ஷீர்டி சாயி சத்சரிதம்
முதற்பார்வையில் இந்த சந்தேகம் எவருடைய மனத்திலும் எழலாம். முதலில் பாபாவுக்கு வணக்கம் செலுத்திவிட்டு விளக்கம் அளிப்பதற்கு முயல்கிறேன்.
உலகை எவ்வாறு உத்தாரணம் செய்யலாம். தீனர்களையும் பாமரர்களையும் எப்படிக் கரை சேர்க்கலாம், என்ற நோக்கத்துடன்தான் ஞானிகள் அவதாரம் செய்கின்றனர். செய்யவேண்டியது வேறொன்றும் அவர்களுக்கு இல்லை.
ஞானிகள் சிரிப்பதும் அழுவதும் ஆடுவதும் பாடுவதும் உலகியல் நாட்டியம். இதுவே இங்கே சாரம்.
முனிவர்கள் பூரண ஞானிகள்; எல்லா சங்கல்பங்களும் நிறைவேறியவர்கள். ஆயினும், உலகமக்களை உய்விப்பதற்காகக் கர்ம மார்க்கத்தில் (செயல் புரிய) உந்தப்படுகின்றனர்.
1918 ஆம் ஆண்டு நடந்த நிர்ணயத்திற்கு 32 ஆண்டுகளுக்கு முன்னரே சமாதி நடந்துவிட்டிருக்கும். ஆனால், மகல்சாபதியின் மிக்கது தெளிவான சித்தம் அந்த அமங்கல நிகழ்ச்சியை நடக்காமல் தடுத்து நிறுத்திவிட்டது.
அந்த அமங்கல நிகழ்ச்சி தடுத்து நிறுத்தப்பட்டிருக்கவிட்டால், மக்கள் எங்கனம் சாயியின் நலந்தரும் கூட்டுறவை அனுபவித்திருப்பர்? அந்தக் கெட்டவேளையின் விளைவாக இன்றைக்கு 43 ஆண்டுகளுக்கு முன்பாகவே பாபா நம்மிடமிருந்து பிரிந்துவிட்டிருப்பார்.
அன்று மார்கழி மாதத்துப் பௌர்ணமி நாள். பாபா ஆஸ்துமா நோயினால் அவதிப்பட்டுக்கொண்டிருந்தார். தேகத்தின் வேதனையை சகித்துக்கொள்வதற்காக ஆத்மாவை பாபா பிரம்மாண்டத்தில் வைத்தார் (நிர்விகல்ப சமாதி நிலை).
பாபா எல்லாரிடமும் சொல்லியிருந்தார், "நான் இப்பொழுதிலிருந்து மூன்று நாள்களுக்கு என்னுடைய பிராணனை பிரம்மாண்டத்தில் வைக்கப்போகிறேன். என்னை எழுப்ப முயலாதீர்".
சபாமண்டபத்தின் ஒரு மூலையை விரலால் சுட்டிகாட்டிச் சொன்னார், "அங்கு சமாதிக்குழி தோண்டி, என்னை அவ்விடத்தில் வைத்துவிடுங்கள்".
தாமே மகால்சாபதியிடம் அழுத்திருத்தமாகச் சொன்னார், "மூன்று நாள்கள்வரை என்னைப் பிரிந்துவிடாதீர்; சிரத்தை தவறாதீர்.-
"அந்த இடத்தை சமாதியென்று அடையாளம் காட்ட இரண்டு கொடிகளை ஏற்றும்". இவ்வாறு கூறியபடியே பாபா பிராணனை பிரமாண்டத்தில் வைத்தார்.
திடீரென்று ஏற்பட்ட மயக்கத்தால் தேகம் அசைவற்றுக் கீழே விழுந்தது. மகால்சாபதி பாபாவின் தலையைத் தம் மடியில் ஏந்திக்கொண்டார். இதர மக்கள் அனைவரும் ஆசையைத் துறந்தனர். (நம்பிக்கை இழந்தனர்.)
இது இரவு நேரத்தில் நிகழ்ந்தது. அப்பொழுது மணி பத்து. 'அய்யகோ! இதென்ன திடீரென்று வந்த பெருந்துன்பம்!' என்று நினைத்து மக்கள் ஸ்தம்பித்துப் (செயலிழந்து) போயினர்.