த்துவைத்ததை இப்பொழுது அவர்களுக்கு விநியோகம் செய்கிறேன்.