valam tharum vallal

valam tharum vallal
shri shird sai baba

Thursday, 19 October 2017

ஷீர்டி சாயி சத்சரிதம்

எவ்வளவு துர்நாற்றம் அடித்தாலும், எத்தனை சிறிய நீர்நிலையாக இருந்தாலும், ஒரு பன்றிக்கு அதுவே சொர்க்கம் என்பதில் சந்தேகம் ஏதும் உண்டோ?

ஜீவாத்மாவுக்கும் கிளிக்கும் ஓர் ஒற்றுமையுண்டு; இரண்டுமே சிறைப்பட்டிருக்கின்றன. ஒன்று மனித உடலில்; மற்றொன்று கூண்டில். சுதந்திரத்தை இழந்தபோதிலும் கிளிக்கு கொண்டே சொர்க்கம்!

சுதந்திரத்தின் குதூகலம் அறியாத கிணற்றுத் தவளையைப் போல், கிளி தன கூண்டிலேயே எல்லா சுகங்களையும் காண்கிறது; ஆசைகள் நிரம்பிய ஜீவாத்மாவும் அவ்வாறே.

ஆஹா, என்னுடைய கூண்டு எவ்வளவு அழகாக இருக்கிறது! தங்கத்தாலான குறுக்குத்தண்டிலிருந்து இங்குமங்கும் சிறகடிப்பது எவ்வளவு ஆனந்தம்! தலைகீழாக தூங்கினாலும் கால் நழுவி விழுந்துவிடுவோமோ என்ற பயம் இல்லையே!

இக்கூண்டில் இருந்து வெளியேறினால், என்னுடைய சுகங்கள் அனைத்தையும் இழப்பேன். அது, தன்னுடைய சுகத்தைத் தானே அழித்துக் கொள்ளும் செய்கையாகிவிடும்! மாதுளம் முத்துக்களோ சுவையான மிளகாய்ப் பழமோ கிடைக்காது.

ஆயினும், நேரம் வரும்போது, அன்பாகத் தட்டிக்கொடுத்து கண்களுக்கு ஞானமெனும் மையை இட்டு சுதந்திரத்தின் உல்லாசத்தை உணர வைக்கும் அற்புதம் நிகழ்கிறது.

அன்பான தட்டு, (கையால் தொட்டு குரு அளிக்கும் தீட்சை) கிளியின் இயல்பான சுதந்திரத்தை உணர்வை எழுப்பி விடுவதால் கிளி பறந்தோடி விடுகிறது. திறந்த கண்ணோட்டத்துடன் சுதந்திரமாக வானமெங்கும் சிறகடித்து சந்தோஷமாக பறக்கிறது. அதைத் தடுத்து நிறுத்த யாரால் முடியும்?

இவ்வுலகமே கிளியை வா, வா என்றழைக்கிறது. பழத்தோப்புகளில் மாதுளையும் கொய்யாவையும் வயிறு புடைக்கும் வரை தின்னலாம். எல்லையற்ற வானில் எங்கும் பறந்து திரியலாம். புதிதாக கண்டெடுத்த சுதந்திரத்தை அமோகமாக அனுபவிக்கலாம்.

ஜீவாத்மாவின் நிலையம் இதுவே! இறைவனின் கருணையால் ஒரு குரு கிடைத்தவுடன் பந்தங்களில் இருந்து விடுபடுவது மட்டும் அல்லாமல் சுதந்திரத்தின் முக்தியையும் அனுபவிக்கிறான்.

கதை கேட்கும் அவதான சீலர்களே! (கவனத்துடன் பின் தொடரும் நற்குணவான்களே) சுத்தமான பிரேமையின் ரசமான ஒரு கதையை முழு கவனத்துடன் இப்பொழுது கேட்பீர்களா?

கடந்த அத்தியாயத்தில், சாமாவையும் உடன் சேர்த்து மிரீகரைச் சிதலீக்கு அனுப்பிய சமத்காரத்தைப் (திறமை மிக்க செயலைப்) பார்த்தீர்கள்.

நடக்கப் போவதை முன்கூட்டியே அறிந்து, நீளமான ஆசாமியால் (பாம்பால்) நேரக்கூடிய ஆபத்தைப் பற்றிச் சரியான நேரத்தில் மிரீகருக்கு எச்சரிக்கை விடுத்தார். 


Thursday, 12 October 2017

ஷீர்டி சாயி சத்சரிதம்

எந்த ஞானியையும் ஜாதியை வைத்தோ, உணவுப் பழக்க வழக்கங்களாலோ, மற்ற நடைமுறைச் செயல்களாலோ, எடை போட முடியாது. ஞானிகளுடைய நிலைமை இதற்கெல்லாம் அப்பாற்பட்டது.

ஜடமான ஜீவர்களை கைதூக்கி விடுவதற்காகப் பரோபகாரமே உருவான ஞானிகள் அவதாரம் செய்கின்றனர். இது, எல்லாம் வல்ல இறைவனின் கருணையால் நிகழ்கிறது.

பூர்வஜென்ம புண்ணியம் இருந்தால்தான் ஞானிகளின் சரித்திரத்தைக் கேட்கவேண்டுமென்ற ஆவல் எழும். அதன் விளைவாக, மகிழ்ச்சியும் சுகமும் லாபமாகும்.

ஒரு சமயம் யோகாப்பியாசம் செய்பவர் ஒருவர் நானா சாந்தோர்கருடன் மசூதிக்கு வந்தார்.

அவர் பதஞ்சலி முனிவர் அருளிய யோகசாஸ்திரத்தை நன்கு கற்றவர். ஆயினும் அவருடைய அனுபவம் என்னவோ விசித்திரமாக இருந்தது. எவ்வளவு முயற்சி செய்த போதிலும், ஒரு கணமேனும் சமாதி அனுபவம் கிட்டவில்லை!

"யோகீச்வரரான சாயி எனக்கு அருள் செய்தால், தடங்கல்கள் விலகிக் கட்டாயம் சமாதி அனுபவம் கிட்டும்".

இந்த நோக்கத்துடன் அவர் சாயி தரிசனத்திற்கு வந்தார். அந்த நேரத்தில், பாபா சோளரொட்டியுடன் வெங்காயத்தை சேர்த்துச் சாப்பிட்டுக் கொண்டிருந்ததை பார்த்தார்.

பழைய சோளரொட்டியையும் காய்ந்துபோன வெங்காயத்தையும் பாபா வாய்க்கருகில் கொண்டுபோனபோது, 'இவர் எப்படி என்னுடைய பிரச்சினையை நிவிர்த்தி செய்யப் போகிறார்' என்ற பெரியதொரு சந்தேகம் அவர் மனதை தாக்கியது.

இந்த விகற்பமான சிந்தனை யோகியின் மனத்தெழுந்தபோது, அந்தர் ஞானியான (பிறர் மனம் அறியும் ஞானியான) சாயி மஹராஜ், "நானா! வெங்காயத்தை ஜீரணம் செய்ய முடிந்தவனே அதனை உண்ணலாம்!"-

"ஜீரணிக்கும் சக்தியுடையவன் எனது பயமும் இல்லாமல் வெங்காயத்தை தின்னவேண்டும்!" என்று கூறினார். இதைக் கேட்ட யோகி வெட்கத்தால் தலைகுனிந்து தூய மனதுடன் பாபாவை சரணடைந்தார்.

சிறிது நேரம் கழித்து, பாபா தாம் எப்பொழுதும் தரிசனம் தரும் இடத்திற்கு வந்து அமர்ந்தவுடன் யோகம் பயில்பவர் நிர்மலமான மனதுடன் பாபாவுக்கருகில் சென்றமர்ந்தார்.

பணிவுடன் அவர் கேட்ட சந்தேகத்திற்கு பாபா திருப்திகரமாக பதில் அளித்தார். யோகம் பயில்பவர் உதீயையும் ஆசீர்வாதங்களையும் பெற்றுக்கொண்டு ஆனந்தமாக திரும்பிச் சென்றார்.

இம்மாதிரியான கதைகள் அநேகம் உண்டு. பக்தி பாவத்துடன் கேட்கப்பட்டால், துக்கமும் மோகமும் அனர்த்தமும் (கேடு, துன்பம்) நிவிர்த்தியாகும்; பக்தரின் வாழ்வு மேம்படும். 


Thursday, 5 October 2017

ஷீர்டி சாயி சத்சரிதம்

23 . பக்தர்களின்பால் லீலைகள்

ஓம் ஸ்ரீ விநாயகனே போற்றி! ஸ்ரீ சரஸ்வதியே போற்றி!

இந்த ஜீவாத்மா முக்குணங்களுக்கு அப்பாற்பட்டதே. ஆயினும், மாயையின் மோகத்தால், தான் சச்சிதானந்த சொரூபம் என்பதை மறந்து, வெறும் தேகமே என்று நினைத்துக் கொள்கிறது.

இது நேர்ந்தபின், தேஹத்தின்மீது உண்டான அபிமானத்தினால் 'நானே செயல்புரிபவன், நான் அனுபவிப்பவன்' என்ற நம்பிக்கை பெருகுகிறது. ஒன்றின் பின் ஒன்றாக தொடர்ந்து வரும் துன்பங்களால் வாழ்க்கையில் வெறுப்பேற்பட்டு தப்பிக்க வழி தெரியாமல் விழிக்கிறது.

குருபாத பக்தியே இந்த ஈனமான நிலையிலிருந்து விடுபடும் மார்க்கமாகும். மாபெரும் நடிகராகிய ஸ்ரீரங்கசாயி பக்தர்களைத் தமது லீலையெனும் அரங்கத்துள் இழுக்கிறார்.

நாம் சாயியை ஓர் அவதார புருஷராக ஏற்றுக்கொள்ளலாம். ஏனெனில், அவரிடம் அவதார புருஷருக்குரிய லட்சணங்கள் அனைத்தும் உண்டு. ஆனால், அவரோ, 'நான் அல்லாஹ்வின் உடுப்புத் தலைப்பில் கட்டப்பட்டவன்' என்றே சொல்லிக்கொண்டார்.

அவதார புருஷராக இருந்தபோதிலும் , உலக நியமங்களுக்கு கட்டுப்பட்டே வாழ்க்கை நடத்தினார்.

அவர் யாரோடும் எவ்விதத்திலும் போட்டியிட்டதேயில்லை; மற்றவர்களையும் போட்டியிட ஊக்குவித்ததில்லை. இவ்வுலகில் இயங்கும் இயங்காப் பொருள்களனைத்திலும் இறைவனைக் கண்ட அவர், அடக்கமும் பணிவும் உருவானவர்.

அவர் யாரையும் இகழ்ந்து பேசியதில்லை; எவரையும் துச்சமாக கருதியதில்லை. எல்லா உயிர்களிலும் இப் பிரபஞ்சத்தின் உணர்வான நாராயணனையே கண்டார்.

'நான் இறைவன்' என்று அவர் ஒருபொழுதும் சொன்னதில்லை. 'நான் இறைவனுடைய அடிமை' என்றும் 'நான் இறைவனை எப்பொழுதும் மனத்தில் இருத்திக் கொண்டிருக்கும் ஏழை' என்றுமே சொல்லிக்கொண்டார். 'அல்லாமலிக், அல்லா மாலிக்' (அல்லாவே எஜமானர்) என்று சதா ஜபம் செய்து கொண்டிருந்தார். 


Thursday, 21 September 2017

ஷீர்டி சாயி சத்சரிதம்

ஒருவர் கையில் புகையிலையைக் கசக்கிக்கொண்டு இருந்தார். இன்னொருவர் பாபாவின் புகை பிடிக்கும் மண் குழாயை (சில்லிம்மை) நிரப்பிக் கொண்டிருந்தார். சிலர் பாபாவின் கைகளையும் பாதங்களையும் பிடித்துவிட்டுக் கொண்டிருந்தனர். இந்த ரீதியில் சேவை நடந்துகொண்டிருந்தது.

பாபா எல்லாருடைய என்ன ஓட்டங்களையும் அறிந்திருந்தார். மெல்லிய குரலில் ஒரு கேள்வி கேட்டார், 'வாடாவில் நேற்றிரவு என்ன வாதப்பிரதிவாதம் நடந்தது?'

நான் என்ன நடந்தது என்பதை நடந்தவிதமாகவே எடுத்துச் சொன்னேன். அம்மாதிரியான சூழ்நிலையில் பாம்பைக் கொல்லலாமா, கொல்லக் கூடாதா என்றும் கேட்டேன்.

பாபாவிடம் ஒரே பதில்தான் இருந்தது. பாம்பானாலும், தேளானாலும் எல்லா உயிர்களிலும் இறைவன் உறைகின்றான். ஆகவே, எல்லா உயிர்களிடத்தும் பிரேமை உடையவர்களாக இருங்கள்.

இறைவனே இவ்வுலகின் சூத்ரதாரி; அவனுடைய ஆணைப்படியே அனைத்துயிர்களும் செயல்படுகின்றன. பாம்பாயினும் சரி, அவனுடைய ஆணையை மீறிச் செயல்படாது.

ஆகவே, எல்லா உயிர்களிடத்தும் பிரேமை செலுத்துங்கள்; தயை புரியுங்கள். சாகசச் செயல்களை விடுத்துப் பொறுமையையும் சகிப்புத்தன்மையையும் நாடுங்கள். ஸ்ரீஹரியே அனைவரையும் காப்பாற்றுபவன்.

பாபா சம்பந்தப்பட்ட எண்ணற்ற கதைகளில் நான் எத்தனை கதைகளை சொல்வேன்? ஆகவே, கதை கேட்பவர்கள் எல்லாக் கதைகளில் இருந்தும் சாரத்தையும் தத்துவத்தையும் எடுத்துக் கொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.

அடுத்த அத்தியாயம் மேலும் சுவாரசியமானது. பாபாவின் சிறந்த பக்தரான தீட்சிதர் பாபாவின் ஆணைப்படி ஓர் ஆட்டை வெட்ட வேண்டிய இக்கட்டை சந்திக்க வேண்டியிருந்தது. தீட்சிதருடைய பக்தியையும் குருவாக்கிய பரிபாலனத்தையும் எடுத்துக்காட்டும் கதை அது.

எல்லாருக்கும் க்ஷேமம் உண்டாகட்டும்! ஞானிகளாலும் சான்றோர்களால் உணர்வூட்டப்பட்டு, சாயி பக்தன் ஹேமாட் பந்தால் இயற்றப்பட்ட, 'ஸ்ரீ சமர்த்த சாயி சத் சரித்திரம்' என்னும் காவியத்தில், 'மரண விபத்துக்களை நீக்கி அருள் செய்தது' என்னும் இருபத்திரண்டாம் அத்தியாயம் முற்றும்.

                    ஸ்ரீ சத் குரு சாயி நாதருக்கு அர்ப்பணம் ஆகட்டும்.

                                             சுபம் உண்டாகட்டும்.


Thursday, 14 September 2017

ஷீர்டி சாயி சத்சரிதம்

சுவரில் இறங்கத் துரிதமான முயற்சியொன்று செய்திருந்தால், நேராக என்னுடைய படுக்கைக்குள் புகுந்து கொண்டிருக்கும். எனக்குப் பெரும் இக்கட்டை விளைவித்திருக்கும்.

