valam tharum vallal

valam tharum vallal
shri shird sai baba

Thursday 17 May 2018

ஷீர்டி சாயி சத்சரிதம்

குணகம்பீரமான சாயி, தம் பக்தர்களை உத்தாரணம் (தீங்கிலிருந்து மீட்கை) செய்யவேண்டிய காரணம்பற்றி, அவருடைய குறிப்புகளை அவரே எழுதுவார் என்று நான் உடனே தைரியம் கொண்டேன்.

இல்லையெனில், தேவாமிருதம் போன்று இனிக்கும் இந்தச் சொற்செறிவும் பொருட்செறிவும் மிகுந்த காவியத்தை எழுதி அவருடைய பாதங்களில் பாயசப் பிரசாதமாக அளிக்கும் சாஹசச் செயலில் (வீரதீரச்செயல்) நான் புகுந்திருப்பேனா?

இந்த ஸ்ரீ சாயி சரித்திரம், சாயி பக்தர்களுக்கு அமிருதம் போன்று இனிக்கும் 'பான்போயீ' (யாத்திரீகர்களின் தேவைக்காக நெடுஞ்சாலைகளில் அமைக்கப்படும் தண்ணீர்பந்தல் ). உலக வாழ்க்கை எனும் கடுமையான வெயிலில் பொசுங்குபவர்கள் இந்தத் தண்ணீர்ப்பந்தலில் இருந்து தாகம் தீரும் வரை, மனம் நிறையும் வரை, தண்ணீர் அருந்துங்கள். சாயியின் கிருபை கைகூடும்.

இது வெறும் வாழ்க்கைச் சரித்திரம் அன்று; சந்திரகாந்தக் கல் ஆகும். இதிலிருந்து சாயியின் கதைகள் என்னும் சந்திரனுடைய அமிருதம் சதா பொழிந்துகொண்டே இருக்கிறது. தாகம் கொண்ட சகோதர பட்சிகளை ஒத்த பக்தர்கள், மனம் நிறையும் வரை அருந்தித் திருப்தியடைவீர்களாக!

அன்பார்ந்த நேயர்களே! இப்பொழுது சாயியின் புனிதமான கதைகளை  மனமொன்றிச் சுணக்கமேதுமின்றி கேளுங்கள். கலியுகத்தின் மலங்களை எரித்துவிடும் சக்திவாய்ந்தவை இக் கதைகள்.

சாயியிடம் அன்னன்னிய நிட்டை ஏற்பட்டுவிட்ட பக்தனின் விருப்பங்களை எல்லாம் சாயி நிறைவேற்றி வைக்கிறார்; விரும்பாதவற்றையும் கஷ்டங்களையும் நிவாரணம் செய்துவிடுகிறார்.

இந்தப் பின்னணியில் ஒரு காதை; பக்தர்களிடம் சாயி தாயன்பு செலுத்தியதை வெளிக்காட்டும்; பயபக்தியுடன் கேட்டால் மனம் மகிழ்ச்சை அடையும்.

ஆகவே, இந்த அற்புதமான காதையை ஈடுபாட்டுடன் கேளுங்கள். நம் தாயும் குருவுமான சாயி ஒரு கருணைக்கடல் என்னும் உங்களுடைய அனுபவம் மேலும் உறுதிப்படும்.

கதை சிறியதாயினும் அர்த்த போதனையில் மிகச் சிறந்தது. நேரம் செலவழித்து இதைக் கேளுங்கள். உங்களுடைய சங்கடங்கள் அனைத்தும் பறந்துவிடும்.

தாமு அண்ணா அஹமத் நகரில் சுகமாய் வாழ்ந்துவந்த ஒரு பக்தர்; வளையல் செய்யும் சமூகத்தைச் சேர்ந்தவர்; செல்வம் மிகுந்தவர்; சாயியிடம் அபரிமிதமான அன்பு செலுத்தியவர்.

இந்தப் பரம பக்தருடைய கதையைக் கேட்டால் ஆனந்தம் அடைவீர்கள். பக்தர்களை ரட்சிப்பதில் சாயி எவ்வளவு முனைப்புடன் செயல்பட்டார் என்பதையும் நிதர்சனமாக (தெளிவாக) அறியலாம்.