valam tharum vallal

valam tharum vallal
shri shird sai baba

Thursday 25 August 2022

 ஷீர்டி சாயி சத்சரிதம்


கிராம மக்களும் பாபாவின் பக்தர்களும் பிரீதியுடன் தரிசனம் செய்ய வந்தனர். அந்த வேளையில் பாபாவின் திருமுகம் அருணன் (உதயகால சூரியன்) உதித்ததுபோல் செந்நிற ஒளியால் அற்புதமாக ஜொலித்தது.

அந்தத் தேஜோவிலாசத்தைப் பார்த்தவர்களின் கண்கள் வியப்பால் விரிந்து மலர்ந்தன. அவர்களுடைய மனம் பிரேமையால் உள்ளமடைந்தது. உலகியல் துன்பங்கள் அனைத்தும் ஒழிந்ததுபோல் உணர்ந்தனர்.

ஓ, பாலசூரியனைப் போன்ற அந்த திவ்விய தேஜஸும் அற்புதமுந்தான் என்னே! அவருக்குமுன்னால் பேரிகைகள் நெடுநேரம் முழங்கின.

வடக்குப் பார்த்தவாறு, ஒரே இடத்தில் ஒன்றரை மணி நேரம் தம்முடைய வலக்கையை மேலும் கீழும் மீண்டும் மீண்டும் ஆட்டிக்கொண்டே பாபா நிற்பார்.

பாபாவின் திருமுகவொளிவட்டம் அப்பொழுது தாழம்பூவின் நடுப்பாகம் போல் கொஞ்சம் சிவப்பு கலந்த மஞ்சள் நிறமாக ஜொலிக்கும். இந்த அழகை வாக்கால் வர்ணிக்க இயலாது; கண்களால் பார்த்துத்தான் அனுபவிக்கமுடியும்.

மகால்சாபதி ஆவேசம் பிடித்து நடனமாட ஆரம்பித்த பிறகும், பாபா ஒருமுகமான நிலையிலிருந்து கலையாதது அனைவர்க்கும் ஆச்சரியத்தை விளைவித்தது.

ஊர்வலத்தில் மகால்சாபதி பாபாவின் கப்னியின் நுனியைப்பிடித்துக்கொண்டு அவருக்கு வலப்பக்கத்தில் நடந்து வருவார். பாபாவின் இடப்பக்கத்தில் தாத்யா கோதே பாடீல் ஒரு லாந்தரைக் கையில் பிடித்துக்கொண்டு வருவார்.

ஓ, அந்த உற்சவந்தான் எவ்வளவு அற்புதமானது! அந்தப் பிரேம பக்தி எவ்வளவு உன்னதமானது! அந்தக் கோலாகலத்தை காண்பதற்குச் சான்றோர்களும் செல்வர்களும் அங்கு ஒன்று கூடினர்.

பாபாவின் சந்திரவதனம் பொன்னிற ஒளியுடன் ஜொலித்த காட்சி வர்ணனைக்கு அப்பாற்பட்டது. அங்கிருந்த மக்கள் அதைக் கண்கொட்டாமல் பார்த்தனர். ஆனந்தத்தால் நிரம்பினர்.

எல்லையற்ற பிரேமபக்தியாலும் இதயத்தை மூழ்கடித்த ஆனந்தத்தாலும் நிரம்பியவர்களாய் மக்கள் இருமருங்கிலும் மெதுவாக ஊர்வலத்தில் நடந்தனர்.

வருங்காலத்தில் யாருமே இந்தக் கோலாகலமான சாவடி ஊர்வலத்தைக் கண்களால் காணமுடியாது. அந்த நாள்கள் கடந்துவிட்டன. அக் காலம் மலையேறிவிட்டது. பழைய நினைவுகளை அசைபோட்டு மனத்தைச் சமாதானம் செய்துகொள்ள வேண்டியதுதான்.

இவ்விதமாக, வாத்தியங்களின் இன்னிசைக்கும் அவ்வப்பொழுது எழும்பிய ஜெயகோஷத்திற்கும் இடையே, பாபா சாவடியிலிருந்த ஆசனத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டார். தெய்வங்களுக்குரிய உபசாரங்கள் செய்யப்பட்டன.

தலைக்குமேல் வெள்ளைத் துணியொன்று விதானமாகக் (கூரை போன்ற விரிப்பு) கட்டப்படும். தொங்கும் சரக்கொத்து விளக்குகளும் சாதாரண விளக்குகளும் ஏற்றப்படும். பல இடங்களில் வைக்கப்பட்டிருந்த கண்ணாடிகளில் விளக்குகளின் ஒளி பிரதிபலிக்கும். சாவடி பார்ப்பதற்கு ஜெகஜோதியாக காட்சியளிக்கும்.