valam tharum vallal

valam tharum vallal
shri shird sai baba

Thursday 6 September 2018

                                                               ஷீர்டி சாயி சத்சரிதம்

ஆம்ப்ட்டேக்கரின் தந்தை அக்கல்கோட் சுவாமியின் சிறந்த பக்தராக விளங்கினார். இவ்வனுபவத்தின் மூலமாக, அவ்வழிபாடு தொடர்ந்து அது மாதிரியாகவே செய்யப்பட வேண்டும் என்பதையும் பாபா அறிவுறுத்தினார்.

இவ்விதமாகக் காலப்போக்கில் எல்லாம் நல்லபடியாக நடந்தன. கெட்டகாலம் கழிந்தது. ஆம்ப்ட்டேக்கர் பெருமுயற்சி செய்து ஜொலித்திடம் கற்றுக்கொண்டார். அதற்கான பலனும் கிடைத்தது.

சாயிகிருபையாகிய பிரசாதத்தை பெற்ற அவருக்கு நல்ல காலம் பிறந்தது. ஜோதிட சாஸ்திரத்தில் பாண்டித்தியம் பெற்றார். பழைய வறுமை பறந்தோடியது.

குருவினிடம் பிரேமை வளர்ந்தது. செல்வச் செழிப்பும் சந்தோஷமும் பின் தொடர்ந்தன. குடும்பத்தில் நிம்மதியும் சுகமும் நிலவின. எல்லாவிதத்திலும் ஆனந்தமுடையவராக வாழ்ந்தார்.

ஒன்றைவிட மற்றொன்று சுவையில் மீறும் இம்மாதிரியான லீலைகள் எண்ணிலடங்கா. அவையனைத்தையும் சொல்லப் புகுந்தால், கிரந்தம் (நூல்) மிக விஸ்தாரமாக ஆகிவிடும். ஆகவே, சாரத்தை மட்டும் சொல்கிறேன்.

ஹேமாட் சாயி பாதங்களில் சரணடைகிறேன். பாபா விஷ்ணு சஹஸ்ர நாமத்தை (புத்தகத்தை) சாமாவுக்கு அன்பளிப்பாகத் தந்த சுவையான நிகழ்ச்சியை அடுத்த அத்தியாயம் விவரிக்கும்.

சாமா, 'வேண்டா, வேண்டா' என்று சொன்ன போதிலும், அவர் மீதிருந்த அளவற்ற பிரேமையால் விஷ்ணு சஹஸ்ர நாமத்தின் சுந்தரமான மஹாத்மியத்தை வர்ணித்த பின், அதை சாமாவின்மீது பாபா திணித்தார்.

சிஷ்யனுக்கு இச்சை இல்லாமலிருந்த போதிலும், அனுக்கிரஹம் செய்யக்கூடிய சமயம் வந்தபோது உபதேசம் அளித்த பாபாவின் கருணையை அடுத்த அத்தியாயத்தில் காணலாம். அக் கதையை பயபக்தியுடன் கேளுங்கள்.

அத்தியாயத்தின் முடிவில், சத்குரு உபதேசம் செய்யும் முறை எவ்வளவு விசித்திரமானது என்பதும் விளங்கும். செவிமடுப்பவர்களே! கவனத்துடன் கேளுங்கள்.

மங்களங்களுக்கெல்லாம் மங்களமான சாயி தலைசிறந்த குணங்களின் சுரங்கம். அவருடைய புனிதமான கதையைக் கேட்கும் வாய்ப்பை பாக்கியவான்களே பெறுகின்றனர்!

எல்லாருக்கும் க்ஷேமம் உண்டாகட்டும்! ஞானிகளாலும் சான்றோர்களாலும் உணர்வூட்டப்பட்டு, சாயி பக்தன் ஹேமாட் பந்தால் இயற்றப்பட்ட, 'ஸ்ரீ சமர்த்த சாயி சத் சரித்திரம்' என்னும் காவியத்தில், 'குலகுருவிடம் விசுவாசத்தை நிலைபெறச் செய்த செம்மை - காக்காய் வலிப்பு நோய் தீர்த்த அருள் - தற்கொலை முயற்சியை தடுத்தாட்கொண்ட கருணை' என்னும் இருபத்தாறாவது அத்தியாயம் முற்றும்.

                           ஸ்ரீ சத்குரு சாயிநாதருக்கு அர்ப்பணம் ஆகட்டும்.

                                                        சுபம் உண்டாகட்டும்.