valam tharum vallal

valam tharum vallal
shri shird sai baba

Thursday 24 February 2022

 ஷீர்டி சாயி சத்சரிதம்


அவர் எவர்களுக்கெல்லாம் கிருபை செய்ய விரும்புகிறாரோ அவர்களிடமெல்லாம் பலவிதமான மாறுவேஷங்களில் தோன்றுகிறார். கணக்கற்ற அற்புதங்களைத் திட்டமிட்டு நிறைவேற்றுகிறார்.

அவரை தியானத்தாலும் பிரேமை பொங்கும் பஜனையாலும் அணுக முயல்பவர்களுடைய தேவைகள் அனைத்தையும் நிறைவேற்றி அவர்களைப் பாதுகாக்கிறார்.

அவருடைய  கதைகளில் அவருக்கு விருப்பம் அதிகம். அனவரதமும் (எப்பொழுதும்) என்னைத் தூண்டிவிட்டு என்னையும் கதைகேட்பவர்களையும் நிமித்த காரணமாக (கருவியாக) வைத்துத் தம் பக்தர்களின் மனோரதங்களை பூர்த்தி செய்கிறார்.

பரமார்த்த வாழ்வில் பூரணமான அபிமானம் கொண்டு இவ்வுலக வாழ்விலிருந்து முழுமையாகத் துறைவேற்று, சக்ரதாரியாகிய மஹாவிஷ்ணுவின் பிரியத்தை வென்ற சாயி, எண்ணற்ற பிராணிகளை உத்தாரணம் செய்திருக்கிறார்.

எவர் இந் நாட்டிலும் (மகாராஷ்டிரம் ) வெளிநாடுகளிலும் தொழப்படுகிறாரோ, எவருடைய பக்திகொடி வானளாவிப் பறக்கிறதோ, அவர் தீனர்களையும் பலஹீனர்களையும் தம்மிடம் அழைத்து அவர்கள் அனைவரின் விருப்பங்களையும் நிறைவேற்றுகிறார்.

இப்பொழுது பரம் பவித்திரமான இந்த சாயி சரித்திரத்தை கேளுங்கள். கேட்பவர்களுடைய செவிகளும் சொல்பவருடைய வாயும் பரிசுத்தமடையட்டும்.

ஒரு சமயம் கோவாவிலிருந்து இரண்டு இல்லறத்தோர் சாயி தரிசனத்திற்காக வந்திருந்தனர். இருவரும் சாயி பாதங்களில் வணங்கி தரிசனத்தால் ஆனந்தமடைந்தனர்.

அவர்கள் இருவரும் சேர்ந்தே வந்திருந்தபோதிலும், சாயி அவர்களில் ஒருவரை மட்டும், "எனக்குப் பதினைந்து ரூபாய் தக்ஷிணை கொடும்"  என்று கேட்டார். அவரும் சந்தோஷமாக கொடுத்தார்.

மற்றவர், சாயி எதையும் கேட்காதபோதிலும்,தாமாகவே முன்வந்து முப்பத்தைந்து ரூபாய் தக்ஷிணை கொடுக்க முயன்றார். சாயி உடனே அதை நிராகரித்து விட்டார். கொடுக்க முயன்றவர் மிக ஆச்சரியமடைந்தார்.

அந்த சமயத்தில் மாதவராவும் அங்கிருந்தார். இதை ஓர் இசைவற்ற செயலாகப் புரிந்துகொண்டு அவர் பாபாவிடம் என்ன கேட்டார் என்பதைக் கேளுங்கள்.

"பாபா, நீங்கள் எப்படி இவ்வாறு செய்யலாம்? இரண்டு சிநேகிதர்கள் சேர்ந்தே வந்திருக்கும்போது நீங்கள் தக்ஷிணையை ஒருவரிடமிருந்து கேட்டு வாங்குகிறீர்கள்.மற்றவர் அவராகவே மனமுவந்து கொடுத்த தக்ஷிணையை அவரிடமே திருப்பிக் கொடுத்து விட்டீர்கள்!-

"ஞானிகள் இம்மாதிரி விஷமம் செய்யலாமா? ஒருவரிடமிருந்து நீங்களே கேட்டு தக்ஷிணை வாங்கிக்கொண்டீர்கள். மற்றவர் தம்மிச்சையாகவே அளித்ததைத் திருப்பிக்கொடுத்து அவரை ஏமாற்றமடைய செய்தீர்கள்.-