valam tharum vallal

valam tharum vallal
shri shird sai baba

Thursday 29 September 2022

 ஷீர்டி சாயி சத்சரிதம்


38 . அன்னதானம்

ஓம் ஸ்ரீ விநாயகனே போற்றி! ஸ்ரீ சரஸ்வதியே போற்றி!
ஸ்ரீ குருமஹராஜனே போற்றி! குலதேவதைக்கும் ஸ்ரீ சீதாராமச்சந்திரனுக்கும்
என்னுடைய பணிவான வணக்கங்கள். பூஜ்யகுரு ஸ்ரீசாயிநாதனை
பக்தியுடன் சிரம் தாழ்த்தி வணங்குகிறேன்.

அகில உலகங்களுக்கும் ஆனந்தமளிப்பவரே! பக்தர்களின் இஷ்டங்களை பூர்த்தி செய்பவரே!  சரணமடைந்தவர்களின் மூன்றுவிதமான இன்னல்களையும் அபகரிப்பவரே! குருவரரே! உம்முடைய பாதங்களில் வணங்குகிறோம்.

அடக்கமுள்ளவர்களைக் காப்பவரும் பரம உதாரணமுள்ளவரும் அடைக்கலம் புகுந்த பக்தர்களை உத்தாரணம் செய்பவருமாகிய தேவரீர், உலகமக்களுக்கு உபகாரம் செய்வதற்காகவே அவதாரம் செய்திருக்கிறீர்.

துவைத பாவத்தை நாசம் செய்வபவரே ஜய ஜய! பக்தர்களின் மனத்தைக் கொள்ளைகொள்பவரே ஜய ஜய! பக்தர்களை உலகியல் வாழ்விலிருந்து விடுவிப்பவரே ஜய ஜய! கருணைக்கு கடலான குருராயரே ஜய ஜய!

உம்முடைய புனிதமான பாதங்களை பார்ப்பதற்கும் உம்முடன் சமகாலத்தில் வாழும் சுகத்தை அனுபவிப்பதற்கும் நாங்கள் என்ன பேரு பெற்றோம் ஐயனே! ஆனால் அந்தக் காலம் கடந்துவிட்டது; இனித் திரும்பி வரப்போவதில்லை.

முழுமுதற்பொருளின் சுத்த சொரூபமான ரசத்தை ஓர்  அச்சில் ஊற்றியபோது உருவான மூர்த்தியே ஞானிகளில் சிறந்தவரான இந்த சாயி.

சாயியே ஆத்மாராமர். அவரே பூர்ணானந்தத்தின் இருப்பிடம். தாமே எல்லா விருப்பங்களும் நிறைவேறியவராதலால் பக்தர்களையும் ஆசையற்றவர்களாக ஆக்கிவிடுகிறார்.

எவர் எல்லா தர்மங்களையும் ரக்ஷிப்பவரோ, எவர் பிரம்ம பலத்தாலும் க்ஷத்திரிய பலத்தாலும் யமனையே விழுங்கக்கூடியவரோ, அவர் ஆடிய நாடகமே இந்தச் சரித்திரம்.

ஜனனமரண சம்பந்தத்தையும் மற்ற பந்தங்களையும் அறுத்தெறியக்கூடியவரின் சன்னியதியில் குருட்டு ஜடமாகிய நான் சாஷ்டாங்கமாக நமஸ்காரம் செய்கிறேன்.

சென்ற அத்தியாயத்தில், மிகுந்த அன்புடன் சாயிநாதரின் சாவடி ஊர்வலத்தை வர்ணித்தேன். இந்த அத்தியாயத்தில், இடையறாத ஆனந்தத்தை அளிக்கும் ஹண்டியின் (வாயகன்ற பெரிய தவலை - அன்னதானம்) விவரத்தைக் கேளுங்கள்.