valam tharum vallal

valam tharum vallal
shri shird sai baba

Thursday 10 December 2020


 ஷீர்டி சாயி சத்சரிதம்

இந்நிகழ்ச்சியிலாவது ஊதுவத்தியிலிருந்து விழுந்த விபூதி தேள்கொட்டுக்கு மருந்தாகப் பூசப்பட்டது. ஆனால், புழுதிமண்ணும் உதீயாக உபயோகப்படுத்தப்பட்ட போது அதே அனுபவத்தை அளித்தது.


ஒருவர் நெற்றியில் இடப்பட்ட  புழுதிமண், வேறு எங்கோ இருந்த நோயாளியை குணப்படுத்தியது!


வேறு கிராமத்தில் வசித்துவந்த தம் மகள் பிளேக் வியாதிக் கட்டிகளாலும் ஜுரத்தாலும் அவதிப்படுகிறாள் என்று தெரிந்து ஒரு தந்தை கவலையுற்றார்.

தந்தை பாந்தராவில் வசிக்க, மகள் வேறொரு கிராமத்தில் வசித்துவந்தாள். ஆகவே, அவர் நானாவுக்குச் (நானா கோவிந்த சாந்தோர்கருக்குச்) செய்தி அனுப்பினார்.


அவருக்காக நானா பாபாவிடம் பிரார்த்தனை செய்து அவரை இக் கவலையிலிருந்து விடுவிக்கவேண்டும் என்றும் பாபாவின் உதீ பிரசாதம் சிறிது அவருக்கு அனுப்ப வேண்டும் என்றும் கெஞ்சி, செய்தி அனுப்பினார்.


செய்தியைக் கொண்டுபோனவர் நானாவை வழியிலேயே  சந்தித்தார். நானா அப்பொழுது தம் மனைவியுடன் கல்யாண் என்னும் இடத்திற்கு போகக் கிளம்பிவிட்டிருந்தார்.


தாணே ரயில் நிலையத்திற்கு அருகில் அவருக்கு இச் செய்தி கிடைத்தது. நானாவின் கைவசம் அப்பொழுது உதீ இல்லை. ஆகவே, சாலையிலிருந்த புழுதி மண்ணில் ஒரு சிட்டிகை எடுத்துக்கொண்டார்.


சாலையில் நின்றவாறே சமர்த்த சாயியை மன்றாடிப் பிரார்த்தனை செய்தபின், திரும்பி, எடுத்த புழுதிமண்ணைத் தம் மனைவியின் நெற்றியில் இட்டார்.


அங்கோ, அந்த பக்தர் (தந்தை) வீட்டிலிருந்து கிளம்பி தம் மகள் வசிக்கும் ஊருக்குச் சென்றார். அங்கு அவருக்காக காத்திருந்த செய்தியைக் கேட்டு மகிழ்ந்தார்.


மூன்று நாள்களாக மகள் கடுமையான ஜுரத்தால் அவதிப்பட்டுப் பெரும்  வேதனையை அனுபவித்தாள். தந்தை சென்ற நாளுக்கு முந்தைய நாள்தான் ஜுரம் சிறிது இறங்கியிருந்தது.


பின்னோக்கிப் பார்த்தபோது, நானா சாயியைப் பிரார்த்தனை செய்தபின் புழுதி மண்ணை உதீயாக உபயோகித்த நேரத்திலிருந்துதான் மகளின் ஜுரம் குறைய ஆரம்பித்தது என்பதைத் தந்தை உணர்ந்தார்.


எப்படியும், இந்த வியாதியின் கதை விஸ்தாரமாக தக்க சமயத்தில் பிறகு சொல்லப்படும். உதீ சம்பந்தமான விவரத்தை மட்டும் இப்பொழுது சொன்னேன்.


பக்தனுக்கு மங்களம் அருள எப்பொழுதும் தயாராக இருந்த சாயி, பிரேமை மிகுந்த பக்தரான இதே நானா சாந்தோர்கருக்கு ஜாம்நேரில் மாம்லத்தாரக    உத்தியோகம் செய்துகொண்டிருந்தபோது அற்புதமொன்று செய்தார். அதைச் சொல்கிறேன்; கேளுங்கள்.


உதீயின் மஹிமை அபாரமானது. கதை கேட்பவர்களே! அந்த அற்புதத்தைச் சொல்கிறேன்; கேட்டு ஆச்சிரியப்படுவீர்கள்.


நானாவின் மகள் பிரசவ வேதனையால் துடித்துக்கொண்டிருந்தாள். எந்நேரமும் பிரசவம் ஆகலாம் என்ற நிலைமை, ஜாம்நேரில் நானாசாஹேப் சமர்த்த சாயியைத் தம்மால் இயன்ற வழிகளில் எல்லாம் கூவி அழைத்துக்கொண்டிருந்தார்.