valam tharum vallal

valam tharum vallal
shri shird sai baba

Thursday 23 November 2017

ஷீர்டி சாயி சத்சரிதம்

துனிக்காகவே பாபா விறகுகட்டுகள் வாங்குவார். சபா மண்டபத்தின் கவரை ஒட்டி, விறகு குவியலாக வைக்கப்பட்டிருக்கும்.

வாரச்சந்தை நாளின் நிலவரத்தை அனுகூலமாக உபயோகித்து பாபா விறகு வாங்கிச் சேமித்து வைப்பார். அந்த விறகு குவியலின் மீதும் அண்டை அயலார் கண் வைத்தனர். சுயலாம் கருதாதவர் இவ்வுலகில் அரிதினும் அரிதன்றோ!

"பாபா, அடுப்பெரிக்க ஒரு குச்சியும் இல்லை; இன்று சமையல் செய்யமுடியாது போலிருக்கிறது" என்று புனைந்துரைப்பர். அவர்களுக்கும் அவ்விறகில் கொஞ்சம் பங்கு கிடைக்கும்.

சுயநலவாதிகள் இயல்பாகவே துஷ்டர்கள். சபாமண்டபத்திற்கு கதவு ஏதும் இல்லாதது அவர்களுக்கு நல்ல வாய்ப்பை அளித்தது. வறியவர்கள், வஞ்சகர்கள், இருசாராருமே சமமாகப் பயனடைந்தனர்!

பாபா மஹா பரோரபகாரி. அவருடைய பெருந்தன்மையை எவ்வாறு வர்ணிப்பேன்? வெளிப்பார்வைக்கு உக்கிரமாகத் தோன்றிய போதிலும், உள்ளே இளகிய மனமுடையவர்.

அவருடைய பெருமை அளவிடமுடியாதது. தன்னுடைய அகம்பாவத்தை விடுத்து, வாக்கு அவருடைய பாதங்களை பணிந்தால்தான் பெருமையை விளக்கும் சக்தியைப் பெறும்.

இறைவன் இப் பிரபஞ்சம் எங்கும் நிறைந்து நிற்கின்றான் என்பதை நிரந்தரமாக உணர்ந்தவரால் யாரை விரோதியாக பார்க்க முடியும்?

சிருஷ்டி அனைத்தையும் பத்துத் திசைகளையும் நமக்கு முன்னேயும் பின்னேயும் இறைவன் வியாபித்திருக்கும்போது, யார் மீதும் வக்கிரமான பார்வை அவருக்கு வருத்தமளித்தது.

தம்மளவில் பூரணமான துறவியாக இருந்தபோதிலும், பக்தர்களுக்கு போதனை அளிப்பதற்காகவும் நல்வழி காட்டுவதற்காகவும் இல்லறத்தாரை போல நடந்துகொண்டார்.

ஓ, இந்த மகாத்மாவின் தன்னடக்கந்தான் என்னே! அதை விவரித்தால், கேட்டு ஆச்சரியப்படுவீர்கள். கேட்டால், பக்தர்களின்மீது அவருக்கிருந்த அன்பும் அவதார் நோக்கம் நிறைவேறியதும் அறியப்படும்.

தீனர்களிடம் அவருக்கிருந்த தாயன்பு இணையற்றது; அவர் நைச்சிய பாவத்தையே விரும்பி நாடினார். இதைத் தெளிவுபடுத்தக் கோடானு கோடி கதைகள் சொல்லமுடியும்.

அவர் உபவாசம் இருந்ததில்லை; ஹடயோகமும் பயின்றதில்லை. உணவால் ருசி தேடவில்லை; எப்பொழுதுமே சொற்பமான ஆகாரத்தை ஏற்றுக்கொண்டு வாழ்ந்தார்.

குறிப்பிட்ட சில இல்லங்களுக்குச் சென்று, சோழ ரொட்டி பிச்சை கேட்பார். இவ்வாறு எடுத்த மதுக்கரி (தேனீ பல பூக்களில் இருந்து உணவு தேடுவது போன்ற) பிச்சையே அவருடைய உணவாகியது. நாவின் சுவைக்கு அவர் இடம் கொடுக்கவேயில்லை.