valam tharum vallal

valam tharum vallal
shri shird sai baba

Friday 21 February 2020

ஷீர்டி சாயி சத்சரிதம் 

புலியே அவர்களுக்குப் பிழைக்கும் வழி; புலியே அவர்களுடைய குடும்பங்களைக் காப்பாற்றியது. ஆகவே, புலி இறந்தவுடன் அவர்களுடைய முகங்கள் சோகத்தால் கூம்பின. இது இயற்கையே. 

பிறகு, அவர்கள் மஹாராஜைக் கேட்டனர், "இப்பொழுது நாங்கள் எந்த வழியில் செல்வது? புலியை எப்படி புதைப்பது? உங்களுடைய கைகளாலேயே அதற்கு நற்கதி அளியுங்கள்".

மஹராஜ் கூறினார், "சோகப்படாதீர்கள்; புலியின் முடிவு இங்கேதான் ஏற்படவேண்டுமென்று இருந்தது. மேலும் அவனும் மஹா புண்ணியவான். அவனுக்கு அத்தியந்தமான சௌக்கியம் கிடைத்தது.-

"தகியாவைத் தாண்டி, அங்கே, அங்கே ஒரு சிவன் கோவில் இருக்கிறது! இவனை அங்கே எடுத்துச்சென்று நந்திக்கருகில் புதைத்துவிடுங்கள்.-

"அவ்விடத்தில் புதைத்தால் இவன் நற்கதி அடைவான். உங்களுடைய கடனிலிருந்தும் பந்தத்திலிருந்தும் விடுபடுவான்.- 

"போன ஜென்மத்தில் உங்களுக்கு கடன்பட்டதால், கடனை அடைப்பதற்காகவே புலியாக ஜென்மம் எடுத்தான். இன்றுவரை உங்களுடைய பிடியில் சிக்கியிருந்தான்."

தர்வேசிகள் புலியைத் தூக்கிக்கொண்டு சிவன் கோயிலுக்கு அருகில் சென்றனர். நந்திக்குப் பின்னால் ஒரு குழி தோண்டிப் புலியைப் புதைத்தனர். 

புலி ஒரு கணத்தில் மரணமடைந்தது என்னே ஆச்சரியம்! இந்நிகழ்ச்சி இத்தோடு முடிந்துபோயிருந்தால், எப்பொழுதோ மறந்துபோயிருக்கும். 

ஆனால், அன்றிலிருந்து சரியாக ஏழாவது நாள் பாபாவும் தேகவியோகம் அடைந்து விட்டார். ஆகவேதான், இந்நிகழ்ச்சி மறுபடியும் மறுபடியும் ஞாபகத்திற்கு வருகிறது. 

அடுத்த அத்தியாயம் மேலும் சுவாரசியமானது. பாபா தம் குருவை ஆராதனை செய்ததையும் அபிமானித்ததையும் விரிவாகச் செய்ததையும் விளக்குகிறார். 

ஹேமாட் சாயிநாதரை சரணடைகிறேன். குருவின் கைகளால் தலைகீழாக தொங்கவிடப்பட்ட பாபா, குருவின் கிருபையை எவ்விதமாக சம்பாதித்தார் என்பதைக் கேளுங்கள். 

எல்லாருக்கும் க்ஷேமம் உண்டாகட்டும்! ஞானிகளாலும் சான்றோர்களாலும் உணர்வூட்டப்பட்டு, சாயி பக்தன் ஹேமாட் பந்தால் இயற்றப்பட்ட, 'ஸ்ரீ சமர்த்த சாயி சத்சரிதம்' என்னும் காவியத்தில், 'தரிசன மஹிமை' என்னும் முப்பத்தொன்றாவது அத்தியாயம் முற்றும். 

ஸ்ரீ சத்குரு ஸாயிநாதர்க்கு அர்ப்பணம் ஆகட்டும். 

சுபம் உண்டாகட்டும்.