valam tharum vallal

valam tharum vallal
shri shird sai baba

Thursday 22 September 2022

 ஷீர்டி சாயி சத்சரிதம்

சிலீம், அக்தர், பன்னீர் இவற்றை பாபாவுக்கு கொடுத்துவிட்டு அனுமதி பெற்றுக்கொண்டு, தாத்யா பாடீல் வீட்டிற்குக் கிளம்பும் சமயத்தில் பாபா அவரிடம் சொல்வார். "என்னைக் கவனித்துக்கொள்.-

"போவதாக இருந்தால் போ. ஆனால், இரவில் அவ்வப்பொழுது என்னை விசாரித்துக்கொள். "சரி" என்று உறுதி கூறிவிட்டுத் தாத்யா சாவடியை விட்டுத் தமது இல்லம் நோக்கிச் செல்வார்.

இவ்வாறாக எல்லா ஜனங்களும் சென்ற பிறகு, பாபா தம்முடைய கைகளாலேயே படுக்கைச் சுருளை எடுத்து ஒவ்வொரு வேட்டியாகச் சீர் செய்து பல படலங்களைப் பரப்பித் தம்முடைய படுக்கையைத் தாமே தயார் செய்துகொள்வார்.

சுமார் அறுபது - அறுபத்தைந்து வெண்ணிறத்த துணிகளை ஒன்றன்மேல் ஒன்றாக விரித்து அதன்மீது பாபா படுத்துக்கொள்வார்.

இவ்வாறாக, சாவடியில் கதை எவ்விதம் நடந்ததோ, அவ்விதமாகவே இதுவரை எடுத்துரைக்கப்பட்டது. மற்ற கதைகள் அடுத்த அத்தியாயத்தில் விவரிக்கப்படும்.

இந்த சாயியின் மஹிமை ஆழங்காணமுடியாதது. நான் சுருக்கமாகச் சொல்ல நினைத்தாலும் அது எல்லையில்லாமல் என்னை இழுத்துக்கொண்டே போகிறது. குருதர்மம் (குருநெறி) எல்லையற்றதன்றோ!

ஹண்டியின் கதையையும் விட்டுப்போன கதைகளையும் அடுத்த அத்தியாயத்தில் சொல்கிறேன். ஒருமித்த மனத்துடன் கேளுங்கள்.

இடையறாத குருநினைவே ஹேமாடுக்கு இகவுலக க்ஷேமமும் பரவுலக க்ஷேமமும், குருசரணங்களில்  பணிவதே செய்ய வேண்டிய செயல்கள் அனைத்தும்; அடையவேண்டிய பலன்கள் அனைத்தும். ஏனெனில், அவருடைய பாதங்களில்தான் நான்கு புருஷார்த்தங்களையும் (ஆறாம்-பொருள்-இன்பம்-வீடு) அடையமுடியும்.

எல்லாருக்கும் க்ஷேமம் உண்டாகட்டும்! ஞானிகளாலும் சான்றோர்களால் உணர்வூட்டப்பட்டு, சாயிபக்தன் ஹேமாட் பந்தால் இயற்றப்பட்ட, 'ஸ்ரீ சமர்த்த சாயி சத் சரித்திரம்' என்னும் காவியத்தில், 'சாவடி வர்ணனை' என்னும் முப்பத்தேழாவது அத்தியாயம் முற்றும்.


ஸ்ரீ சத்குரு சாயிநாதர்க்கு அர்ப்பணம் ஆகட்டும்.


சுபம் உண்டாகட்டும்.