அடிகள் உடலின் மர்மப் பகுதிகளில் விழாது தப்பியிருந்தால், பாம்பு வஞ்சம் வைத்துக்கொண்டு, பிற்பாடு பெரும் சேதத்தை விளைவித்திருக்கும். அது எங்கே பதுங்கிக்கொண்டிருக்கிறது. இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்திக்கொண்டு பாம்பு தப்பித்துக்கொண்டது.

அதற்கு ஆயுள் முடியவில்லை; எங்களுக்கும் தெய்வபலம் இருந்தது. நேரம் மிகக் கெட்டதாக இருந்தபோதிலும், பாபாவால் காப்பாற்றப் பட்டோம். தானும் பயப்படாது, எங்களையும் பயமுறுத்தாது, இருதரப்பினரும் நிம்மதி பெருமூச்சு விடும் வகையில் பாம்பு துரிதமாக, வந்த வழியே நழுவி விட்டது.

முக்தாராம், 'ஐயோ பாவம் பாம்பு! பிழைத்தது விசேஷம்; துவாரத்தில் இருந்து நழுவி ஓடியிராவிட்டால் உயிர் இழந்திருக்கும்' என்று  சொல்லிக்கொண்டே எழுந்தார்.

முக்தாராமினுடைய தயை மிகுந்த நோக்கு என் மனத்தை உறுத்தியது. துஷ்ட ஜந்துவின் மேல் என்ன கருணை வேண்டிக் கிடக்கிறது? இப்படியிருந்தால் உலகம் எவ்வாறு இயங்கும்?

முக்தாராம் என்றோ ஒருநாள்தான் இங்கு வருகிறார். நாமோ தினமும் காலையிலும் மாலையிலும் இங்கேதான் உட்காருகிறோம். என்னுடைய  படுக்கை பாம்பு வந்த ஜன்னலுக்கருகில் இருந்தது. ஆகவே, நான் முக்தாராம் சொன்னதை விரும்பவில்லை.

அவர் தம்முடைய வாதத்தை முன்வைத்தார்; நான் எதிர்வாதம் செய்தேன். வாக்குவாதம் சூடேறியது; முடிவொன்றையும் காணமுடியவில்லை.

'பாம்புகள் ஒருகணங்கூடத் தாமதியாது கொல்லப்பட வேண்டும்' என்று ஒருவர் சொன்னார். 'நிரபராதியான ஜீவனை எதற்காக வெறுக்க வேண்டும்?' என்று மற்றவர் கேட்டார்.

ஒரு கட்சி முக்தாராமின் வாதத்தைக் கோபத்துடனும் வெறுப்புடனும் எதிர்த்தது. ஒரு கட்சி என்னுடைய வாதத்தை எதிர்த்தது. பரஸ்பரம் வாதபிரதிவாதம் பலத்தது; முடிவேதும் ஏற்படவில்லை.

முக்தாரம் மாடியில் இருந்து கீழே இறங்கிப் போனார். நான் பாம்பு தோன்றிய துவாரத்தை அடைத்துவிட்டு இடத்தை மாற்றி படுக்கையை விரித்தேன்.

தூக்கம் என் கண்களை செருகியது; மற்றவர்களும் தூங்கப் போயினர். நான் கொட்டாவி விட ஆரம்பித்தேன். விவாதம் தானாகவே முடிவுற்றது.

இரவு கழிந்தது; பொழுது புலர்ந்தது. நாங்கள் காலைக்கடன்களை முடித்தோம். பாபாவும் லெண்டியிலிருந்து திரும்பினார். மசூதியில் மக்கள் நிறைந்திருந்தனர்.

தினமும் காலையில் மசூதிக்குப் போகும் நேரத்தில் நான் போய்ச் சேர்ந்தேன். முக்தாராம் மற்றவர்களும் வந்து அவரவர்கள் இடங்களில் உட்கார்ந்தனர். 


Thursday, 7 September 2017

ஷீர்டி சாயி சத்சரிதம்

ஸ்ரீ ராமருடைய கதை மேலும் மேலும் சுவாரசியமடைந்து, பிரவசனம் செய்பவரும் கதை கேட்பவர்களும் கதையில் மூழ்கிப்போயிருந்த நேரத்தில், இந்த துஷ்ட ஐந்து அவ்வானந்தமான சூழ்நிலையை பங்கப்படுத்தியிருக்கும்.

ஆயினும், ஸ்ரீராம கதையின் மகிமையின் எதிரில் விக்கினங்கள் சக்தியிழந்துவிடும். துஷ்ட உயிரினங்களும் சுபாவத்தை மறந்து கதையை ரசிக்கும்.

துஷ்ட ஜந்துவின் தற்காலிகமான நற்குணத்தை நான் நம்பாத தயாராக இல்லை. நிலைமை கட்டுக்கடங்காமல் போவதற்கு முன், தேளை லாவகமாக எடுத்து, வெளியே வீசிவிடவேண்டும் என்று என் புத்தியில் தோன்றியது ஸ்ரீராமனின் கிருபையே.

ஆகவே, மிக ஜாக்கிரதையாக என்னுடைய மேல்துண்டின் இரண்டு நுனிகளையும் ஒன்று சேர்த்துத் தேளை துண்டிற்குள் சுருட்டித் தோட்டத்திற்கு எடுத்துக்கொண்டு போய்த் துண்டைப் பிரித்துத் தேளை விடுதலை செய்தேன்.

தேள் பயங்கரமான பிராணி; எதிர்பாராத வேளையில் தன சுபாவத்தை காட்டிவிடும். இவ்விதமாக நான் பயந்த போதிலும், இது விஷயமாக பாபாவின் ஆணை உறுதியாக இருந்தது. ஆகவே, நான் எப்படித் தேளைக் கொல்வேன்!

செவிமடுப்பவர்கள் இங்கு, 'தேள் கொல்லப்பட வேண்டிய விஷ ஜந்து தானே? அது கொட்டினால் சுகமாகவா இருக்கும்? ஏன் அதைக் கொல்லக் கூடாது ?' என்ற கேள்விகளை எழுப்பலாம்.

பாம்புகளையும் தேள்களையும் மற்ற நச்சு உயிரினங்களையும் யாரும் அலட்சியம் செய்யமாட்டார்கள். பாபா ஏன் அவற்றைத் தொந்தரவு செய்யாமல் விட்டுவிடும்படி சொல்கிறார்?

கதை கேட்பவர்கள் எழுப்பும் இந்த சந்தேகம் நியாயமானதே. எனக்கே இந்த சந்தேகம் இருந்தது. ஏற்கெனெவே இம்மாதிரியானதொரு சந்தர்ப்பத்தில் பாபா தெரிவித்த கருத்தைக் கேளுங்கள்.

அது இதைவிடக் கடினமான கேள்வியாகும். ஒரு சமயம் தீக்ஷிதர் வாடா (சத்திரம்) மாடியில் ஜன்னலருகில் பயங்கரமான பாம்பொன்று காணப்பட்டது.

ஜன்னல் சட்டத்திற்கு கீழேயிருந்த துவாரத்தின் வழியாக அறைக்குள் புகுந்திருக்கலாம். விளக்கொளி கண்ணைக் கூசியதால் சுருட்டிக்கொண்டு அங்கேயே உட்கார்ந்திருந்தது.

விளக்கின் பிரகாசத்தால் திகைத்துப் போயிருந்த பாம்பு, மனித நடமாட்டத்தை கண்டு அஞ்சியது. கூச்சலையும் குழப்பத்தையும் கண்டு திடுக்கிட்டுச் சிறிது நேரம் ஆடாமல் அசையாமல் இருந்தது.

முன்னுக்கும் நகரவில்லை; பின்னுக்கும் நகரவில்லை; தலையை மட்டும் மேலும் கீழும் ஆடியது. இதனால், பாம்பை எப்படிக் கொல்வது என்பது பற்றிய கலவரம் அங்கு ஏற்பட்டது.

சிலர் குச்சிகளையும் சிலர் கழிகளையும் எடுத்துக்கொண்டு விரைந்தனர். பாம்பு இருந்த இடம் குறுகலாகவும் இடக்கு முடக்காகவும் இருந்ததால், பாம்பை அடிக்க முயன்றவர்கள் மூளையைக் கசக்கினர்.


Thursday, 24 August 2017

ஷீர்டி சாயி சத்சரிதம்

தீட்சிதர் பாராயணம் செய்யும்போது யாராவது கேட்கவேண்டும். சாயியினுடைய கிருபையினால் எனக்கு பாகவதத்தை கேட்கும் நல்வாய்ப்புக் கிடைத்தது. அது எனக்கு சாயி செய்த் பெரிய உபகாரம்.

நான் பகலிலும் இரவிலும் இப் புனிதமான கதைகளைக் கேட்கப் போனேன். நான் சென்ற சமயம் அதிருஷ்டவசமாக ஒரு தொடர் ஆரம்பமாகியது; கேட்டுத் தூய்மையடைந்தேன்.

ஒருநாள் இரவு, அந்தப் பரமவித்திரமான கதையை கேட்டுக்கொண்டிருந்தபோது  சிறியதானாலும் விசித்திரமான சம்பவமொன்று நிகழ்ந்தது; கதை கேட்பார்களை! இக் கதையை கேளுங்கள்.

நான் என்ன செய்ய முடியும்? ஒரு கதையை விவரித்துக்கொண்டிருக்கும்போதே நடுவில் மற்றொரு கதை என் மனத்தில் தோன்றுகிறது. கேட்பதற்கு அருகதையுள்ள கதையென்று தெரிந்த பிறகும், நான் எவ்வாறு அதை அசட்டை செய்ய முடியும்?

ராமாயணத்திலிருந்து ஒரு சுவாரசியமான கதை நடந்துகொண்டிருந்தது. ஹனுமார் தம் தாயாரிடம் இருந்து ஸ்ரீராமர் யார் என்று தெரிந்துகொண்டிருந்த போதிலும், தம் சுவாமியின் சக்தியைப் பரீட்ச்சை செய்து பார்க்க முயற்சி செய்து பெருந்துன்பத்தில் மாட்டிக்கொண்டார்.

ஸ்ரீராமனுடைய அம்பின் இறகுகள் எழுப்பிய காற்று அவரை வானத்தில் புரட்டி உருட்டியதில் திக்குமுக்காடிப் போய் மூச்சுத் திணறினார். அவருடைய தகப்பனாரான வாயு பகவான் அந்த சமயத்தில் அங்கு வந்து சேர்ந்தார்.

தகப்பனாரின் புத்திமதியின்படி ஹனுமார் ஸ்ரீராமரை சரணடைந்தார். கதையின் இந்தப் பகுதி விவரிக்கப் பட்டுக்கொண்டிருந்தபோது என்ன வினோதம் நடந்ததென்று பாருங்கள்.

கேட்பவர்களுடைய கவனம் கதையில் மூழ்கிப் போயிருந்தபோது  பேராபத்தின் உருவமான தேள் ஒன்று யாருக்கும் தெரியாமல் அங்கே தோன்றியது.

தேளுக்கென்ன கதையில் அவ்வளவு ஈடுபாடு! எனக்குச் சற்றும் தெரியாமலேயே என் தோளின்மீது குதித்து அங்கே பத்திரமாக உட்கார்ந்துகொண்டு கதையின் சுவையை அனுபவித்தது.

கதை கேட்கும்போது பாபாவின் பாதுகாப்பை அனுபவித்தேன்; நடந்தது ஒன்றுமே எனக்குத் தெரியாது. ஹரிகதையை கவனமாகக் கேட்பவனை ஹரியே ரட்சிக்கிறார் அல்லரோ!

யதேச்சையாக என் பார்வை அப்பக்கம் திரும்பியது. என்னுடைய வலத்தோளின் மீதிருந்த மேல்துண்டின்மீது பயங்கரமான தேள் ஒன்று சுகமாக அமர்ந்து கொண்டிருந்தது.

தம்முடைய ஆசனத்தில் உட்கார்ந்துகொண்டு கவனமாக கதை கேட்பவரைப் போல் ஆடாது அசையாது அமைதியாக உட்கார்ந்துகொண்டிருந்தது.

வாலைச் சிறிது  அசைத்திருந்தாலும், சுபாவத்தினால் என்னைக் கொட்டிப் பெருந்துன்பம் அளித்திருக்கும். 


Thursday, 17 August 2017

ஷீர்டி சாயி சத்சரிதம்

இப் பிரபஞ்சமே இறைவனால் நிர்வகிக்கப்படுகிறது. இறைவனுடைய ஆணையிலிருந்து சுதந்திரம் பெற்றவர் எவருமே இல்லை. இது பாபாவின் அனுபவ ஞானம்; ஆனால், நம்மையோ இழிவான அஹங்காரம் விடுவதாக இல்லை!

குளத்தில் விழுந்துவிட்ட தேள், வெளிவருவதற்கு உருண்டு புரண்டு முயற்சி செய்தும் பயனில்லாமல் மூழ்கிப் போகிறது. இதை பார்த்த ஒருவர், 'நீ மற்றவைகளைச் சித்திரவதை செய்கிறாயே, அது போல்தான் இது' என்று சொல்லிக் கைதட்டி மகிழ்கிறார்.

கைதட்டல் சத்தத்தைக் கேட்ட ஒருவர் குளத்திற்கு ஓடிவந்து பலதடவை மூழ்கியும் மிதந்தும் போராடிக் கொண்டிருக்கும் தேளைப் பார்க்கிறார்; கருணையால் உந்தப்படுகிறார்.

தேளின் அருகில் சென்று கட்டை விரலாலும் ஆட்காட்டி  விரலாலும் கெட்டியாகப் பிடித்து தூக்குகிறார். தேள் தன்னுடைய சுபாவத்தின்படி அவரை எதிர்த்து, கண்டு விரலைக் கொட்டுகிறது.

நம்முடைய ஞானமெல்லாம் எதற்கு உபயோகம்?  நாம் முழுக்க முழுக்க ஒரு மஹாசக்தியின் ஆதிக்கத்தில் வாழ்கிறோம். புத்தியைக் கொடுப்பவன் நாராயணன்; அவனுடைய சித்தம் எவ்வாறோ அவ்வாறே எல்லாம் நடக்கும்.

பலபேர்களுக்குப் பலவிதமான அனுபவங்கள். நானும் என்னுடைய அனுபவத்தை இங்கு விவரிக்கிறேன். சாயியின் திருவாய்மொழிக்கு மரியாதை அளித்து பரிபூரணமாக நம்பவேண்டும். ஏனெனில், அம்மாதிரியான உறுதியான விசுவாசத்தினால்தான் அவருடைய வைபவத்தை அனுபவிக்க முடியும்.

காகா சாஹேப் தீட்சிதர் தினமும் பகலில் ஏகநாத பாகவத்தையும் இரவில் பாவார்த்த இராமாயணத்தையும் வாசித்துவந்தார்.

அவர், இறைவனுக்கு மலர்கள் சமர்ப்பணம் செய்வதை மறந்திருக்கலாம்; நீராடுவதற்கும் மறந்திருக்கலாம்; எத்தனையோ நியம நிஷ்டைகளையும் மறந்து போயிருக்கலாம்; இவ்விரண்டு புராண நூல்களை பாராயணம் செய்யும் நேரத்தை அவர் என்றுமே மறந்ததில்லை.

இரண்டுமே ஏகநாதர் அருளிய நூல்கள்; ஆன்மீகத்தின் சாரம். இந்தப் பாராயணம் தீட்சிதருக்கு பாபா செய்த அனுக்கிரஹம்.

