valam tharum vallal

valam tharum vallal
shri shird sai baba

Thursday, 13 February 2025

 ஷீர்டி சாயி சத்சரிதம்

"குவாலியருக்குப் போய்ச் சேர்ந்துவிட்டேனானால் அங்கிருந்து காசி எவ்வளவு தூரம் இருக்கிறதோ!" என்று சாப்பாடு முடிந்தவுடன் மாதவராவ் தமக்குள்ளேயே சிந்திக்கத் தொடங்கினார்.

செலவுக்காக நந்தராமிடமிருந்து ரூ 100 /- கடன் வாங்கிக்கொண்டு பாபாவிடம் அனுமதி பெற்றுக்கொள்வதற்காகச் சென்று மிகப் பணிவுடன் விண்ணப்பித்தார்.

"குவாலியர் வரையில் நான் பூணுல் கல்யாணத்திற்காகவும் திருமணத்திற்காகவும் செல்வதாக இப்போது நேர்ந்திருப்பதால், வாய்ப்புக்கேற்றவாறு காசிக்கும் கயைக்கும் சென்றுவருவதே சிலாக்கியம் என்று நான் நினைக்கிறேன். -

"ஆகவே ஓ பகவானே! உமது பாதங்களில் விழுந்து பிரார்த்தனை செய்கிறேன். காசிக்கும் கையைக்கும் கூட போய்வரட்டுமா?" பாபா அப்பொழுது மகிழ்ச்சியுடன் மாதவராவுக்கு அனுமதியளித்தார்.

மேலும் பாபா கூறினார், "நீர் கேட்பதில் முறைகேடு என்ன இருக்கிறது? முயற்சி ஏதுமில்லாமலும் சுலபமாகவும் எது நமக்கு வாய்க்கிறதோ அதைத் தவறவிடாது கட்டாயம் பயன்படுத்தவேண்டும். "

இவ்வாறு ஆணையிடப்பட்டது. மாதாராவ் ஒரு மாட்டுவண்டியை வாடகைக்கு அமர்த்திக்கொண்டு கோபர்காங்கவிற்கு கிளம்பினார்; வழியில் ஆபா கோதேவை சந்தித்தார்.

ஆபா தம் பேத்தியை வீட்டிற்குத் திரும்ப அழைத்துக்கொண்டு வருவதற்காக சாந்த்வடாவிற்குப் போய்க்கொண்டிருந்தார். காசிப் புனிதப் பயணத்தைக் பற்றிக் கேள்விப்பட்டவுடன் தம்முடைய குதிரை வண்டியிலிருந்து எகிறிக் குதித்தார்.

காசிப் பயணத்திற்குக் கையில் பணமில்லை; ஆயினும் மாதவராவுடன் சகபயணம் செய்யும் அருமையான வாய்ப்பை விட்டுவிட மனமில்லை.

ஆகவே, மாதவராவ் தைரியமூட்டியபோது ஆபா கோதேவுக்குத் தயக்கம் எங்கிருந்து வரும்? நல்வாய்ப்பைப் பயன்படுத்திக்கொள்ளும் வகையில் சட்டென்று ஏறி மாட்டுவண்டியில் உட்கார்ந்துவிட்டார்.

ஆபா கோதே பாடீல் ஒரு பணக்காரர். ஆயினும், பயணம் செய்துகொண்டிருக்கும்போது பணம் புரட்டுவது எவ்வாறு? காசிக்குப் போவது பணத்தினால் தடைபட்டுவிடுமோ என்பதுதான் அவருடைய பெரிய கவலை.

கதவைத் தட்டும் புனிதப் பயண நல்வாய்ப்பை, அதுவும் மாதவராவின் தோழமையுடன் செல்வதை பயன்படுத்தியே தீரவேண்டும் என்று அவருடைய ஆழ்மனம் விரும்பியது.

அவருடைய பிரச்சினையைப் புரிந்துகொண்டு, சரியான நேரத்தில்


அவருக்கு தைரியம் அளித்துக் காசிப் பயணத்தின் புண்ணியம் அவருக்குக் கிடைக்கும் வகையில், ஆபா கோதேவைத் தம்முடன் மாதவராவ் சேர்த்துக்கொண்டார்.

பிறகு அவர்கள் இருவரும் நாக்பூரில் நடந்த பூணுல் கல்யாணத்திற்குச் சென்றார்கள். செலவுக்காக மாதவராவுக்கு தீக்ஷிதர் இருநூறு ரூபாய் அளித்தார்.