valam tharum vallal

valam tharum vallal
shri shird sai baba

Thursday 22 November 2018

ஷீர்டி சாயி சத்சரிதம்

இயல்பாக அந்த ராமதாசி குதர்க்கமே உருவானவர். ஒரு நொடியில் அவருக்கு மாதவராவின் மேல் சந்தேகம் வந்துவிட்டது. ராமதாசி சொன்னார், "என்னுடைய போதியைப் பிடுங்கிக்கொள்வதற்காகவே பாபாவை மத்யஸ்தத்திற்கு (நடுநிலையாளராக) இழுத்தாய்".

வாங்கிக்கொண்டுவந்த சோனாமுகி மருந்தை மறந்துவிட்டு மாதவராவின்மேல் வசைமாரியை ஆரம்பித்தார். பொங்கிவந்த கோபத்தால் பெருஞ்சத்தம் போட்டு, அர்த்தமற்ற வார்த்தைகளை சரமாரியாக பொழிந்தார்.

"வயிற்றுவலி ஒரு பாசாங்கு என்று எனக்கு நன்கு தெரியும். என்னுடைய போதியின்மீது நீ கண்வைத்துவிட்டதால், நீதான் பாபாவை இவ்வாறு பாசாங்கு செய்யத் தூண்டியிருக்கிறாய். நான் இதை பொறுத்துக்கொள்ளப் போவதில்லை.-

"நான் ராமதாசியென்று  பெயர் பெற்றவன்; தைரியசாலி; பயமேயில்லாதவன். என்னுடைய போதியை மரியாதையாகத் திருப்பிக் கொடுத்துவிடு. இல்லையேல், நான் உன்னெதிரிலேயே மண்டையை உடைத்துக்கொண்டு ரத்த வெள்ளத்தில் மிதப்பேன்.-

"என்னுடைய போதியின்மீது நீ குறிவைத்துவிட்டாய். ஆகவே, நீதான் இந்த கபட நாடகத்தை ஜோடித்து பாபாவின் மேல் பழி வருமாறு செய்து நல்ல பிள்ளைபோல் ஒதுங்கிவிட்டாய்".

மாதவராவ் அவரைப் பலவிதமாக சமாதானம் செய்ய முயன்றார். ஆனால், ராமதாசியோ விடுவாரில்லை. பிறகு, மாதவராவ் மென்மையாக என்ன சொன்னார் என்று கேளுங்கள்.

"நான் ஏமாற்று வேலை செய்தேன் என்று அனாவசியமாக பழி சுமத்த வேண்டா. என்ன உம்முடைய போதியின் கதை? சுலபமாக கிடைக்கக் கூடிய புத்தகந்தானே!-

"பாபாவையே சந்தேகப்படும் அளவிற்கு உம்முடைய போதியென்ன தங்கமா, வைரமா, வைடூரியமா? வெட்கம், வெட்கம்!"

ராமதாசியின் அட்டகாசத்தை பார்த்த பாபா இனிமையாகக் கேட்டார். "ஓய், ராமதாசி! இப்பொழுது என்ன தவறு நடந்துவிட்டது? ஏன் காரணமேதுமின்றி உம்மையே நீர் வருத்திக் கொள்கிறீர்?-

"சாமாவும் நம் பையன் அல்லனோ! ஏன் இவ்வளவு சிரமப்பட்டு அவனைத் திட்டுகிறீர்? அர்த்தமில்லாமல் ஏன் சோகப்படுகிறீர்? உம்முடைய கோபத்தைக் காட்டி எல்லாரையும் வேடிக்கை பார்க்க வைக்கிறீர்! -

"ஓ, நீர் எப்படி இவ்வளவு சண்டை விரும்பியாக இருக்க முடியும்? நீர் ஏன் மென்மையாகவும் இனிமையாகவும் பேசக்கூடாது? எந்நேரமும் போதி படித்தும் உம்முடைய இதயம் அசுத்தமாக இருக்கிறதே!-

"தினமும் நீர் அத்யாத்ம ராமாயணம் வாசிக்கிறீர்; சஹஸ்ர நாமாவளி பாராயணம் செய்கிறீர். ஆயினும் உமது முரட்டு சுபாவத்தை விடமாட்டேன் என்கிறீரே. இந்த லட்சணத்திற்கு உம்மை நீர் ராமதாசி என்று வேறு சொல்லிக்கொள்கிறீர்!

"நீர் என்ன விதமான ராமதாசி ? நீர் உலகியல் பொருள்களை உதாசீனம் செய்பவராக அல்லீரோ இருக்கவேண்டும்? மாறாக, ஒரு புத்தகத்தை கெட்டியாகப் பிடித்துக்கொண்டு விடமாட்டேன் என்று அடம்பிடிக்கிறீரே ! உம்முடைய நடத்தையைப்பற்றி யார் என்ன சொல்லமுடியும்?-