valam tharum vallal

valam tharum vallal
shri shird sai baba

Thursday 9 November 2017

ஷீர்டி சாயி சத்சரிதம்

"ஓ பாப்பானே! ஏறாதே ஏறாதே". இதுவே பாபா சொன்ன சுடுசொல். ஆனால், இது மாதவராவை நோக்கிச் சொல்லப்பட்டதா என்ன?

இல்லவே இல்லை! அம்புபோல் துளைத்த இச் சொற்கள் மாதவராவிற்கு விடுக்கப்பட்டவை அல்ல! அது, நாகம் தீண்டிய விஷத்திற்கு இடப்பட்ட கடுமையான ஆணையாகும்.

"ஏறினால் தெரியும் சேதி!" என்பதே சாயியின் முகத்திலிருந்து வெளிப்பட்ட கண்டிப்பான ஆணை. அவ்வாணை விஷம் பரவுவதை உடனே தடுத்தது.

இது போதாதென்று என்னவோ, "போ வெளியே உடனே; இறங்கி ஓடு!" என்ற சாயி பஞ்சாட்சர மந்திரம் விஷத்தை உடனே இறங்க வைத்தது.

சம்பிரதாயமான மந்திரவாதிகளை போன்றோ, பேய் ஓட்டுபவர்களை போன்றோ, வேறெந்த வழிமுறைகளையும் கையாளாமல், பக்தர்களின் ஆதவாளரான சாயி பலப்பல வழிகளில் அவர்களை பேராபத்துகளில் இருந்து விடுவித்தார்.

அவர் மந்திர ஜபம் ஏதும் செய்யவில்லை; அட்சதைக்கும் தண்ணீருக்கும் சக்தி ஏற்றவில்லை; ஜபம் செய்த தீர்த்தத்தையும் தெளிக்கவில்லை. பிறகு எவ்வாறு அந்த விஷம் இறங்கியது?

பாபாவின் வாயிலிருந்து வெளிப்பட்ட வார்தைகளாலேயே மாதவ்ராவ் குணமடைந்தார். இது ஓர் அற்புதம் அன்றோ! சாயினுடைய கிருபைக்கு எல்லையே இல்லை!

கதை கேட்பவர்களே! கடந்த அத்தியாயத்தில் குறிப்பிடப்பட்ட சுவாரஸ்யமானதும் அற்புதமானதுமான கதையை விரிவாகச் சொல்கிறேன். கவனத்துடன் கேளுங்கள்.

கடந்த அத்தியாயத்தில் வர்ணனை செய்யப்பட்ட கதையைவிட இது வினோதமானது. பாபா எவ்விதமாக லீலைகள் புரிந்தார் என்பதை எடுத்து விவரிக்கிறேன்.

சுவாரசியமான இக்கதைகளைக் கேட்டால், குருவின் திருவாய்மொழி மனதில் ஆழமாகப் பதியும். கர்மம் எது? அதர்மம் எது? விகர்மம் எது? என்பதெல்லாம் புரியும். குருவின் பாதங்களிடத்து சிரத்தை வளரும்.

எளிமையான உபாயங்களிலேயே மிக எளிமையான உபாயம் சாயியின் பாதங்களை இதயத்தில் நிறுத்துவதுதான். மாயையை ஒழிக்கும் ஒரே வழி இதுவே; புகலிடமும் இதுவே.

மாயையின் சூழல் ஏற்படுத்தும் சம்சார பயம் கொடிது. இக் கதைகளைக் கேட்பதால், மாயை தவிடுபொடியாகி அகண்டமான (இடையறாத) ஆனந்தம் விளையும்.

ஒரு சமயம் ஷிர்டியை காலரா கொள்ளைநோய்  தாக்கியது. மக்கள் பயந்து போனார்கள். வெளிமனிதர்கள் யாரையும் கிராமத்துள் அனுமதிக்க கூடாது என்று ஏகமனதாக முடிவெடுத்தனர். தமுக்கடித்துச் செய்தியும் பரப்பப்பட்டது.