valam tharum vallal

valam tharum vallal
shri shird sai baba

Thursday 30 March 2023

 ஷீர்டி சாயி சத்சரிதம்


தேகத்துடன் வாழும்போது பக்தர்களுக்காகப் பிரீதியுடன் உழைப்பால் உடலைத் தேய்க்கின்றனர். தேகவியோகம் அடைந்த பிறகும் தேகம் விழுந்த இடத்தை பக்தர்களைக் கைதூக்கிவிடுவதற்காக உபயோகிக்கின்றனர்.

இவ்வாறாக, சில ஞானிகள் தேகவியோகம் அடையுமுன்பே தங்கள் சமாதியைக் கட்டும்படி செய்கின்றனர். காலம் வரும்போது, தாங்கள் விரும்பிய இடத்திலேயே தங்கள் உடல் அடக்கம் செய்யப்படவேண்டும் என்பதே அவர்களுடைய நோக்கம்.

பாபாவும் அவ்வாறே செய்தார். ஆனால், அது யாருக்கும் அப்பொழுது தெரியாது. தம்முடைய சமாதி கோயிலைக் கட்டிக்கொண்டார். அவருடைய லீலை அற்புதமானது!

பாபுசாஹேப் புட்டி என்ற பெயர் கொண்டவர் நாக்பூரைச் சேர்ந்த கோடீஸ்வரர். பாபா அவருடைய கைகளால் தம்முடைய நினைவுச் சின்னத்தை எழுப்பிக்கொண்டார்.

பாபுசாஹேப் ஒரு பரமபக்தர். சாயி பாதங்களில் சதா மூழ்கியவர். தம் பரிவாரத்துடன் ஷிர்டிக்கு வந்து பாபாவுக்கு சேவை செய்வதற்காக அங்கேயே தங்கினார்.

சாயிபாதங்களின் மீதிருந்த அன்பினால் திரும்பத் திரும்ப ஷிர்டிக்கு வந்து தங்கினார். ஒரு காலகட்டத்தில், ஷிர்டியிலே நிரந்தரமாக வசிக்கவேண்டுமென்று விரும்பினார்.

ஓர் இடத்தை விலைக்கு வாங்கி அங்கு ஒரு சிறிய வீட்டை கட்டிக்கொண்டு சுதந்திரமாக வாழவேண்டுமென்று நினைத்தார்.

இன்று நாம் பார்க்கும் சமாதி மந்திர் (கோயில்) என்னும் பெரிய விருட்சத்திற்கு அப்பொழுதுதான் விதை விதைக்கப்பட்டது. சாயிமஹாராஜுக்குப் பக்தர்களின்பால் இருந்த அன்பின் நினைவுச் சின்னமாக சமாதி கோயில் விளங்குகிறது.

இந்த வேலை எவ்வழியாக ஆரம்பிக்கப்பட்டது ? எப்படிக் கொஞ்சங்கொஞ்சமாக எழுப்பப்பட்டது? எவ்வாறு தற்பொழுது நாம் பார்க்கும் பரிமாணத்திற்கு வந்தது? முழு விருத்தாந்தத்தையும் இப்பொழுது கேளுங்கள்.

ஷிர்டியில் சிறிய வீடொன்றை கட்டவேண்டுமென்ற சிந்தனை எழுந்தபோதே, தீக்ஷித் வாடா மாடியில் படுத்து உறங்கிக் கொண்டிருந்தபோது பாபுசாஹேப் புட்டிக்கு ஒரு சுவாரசியமான காட்சி கிடைத்தது.

மாதவரவும் அப்பொழுது அங்கு உறங்கிக்கொண்டிருந்தார். அவருக்கும் அதே காட்சி தோன்றியது. இருவரும் பெருவியப்படைந்தனர்.

"உம்முடைய வாடாவை நிச்சயமாக கட்டும்; தேவாலயத்தையும் உள்ளடக்கி கட்டும்" என்று பாபா ஆணையிடுவதுபோல் பாபுசாஹேப் புட்டி கனவொன்று கண்டார்.

இந்தக் காட்சியைக் கனவில் கண்டவுடன் பாபுசாஹேப் விழித்துக்கொண்டார். ஆரம்பத்திலிருந்து கனவை விரிவாக ஞாபகப்படுத்திக்கொள்வதற்காகப் படுக்கையிலேயே அரைவிழிப்பு நிலையில் படுத்திருந்தார்.

இங்கு இது இவ்வாறு நடந்து கொண்டிருந்தபொழுது மாதவராவ் திடீரென்று அழும் சத்தம் கேட்டது. புட்டி அவரை எழுப்ப முயன்றபோது, நித்திரை முழுவதுமாக கலைந்தது.