ஆத்மஞானம், வைராக்கியம், வையத்துள் வாழ்வாங்கு வாழும் முறைகள் இவை மூன்றும் இவ்விரண்டு நூல்களிலும் திவ்விய முக்குண ஜோதியாகப் பிரகாசிக்கின்றன.

எந்த பாக்கியவானுடைய உதடுகளுக்கு இந்த தேவாமிருதத்தையொத்த ஆத்ம போதனை வருகிறதோ, அவர் மூன்று விதமான தாபங்களையும் உடனே கடந்துவிடுவார்; மோட்சம் அவர் பாதங்களை நாடும். 


Friday, 11 August 2017

ஷீர்டி சாயி சத்சரிதம்

பாபாவின் இந்த லீலையைப் பார்த்தவுடனே அமீரின் மனதில், "பாம்பு ஒன்று நுழைந்திருக்க வேண்டும், அதை பாபா பார்த்துவிட்டார் போலிருக்கிறது' என்று தோன்றியது.

அமீருக்கு பாபாவிடம் நிறைய அனுபவம் இருந்தது; அவருடைய சுபாவமும் பேச்சின் பாணியும் தெரிந்திருந்தன. ஆகவே, அவருக்கு எல்லாம் புரிந்தது.

பக்தர்களுக்கு ஆபத்து ஏதும் நெருங்குவதாகத் தெரிந்தால், பாபா அவ்வாபத்து தம்மைச் சூழ்ந்திருப்பதாக சொல்வார். அமீருக்கு இந்த சங்கேத (குறிப்பால் உணர்த்தும்) பாஷை தெரிந்திருந்தது. ஆகவே, அவர் விஷயம் என்னவென்று அனுமானித்தார்.

திடீரென்று தம்முடைய படுக்கையினருகே ஏதோ நெளிவதை பார்த்தார். 'அப்துல்! விளக்கு, அந்த விளைக்கை கொண்டு வா சீக்கிரம்' என்று அமீர் கத்தினார்.

விளக்குக் கொண்டுவரப்பட்ட உடனே ஒரு பெரிய பாம்பு சுருட்டிக்கொண்டு படுத்திருந்ததை பார்த்தார். விளக்கொளியால் திகைத்துப்போன பாம்பு, தலையை மேலும் கீழும் ஆட்டியது.

பாம்பு அங்கே கூடியிருந்தவர்களால் சாந்தியளிக்கப்பட்டது. 'பக்தர்களை எச்சரிப்பதில் என்ன வினோதமான செயல்முறை!' என்று சொல்லிக்கொண்டே அங்கிருந்தவர்கள் பாபா செய்த மகத்தான உபகாரத்தை போற்றி நன்றி செலுத்தினார்.

பிசாசு என்ன, விளக்கென்ன! இதெல்லாம் தம் பக்தர்களுக்கு நேர்விருக்கும் ஆபத்திலிருந்து அவர்களைக் காப்பாற்றுவதற்காக பாபா செய்த சமர்த்தியான செயல்.

பாபாவினுடைய வாழ்க்கைச் சரித்திரத்தில் பாம்புகளை பற்றிய கணக்கற்ற நிகழ்ச்சிகளை எடுத்துச் சொல்லலாம். விரிவுக்கு அஞ்சி அவற்றில் சிலவே இங்கே சுருக்கமாக சொல்லப்பட்டிருக்கின்றன.

'பாம்புகளும் தேள்களும் நாராயணனே ' என்கிறார் ஞானி துக்காராம். 'ஆனால், அவற்றை தூரத்தில் இருந்து வணங்க வேண்டும். இதுவும் அவர் கூறியதே!

அவர் மேலும் கூறியதாவது, 'அவை அதர்மச் செயல்களில் ஈடுபட்டவை. ஆகவே, அவற்றை காலணிகளால்தாம் கவனிக்க வேண்டும்!' இதற்கு அர்த்தம் என்னவென்றால் பாம்புகளையும் தேள்களையும் எவ்வாறு நடத்த வேண்டுமென்பது நம் எவருக்குமே தெளிவாகத் தெரிவதில்லை என்பதே.

இங்கு அறியப்பட வேண்டிய உண்மை என்னவென்றால், ஒருவருடைய சுபாவமும் வாழ்க்கை அணுகுமுறையும் எவ்வாறோ, அவ்வாறே அவருடைய செயல்களும் அமையும் என்பதே.

பாபாவோ இந்தக் கேள்விக்கு ஒரே விடைதான் வைத்திருந்தார்.  அவர் சொல்வார், "எல்லா உயிரினங்களும் சரிசமானமே; ஆகவே, அனைத்து உயிர்களிடத்தும் அஹிம்சையும் பிரமாணம்."

பாம்பானாலும் தேளானாலும் எல்லா உயிர்களினுள்ளும் இறைவன் உறைகிறார். ஆகவே, இறைவன் விருப்பப்படாது, பாம்பாலும் தேளாலும் யாருக்காவது இன்னல் விளைவிக்க முடியுமா?Thursday, 3 August 2017

ஷீர்டி சாய் சத்சரிதம்

"சுகத்தை நாடி நான் சாவடியை விடுத்தேன். ஆகவே, எனக்கு தண்டனை அளித்துவிட்டீர்கள். ஆனால், இப்பொழுதோ, இந்த ஆபத்திலிருந்து என்னை விடுவித்து ஷீர்டி கொண்டுபோய்ச் சேருங்கள்."

தருமசாலையில் பிணத்தை விட்டுவிட்டுச் சட்டெனெக் கிளம்பி இரவோடு இரவாக ஷிர்டிக்கு விரைந்தார்.

'பாபா பாபா' என்று சொல்லிக்கொண்டே, அவருடைய மன்னிப்பை வேண்டியவாறே சாவடிக்கு வந்து சேர்ந்தார். அதன் பிறகுதான் மனம் நிம்மதியடைந்தது.

அமீர் சரியான பாடம் கற்றுக்கொண்டார். அந்நாளில் இருந்து அமீர் துன்மார்க்கத்தை அறவே ஒழித்து சன்மார்க்க ஒழுக்கத்தை கடைப்பிடித்தார்.

அவருடைய நம்பிக்கையும் விசுவாசமும் குணமளித்தன. முடக்குவாத நோயில் இருந்து விடுபட்டார். வலிகள் மறைந்தன. அதற்குப் பிறகு நடந்த சம்பவமொன்றை கேளுங்கள்.

சாவடி மூன்று பாகங்களாக பிரிக்கப்பட்டிருந்தது. தென்கிழக்குப் பகுதிதான் பாபாவின் இருப்பு. அப்பகுதி நான்கு பக்கங்களிலும் மரப்பலகைகளால் தடுக்கப்பட்டிருந்தது. பாபா அங்கேதான் தூங்குவார்.

இரவு முழுவதும் விளக்குகள் எரிந்தன; பாபா விளக்கொளியில்தான் தூங்குவார். வெளியில் இருட்டில் பக்கீர்களும் பைராகிகளும் பிச்சைக்காரர்களும் அமர்ந்திருப்பர்.

அமீர் அவர்களில் ஒருவராகத்தான் நடத்தப்பட்டார். இதர மனிதர்கள் சிலரும் அங்கிருந்தனர். அவர்களும் அவ்விடத்திலேயே உறங்கினர். இவ்விதமாக, அங்கே பல மக்கள் இருந்தனர்.

பற்றற்றவரும் விசுவாசமும் நிறைந்த பக்தருமான அப்துல், பாபாவுக்குப் பின்னால் தட்டுமுட்டுச் சாமான்கள் வைக்கப்பட்டிருந்த இடத்தில, கூப்பிட்ட குரலுக்குப் பனி செய்யத் தயாராக இருந்தார்.

ஒரு சமயம் நடுராத்திரியில் பாபா திடீரென்று அப்துலை உறக்கக் கூவியழைத்து, "என்னுடைய படுக்கைக்கருகில் ஒரு பிசாசு நின்று கொண்டிருக்கிறது பார்!" என்று சொன்னார்.

திரும்பத் திரும்பக் கூவி அழைக்கவே, கையில் விளக்குடன் அப்துல் அங்கு விரைந்து வந்தார். பாபா அவரிடம் உறக்கச் சொன்னார். "அது சற்று நேரத்திற்கு முன்பு இங்கேதான் இருந்தது!"

அப்துல் சொன்னார், "எல்லா இடங்களிலும் பார்த்துவிட்டேன். என் கண்களுக்கு ஒன்றும் தெரியவில்லை." பாபா பதில் கூறினார், "கண்களை அகல விரித்து சகல இடங்களிலும் உன்னிப்பாக பார்."

அப்துல் மறுபடியும் மறுபடியும் பார்த்தார். பாபா தரையை தம்முடைய சட்காவால் (குறுந்தடியால்) தட்ட ஆரம்பித்தார். வெளியில் உறங்கி கொண்டிருந்த மக்களனைவரையும் விழித்துக்கொண்டு என்ன நடக்கிறதென்று பார்த்தனர்.

அமீர் சக்கரும், "இதென்ன இன்று இவ்வளவு கலாட்டா? எதற்காக இந்த நடுநிசியில் சட்காவால் மேலும் மேலும் தட்ட வேண்டும்?" என்று கேட்டுக் கொண்டே எழுந்தார். 


Thursday, 27 July 2017

ஷீர்டி சாயி சத்சரிதம்

சுதந்திரத்தை விரும்பிய அவர் இன்னொருவரைச் சார்ந்து வாழ்வதை எப்படி விரும்புவார்? 'ஓ, போதும், போதும், இந்த அடைபட்ட வாழ்வு' என்னும் உந்துதல் அமீர் மனத்தில் ஏற்பட்டது.

பாபாவினுடைய அனுமதியின்றித் தமக்கு நியமிக்கப்பட்ட இடத்தைத் துறந்துவிட்டு புறப்பட்டார். கோபர்காங்கவிற்குச் சென்று, ஒரு தருமசத்திரத்தில் தாங்கினார்.

அங்கு விளைந்த அற்புதத்தை கேளுங்கள். அங்கு மரண தாகத்தினால் தவித்துக் கொண்டு இறக்கும் தருவாயில் இருந்த பக்கீர் ஒருவர் அமீர் சக்கரை குடிப்பதற்கு தண்ணீர் கொடுக்கும்படி வேண்டினார்.

அமீர் தயை கூர்ந்து அவருக்குத் தண்ணீர் கொடுத்தார். தண்ணீர் குடித்து முடித்தவுடன் பக்கீரின் உடல் அங்கேயே அப்பொழுதே உயிர் பிரிந்து தரையில் சாய்ந்தது.

பக்கீர் இறந்துவிட்டார். வேறு யாருமே அங்கில்லை; மேலும் அது இரவு நேரம்; அமீர் கலவரமடைந்தார்.

'பொழுது விடிந்தால் இந்த திடீர் மரணத்தைப் பற்றி விசாரணை நடக்கும்; சிலர் கைது செய்யப்படுவர்; சர்க்கார் விசாரணை நடக்கும்.-

'முழுமையான உண்மையைச் சொன்னாலும், உடனே யார் அதை நிர்த்தாரணம் செய்யப்போகிறார்கள்? சாட்சிகளையும் அவர்கள் சொல்லும் சாட்சியங்களையும் பொறுத்தே தீர்ப்பு அமையும். சட்டத்தின் இயக்கம் அவ்வாறே.-

'அந்தப் பக்கீருக்கு நான்தான் குடிக்க நீர் கொடுத்தேன். அவரோ திடீரென்று உயிரிழந்துவிட்டார்.  இந்த சத்தியத்தை சொல்லப்போனால் எக்கச்சக்கமாக மாட்டிக்கொள்வேன். -

'நேரிடையாக சம்பந்தப்பட்டவன் என்று தெரிந்தவுடன் என்னை முதலில் கைது செய்வார்கள். மரணத்திற்கு உண்மையான காரணம் கண்டுபிடிக்கப்பட்ட பிறகே, நான் நிரபராதி என விடுவிக்கப்படுவேன். -

'காரணம் கண்டுபிடிக்கப்படும் வரையிலான இடைக்காலம், சகிக்க முடியாத துன்பத்தை அழித்துவிடும்.' இவ்வாறு நினைத்து, கணமும் தாமதியாது வந்த வழியே திரும்பிவிட வேண்டுமென்று அமீர் முடிவு செய்தார்.

இவ்வாறு முடிவு செய்து இரவோடு இரவாக அவ்விடத்தை விட்டகன்றார். வழியில் தம்மை யாராவது பார்த்துவிடப் போகிறார்களே  என பயந்துகொண்டு அடிக்கடி திரும்பிப் பார்த்துக்கொண்டே நடையை காட்டினார். -

எப்படிச் சாவடிக்குப் போய்ச் சேருவது? அதுவரை நிம்மதி ஏது? மனம் கலங்கியவாறே அமீர் ஷிர்டியை நோக்கி விரைந்தார்.

அமீர் தமக்குத் தாமே பேசி கொண்டார், "பாபா, என்ன காரியம் செய்தீர்கள்! நான் செய்த எந்தப் பாவம் என்னை இப்பொழுது தாக்குகிறது? ஓ, என்னுடைய வினையே என்னைச் சுடுகிறது. இது எனக்கு இப்பொழுது சம்பூர்ணமாகத் (முழுமையாகத்) தெரிகிறது.


Thursday, 20 July 2017

ஷீர்டி சாயி சத்சரிதம்

சாவடி ஒத்துக்கொள்ளுமா என்ற சந்தேகம் இருந்திருக்கலாம். ஆனால், அமீர், சாயியின் சங்கத்தை மஹா பிரசாதமாகக் கருதினார். சாயியின் திருவாய்மொழியையே அருமருந்தாக எடுத்துக்கொண்டார். ஆகவே, அவர் சாவடியில் தங்குவதையே சுகமாக ஏற்றுக்கொண்டார்.

அமீர்சக்கர் ஒன்பது மாதங்கள் முழுமையாக சாவடியில் தாங்கினார். படியேறி உள்ளே நுழைந்தவுடன் இருக்கும் அறையில் படுக்கை விரித்துத் தூங்கினார்.

முடக்குவாதம் அவருடைய உடம்பில் குடிகொண்டுவிட்டது; அல்லது வெளிப்பார்வைக்கு அவ்வாறு தெரிந்தது. நிவாரணமோ முற்றும் விபரீதமாகத் (நேர்மாறாக)  தெரிந்தது! ஆயினும், உள்ளே இருந்த நம்பிக்கையும் விசுவாசமும் அசைக்க முடியாததாக இருந்ததால், நன்மையும் இனிமையும் ஆன முடிவே ஏற்பட்டது.

அமீர் ஒன்பது மாதங்களுக்குச் சாவடியில் தங்கும்படி ஆணையிடப் பட்டிருந்தார். தரிசனத்திற்காக மசூதிக்குச் செல்வதற்கு கூடத் தடைவிதிக்கப் பட்டிருந்தது.!

அமீருக்கு விதிக்கப்பட்ட இடம் சாவடியே. அங்கேயே அவருக்கு சிரமம் ஏதுமின்றி பாபாவின் தரிசனம் கிடைத்தது.

