valam tharum vallal

valam tharum vallal
shri shird sai baba

Thursday 29 December 2022

 ஷீர்டி சாயி சத்சரிதம்


உள்ளே, சுவரிலிருந்த மாடத்தில் சாய்ந்துகொண்டு பாபா உட்கார்ந்திருப்பார். சாப்பிடுபவர்கள் அவருக்கு இரண்டு பக்கங்களிலும் கண்கவர் பந்தியாக உட்கார்ந்திருப்பர். சகலரும் ஆனந்தத்தின் உச்சியில் இருப்பார்கள்.

எல்லாரும் தம் தம் நைவேத்தியத்தை சமர்த்த சாயியின் முன்பு நகர்த்துவர், சாயியும் ஒரு பெரிய தட்டில் எல்லாப் பிரசாதங்களையும் தம்முடைய கைகளாலேயே ஒன்றாகக் கலப்பார்.

பாபாவின் கையிலிருந்து ஒரு பருக்கை சோறு பெறுவது மகா பாக்கியம். உண்பவரின் உள்ளும் புறமும் புனிதமாகும்; வாழ்க்கை பயனுள்ளதாக ஆகும்.

வடை, அப்பம், பூரி, சான்ஜோரி - சில சமயங்களில் சிகரண், கர்கா, பேணி, பலவித பாயசங்கள் - பாபா இவையனைத்தையும் ஒன்றாக கலந்துவிடுவார்.

இந்தக் கூட்டுக்கலவையை பாபா இறைவனுக்கு அர்ப்பணம் செய்வார். பின்னர், சாமாவையும் நிமோன்கரையும் தட்டுத் தட்டாக நிரப்பிப் பரிமாறச் சொல்வார்.

பக்தர்களை ஒவ்வொருவராக கூப்பிட்டுத் தம்மருகில் உட்காரவைத்து பரமானந்தத்துடனும் பிரீதியுடனும் தொண்டைவரை நிரம்புமாறு போஜனம் செய்விப்பார்.

சப்பாத்திகளையும் பருப்பு சூப்பையும் ஒன்றாகச் சேர்த்துப் பிசைந்து, நெய் கலந்து சுவையூட்டி எல்லாருக்கும் தாமே பரிமாறுவார்.

அந்தப் பிரேமையின் கலவையைச் சுவைத்தபோது - ஆஹா! அந்த பிரமானந்தத்தை யாரால் வர்ணிக்க முடியும்! அதை உண்டவர்கள் வயிறு நிரம்பிய பிறகும் விரலை நக்கிக் கொண்டே போவார்கள்!

சில சமயங்களில் மாண்டாவும் பூரணப் போளியும் - சில சமயங்களில் சர்க்கரை ஜீராவில் தோய்த்த பூரி - சில சமயங்களில் பாஸந்தி, ரவாகேசரி, சான்ஜோரி - சில சமயங்களில் வெள்ளம் கலந்து செய்த சப்பாத்தி - இத்தனை வகைகளில், சுவையான உணவை பாபா அளித்தார்.

சில சமயங்களில், வெண்மையான அம்பேமொஹொர் அரிசிச்சாதம், அதன்மேல் பருப்பு சூப்பு, அதற்கும் மேல் சுவை மிகுந்த நெய், சுற்றிலும் பலவிதமான காய்கறிகள் பரிமாறப்படும்.

ஊறுகாய், அப்பளம், ரைத்தா, பலவித பஜ்ஜிகள் - புளித்த தயிர், மோர், பஞ்சாமிருதம் - இவையும் எப்பொழுதாவது இருந்தன. இந்த திவ்வியமான அன்னத்தை உண்டவர் தன்யராவார் (எல்லாப் பேறுகளையும் பெற்றவராவார்).

எங்கே சாயிநாதரே பரிமாறினாரோ அங்கே சாப்படைப் பற்றி என்ன சொல்ல முடியும்! பக்தர்கள் அங்கே வயிறு புடைக்கும்வரை உண்டு திருப்தியுடன் ஏப்பம் விட்டனர்.

ஒவ்வொரு கவளமும் சுவையாகவும் பசியைத் தீர்ப்பதாகவும் திருப்தியளிப்பதாகவும் புஷ்டியளிப்பதாகவும் அமைந்தது. பிரேமையுடன் அளிக்கப்பட்ட புனிதமான இவ்வுணவு மிகச் சுவையாக இருந்தது.