valam tharum vallal

valam tharum vallal
shri shird sai baba

Thursday, 16 September 2021

 ஷீர்டி சாயி சத்சரிதம்

35 . சோதிக்க வந்தவர்களைக் கையாண்ட விநோதமும் உதீயின் அற்புத சக்தியும்

ஓம் ஸ்ரீ விநாயகனே போற்றி! ஸ்ரீ சரஸ்வதியே போற்றி!
ஸ்ரீ குருமஹாராஜனே போற்றி! குலதேவதைக்கும் ஸ்ரீ சீதாராமச்சந்திரனுக்கும்
என்னுடைய பணிவான வணக்கங்கள். பூஜ்யகுரு ஸ்ரீ சாயிநாதனை
பக்தியுடன் சிரம் தாழ்த்தி வணங்குகிறேன்.

கடந்த அத்தியாயத்தின் முடிவில் கோடிகாட்டிய கதைகளை இந்த அத்தியாயத்தில் தொடர்கிறேன். அமைதியான மனத்துடன் கேளுங்கள்.

தன்னுடைய பாதையே உயர்ந்தது என்று நினைத்து தன்னுடைய மதத்தின் உட்பிரிவின்மேல் வைக்கும் அளவுக்குமீறிய அபிமானத்தை விட பயங்கரமானதும் தாண்டமுடியாததுமான விக்கினம், ஆன்மீக முன்னேற்றத்திற்கு வேறெதுவுமே இல்லை.

"நாங்கள் உருவமற்ற கடவுளைத் தொழுபவர்கள். உருவமுள்ள கடவுளே அனைத்து பிரேமைகளுக்கும் மூலகாரணம். ஞானிகளும் சாதுக்களும் கூட மனிதர்கள்தாமே? இவ்வாறிருக்க, அவர்களை பார்த்தால் நாம் ஏன் வணக்கம் செலுத்த வேண்டும்?-

"அவர்களுக்கு நமஸ்காரம் செய்யக்கூடாது; தக்ஷிணையும் கொடுக்கக்கூடாது. அவர்களுக்கு மரியாதை ஏதும் செய்யக்கூடாது. ஏனெனில் அது பக்தியை கேலி செய்வதாகும்."

ஷிர்டியைபற்றிச் சிலர் சிலவிதமாகவும், வேறு சிலர் வேறுவிதமாகவும், பலர் பலவிதமாகப் பேசினார்கள். ஆனால், அவை எல்லாவற்றையுமே நாம் விழுங்கிவிட முடியாது.

சிலர் சொன்னார்கள், "தரிசனத்திற்குப் போனால் சாயிபாபா தக்ஷிணை கேட்கிறார். சாதுக்கள் திரவியத்தை சம்பாதிக்க முயலும்போது அவர்களுடைய சாதுத்துவம் அடிபட்டுவிடுகிறதன்றோ!

"குருட்டு நம்பிக்கை நல்லதன்று. பிரத்யக்ஷமாக அனுபவம் கிடைத்த பிறகே நான் என்னுடைய மனத்தில் எவ்வழி செல்வதென்று முடிவுசெய்வேன். -

"பணத்தின் மீது நாட்டம் கொண்டவரின் ஞானித்துவத்தை என்னால் மெச்ச முடியவில்லை. நான் தக்ஷிணை கொடுக்கமாட்டேன். நம்முடைய வணக்கத்திற்கு அவர் தகுதியுள்ள பாத்திரமல்லர்.-