valam tharum vallal

valam tharum vallal
shri shird sai baba

Thursday 16 June 2022

 ஷீர்டி சாயி சத்சரிதம்

சிரேயஸை (ஆன்மீக மேன்மை) அளிக்கும் ஞானமே கட்டாயமாக அடையவேண்டிய மெய்யான ஞானம். எது கேவலம் பிரேயஸை (உலக வாழ்வில் உழலுதல்) அளிக்கிறதோ அதற்கு அவித்யாஅல்லது அஞ்ஞானம் என்று பெயர்.

மனித வாழ்க்கையின் மிகப் பெரிய பயம் மரணம் பற்றியதுதான். இந்த பயத்திலிருந்து விடுபட்டு பயமற்ற நிலை பெறுவதற்கு 'உள்ளது ஒன்றே'என்ற அத்வைத ஞானத்தை அளிக்கும் குருவின் இருபாதங்களையும் கெட்டியாகப் பற்றிக்கொள்ளவேண்டும்.

எங்கு 'இரண்டுண்டு' என்னும் பிழையான கருத்து நுழைகிறதோ அங்கு பயமும் நுழைந்துவிடும். ஆகவே, பேதம் பாராத குருவின் திருவடிக்கு சேவை செய்தால், பயமென்பது லவலேசமும் இருக்காது.

தூய அன்பு என்னும் சந்தனத்தை அவருடைய நெற்றியில் இடுங்கள். எளிமையான விசுவாசம் என்னும் பீதாம்பரத்தை அவருக்கு ஆடையாக அணிந்த இறைவனைத் தம் பக்தர்களுக்கு காட்டிக்கொடுப்பார்

அஷ்டபாவ நிலையில் பெருகும் கண்ணீரால் அவரைக் குளிப்பாட்டுங்கள். திடமான சிரத்தையென்னும் சிம்மாசனத்தில் அவரை எழுந்தருளச் செய்யுங்கள். அவர் உடனே முகம் மலர்வார்.

பக்தி என்னும் மேகலையை இடுப்பில் அணிவித்து அவரை உங்களுக்கே சொந்தமாக்கிக்கொள்ளுங்கள். உங்களிடம் இருப்பவை அனைத்தையும் அவருக்கு பிரீதியுடன் சமர்ப்பித்து ஆரத்தி சுற்றுங்கள்.

இல்லாத பொருளை அழிக்கமுடியாது; இருக்கும் பொருளைத்தான் அழிக்க முடியும். கல்லால் அடிபட்டபானை உடையும்போது அதனுடைய உருவந்தான் இல்லாமற்போகிறது.

பானையின் இருக்கும் தன்மை சிறிதளவும் அழிவதில்லை. ஏனெனில், உடைந்த பாகங்களுக்கு மறுபடியும் பானையாக ஆகும் சக்தி இருக்கிறது.

ஆகவே ஒரு பொருளை அழிக்கமுடியுமா என்பது அதனுடைய இருக்கும் தன்மையையே சார்ந்திருக்கிறது. அதுபோலவே எந்த மரணமும் சூனியத்தில் முடிவதில்லை.

காரணம் இன்றி விளைவேதும் இல்லை. இதை எல்லா விஷயங்களிலும் அனுபவத்தால் காண்கிறோம். உருவநிலையில் இருப்பது அருவநிலைக்கு மாறினாலும், சத்தியத்தின் சம்பந்தத்தை விட்டுவிடுவதில்லை.

சூக்கும நிலையிலேயே பல படிகள் இருப்பது இதைத் தெளிவாக்குகிறது. பூதவுடல் அழிந்துபோன பின்பும் சூக்கும சரீரம் தொடர்ந்து வாழ்கிறது!

சூக்கும சரீரமும் மறையும்போது அதைவிடச் சூக்குமமான நிலை தொடர்கிறது. அந்த நிலையில் ஞானேந்திரியங்களும் மனமும் புத்தியும் இன்பங்களைத் துய்க்கும் சக்தியை இழந்துவிடுகின்றன.

தாத்பர்யம் (மூலக்கருத்து) என்னவென்றால், புத்தியும் ஓய்ந்துபோகும் நிலையில் உருவமுள்ளது உருவமில்லாமல் போக்கியது, அப்பொழுதும் ஆத்மா அணைந்துபோவதில்லை; சுயமாகவே பிரகாசித்துக்கொண்டிருக்கிறது.