காலை மாலை இரண்டு வேளைகளிலும் தரிசனம் கிடைத்தது. ஒன்றுவிட்ட ஒரு நாளைக்குச் சாவடி ஊர்வலத் திருவிழாவையும் அமீர் திருப்தியாக கண்டு மகிழ்ந்தார்.

தினமும் காலை நேரத்தில் பிச்சை எடுக்கச் செல்லும்போது, பாபா சாவடியின் வழியாகத்தான் செல்வார். ஆகவே, பாபா போகும்போதும் திரும்பி வரும்போதும் இடத்தை விட்டு நகராமலேயே சுலபமாக தரிசனம் கிடைத்தது.

அதுபோலவே, தினமும் மாலை நேரத்தில் பாபா சாவடிக்கெதிரே வந்து நிற்பார். தலையையும் ஆட்காட்டி விரலையும் ஆட்டிக்கொண்டே பரவச நிலையில் எல்லா திசைகளுக்கும் வந்தனம் செய்வார்.

அங்கிருந்து புட்டிவாடாவின் மூலைக்கு வருவார். பிறகு அங்கிருந்து பக்தர்கள் சூழ மசூதிக்கு திரும்பிவிடுவார்.

சாவடிக்கு ஒருநாள் விட்டு மறுநாள் இரவில் வருவார். சாவடியில் இருவருக்கும் இடையே (பாபா - அமீர் சக்கர்) மரப்பலகை களாலான தடுப்பு ஒன்று, கதவு என்ற பெயரில் இருந்தது. இருவருமே சம்பாஷணை செய்வதில் ஆர்வம் கொண்டிருந்தனர்.

பூஜையும் ஹாரதியும் இதரச் சடங்குகளும் சாவடியில் நடந்தன. இவையனைத்தும் முடிந்தபிறகு, பக்தர்கள் அவரவர் வீடுகளுக்கு சென்றனர். அதன் பிறகு இவர்கள் இருவருமே சாவகாசமாகப் பரஸ்பரம் பேசிக்கொண்டனர்.

வெளிப்பார்வைக்கு அடைப்பட்ட வாசன்தான். ஆயினும், சாயியிடம் நெருக்கமான அனுபவம் கிடைத்தது. மஹா பாக்கியம் செய்யாமல், இது கிடைப்பது துர்லபம். (அரிது) .

இருப்பினும், அமீர் சலிப்படைந்தார். ஒரேயிடத்தில் இருப்பதை அவர் சிறைவாசமாக உணர்ந்தார். வேறு எங்காவது போய்விட வேண்டும் என்று நினைத்தார்.

Thursday, 13 July 2017

ஷீர்டி சாயி சத்சரிதம்

"இதுதான் என்னுடைய ஒரே வேண்டுகோள். எனக்கு ஏதாவது கொடுப்பதாக இருந்தால் இன்னல்களையே கொடு. அப்பொழுதுதான் உன்னுடைய நாமம் என்னுடைய தொண்டையை அலங்கரிக்கும் நிரந்தரமான ஆபரணமாக ஆகும்".

கதை கேட்பவர்களும் சொல்பவரும் சேர்ந்து, இதை, இதை மாத்திரமே, சாயியை வேண்டுவோம். "உங்களுடைய நாமத்தை நாங்கள் என்றும் மறக்காமல் இருப்போமாக; உங்களுடைய பாதங்களை எங்களுக்கு புகலிடமாக அளிப்பீராக."

அமீர் சக்கர் பாபாவை நமஸ்காரம் செய்துவிட்டு விதிமுறைகளின்படி அவருடைய கையை முத்தமிட்டார். வியாதியைப் பற்றி விஸ்தாரமாக எடுத்துச் சொல்லித் துன்பத்திலிருந்து விமோசனம் அளிக்கும்படி வேண்டினார்.

தம்மைப் பீடித்திருந்த முடக்குவாத நோய்க்குப் பரிகாரம் கேட்டார். பாபா பதில் சொன்னார், "போங்கள், போய்ச் சாவடியில் நிம்மதியாக உட்காருங்கள்."

பாபா ஒன்று விட்டு ஒருநாள் இரவை கழித்த சாவடியே அமீர் வாசிக்க வேண்டிய இடமாயிற்று.

முடக்கு வாத நோயினால் பெரும் துன்பத்துக்குள்ளான அமீர்சக்கர், ஷீர்டி கிராமத்தில் வேறு ஏதாவதொரு வீட்டில் சௌக்கியமாக தங்கிருக்கலாம்; அல்லது தம்முடைய கிராமமாகிய கொராலேவுக்கே திரும்பிச் சென்றிருக்கலாம்; வேறெந்த இடமும் ஒதுக்கி கொண்டிருக்கும்.

ஆனால், இந்தச் சாவடியோ புராதனமானது. மேற்கூரையும் கீழ்தளமும் சிதிலமடைந்திருந்தன. கட்டடமே ஜீரணமடைந்திருந்த நிலையில், பல்லியும் பாம்பும் தேளும் ஓணானும் சுதந்திரமாக வாழ்ந்து கொண்டிருந்தன.

மேலும், குஷ்டரோகிகள் சிலர் அங்கு வாழ்ந்து கொண்டிருந்தனர். எச்சிலையிலையோடு எறியப்பட்ட உணவைத் தின்று வாழ்ந்த சில நாய்களும் அங்கு இருந்தன. அமீர் சோகமடைந்தார்; ஆயினும், பாபாவின் பேச்சுக்கு எதிர்ப்பேச்சு ஏது?

சாவடியின் பிற்பாகத்தில் இடிபாடுகள் கொட்டப்பட்டு முழங்கால் ஆழத்திற்குப் பல குழிகள் இருந்தன. அமீர் சக்கருடைய வாழ்க்கை நாயினும் கேவலமானதாகி விட்டது; ஜன்மமே பயனற்ற யாத்திரைபோல் தெரிந்தது.!

கூரையிலிருந்து மழை நீர் ஒழுக்கு; தரையிலோ தண்ணீர் ஓதம்! தரை மேடும் பள்ளமும் குழிகளுமாக இருந்தது. இது போதாதென்று குளிரும் வாடைக்காற்றும் உடலை வாட்டின. அமீர் சக்கர் மனமுடைந்து போனார்.

மழையும் காற்றும் உண்டுபண்ணிய நிரந்தரமான ஓதத்தையும் குளிரையும் தங்க முடியாமல், அவருடைய உடம்பின் மூட்டுக்களெல்லாம்  விறைத்துப் போயின. மருந்து என்னவென்று பார்த்தால், பாபாவினுடைய சொல்லைத்தவிர வேறெதுவும் இல்லை!

பாபா அவரிடம் கண்டிப்பாகச் சொல்லியிருந்தார், "மழை பெய்யலாம், ஓதமாக இருக்கலாம்; தரை மேடும் பள்ளமும் குழிகளுமாக இருக்கலாம். ஆனால், நீர் அதை பற்றியெல்லாம் நினைக்கவே நினைக்காதீர். " 


Thursday, 6 July 2017

ஷீர்டி சாயி சத்சரிதம்

"அன்று மாலை பாபுசாஹெப் புட்டி மலங்கழிக்க கழிவறைக்குச் சென்றபோது ஒரு பாம்பு அந்த நேரத்தில் அங்கு புகுந்து கொண்டிருந்தது.

அந்த பயங்கரமான நிலமையைப் பார்த்துவிட்டு பாபுசாஹெப் உடனே வெளியே வந்துவிட்டார். பாபுசாஹிபின் சிப்பாய் லகானு பாம்பை ஒரு கல்லால் அடித்துக் கொன்றுவிடலாம் என்று நினைத்தார்.

ஆனால், அவர் ஒரு கல்லை எடுக்க முயன்றபோது பாபுசாஹெப் அவரைத் தடுத்து, "போய் ஒரு கழியைக் கொண்டு வா; அவரசப்பட்டால் காரியம் கெட்டுவிடும்" என்று சொன்னார்.

லகானு கழியைக் கொண்டுவர விரைந்தபோது, பாம்பு சுவரின் மீது ஏற ஆரம்பித்தது. நிலைதடுமாறிக் கீழே விழுந்து, குழியில் இருந்து 'சர சர' வென்று ஊர்ந்து செல்ல ஆரம்பித்தது.

பிறகு அவ்விடத்தில் இருந்து பாம்பு மறைந்துவிட்டது. அத்துடன் அதைக் கொல்ல வேண்டிய அவசியமும் இல்லாமல் போயிற்று. புட்டி சாஹிபுக்கு பாபா சொன்ன வார்த்தைகள் நினைவுக்கு வந்தன. தமக்கும் பாம்புக்கும் இருவருக்குமே ஆபத்து வராமல் பாபா காப்பாற்றிய அற்புதத்தைக் கண்டு வியந்தார்.

சாயி தம் பக்தர்களுடன் பழகிய அற்புதக் காட்சியைத் தம் கண்களாலேயே நேரில் பார்த்த பாக்கியசாலிகள் என்றென்றும் அதை மறக்க முடியாது.

இம்மாரிதியான அனுபவங்கள் பலவற்றை அளித்து, பக்தர்களின் மனதை சாயி சுண்டி இழுத்தார். அவ்வனுபவங்களை எல்லாம் இங்கு எழுதக் காகிதம் போதாது; அவ் வர்ணனைகளுக்கு முடிவேயில்லை!

இப்பொழுது, சாவடியில் இரவு ஒரு மணியளவில் பாபாவின் எதிரிலேயே நடந்த அம்மாதிரியான நிகழ்ச்சியொன்றைக் கேளுங்கள்.

கோபர்காங்வ் தாலுகாவில் அமீர் சக்கர் என்பவருடைய வதனாக (ஜமீன் பரம்பரை போன்ற சொத்து) கொராலே என்ற கிராமம் இருந்தது. அமீர் சக்கருக்கு பாபாவிடம் ஆழ்ந்த பக்தி இருந்தது.

கசாப்புக்கு கடைகாரக் குடும்பத்தில் பிறந்த அவர் பாந்த்ராவில் பிரபலமான தரகராக இருந்தார். அவரை ஒரு கடுமையான வியாதி பீடித்து மோசமாக பலவீனப் படுத்திவிட்டது.

இன்னல்கள் நேரும்போது மனிதன் இறைவனை நினைக்கிறான். அவருடைய வியாபரா சம்பந்தமான வேலைகளையும் பிரச்சினைகளையும் மூட்டைகட்டி வைத்துவிட்டு அமீர் சக்கர் ஷிர்டிக்கு ஓடினார்.

பாண்டவர்களின் தாயார் குந்தி, வனவாசத்திலும் அக்ஞாத வாதத்திலும் (யாருக்கும் தெரியாது மறைந்து வாழ்தல்) எத்தனையோ இன்னல்களைத் தரும்படி ஸ்ரீ கிருஷ்ணனை வேண்டினார்!

குந்தி கேட்டார், "தேவா! பரமேச்வரா! எவர்கள் சுகத்தை நாடுகிறார்களோ அவர்களுக்கு சுகத்தைக் கொடு. ஆனால், எனக்கு மட்டும் நான் உன்னை மறவாதிருக்கும் வகையில் தொடர்ச்சியாக இன்னல்களையே கொடு.- Thursday, 29 June 2017

ஷீர்டி சாயி சத்சரிதம்

அவர்கள் முன்னேறியபோது, பாம்பு மிரீகரின் இடுப்பை வீட்டுக் கீழே இறங்கியதைப் பார்த்தனர். அவர்களுக்கு அது ஒரு பாம்பு இறங்குவதற்காகத் தெரியவில்லை; உயிரைக் குடிக்கக்கூடிய பெரும் ஆபத்தின் முழுவுருவமே இறங்கி வருவது போலத் தெரிந்தது.

கிரஹணம் சீக்கிரமாகவே விடுபட்டது! பாம்பு கீழே இறங்கி வந்தவுடன் அவர்கள் கைகளில் இருந்த ஆயுதங்களெல்லாம் பாம்பின் மேல் மின்னலெனப் பாய்ந்து அதைக் கண்ட துண்டங்களாக்கி விட்டன.

இவ்விதமாக கண்டத்தில் இருந்து தப்பித்த மிரீகர் உணர்ச்சிவசப்பட்டார்.  சமர்த்த சாயியின் மீதிருந்த பிரேமை பொங்கி வழிந்தது.

உடல் நடுக்கம் கொஞ்சம் கொஞ்சமாகக் குறைந்து, பிரேமை கண்ணீராகப் பொழிந்தது. "ஓ, எப்பேர்ப்பட்ட ஆபத்து விலக்கப்பட்டது! பாபாவுக்கு இது முன்கூட்டியே எப்படித் தெரிந்திருந்தது?-

"உண்மையிலேயே பெரிய கண்டத்தில் இருந்து தப்பித்துக் கொண்டேன்! எவ்வளவு சரியான சமயத்தில் பாபா என்னை எச்சரித்தார்! தேவையில்லை, வேண்டாவென்று நான் சொன்ன போதிலும், சாமாவை  டாங்காவில் உட்காரவைத்து எனக்கு உதவியாக அனுப்பினார்.-

"வாஸ்தவமாகவே அவர் தயா சாகரம்! நடக்கப்போவதை முன்கூட்டியே அறியும் ஞானந்தான் என்னே! கெட்ட காலம் எதிர் கொண்டிருப்பதை அறிந்து, சரியான அறிவுரை தந்தார்."

தம்மை தரிசனம் செய்வதின் மஹாதமியத்தையும் மசூதியின் பெருமையையும் பாபா அவர்களுடைய மனத்தில் பதியச் செய்தார். இந்த லீலையின் மூலமாக, 'தமக்கு பக்தர்களின் மீதிருக்கும் பிரேமையை சுலபமாக எடுத்துக்காட்டினார்.

இப்பொழுது நானா டெங்கலே என்ற பெரிய ஜோதிடர், ஸ்ரீமான் புட்டிக்கு ஒரு சமயம் என்ன சொன்னார் என்று கேளுங்கள்.

"இன்று உங்களுக்கு அமங்கலமான நாள்; ஒரு கண்டம் நேரவிருக்கிறது. ஆயினும் தைரியமாகவும் விழிப்புடனும் இருங்கள்."

டேங்கலே இவ்வாறு சொன்னைதை கேட்ட பாபூசாஹெப் புட்டி கலவரமடைந்து கவலைப்பட்டுக்கொண்டே இருந்தார். நாள் நகர மறுத்தது!

பிறகு, பாபு சாஹேப்  புட்டியும் நானா டேங்கலேவும் மற்றவர்களும் தினமும் செல்லும் நேரத்தில் மசூதிக்குச் சென்று பாபாவின் முன்னிலையில் அமர்ந்தனர்.

பாபா பளிச்சென்று கேட்டார், "இந்த நானா டேங்கலே என்ன சொல்கிறார்? அவர் உம்மைக் கொன்று விடத் திட்டமிட்டு விட்டாரோ! ஆனால், நாம் பயப்பட வேண்டியதில்லை!-

"அவர் உம்மை எப்படிக் கொல்கிறார் என்று பார்த்துவிடுவோம்! உம்மால் முடிந்தால் என்னைக் கொன்றுவிடும் என்று தைரியமாக அவரிடம் சொல்லும்!" இந்த சம்பாஷணை முடிந்தபிறகு நடந்த அற்புதம் என்னெவென்று பார்ப்போம்.    


