valam tharum vallal

valam tharum vallal
shri shird sai baba

Thursday 11 August 2022

 ஷீர்டி சாயி சத்சரிதம்

வில் போன்று வளைந்தும் வட்டமாகவும் பலவிதமான வடிவமைப்புகளில் அமைந்த, சிறிய மற்றும் பெரிய கொம்புகள் ஊதப்படும். சிலர் எக்காலம் ஊதினர். சிலர் ஜால்ராவாலும் சிலர் சேகண்டியிலும் தாளம் போட்டனர். கைத்தாளம் போட்டுகொண்டு வந்தவர்கள் அநேகம்.

மிருதங்கங்களையும் வீணைகளையும் 'ஜன்ஜன்' என்றொலித்துக்கொண்டு ஆண்களும் பெண்களும் பிரேமையுடன் வரிசைவரிசையாகப் பஜனையுடன் சேர்ந்து ஊர்வலமாக நடந்தனர். சாயி நாம கோஷம் வானைப் பிளந்தது.

சிலர் பதாகைகளை (விருதுகொடிகளை) நிலைதவறாது கவனமாகப் பிடித்துக்கொண்டு ஊர்வலத்தில் நடந்தனர். சிலர் கருடன் சித்திரம் வரையப்பட்ட கொடிகளை ஏந்திப் பெருமையுடன் நடந்தனர். இவ்வாறாக, மக்கள் அனைவரும் சந்தோஷமாக பஜனை பாடிக்கொண்டும் நடனமாடிக்கொண்டும் ஊர்வலத்தில் கலந்துகொண்டனர்.

சகல ஜனங்களும் மிக்க மகிழ்ச்சியுடன், பறக்கும் பதாகைகளுக்கும் உரத்த மேளதாளச் சத்தத்திற்கும் கொம்புகளின் சத்தத்திற்கும் சியாமகர்ண செய்த குளம்படிச் சத்தத்திற்கும் ஜெய கோஷச்  சத்தத்திற்கும் இடையே, ஊர்வலமாகச் சென்றனர்.

இவ்வளவு ஆரவாரத்திற்கும் இன்னிசை வாத்தியங்களின் பேரொலிக்கும் நடுவே பாபா மசூதியை விட்டுக் கிளம்புவார். அவர் படியை மிதித்தவுடன் வாயில்காப்போர் பாபாவுக்கு கட்டியங்கூறுவர்.

சேகண்டிகளும் மிருதங்கங்களும் கஞ்சிராக்களும் பக்கவாத்யங்களாக ஒலிக்க, சிலர் வீணை வாசித்தனர்; சிலர் சப்லாகட்டையால் தாளம் போட்டனர்; பக்த மண்டலி பஜனை பாடியது. பக்த சம்மேளனம் பிரேமையினால் பொங்கியது.

பல பக்தர்கள் பதாகைகளையும் கொடிகளையும் ஏந்திக்கொண்டு ஆனந்தமாக ஊர்வலத்தில் நடந்து வந்தபோது, சிலர் பாபாவின் இருபக்கங்களிலும் சவரியால் (சாமரத்தால்) தலைக்குமேல் விசிறிக்கொண்டு வந்தனர்.

சிலர் முன்னோடிகளாகச் சென்று ஒற்றையாகவும் இரட்டையாகவும் நடைவிரிப்புகளை விரித்தனர். பாபா விரிப்பின்மீது மெதுவாக நடந்து சென்றார். சிலர் அவருடைய கைகளை பிடித்துக்கொண்டனர். சிலர் சவரியால் அவருக்கு விசிறினர்.

தாத்யா சாஹேப் இடைக்கையைப் பிடித்துக்கொள்வார். மகால்சாபதி வலக்கையைப் பிடித்துக்கொள்வார். பாபு சாஹேப்  ஜோக் ஒரு பெரிய குடையை பாபாவின் தலைக்குமேல் உயரமாகப் பிடித்துக்கொள்வார். இவ்வாறு பாபா சாவடியை நோக்கி ஊர்வலமாக செல்வார்.

சியாமகர்ண என்ற பெயர்கொண்ட தாமிரவர்ணக் குதிரை எல்லா ஆபரணங்களாலும் அலங்கரிக்கப்பட்டு கால்களில் கட்டிய சதங்கைகள் 'ஜன்ஜன்' என்று ஒலிக்க வழிவகுத்துக்கொண்டு நடந்துசெல்லும்.

அதிகார கோலேந்திகள் அவ்வப்பொழுது சாயி நாம கோஷம் செய்துகொண்டு முன்னால் சென்றனர். குடையேந்துபவர் பெரிய குடையொன்றை ஏந்திச் சென்றார். சிலர் சவரிகளை ஏந்திச் சென்றனர்.