ஷீர்டி சாயி சத்சரிதம்
பாபாவின் மேற்கண்ட ஆசீர்வாதத் திருவாய்மொழி எழுத்துக்கு எழுத்து உண்மையாகியது. காகா சாஹேப் தீக்ஷிதர் அமரரான அபூர்வமான வழிவகை சாயிலீலா மாதப்பத்திரிகை வாசகர்களுக்கு ஏற்கெனவே தெரியும்.
அவர் மரணமடைந்த சூழ்நிலையை நினைத்துப்பார்த்தால், அது ஆகாயவிமான பயணமின்றி வேறென்ன? குருவின் நாமத்தை இடைவிடாது ஜபம் செய்து கொண்டே மரணம். ஆஹா! எவ்வளவு ஆனந்தமான முடிவு!
இவ்வாறாக, தீக்ஷிதர் ஒரு திடசித்தம் வாய்ந்த மனிதர்; நிரந்தரமாக சாயி பாதங்களில் மூழ்கியவர். பிரியமான நண்பர்களுக்கும் உறவினர்களுக்கும் அதே அறிவரையை வழங்கினார். கடைசியில் குருபாதங்களுடன் கலந்துவிட்டார்.
இப்பொழுது கதையை விட்ட இடத்திலிருந்து தொடர்வோம். இருவருமே காகா தீக்ஷிதரின் மேல் பிரியம் வைத்திருந்தவர்கள். ஆதலால், திருவுளசீட்டு யுக்தியை இருவரும் ஒப்புக்கொண்டனர். தாமதமின்றிச் சீட்டுகள் எழுதப்பட்டன.
ஒரு சீட்டில் 'வேஷ்டியை ஏற்றுக்கொள்வோம்' என்று எழுதப்பட்டது. மற்றொரு சீட்டில் 'வேஷ்டியை நிராகரிக்கவும்' என்று எழுதப்பட்டது. இவ்வாறு எழுதப்பட்ட சீட்டுகள் பாபாவின் புகைப்படத்தின் காலடியில் இடப்பட்டன.
அங்கிருந்த சிறுவன் ஒருவன் ஏதாவது ஒரு சீட்டை எடுக்கும்படி வேண்டப்பட்டான். சிறுவன் திருவுளசீட்டை எடுத்தான். எடுக்கப்பட்ட சீட்டிலிருந்து 'வேஷ்டியை ஏற்றுக்கொள்ளவும்' என்று மாதவராவுக்கு ஆக்கினை கிடைத்தது.
கனவு எப்படியோ அப்படியே சீட்டும் அமைந்தது. எல்லாரும் அகமகிழ்ச்சி அடைந்தனர். பட்டுக்கரை வேஷ்டி சாமாவின் கரங்களில் இடப்பட்டது.
ஆனந்தராவின் சொப்பனமும் மாதவராவின் சீட்டும் பரஸ்பரம் ஒத்துபோனபோது மகிழ்ச்சி கட்டுக்கடங்கவில்லை! திருவுளசீட்டு இருவருக்குமே ஆனந்தத்தையும் திருப்தியையும் கொண்டுவந்தது.
மாதவராவ் உள்ளத்தில் குஷியடைந்தார். ஆனந்தராவும் சந்தோஷமடைந்தார். காகா சாஹிபின் சந்தேகம் நிவிர்த்தியடைந்தது. சாயீ பக்தி மேலோங்கியது.
எல்லாரும் சிந்திக்கவேண்டிய விஷயம் ஒன்று இங்கு உண்டு. குருபாதங்களில் சிரம் தாழ்த்துபவர் குருவின் திருவாய்மொழியின்படி கண்ணுங்கருத்துமாய்ச் செயல்பட வேண்டும். இதுவே இக் கதையின் சாரம்.
நம்முடைய நிலைமை, உலகெனும் நாடகமேடையில் நாம் நடிக்கவேண்டிய வேஷம், மனச்சாயல்கள், எண்ண ஓட்டங்கள் ஆகியவற்றை நகத்திலிருந்து சிகைவரை முழுமையாக குருவே அறிவார். நம்மைக் கைதூக்கி உயர்த்திவிடும் வழிமுறைகளையும் அவரே அறிவார்.
வியாதி என்னவோ அதற்கேற்ற சிகிச்சை, சிகிச்சைக்கேற்ற பானம் (மருந்து), பானத்துக்கேற்ற அனுபானம் (துணைமருந்து) இந்த முறையில்தான் சத்குரு சிஷ்யனின் பிறவியெனும் நோயை நிவாரணம் செய்கிறார்.
குரு செய்யும் செயல்களை நாம் காப்பியடிக்கக்கூடாது. அவருடைய திருவாய்மொழியைத்தான் பயபக்தியுடன் பின்பற்ற வேண்டும்.