Thursday, 22 June 2017

ஷீர்டி சாயி சத்சரிதம்

மாதவராவ் சாயிபாதங்களை வணங்கிவிட்டு கிளம்பினார். மிரீகர் உட்காந்து கொண்டிருந்த குதிரைவண்டியில் ஏறி உட்கார்ந்தார்.

இருவரும் சிதலீயைச் சென்றடைந்தனர். விசாரித்ததில், வரவேண்டிய ஜில்லா அதிகாரிகள் இன்னும் வந்து சேரவில்லை என்று தெரிந்தது. ஆகவே, அவர்களிருவரும் ஓய்வெடுத்துக்கொண்டனர்.

அவர்கள் தங்குவதற்கு ஆஞ்சநேயர் கோயிலில் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. இருவருமே பிரயாணம் செய்து களைப்பாக இருந்ததால் அங்கே சென்று ஓய்வெடுத்துக் கொண்டனர்.

இரவு 10 மணிக்கு மேலாகிவிட்டது. இருவருமே தங்களுடைய ஜமக்காலங்களை விரித்துப் படுக்கை, தலையணை ஆகியவற்றை சீர் செய்துகொண்டு ஒரு விளக்கின் ஒளியில் பேசிக்கொண்டிருந்தனர்.

தினசரிப் பத்திரிக்கை ஒன்று அங்கு இருந்தது; மிரீகர் அதை பிரித்துப் படிக்க ஆரம்பித்தார். அவருடைய கவனமெல்லாம் ஒரு விஷேசச் செய்தியைப் படிப்பதில் ஈடுபட்டிருந்தபோது ஒரு விசித்திரமான சம்பவம் நிகழ்ந்தது.

அந்த விதிவசமானதும் பயங்கரமானதுமான வேளையில், ஒரு பாம்பு அங்கே சுருட்டிக்கொண்டு உட்கார்ந்திருந்தது. யாருடைய கண்ணிலும் படாமல் அது எங்கிருந்து, எவ்விதமாக, அங்கு வந்தது என்று  யாருக்குமே  தெரியவில்லை.

மிரீகரின் மேல்துண்டின் ஒரு முனை அவருடைய இடுப்பின் பக்கமாகச் சரிந்து இருந்தது. அந்த மிருதுவான ஆசனத்தின் மேல் பயமேதுமின்றி ஓசைப்படாமல் பாம்பு உட்கார்ந்துகொண்டிருந்தது.

பாம்பு ஊர்ந்து முன்னேறியபோது காகிதம் சலசலவென்று சத்தம் செய்தது. ஆனால், யாருமே அந்தச் சத்தத்தைப் பாம்பாக இருக்குமோவென்று சந்தேகிக்கவில்லை.

சூழ்நிலை என்னவோ பயங்கரமாக இருந்தது; ஆயினும் மிரீகரோ செய்தித்தாளை வாசிப்பதில் மூழ்கிப்போய் இருந்தார். அங்கிருந்த ஒரு டபோதரின் (பியோன் - ஏவலர்) மனதில்தான் இந்த பயங்கரமான கற்பனை உதித்தது.

இந்தச் சத்தம் எந்திருந்து வருகிறது! சத்தம் ஏற்படுவது எப்படி?  இவ்வாறு கேட்டுக்கொண்டே விளக்கின் பிரகாசத்தை உயர்த்தியபோது அவர் நீளமான ஆசாமியைக் (பாம்பைக்) கண்டார்.

பாம்பைப் பார்த்தவுடன் அவர் விறைத்துப் போனார். 'பாம்பு, பாம்பு!' என்று சன்னமான குரலில் கூவினார். மிரீகர் இதைக் கேட்டு திடுக்கிட்டார்; உடல் முழுவதும் உதற ஆரம்பித்தது.

சாமா முதலில் திகைப்புற்றுச் செய்வதறியாது போனார். பிறகு அவர் கூறினார், "பாபா! என்ன காரியம் செய்துவிட்டீர்கள்? இந்த வேண்டாத அபாயத்தை எங்கிருந்து அனுப்பினீர்கள்? இப்பொழுது நீங்களே இதை விளக்க வேண்டும்".

ஆயினும், சூழ்நிலையிலிருந்த ஆபத்தைப் புரிந்துகொண்டு ஒவ்வொருவரும் அவரவர் கையில் அகப்பட்டதை எடுத்துக்கொண்டு சந்தடி செய்யாது பாம்பை நோக்கி விரைந்தனர். 


Thursday, 15 June 2017

ஷீர்டி சாயி சத்சரிதம்

பிறகு பாபா சொன்னார், "சாமா! நீயும் தயாராகி அவருடன் செல், சிதலிக்கு ஒரு சுற்றுப் போய்விட்டு வா! சுகமான அனுபவம் கிட்டும்."

உடனே சாமா படிகளில் இறங்கி வந்து மிரீகரிடம் சென்று, "நான் உங்களோடு டாங்காவில் (குதிரைவண்டியில்) சிதலீக்கு வரவேண்டும்.-

"நான் வீட்டிற்குப் போய்ச் சடுதியில் தயார் செய்துகொண்டு வந்துவிடுகிறேன். நானும் உங்களுடன் சிதலீக்கு செல்லவேண்டும் என்று பாபா விரும்புகிறார்."

மிரீகர் அவரிடம் கூறினார், "சிதலீக்கு வரைக்கும் அவ்வளவு தூரம் வந்து நீர் என்ன செய்யப் போகிறீர்? உமக்கு அனாவசியமான தொந்தரவு அன்றோ!"

மாதவராவ் திரும்பிச் சென்று பாபாவிடம் நடந்ததைக் கூறினார். பாபா சொன்னார், "சரி, போ! நமக்கென்ன நஷ்டம்?-

"மந்திரம், புண்ணிய தீர்த்தம், பிராமணர், தெய்வம், ஜோசியர், வைத்தியர், குருராயர்- இது விஷயங்களில் எவ்வளவு நம்பிக்கையோ, அவ்வளவே அதிலிருந்து விளையும் பலனும். -

"நாம் எப்பொழுதுமே மற்றவர்களின் நன்மையைக் கருத்தில் கொண்டு உபதேசங்களை அளிக்க வேண்டும். அவரவர்களுடைய விதிப்படியே நிச்சயமாக எல்லாம் நடக்கும்!"

திடீரென்று மிரீகருக்கு சந்தேகம் எழுந்தது! பாபாவினுடைய திருவாய் மொழியை மதிக்கவேண்டும். ஆகவே, அவர் மாதவராவுக்கு ஓசை செய்யாது ஒரு சைகை காட்டினார். சிதலீக்கு தம்முடன் வரும்படி அழைத்தார்.

ஆனால், மாதவராவ் அப்பொழுது சொன்னார், "பொறுங்கள்; நான் உங்களுடன் வருகிறேன். பாபாவிடம் மறுபடியும் சென்று அனுமதி வாங்கிக்கொண்டு வருகிறேன்! அவர் 'சரி' என்று சொன்னவுடன் வந்துவிடுகிறேன். இதோ வந்துவிடுகிறேன். -

"நான் வருவதற்காகக் கிளம்பினேன்; நீங்கள் என்னைத் திருப்பி அனுப்பிவிட்டீர்கள். பாபா சொன்னார், 'சரி, போ! நமக்கென்ன நஷ்டம்? என்று. என்னை அங்கேயே உட்காரவைத்து விட்டார்.-

"இப்பொழுது நான் மறுபடியும் கேட்கிறேன். அவர் 'சரி' என்று சொன்னவுடனே திரும்பி வருகிறேன். பாபா என்ன சொல்கிறாரோ அதைச் செய்கிறேன். நான் அவருடைய ஆணைக்கு அடிபணியும் தாசன் அல்லேனோ".

சாமா பாபாவிடம் சென்று கேட்டார், "மிரீகர் என்னை வரச் சொல்கிறார். என்னைச் சிதலீக்கு அழைத்துக்கொண்டு போக அனுமதி கேட்கிறார்."

சாயி முகத்தில் புன்னகை தவழக் கூறினார், "சரி, அவர் அழைத்தால் நீ போய் வா! மசூதிமாயி என்பது அவளுடைய பெயர்; தான் அளித்த உறுதியிலிருந்து எப்பொழுதாவது பின்வாங்குவாளா என்ன?-

"தாய்க்கு நிகர் தாயே அன்றோ! குழந்தைகளின் மேல் பாசமுள்ளவள் அல்லளோ! ஆயினும், குழந்தைக்கு நம்பிக்கையும் விசுவாசமும் இல்லாவிட்டால், அவளால்தான் என்ன செய்யமுடியும்?"
Thursday, 8 June 2017

ஷீர்டி சாயி சத்சரிதம்

வரப்போகும் கண்டங்களைப் பற்றி பக்தர்களை எச்சரித்து, ஆபத்திலிருந்து தப்பித்துக்கொள்ள ஒரு வழியையும் காட்டி, அவர்களை காப்பாற்றியது பாபா செய்த அற்புதம்.

அந்த சமயத்தில் பாபா திடீரென்று மிரீகரைக் கேட்ட வினோதமான கேள்வி என்னவென்று பார்ப்போம். "உங்களுக்கு நம்முடைய துவாகரமாயியைத் (தாம் வாழ்ந்த மசூதிக்கு பாபா அளித்த பெயர்) தெரியுமா?"

பாலா சாஹேப்பிற்கு, பாபா என்ன கேட்கிறார் என்றே புரியவில்லை. ஆகவே, பாபா தொடர்ந்தார், "இங்கே பாருங்கள், துவாரகாமாயீ இந்த மஸூதியே.-

"இது நம்முடைய, நமக்கே சொந்தமான துவாரகாமாயீ. இவளுடைய மடியில் நீர் அமரும்போது ஒரு குழந்தையைப் போல உம்மைப் பாதுகாக்கிறாள்; பயத்திற்கு மனத்தில் இடமேயில்லை!-

"இந்த மசூதிமாயி கிருபையையே உருவானவள்; எளியவர்களின் தாய்! யார், எவ்வளவு பெரிய ஆபத்தில் மாட்டிக்கொண்டாலும், அங்கேயே அப்பொழுதே காப்பாற்றுவாள்!-

"இவளுடைய மடியில் ஒருமுறை அமர்ந்தவர் எல்லா சங்கடங்களில் இருந்தும் விடுபட்டு விடுகிறார். இவளுடைய நிழலில் வாழ்பவர் சுகத்தையும் சாந்தியையும் அளிக்கும் சிம்மாசனத்தில் உட்கார்ந்தவர் ஆவார். -

"இதுதான் அந்த துவாரகை; துவாரவ தீ!" மிரீகர் கிளம்பியபோது பாபா உதீப் பிரசாதம் அளித்து அவருடைய தலையில் தம் அபய ஹஸ்தத்தை (காக்கும் கரத்தை) வைத்தார்.

திடீரென்று பாபா மிரீகரை ஒரு கேள்வி கேட்டார், "உங்களுடைய நீளமான ஆசாமியையும் அவனுடைய தோன்றி மறையும் விநோதத்தையும் பற்றித் தெரியுமா?"

இடக்கை விரல்களையும் உள்ளங்கையையும் வளைத்துக்கொண்டு, இடமுழங்கையை வலக்கையின் மேல் வைத்துக்கொண்டு, இடக்கையை பாம்பின் தலை ஆடுவதுபோல் அசைத்து அவர் சொன்னார், "அவன் எவ்வளவு பயங்கரமானவன் !-

"ஆயினும் அவர் நம்மை என்ன செய்துவிட முடியும்? நாம் துவாரமாயியின் குழந்தைகளன்றோ? அவளுடைய சக்தியை யாரால் அறிந்துகொள்ள முடியும்? அவளுடைய அற்புதச் செயலைக் காத்திருந்து பார்ப்போம்!-

"நம்மை ரட்சிக்கும் தாயாக துவாரகாமாயீ இருக்கும்போது, நீளமான ஆசாமியால் எப்படிக்கொல்ல முடியும்? அவனுடைய கொள்ளும் சக்தி துவாரகமாயியின் ரட்சிக்கும் சக்தியின் முன் எம்மாத்திரம்?

அந்த சமயத்தில் பாபா ஏன் இந்தப் பிரசாங்கத்தைச் செய்தார்? மிரீகருக்கும் இந்தப் பிரசங்கத்திற்கும் என்ன சம்பந்தம்? அங்கிருந்த எல்லாரும் அறிந்து கொள்ள விரும்பினார்.

ஆனால், பாபாவைக் கேட்க யாருக்குமே தைரியம் இல்லை. ஆகவே, பாபாவின் பாதங்களில் சிரம் தாழ்த்தி வணங்கிவிட்டு, "சிதலீ செல்ல நேரமாகிவிட்டது" என்று சொல்லிக்கொண்டே மிரீகர் மசூதியின் படிகளில் இறங்கினார்.

அவரும் கூடவே இருந்த மாதவராவும் சபா மண்டபத்தின் வாயிலை அடைவதற்கு முன்னரே பாபா மாதவராவை, "ஒரு கணம் இங்கு வா" என்று அழைத்தார்.  Thursday, 1 June 2017

ஷீர்டி சாயி சத்சரிதம்

சமர்த்த சாயியினுடைய நடத்தை மனத்திற்கும் புத்திக்கும் வாக்குக்கும் அப்பாற்பட்டது. அவருடைய செயல்களோ கற்பனைக்கும் எட்டாதவை; எதிர்பார்க்க முடியாதவை.

அவருடைய முகத்தை எவ்வளவு நேரம் பார்த்தாலும் மனம் திருப்தியடையாது. அவருடன் பேசுவது மேலும் மேலும் பேச ஆவலை தூண்டிவிடும். அவருடைய திருவாய்மொழியை எவ்வளவு கேட்டாலும் திருப்தி ஏற்படாது. இச் செயல்களால் ஏற்படும் சந்தோஷத்தை மனதில் அடக்க முடியாது.

காற்றை மூட்டையாக கட்டிவிடலாம்; கொட்டும் மழையின் தாரைகளையும் எண்ணிவிடலாம்; ஆனால், சாயியினுடைய அற்புதங்களை கணக்கெடுக்க கூடிய வன்மை உள்ளவர் யார்?

இப்பொழுது அடுத்த கதையை சாவகாசமாக கேளுங்கள். தம்முடைய பக்தர்களை சம்ரக்ஷணம் (நன்கு காப்பாற்றுகை) செய்ய வேண்டுமென்பதில் பாபாவுக்கு இருந்த அக்கறையும் அவர்களுக்கு சங்கடங்களும் இன்னல்களும் வாராது நிவாரணம் செய்ததும் தெரிய வரும்.

பக்தர்களுக்கு நேரப்போகும் கண்டங்களை முன்பாகவே அறிந்து, அவர்களுக்கு தைரியமூட்டி விபத்து நேராமல் தடுத்துவிடுவார். பக்தருக்களுடைய மங்களத்தையே நாடிய பாபா, அவர்களுடைய விசுவாசத்தை இவ்விதமாக நிலைபெறச் செய்வார்.

ஆர்வத்துடன் கதை கேட்பவர்களே! இது சம்பந்தமாக ஒரு கதையை கேட்டு மகிழ்ச்சியடையுங்கள். இக் கதை, சாயியின் சமூகத்தில் உங்களுக்கு இருக்கும் சுகத்தை அதிகரிக்கும். கபடமற்ற, எளிமையான மக்களுக்கு சிரத்தையை அளிக்கும்.

