valam tharum vallal

valam tharum vallal
shri shird sai baba

Thursday 6 December 2018

ஷீர்டி சாயி சத்சரிதம்

இவ்வளவு முயற்சி எடுக்கவில்லையென்றால் மாதவாரவுக்கு போதியின் பால் விசுவாசம் ஏற்பட்டிருக்காது; அதைக் கையால் தொட்டிருக்கமாட்டார். வாயால் சொல்லியுமிருக்க மாட்டார்; மனப்பாடமும் ஆகியிருக்காது.

அன்பொழுகும் ஸாயிதான்; ஆனால், அவரை அடைவது கடினம். லீலை புரிவதையே தொழிலாக கொண்ட அவர், எப்பொழுது எந்தவிதமாக சூத்திரங்களை (பொம்மலாட்ட நூல்களை) இழுப்பார் என்பதை அறிந்துகொள்வது கடினம்.

காலப்போக்கில் சாமாவுக்குப் போதியின்மீது நிஷ்டை ஏற்பட்டது. ஹரி சீதாராம் தீக்ஷிதரும் பேராசிரியர் கணேச கோவிந்த நரகேவும் அவருக்குச் சரியான உச்சரிப்புடன் சுலோகங்களை படிக்கக் கற்றுக்கொடுத்தனர். சாமா நன்கு கற்றுக்கொண்டார். காலக்கிரமத்தில்  அவருக்கு விஷ்ணு சஹஸ்ரநாமம் மனப்பாடம் ஆகிவிட்டது.

மாதவராவை விவாதம் செய்யவைத்தது சாயியின் சுத்த போதனை முறைக்கு ஒரு விவரணம். பரமானந்தம் நிறைந்த நகைச்சுவையே விவாதமேதுமில்லாத சுகத்தை அளித்தது!

அதுபோலவே, ப்ரம்ம வித்தையை(இறைவனை அறியும் கல்வி) அப்பியாசம் செய்யும் பக்தர்களிடம் பாபாவுக்கு அதிகப் பிரீதி. தக்க சமயத்தில் இதை எவ்விதமாக தெளிவாக நடைமுறையில் செய்துகாட்டினார் என்று பாருங்கள்.

ஒரு சமயம் ஜோக்குக்கு தபால் மார்க்கத்தில் ஷீர்டி தபால் நிலையத்திற்கு ஒரு பார்சல் வந்தது. ஜோக் அதை பெற்றுக்கொள்வதற்காக உடனே தபால் நிலையத்திற்கு சென்றார்.

பிரித்துப் பார்த்தபோது அது பாலகங்காதர திலகர் எழுதிய 'கீதாரஹஸ்யம்' (பகவத் கீதைக்கு திலகர் எழுதிய விரிவுரை) புத்தகமாக இருந்தது. பார்சலைக் கையில் இடுக்கிக் கொண்டவாறு அவர் உடனே தரிசனத்திற்காக மசூதிக்கு வந்தார்.

பாபாவின் பாதங்களில் நமஸ்காரம் செய்தபோது, 'பார்ஸல் பாபாவின் பாதங்களில் விழுந்தது. பாபா அப்பொழுது கேட்டார், "என்ன பாபுசாஹெப் ! இது என்ன?"

பார்ஸல் பாபாவின் எதிரில் மறுபடியும் பிரிக்கப்பட்டது. ஜோக், உள்ளே என்ன இருந்ததென்பதையும் சொன்னார். பிரிக்கப்பட்ட பார்ஸல், புத்தகத்தோடு பாபாவிடம் சேர்ப்பிக்கப்பட்டது. பாபா அதை பார்த்தார்.

பாபா புத்தகத்தைக் கையில் எடுத்து பக்கங்களை மேலோட்டமாக புரட்டினார். பாக்கெட்டில் இருந்து ஒரு ரூபாயை எடுத்து அதன்மேல் மகிழ்ச்சியுடன் வைத்தார்.

புத்தகத்தை ரூபாயுடன் சேர்த்து, "இதை முதலிலிருந்து கடைசிவரை படியும்; மங்களமடைவீர்" என்று ஆசி கூறிக்கொண்டே ஜோக்கின் மேல்துண்டில் வைத்தார்.

பாபா இவ்வாறு அனுக்கிரஹம் செய்த கதைகள் எண்ணற்றவை. இப் புத்தகம் மிகப் பெரியதாகிவிடும் என்னும் காரணத்திற்காகவே சில கதைகளை மட்டும் சுருக்கமாகச் சொல்லியிருக்கிறேன்.

ஒரு சமயம் தாதாசாஹெப் காபர்டே ஷிரிடிக்குக் குடும்பத்துடன் வந்தார். பாபாவின் அன்பையும் ஆதரவையும் அனுபவித்துக்கொண்டு சிலகாலம் அவர் ஷிர்டியில் வாசம் செய்யும்படி நேர்ந்தது.