அவர்கள் தீனர்களாகவும் தள்ளிவைக்கப்பட்டவர்களாகவும் ஏழைகளாகவும் இருக்கலாம்; ஆயினும், சாயியினுடைய கதைகளில் ஆர்வம் அதிகரிக்கும். அவர்கள் சாயி நாமத்தை இடைவிடாது ஜபித்தால், சாயி அவர்களை நிச்சயமாக மறுகரை சேர்ப்பார்.

காகாசாஹெப் மிரீகர் என்பவர் அஹமத்நகர் பட்டணவாசி, அவருடைய சேவையில் மகிழ்ந்து, (பிரிட்டிஷ்) அரசாங்கம் அவருக்கு 'சர்தார்' என்ற பட்டத்தை அளித்தது.

அவருடைய மகன் சிரஞ்சீவி பாலாசாஹேப்  மிரீகரும் ஒரு கடைமை வீரராகத் திகழ்ந்தார். கோபர்காங்கவிற்கு மாமலத்தாராக இருந்த அவர், சிதலீக்கு அலுவலகச் சுற்றுப்பயணமாக வந்திருந்தபோது பாபாவை தரிசனம் செய்ய ஷிர்டிக்கு வந்தார்.

மசூதிக்குச் சென்று பாபாவுக்கு நமஸ்காரம் செய்துவிட்டு அங்கு அமர்ந்தார். எல்லாருடைய ஷேமத்தையும் குசலத்தையும் (சுகத்தையும்) பற்றி பாபா அவரை விசாரித்தார்; பேச்சுத் தொடர்ந்தது.

பல பக்தர்கள் அப்பொழுது அங்கே குழுமியிருந்தனர்; மாதவராவும் அருகிலேயே இருந்தார். ஓ, நான் சொல்லும் கதையை கவனத்துடன் கேட்பவர்களே! அமிருதத்தைப் போன்ற இக் காதையை இப்பொழுது பருகுங்கள். 


Thursday, 25 May 2017

ஷீர்டி சாயி சத்சரிதம்

இப் பாட்டு, தாசகணு அளித்த விதமாகவே ஏற்கனவே இந்நூலின் 4 வது அத்தியாயத்தில் கொடுக்கப்பட்டிருக்கிறது. அதை மறுபடியும் படித்தால் முதல் தடவை கேட்டபோது அடைந்தவாறே ஆச்சரியம் அடைவீர்கள்.

சாகா சந்திர நியாயத்தின்படி தம்முடைய கால்கட்டைவிரலை கையினுடைய நடுவிரலுக்கும் ஆட்காட்டி விரலுக்கும் மத்தியில் வைத்து, தரிசனம் செய்வதற்கு ஒரு சுலபமான வழி காட்டினார் பாபா.

இது, "உன்னுடைய அபிமானங்களை விட்டுவிட்டு சகல ஜீவராசிகளையும் வணங்கி என்னுடைய   கால் காட்டை விரலின் மீது தியானம் செய். இது பக்தியின் எளிய சாதனை" என்று பாபா நமக்கு குறிப்பால் உணர்த்துவதுபோல் தோன்றுகிறது.

இப்பொழுது, முன்பு சொன்ன கதைக்கு போவோம். அருள்மழை பொழிந்தது பற்றிய பிரவசனம் முடிந்தது. இப்பொழுது அபூர்வமான கதையொன்று தொடர்கிறது; கவனமாக கேளுங்கள்.

பாபா அங்கு வாசம் செய்ததால், ஷீர்டி புண்ணியஷேத்திரம் ஆகியது. இரவு பகலாக மக்கள் வந்த வண்ணம் இருந்தனர். புண்ணியத்தைத் தேடிய பல மக்கள் அங்கே கூடினர்.

பத்துத் திசைகளிலும் வியாபித்திருக்கும் .கற்பகத்தருவைப் போன்று நேரிடையாகவும் மறைமுகமாகவும் வரங்களை அள்ளிவீசும் சாயிபாபா  ஷிர்டியில் அவதரித்துவிட்டார்.

ஏழையையும் பணக்காரனையும் சமசமானமாகப் பாவித்தார். கற்பனை செய்தும் பார்க்கமுடியாத லீலைகளால் பக்தர்களுக்கு மங்களம் அளித்தார்.

ஓ, எவ்வளவு கரைகாணாத பிரேமை! என்னே இந்த இயல்பான பிரம்ம ஞானம்! எல்லா உயிர்களிலும் உறைபவன், ஒன்றான இறைவனே என்பதில்தான் அவருக்கு எவ்வளவு அமோகமான நம்பிக்கை! பாபாவை அனுபவித்தவர் பாக்கியசாலி.

சிலசமயங்களில் திடமான மௌனமே அவர் பிரம்மத்தை (முழுமுதற் பொருளை) பற்றிச் செய்த வியாக்கியானமாக அமைந்தது. சிலசமயங்களில் ஆத்மானந்தமாகிய இம்மேகத்தை பக்தர்கள் சூழ்ந்து கொண்டிருந்தனர்.

சில சமயங்களில் அவருடைய திருவாய்மொழி மறைபொருளாகவும் கனமான அர்த்தம் நிரம்பியதாகவும் இருந்தது. சிலசமயங்களில் அவர் மென்மையாகவும் பரிஹாஸமாகவும் பேசினார். சில சமயங்களில் அவர் எப்பொழுதும் பேசும் மறைபொருளடங்கிய பேச்சை விடுத்துக் கோபம் வந்தது போல் பாசாங்கு செய்தார்.

சிலசமயங்களில் குறிப்பால் உணர்த்தியும், சிலசமயங்களில் விவேகத்தால் புரிந்துகொள்ளுமாறும், சிலசமயங்களில் வெளிப்படையாகத் தெளிவாகவும், அவர் அநேக பக்தர்களுக்கு அநேக விதங்களில் உபதேசம் அளித்தார். 


Thursday, 18 May 2017

ஷீர்டி சாயி சத்சரிதம்

ஈடிணையற்ற சௌக்கியத்தை அனுபவிப்பதற்கு சுத்த ஞான மூர்த்தியாகிய உம்முடைய பாதங்களில் பணிவதைத் தவிர வேறு கத்தி ஏதும் எங்களுக்கு இல்லை.

தாங்கள் எப்பொழுதும் அமர்ந்திருக்கும் கோலந்தான் என்னே! அநேக பக்தர்கள் உங்களுடைய தரிசனத்திற்கு வரும்போது, உங்களுடைய பாதங்களில் சிரம் தாழ்த்தி அகமகிழ்ச்சியாலும் பிரேமையாலும் பொங்குகின்றனர் அல்லரோ!

ஆஹா, உங்களுடைய பொற்கமலப் பாதம்! அதை எவ்விதம் வர்ணிப்பேன்! மரக்கிளைகளுக்கும் பிறைச்சந்திரனுக்கும் உள்ள சம்பந்தம் என்று சொல்லலாமோ? உங்களுடைய பாதத்தின் கட்டை விரலை கெட்டியாகப் பற்றிக்கொள்வதில் தரிசன வேட்கையுற்றவர்கள் திருப்தியடைகின்றனர் அல்லரோ!

தேய்பிறையின் பதினைந்தாவது நாளான அமாவாசையின் இருட்டான இரவு கடந்த பிறகு, எல்லாருக்கும் மறுபடியும் சந்திரனைப் பார்க்கவேண்டுமென்கிற ஆவல் எழுவது இயற்கையே.

தேய்பிறைப் பருவத்து இரவுகள் முடிந்தவுடன் எல்லாரும் சந்திரோதயத்தை பார்க்கும் ஆசையில் மேற்கு நோக்கி உற்றுப் பார்க்கின்றனர்.

அதுபோலவே, உங்களுடைய வலக்காலை இட முட்டியின்மீது வைத்துத் தாங்கள் அமரும்போது பக்தர்களின் தீவிரமான தரிசன ஆசை நிறைவேறுகிறது.

இடக்கரத்தின் ஆட்காட்டிவிரலுக்கும் நடுவிரலுக்கும் நடுவே உள்ள இடைவெளி ஒரு மரத்தின் கவட்டைக் கிளைகளைப் போன்று வலக்காலின் கட்டைவிரலைக் கவ்விக் கொண்டிருக்கிறது. கட்டைவிரலின் நுனியில் மூன்றாம் பிறைச் சந்திரனை போல நகம் பளபளக்கிறது.

மூன்றாம் பிறைச்சந்திரனை பார்ப்பதற்கு மக்களுக்கு ஆவல் அதிகம். ஆனால், அச் சிறிய ஒளிக்கீற்று சுலபமாக தெரிவதில்லை. விவரம் தெரிந்த மனிதர் அப்பொழுது சொல்லுவார், "இந்த மரத்தின் கவட்டையான இரண்டு கிளைகளுக்கும் நடுவில் பார்" என்று.

அப்பொழுது, இரு கிளைகளுக்கும் நடுவே நமக்கு நேராகவே சந்திரன் தரிசனமாகும். சந்திரனின் கீற்று மிக மெல்லியதாக இருந்தாலும், கிளைகளுக்கு நடுவில் நன்கு தெரியும்.

கட்டியவிரலின் மகிமையே மஹிமை! பாபாவே வேணிமாதவராக ஆகி, புனிதமான கங்கையையும் யமுனையையும் தம்முடைய கட்டைவிரல்களில் இருந்து பெருக்கி தாசகணுவின் விருப்பத்தை திருப்தி செய்தார்.

புண்ணிய தீர்த்தமான பிரயாகைக்கு சென்று ஸ்நானம் செய்யவேண்டுமென்று தாசகணு விக்ஞாபனம் (வேண்டுகோள்) செய்த்தபோது, "என்னுடைய கால் கட்டைவிரலே பிரயாகை என்றறிவாயாக. இங்கேயே ஸ்னானம் செய்."-

என்று பாபா திருவாய் மொழிய, தாசகணு அவர் பாதங்களில் பணிந்தார். பாபாவின் பாதங்களில் இருந்து உடனே கங்கையும் யமுனையும் வெளிப்பட்டன.

அந்த நேரத்தில் தாசகணு உணர்ச்சி வெள்ளத்தில் ஆசுகவியாகப் பாடிய அழகான பாட்டு ஏற்கனவே உங்களால் செவிமடுக்கப்பட்டது. 


Thursday, 11 May 2017

ஷீர்டி சாயி சத்சரிதம்

மரண விபத்துக்களை விலக்கி அருள் செய்த படலம்

ஓம் ஸ்ரீ விநாயகனே போற்ற! ஸ்ரீ சரஸ்வதியே போற்றி!
ஸ்ரீ குருமஹாராஜனே போற்றி! குலதேவதைக்கும் ஸ்ரீ சீதாராமச்சந்திரனுக்கும் என்னுடைய பணிவான வணக்கங்கள். பூஜ்யகுரு ஸ்ரீசாயிநாதனை பக்தியுடன் சிரம் தாழ்த்தி வணங்குகிறேன்.

ஜய ஆனந்தம் நிரம்பியவரே சத்தகுருவே! ஞானத்தின் சொரூபமே! தூய்மையின் வடிவே! பிறவிப் பயத்தை ஒழிப்பவரே! பரிபூரணரே! கலியின் மலங்களை எரிப்பவரே ஜய ஜய!

பலவிதமான உணர்ச்சிகளும் எண்ணங்களும் மேல்மட்டத்தில் அலைகளாக எழும் ஆனந்தக் கடல் தாங்களே! உண்மையான பக்தர்களின் மீதுள்ள கிருபையினால், தேவரீர், தேவரீர் மாத்திரமே, அவ்வலைகளை கட்டுப்படுத்துகிறீர்.

அறையிருளில் பாம்புபோல் தெரிவது வெளிச்சம் வந்தவுடன் தானாகவே கயிறாகிவிடுகிறது. அறையிருளையும் வெளிச்சத்தையும் சிருஷ்டி செய்பவர் நீரே.

முதலில் பாம்பு போன்ற உருவ பிரமையை சிருஷ்டி செய்து பயத்தை உண்டுபண்ணுகிறீர். கடைசியில் அந்த பயத்தை நிவாரணம் செய்வபவரும் நீரே.

ஆதியில் அந்தகாரத்தில் (இருளில்), பாம்பும் இல்லாத, கயிறும் இல்லாத நிலையில், கயிற்றை பார்த்துப் பாம்பென்று மயக்கம் அடைவதற்கு இடமேயில்லாத சூழ்நிலையில், உருவமற்ற அவ்விருட்டை வியாபித்தவரும் நீரே.

உருவமற்ற நிலையில் இருந்து மங்கிய ஒளியில் உருவமொன்று தோன்றியபோது பாம்பெண்ணும் பிரமை உண்டாகியது. அந்த மயக்கமும் உம்முடைய சிருஷ்டியே.

ஒருகணத்தில் தெரியும் தோற்றம் மறுக்கணத்தில் மறைந்துவிடுவதும் கண்ணுக்குத் தெரிந்தும் தெரியாத தோற்றங்களும் உண்மையில் நீர் கண்ணாம்பூச்சி ஆடும் பிரபாவமே. இந்நிலையில் மாற்றமில்லாது இருந்தாலும், எவராலும் இதை ஆழங்கான முடியவில்லை.

தங்களை அறிந்துகொள்ளும் முயற்சியில் வேதங்கள் மௌனமடைந்து விட்டன. ஆதிசேஷன் தம்முடைய ஆயிரம் வாய்களால் போற்றியும், தங்களுடைய வாஸ்தவமான சொரூபத்தை அறிந்துகொள்ள முடியவில்லை. இவ்விதமிருக்க, நான் எப்படித் தங்களை புரிந்துகொள்ள முடியும்?

பாபா! தங்களுடைய தெய்வீகமான சொரூபத்தை தரிசனம் செய்வதைத் தவிர வேறெதிலும் என் மனம் ருசி தேடவில்லை. எந்நேரமும் தியானம் செய்து அதை என் மனக்கண்முன் நிறுத்தவே விரும்புகிறேன். 


Thursday, 4 May 2017

ஷீர்டி சாய் சத்சரிதம்

ஆகவே, அப்பொழுதிலிருந்து அந்த வக்கீல் யாரையும் நிந்திப்பதில்லையென்றும் விமரிசிப்பதில்லைஎண்டுறம் யாரைப்பற்றியும் எந்தக் கெட்ட எண்ணத்திற்கும் இடமளிப்பதில்லையென்றும் உறுதியாகத் தீர்மானம் செய்துகொண்டார்.

நாம் எங்கிருந்தாலும் என்ன செய்தாலும் அது சாயியின் பார்வையில் படாமல் இருக்காது. இந்த விஷயம் அவருக்கு நிச்சயமாகிவிட்டது. அசத்தான (தீய) செய்கைகளில் அவருக்கிருந்த நாட்டம் ஒழிந்தது.

நல்ல காரியங்களை செய்யவேண்டுமென்ற விழிப்புணர்வு ஏற்பட்டது. தமக்கு உள்ளும் முன்னாலும் பின்னாலும் சாயி இருக்கிறார் என்ற நம்பிக்கை அவர் இதயத்தில் நிர்த்தரணம் ஆகிவிட்டது. சாயியை வஞ்சிக்கும் சாமர்த்தியம் படைத்தவர் யார்?

இக் கதை அந்த வக்கீலுக்கே சம்பந்தப்பட்டதாக தோன்றினாலும், ஆழ்ந்து சிந்தித்துப் பார்த்தால், இந்த போதனை எவ்விதமாக பார்த்தாலும் எல்லாவழியிலும் நம் எல்லாருக்கும் அளிக்கப்பட்டது என்பது விளங்கும்!

அந்த வக்கீலைப் போலவே, இந்தக் கதையைச் சொல்பவரும் கேட்பவர்களும் அனைத்து சாயி பக்தர்களுமே இந்த போதனையின்படி நடந்துகொள்ள வேண்டுமென்று நான் பிரார்த்திக்கிறேன்.

சாயிகிருபை என்னும் மேகம் அருளைப் பொழியும்போது நாமனைவரும் திருப்தியடைவோம். இதில் புதுமை ஏதும் இல்லை. தாகமெடுத்தவர்கள் அனைவரும் திருப்தியடைவர்!

சாயிநாதரின் பெருமை அளவிடமுடியாதது; அவருடைய கதைகளும் எண்ணிலடங்காதவை. சாயியின் சரித்திரம் எல்லையற்றது; ஏனெனில், அவர் முழு முதற்பொருளின் அவதாரம்.

சிரத்தையுடன் செவிமடுப்பவர்களே! அடுத்த அத்தியாயத்தில் ஒரு கதையை பயபக்தியடன் கேட்டால் உங்களுடைய மனோரதங்கள் நிறைவேறும்; மனம் உறுதிப்படும்; சாந்தியடையும்.

தம் பக்தர்களுக்கு என்னென்ன ஆபத்துக்கள் வரப்போகின்றன என்பது சாயிநாதருக்கு முன்கூட்டியே தெரியும். கேலியும் பரிஹாசமும் சிரிப்புமாக விளையாடிக்கொண்டே சாயிநாதர் அவ்வாபத்துக்கள் வாராது தடுத்துவிடுவார்.

பக்தன் ஹேமாட் சாயியை சரணடைகிறேன். இக்காதை இங்கு முற்றும். அடுத்து வரும் கதை பக்தர்களுக்கு வரக்கூடிய சங்கடங்களை சாயி நிவாரணம் செய்தது பற்றியதாகும்.

பக்தர்களுக்கு நேரப்போகும் சங்கடங்களையும் ஆபத்துக்களையும் முன்கூட்டியே தெரிந்துகொண்டே சாயி என்னும் கருணைக்கடல், எப்படி சரியான நேரத்தில் எச்சரிக்கை விடுத்து அவ்வாபத்துக்கள் வாராது தடுத்தார் என்பது பற்றிச் சொல்கிறேன்.

எல்லாருக்கும் க்ஷேமம் உண்டாகட்டும்! ஞானிகளாலும் சான்றோர்களாலும் உணர்வூட்டப்பட்டு, சாயி பக்தன் ஹேமாட் பந்தால் இயற்றப்பட்ட, 'ஸ்ரீ சமர்த்த சாயி சத் சரித்திரம்' என்னும் காவியத்தில், 'அனுக்கிரஹம் செய்தல்' என்னும் இருபத்தொன்றாவது அத்தியாயம் முற்றும்.

                                        ஸ்ரீ சாயி நாதருக்கு அர்ப்பணம் ஆகட்டும்.

                                                            சுபம் உண்டாகட்டும்.


Thursday, 27 April 2017

ஷீர்டி சாயி சத்சரிதம்

பாபா அவர் பக்கம் திரும்பி அவரைப்பற்றி ஏதோ சொன்னார். அந்த வார்த்தைகள் அவருக்குள்ளே புகுந்து, தேள் போல் கொட்டின. அவர் விசனமுற்றார்.

"ஓ, மக்கள்தாம் எவ்வளவு நேர்மையில்லாமல் இருக்கிறார்கள்! பாதங்களில் விழுந்து வணங்குவர்; தக்ஷிணையும் அர்ப்பணம் செய்வர்; ஆயினும் மனத்துள்ளே எப்பொழுதும் வசைபாடுவர். எவ்வளவு சாமர்த்தியமாகச் செயல் புரிகிறார்கள்!"

இதைக் கேட்ட வக்கீல் மௌனம் சாதித்தாலும், அவருடைய உள்மனத்திற்கு அனைத்தும் புரிந்துவிட்டது. பாபாவின் வார்த்தைகளில் நியாயமிருந்தது அவருக்குத் தெரிந்தது. தாத்பரியம் (பாபாவின் நோக்கம்) அவர் மனத்தை எட்டிவிட்டது!

பிறகு அவர் வாடாவிற்கு (சத்திரத்திற்கு) திரும்பியபோது தீக்ஷிதரிடம் சொன்னார். "பாபாவின் வார்த்தைகள் இதயத்தைத் துளைப்பது போல் இருப்பினும், அவர் கூறியதனைத்தும் சரியே!-

"நான் நுழைந்தபோது பாபா விடுத்த சொல்லம்புகளெல்லாம் உண்மையில், மற்றவர்களைத் தூஷித்துப் பேசுவதிலும் இழிவாகப் பேசுவதிலும் என் மனம் ஈடுபடக்கூடாது என்று எனக்கு அளிக்கப்பட்ட எச்சரிப்பேயாகும்.-

"உடல் நலம் குன்றிய, எங்கள் நீதிபதி, ஓய்வெடுத்துக் கொள்வதற்காகவும் சுகமடைவதற்காகவும் விடுப்பு எடுத்துக்கொண்டு இங்கு (ஷிர்டிக்கு) வந்தார்.-

"அந்த சமயத்தில், வக்கீல்கள் ஓய்வெடுக்கும் கூடத்தில் நீதியபதியைப் பற்றிய பேச்சு எழுந்தது. சம்பந்தமே இல்லாதவர்கள் விவாதத்திலும் வாக்குவாதத்திலும் ஈடுபட்டனர். -

"வைத்தியம் செய்துகொண்டு சரியான மருந்துண்ணாமல் சாயியின் பின்னால் ஓடுவதால் மட்டும் சரீரத்தின் நோய்கள் 'நிவாரணம் ஆகிவிடுமா என்ன? நீதிபதி பதவியில் இருப்பவர் ஒருவர் இவ்வாறு செய்வது முறியா?" (என்றெல்லாம் விவாதிக்கப்பட்டது)-

"இவ்வாறாக நீதிபதியைப் பற்றிய நிந்தையும் புறம் பேசுதலும்  தொடர்ந்தன. ஏளனம் பாபாவையும் விட்டு வைக்கவில்லை. மிகச்சிறிய அளவாக இருக்கலாம்; ஆனால், நானும் அந்த தூஷணைக்கு உடந்தையாக இருந்தேன். அது தகாத செயல் என்பதையே பாபா ஆக்ஷேபனம் (மறுப்பு) செய்து என்னை எச்சரித்தார். -

"பாபா என்னைத் திட்டவில்லை; அனுக்கிரஹமே செய்திருக்கிறார். வீணான வாதங்களையும் தர்க்கத்தையும் இகழ்ச்சியான விமரிசனங்களையும் நிந்தையையும் மற்றவர்களை  பற்றிய தீய எண்ணங்களையும் அறவே ஒழித்துவிடு என்று போதித்து எனக்கு அனுக்கிரஹம் செய்திருக்கிறார். -

"நூறு மைல்களுக்கப்பால் இச்சம்பவம் நடந்ததெனினும், சாயி ஒவ்வொருவர் மனதையும் அறிந்திருக்கிறார் என்பதற்கு  இன்னுமொரு நிரூபணம் கிடைத்துவிட்டது. அவர் எங்கு நடப்பதையும் அறியும் சக்தி படைத்தவரல்லரோ !-

"இன்னொரு விஷயமும் தெளிவாகிவிட்டது. குன்றுகளும் மலைகளும் நடுவே தடையாக இருந்தபோதிலும் சாயிநாதரின் பார்வையில் இருந்து எதையும் மறைக்க முடியாது. பரம ரகசியமாக நாம் கருதும் விஷயமும் அவர் முன்னே திறந்து கிடக்கிறது. " 


Thursday, 20 April 2017

ஷீர்டி சாயி சத்சரிதம்

ஏழாவதாக, தாஸ்யம் (அடிமைபோல் சேவை செய்தல்),
எட்டாவதாக, சக்யம் (தோழமை கொள்ளுதல்),
ஒன்பதாவதாக, ஆத்மநிவேதனம் (தன்னையே இறைவனுக்கு அர்ப்பணம் செய்தல்).-

"நவ வித பக்திகளில் ஏதாவது ஒன்றையாவது பூரணமான பாவத்துடன் கடைபிடித்தால், வேறெதையும் வேண்டாத ஸ்ரீஹரி, பக்தனுக்கு தம்மை வெளிப்படுத்துவார்.-

"பக்தியில்லாத ஜபமும் தவமும் விரதங்களும் யோகசாதனைகளும் வேதங்களையும், உபநிஷதங்களையும் பரிசீலனை செய்வதும் பலமாக ஆத்ம ஞானப் பிரவசனம் செய்வதும் (இவையனைத்தும்) வீண்.-

"வேத சாஸ்திரங்களில் ஆழ்ந்த ஞானமோ ஞானி என்கிற உலகளாவிய கீர்த்தியோ வறண்ட, அன்பில்லாத பக்தியோ உபயோகமில்லை. அன்பு நிறைந்த பக்தியே தேவை. -

"உம்மை அந்த வியாபாரியாக அறிந்து கொள்வீராக! அந்த நிகழ்ச்சியின் உட்பொருளை புரிந்து கொள்வீராக! ஒன்பது விதமான பக்தி என்னும் கோடி ஏற்றப்படும்போது இறைவன் உல்லாசமடைகிறான்.-

"குதிரை ஒன்பது லத்திகள் சாணமிட்டது. வியாபாரி அதை ஆவலுடன் ஓடிப் பிடித்தான். அம்மாதிரியாகவே நீர் நவவித பக்தியைக் கெட்டியாக பிடித்துக் கொண்டால், உமது மனம் சாந்தியில் திளைக்கும். -

"அதுவே உம்முடைய மனத்தை உறுதிப்படுத்திக் கம்பீரமாக்கும்; எல்லா உயிர்களிடத்தும் நல்லுணர்வை ஊட்டும். அது இல்லையெனில், மனம் சஞ்சலப் பட்டுக்கொண்டு  அலைபாயும். இவ்வாறு குருவரர் பிரேமையுடன் கூறுகிறார்."

அடுத்த நாள் சாயி பாதங்களுக்கு வந்தனம் செய்யச் சென்றபோது, "என்ன, குதிரைச் சாணி லத்திகளை உம்முடைய அங்கவஸ்திரத்தில் (மேல்துண்டில்) கட்டிவிட்டீரா?"  என்று பாபா கேட்டார்.

அனந்தராவ் பிரார்த்தனை செய்தார், "இந்த தீனனின்மேல் உங்களுக்கு தயவிருந்தால் அவற்றை சுலபமாகச் சேர்த்துக் கட்டிவிட முடியும். அப்படியென்ன முடியாத விஷயமா  அது?"

பாபா அவரை ஆசீர்வதித்து, 'மங்களமுண்டாகும்' என்று உறுதி அளித்தார். அவ்வார்த்தைகளை கேட்ட அனந்தராவ் மகிழ்ச்சி கடலில் மூழ்கினார்; சுகத்தை அனுபவித்தார்.

செவி மடுப்பவர்களே! இப்பொழுது இன்னுமொரு சிறுகதையை பயபக்தியுடன் கேளுங்கள். பாபாவினுடைய அந்தர் ஞானத்தை (எங்கு நடப்பதையும் அறியும் சக்தியைப்) பற்றியும் பக்தர்களை நல்வழிப்படுத்தும் முறையையும் அறிந்துகொள்வீர்கள்.

ஒருசமயம் ஒரு வக்கீல் ஷிர்டிக்கு வந்தவுடனே மசூதிக்கு சென்றார். சாயிநாதரை தரிசனம் செய்துவிட்டு பாதங்களில் வணங்கினார்.

தாம் கொண்டு வந்திருந்த தக்ஷிணையை கொடுத்துவிட்டு உடனே ஒரு பக்கத்தில் அமர்ந்தார். அங்கு நடந்து கொண்டிருந்த சாயியின் சம்பாஷணையை கேட்க ஆவல் கொண்டார். 


Thursday, 13 April 2017

ஷீர்டி சாயி சத்சரிதம்

"ஆகவே, தவக்கடலான மஹாராஜரே! உம்முடையை பாதங்களை நாடிப் பணிவுடன் வந்திருக்கிறேன். என்னுடைய மனம் சஞ்சலமடையாது நிலையான சாந்தியைப் பெற ஆசீர்வாதம் செய்யுங்கள்".

மஹராஜ் இதன் பிறகு ஓர் உருவகக் கதை சொன்னார். அதைக்கேட்ட அனந்தராவ் தாம் கற்ற கல்வி பலனளித்துவிட்டது என்று சமாதானமடைந்தார்.

பரம சாரமுள்ளதும் சுருக்கமானதுமான அக் கதையை இப்பொழுது சொல்கிறேன்; கவனமாக கேளுங்கள். நகைச்சுவை மிகுந்ததாயினும் போதனை நிறைந்த இக் கதையை யார் அனாதரவு செய்ய முடியும்?

பாபா கேள்விக்கு பதில் கூறினார், "ஒரு சமயம் வியாபாரி ஒருவன் இங்கு வந்தான். அவனெதிரில் இருந்த குதிரை ஒன்பது (சாணி) லத்திகளைப் போட்டது. -

"வியாபாரி செயல் முனைப்பு உடையவனானதால் சட்டென்று தன்னுடைய அங்கவஸ்திரத்தை விரித்தான். ஒன்பது லத்திகளையும் ஜாக்கிரதையாக சேகரித்துக் கட்டிக்கொண்டான். ஒருமுனைப்பட்ட மனம் உடையவன் ஆனான்."

சமர்த்த சாயி தெரிவிக்க விரும்பியது என்ன? அதனுடைய உட்பொருள் என்ன? வியாபாரி (சாணி) லத்திகளை எதற்காகச் சேகரித்தான்? விஷயமென்னவென்றே புரியவில்லையே!

அனந்தராவ் இதைப்பற்றிச் சிந்தித்துச் சிந்தித்து, மசூதியில் இருந்து திரும்பி வந்து, நடந்த சம்பாஷணை முழுவதையும் தாதா  கேள்கரிடம் விவரித்தார்.

"யார் இந்த வியாபாரி? குதிரைச் சாணியால் யாருக்கு என்ன பிரயோஜனம்? ஏன் குறிப்பாக ஒன்பது லத்திகள்? இவையெல்லாம் பற்றி எனக்கு விளக்குங்கள்.-

"தாதா, இதென்ன புதிர்? என்னுடைய சிறுமதிக்கு எதுவும் விளங்கவில்லை. எனக்கு எளிமையாகவும் தெளிவாகவும் எடுத்துச் சொல்லுங்கள். பாபாவின் இதயத்தில் என்ன நினைத்தார் என்பது எனக்கு விளங்க வேண்டும்."

தாதா கூறினார், "பாபாவின் திருவாய்மொழியை முழுக்க என்னாலும் புரிந்துகொள்ள முடிவதில்லை. ஆயினும், அவர் தரும் உள்ளுணர்வால் நான் என்ன புரிந்துகொள்கிறேன் என்பதைச் சொல்கிறேன்.-

"குதிரை இறைவனின் அருள்; ஒன்பது (சாணி) லத்திகள் ஒன்பது விதமான பக்தியின் வெளிப்பாடுகள். பக்தியின்றிப் பரமேச்வரனை அடைய முடியாது. ஞானத்தால் மட்டும் அவனை அடையமுடியாது. -

"பக்தியின் வெளிப்பாடுகளை பற்றி இவ்விதம் அறிவீராக.
முதலாவதாக, சிரவணம் (இறைவனின் பெருமையைக் கேட்டல்),
இரண்டாவதாக, கீர்த்தனம் (இறைவனின் லீலைகளை பாடுதல்),
மூன்றாவதாக, ஸ்மாரணம் (இறைவனை நினைத்தல்),
நான்காவதாக, பாதசேவனம் (பாதங்களை கழுவுதல் - பிடித்து விடுதல்),
ஐந்தாவதாக, அர்ச்சனம் (மலர்களால் அர்ச்சனை செய்து பூஜித்தல்),
ஆறாவதாக, வந்தனம் (பணிதல் - நமஸ்காரம் செய்தல் - வணங்குதல்), 

 

Thursday, 6 April 2017

ஷீர்டி சாயி சத்சரிதம்

முதலில் நூலைக் கற்க வேண்டும்; பிறகு அதை பற்றிச் சிந்திக்க வேண்டும். ஆரம்பித்தில் இருந்து முடிவு வரை அதன்படி நடக்க வேண்டும். திரும்ப திரும்ப இம்மாதிரியே பாராயணம் செய்ய வேண்டும். கற்ற வழி நிற்க வேண்டும்.

வாசிப்பதே முடிவான காரியம் அன்று. அது நடைமுறைக்கு வரவேண்டும். இல்லையெனில், அது கவிழ்த்து வைக்கப்பட்ட பாத்திரத்தின்மேல் நீர் ஊற்றுவது போலாகும்.

அனுபவ ஞானம் அளிக்காத புத்தக ஞானம் வியர்த்தமாகும். ப்ரம்ம ஞானம் அடைந்த குருவின் கிருபை இல்லாது, வெறும் புத்தக ஞானம் பலனேதும் அளிக்காது.

புருஷார்த்தங்கள் (அறம், பொருள், இன்பம், வீடு), பக்தியின் உண்மை நிலை, இவற்றை விளக்கும் ஒரு சிறுகதையை இந்த சந்தர்ப்பத்தில் சொல்கிறேன். கேட்பவர்கள் தங்களுடைய நன்மை கருதி கவனமகாக கேட்கட்டும்.

புண்ணியப்பட்டணத்தில் (புனே) வசித்து வந்த அனந்தராவ் பாடன்கர் என்ற பெயர் கொண்ட பக்தரொருவர் சாயிதரிசனம் செய்ய ஆவல் கொண்டு ஷிர்டிக்கு வந்தார்.

அவர் வேதாந்தம் பயின்றவர்; உபநிஷதங்களையும் பாஷ்யங்களையும் (விரிவுரை) மூல மொழியான சமஸ்கிருதத்திலேயே படித்தவர். அவ்வளவு படிப்பும் அவருக்கு மனவமைதியை அளிக்கவில்லை. மனம் அலைபாய்ந்து கொண்டே இருந்தது.

சமர்த்த சாயியை தரிசனம் செய்தவுடனே அவர் சாந்தியடைந்தார். பாதங்களுக்கு நமஸ்காரம் செய்துவிட்டு சடங்குகளுடன் கூடிய பூசையும் செய்தார்.

கைகளைக் கூப்பி அஞ்சலி செய்துகொண்டு பாபாவின் எதிரில் உட்கார்ந்தார். பிரேமையுடன் கருணை வேண்டும் குரலில் கேட்டார்.

"பலவிதமான நூல்களை படித்துவிட்டேன்; வேதங்களின் சிகரமான உபநிஷதங்களையும் அத்யயனம் (மனப்பாடமாக ஓதுதல்) செய்துவிட்டேன். சத்தான சாஸ்திரங்களையும் புராணங்களையும் பிறர் சொல்லக் கேட்டுவிட்டேன். ஆயினும் ஏன் என் மனம் ஏக்கம் பிடித்தும் சோர்வடைந்தும் இருக்கிறது?-

"நான் வாசித்ததெல்லாம் வீண் என்று நினைக்காத தோன்றுகிறது. ஓரெழுத்தும் பயிலாத பாவ பக்தி உள்ளவர் என்னை விடச் சிறந்தவர் என்றே நினைக்கிறேன்.-

"நான் பல நூல்களைக் கற்றதும் சாஸ்திரங்களை பரிசீலனை செய்ததும் வீண். மனதிற்கு சாந்தியளிக்காத அனைத்துப் புத்தக ஞானமும் வீணே!-

"ஓ, சாஸ்திரங்களை குடைந்து ஆராய்வது எவ்வளவு சாரமில்லாத விஷயம்! மஹாவாக்கியங்களை ஜபம் செய்தும் மனவமைதி பிறக்கவில்லையெனில் ஜபம் செய்வதால் என்ன பிரயோஜனம்? ஓ, மனவமைதியே கிடைக்கவில்லை எனில் ப்ரம்ம ஞானம் எங்கிருந்து கிடைக்கும்?-

"சாயி தரிசனம் மனக்கவலைகளை அகற்றிவிடுகிறதென்றும், சாந்தியை அளிக்கிறதென்றும், ஈதனைத்தும் உல்லாசமான தமாஷ் பேச்சிலேயே நடந்துவிடுகிறதென்றும், சாயி மிக சுலபமாக பக்தருக்கு நல்வழி காட்டுகிறாரென்றும் செவி வழிச் செய்தியாக அறிந்தேன்.- 


Thursday, 30 March 2017

ஷீர்டி சாயி சத்சரிதம்

டாகூர் ஷிர்டிக்கு கிளம்பிய அன்றே நானா ஷிர்டியில் இருந்து கிளம்பிவிட்டார். டாகூர் மனமுடைந்து போனார்.

ஆயினும் அங்கு இன்னொரு நல்ல நண்பரை சந்தித்தார். அவருடைய உதவியால் சாயிதரிசனம் செய்து பெருமகிழ்ச்சி அடைந்தார்.

பாதங்களை தரிசனம் செய்த மாத்திரத்தில் பலமாக ஈர்க்கப்பட்டு, சாஷ்டாங்கமாக நமஸ்காரம் செய்தார். உணர்ச்சிவசத்தால் சரீரம் புளங்காகிதம்(மெய்சிலிர்ப்பு) அடைந்தது. கண்களில் ஆனந்தக் கண்ணீர் பெருகியது.

பிறகு சிறிது நேரம் பாபாவின் சந்நிதியில் நின்றார். முக்காலமும் அறிந்த பாபா முகத்தில் புன்னகை தவழ அவரிடம் என்ன சொன்னார் என்பதைக் கவனமாக கேளுங்கள்.

"கன்னட அப்பா உமக்கு சொன்னது எருமைக்கடாவின் மேல் ஏறிக்கொண்டு ஒரு கணவாயைக் கடப்பது போலாகும். ஆனால், இந்தப் பாதையில் நடப்பது கடினமாகும். உடலின் அங்கங்கள் தேயுமாறு உழைத்தாக வேண்டும்."

இந்த அர்த்தபுஷ்டியுள்ள வார்த்தைகள் காதுகளில் விழுந்தவுடனே டாகூரின் இதயம் மகிழ்ச்சியில் பொங்கி வழிந்தது. முன்பு ஒரு சத்புருஷர் சொன்ன வார்த்தைகள் நேரிடை அனுபவமாக மலர்வதை உணர்ந்தார்.

இரண்டு கைகளையும் கூப்பிக்கொண்டு சாயிபாதங்களில் சிரம் வைத்து அவர் கூறினார், "மஹராஜ், அனாதையான எனக்கு கிருபை செய்யுங்கள்; என்னை ஆதரியுங்கள்.-

"நீங்களே என் மஹாபுருஷர். நிச்சலதாஸரின் நூல் செய்யும் உபதேசத்தை முழுமையாக இன்றுதான் நான் புரிந்துகொண்டு ஆனந்தமடைந்தேன்.-

"ஓ, வட்காங்வ் எங்கே, ஷீர்டி எங்கே? சத்புருஷரும் மஹாபுருஷருமான இந்த ஜோடி என்னே! எவ்வளவு தெளிவான, சுருக்கமான பாஷை! உபதேசம் செய்யும் திறமைதான் என்னே!-

"ஒருவர் சொன்னார், 'புத்தகத்தைப் படி; பிற்காலத்தில் நீ ஒரு மஹாபுருஷரை சந்திப்பாய். நீ எவ்வழி நடக்கவேண்டுமென்று உபதேசித்து அவர் வழிகாட்டுவார்'. (என்று)-

"தெய்வபலத்தால் அவரை சந்தித்து விட்டேன். அவரும் தாம்தான் அம் மஹான் என்பதை குறிப்பால் அறிவித்துவிட்டார். முதல்வர் சொன்னவாறு நான் அந்நூலைப் படித்தேன். இப்பொழுது இரண்டாமவருடைய உபதேசத்தின்படி நடக்க வேண்டும்."

சாயிநாதர் அவரிடம் சொன்னார், "கன்னட அப்பா உமக்குச் சொன்னது அனைத்தும் யதார்த்தமே (உண்மை நிலை)! ஆனால், அவையனைத்தையும் செயல்முறையில் கொண்டுவந்தால்தான் உம்முடைய மனோரதங்கள் நிறைவேறும்."

வட்காங்வில் நிச்சலதாஸரின் விசாரசாகரம் பக்தரின் நன்மைக்காகப் பரிந்துரைக்கப்பட்டது. சிறுது காலம் சென்று பின், நூலை பாராயணம் செய்து முடித்த பிறகு, அதை எவ்வாறு நடைமுறைக்கு கொண்டுவருவது என்பது ஷிர்டியில் கற்றுக் கொடுக்கப்பட்டது.  


Thursday, 23 March 2017

ஷீர்டி சாயி சத்சரிதம்

"இருவருமே சென்று தரிசனம் செய்வோம். அவருக்கு நமஸ்காரம் செய்வோம்; ஓரிரு நாள்கள் அங்கே தங்கிவிட்டு கல்யாண் திரும்புவோம்."

ஆனால், அன்றைய தினமே தானே சிவில் கோர்ட்டில் ஒரு வழக்கு விஷயமாக டாகூர் ஆஜராக வேண்டியிருந்தது. ஆகவே, அவர் சாந்தோர்கருடன் ஷீர்டி செல்லும் யோசனையை கைவிட வேண்டியதாயிற்று.

'பாபா சர்வ சக்திகளும் வாய்ந்தவர்; உம்முடைய தரிசன வேட்கையை நிறைவேற்றுவார். கோர்ட்டு  வழக்கு என்ன பெரிய சமாசாரம்!' என்று நானா சாஹேப் கூறியது வீணாகப் போயிற்று.

அவரை சம்மதிக்க வைக்க முடியவில்லை. கோர்ட்டு வழக்கிற்கு போகாமல் இருக்க பயப்பட்டார். நெற்றியில் எழுதப்பட்ட விதியின்படி வீணாக அலையாமல் யாரால் இருக்க முடியும்?

பாபாவை தரிசனம் செய்ய வேண்டுமென்கிற தீவிர வேட்கை இருக்கும்போது, எவ்வாறு எல்லா விக்கினங்களும் உடைத்தெறியப்படுகின்றன என்பதை தம்முடைய பழைய அனுபவங்களில் இருந்து நானா விவரித்தார்.

ஆனால், டாகூர் நானாவை நம்புமளவிற்கு தம்மைத் தாமே இசைபட வைக்க முடியவில்லை. ஒருவருடைய இயற்கையான குணத்தை மாற்றிக்கொள்ள முடியுமா? அவர் சொன்னார், "முதலில் இந்தக் கோர்ட்டு வழக்கை ஒரு முடிவிற்கு கொண்டுவந்து விட்டு, என் மனதின் அரிப்பை ஒழித்துவிடுகிறேன்."

ஆகவே, அவர் தானேவுக்கும் சாந்தோர்கர் ஷிர்டிக்கும் கிளம்பினர். நானா பாபா தரிசனத்தை முடித்துக்கொண்டு திரும்பினார். இதனிடையே தானேயில் ஓர் அதிசயம் நிகழ்ந்தது.

வழக்கு விசாரணைக்காக டாகூர் அங்கு இருந்தபோதிலும், வழக்கு வேறொரு நாளுக்கு ஒத்திவைக்கப்பட்டது. சாந்தோர்கரும் சென்று விட்டார். டாகூர் உள்ளுக்குள் வெட்கமடைந்தார்.

"ஓ, நான் அவரை நம்பியிருந்தால் எவ்வளவு நன்றாக இருந்திருக்கும்? சாந்தோர்கர் என்னையும் தம்முடன் அழைத்துக்கொண்டு  போய் தரிசனம் செய்துவைத்திருப்பார். ஷிரிடியில் மனம் நிறையும் வரை தரிசனம் செய்திருப்பேன்.-

"இப்பொழுது கோர்ட்டு வேலையும் நடக்கவில்லை; ஞானியை தரிசனம் செய்யும் வாய்ப்பையும் இழந்துவிட்டேன்" என்று நினைத்துக்கொண்டு  டாகூர் உடனே ஷிர்டிக்கு கிளம்பினார்.

"ஷிர்டிக்கு போய் நானாவை சந்திக்கும் அதிர்ஷ்டம் இருந்தால், அவரே என்னை சாயிநாதரின் அரவணைப்பில் சேர்த்துவிட்டால், நான் மகிழ்ச்சியடைவேன்" என்று அவர் நினைத்தார்.

"ஷிர்டியில் எனக்கு யாரையுமே தெரியாது; எனக்கு முற்றும் புதிதான இடமாகும். நானாவை அங்கே சந்தித்துவிட்டால் விஷேஷம்; ஆனால், அதற்கு வாய்ப்புக்குறைவாக தெரிகிறது."

இவ்வாறு சிந்தித்துக்கொண்டே அவர் ரயில் ஏறி மறுநாள் ஷீர்டி போய்ச் சேர்ந்தார். நானா அங்கு இல்லை. 


Thursday, 16 March 2017

ஷீர்டி சாயி சத்சரிதம்

"சரி, நீர் இப்பொழுது போகலாம். இந்த நூலைப் படித்துப் பாரும். அவ்வாறு செய்வதால் உம்முடைய மனோரதங்கள் அனைத்தும் நிறைவேறும். இதை நினைவில் வைத்துக்கொள்ளும். -

"பிற்காலத்தில் வேலை விஷயமாக வடதேசம் செல்லும்போது, நீர் செய்த மஹாபாக்யத்தால் வழியில் ஒரு மஹாபுருஷரை சந்திப்பீர்.-

"அவர் உமக்கு மார்க்கத்தைக் காட்டுவார்; உம்முடைய மனத்திற்கு உறுதியையும் சாந்தியையும் அளிப்பார். அவரே உமக்கு உபதேசங்களை அளித்து உமது மனதில் நன்கு பதியவைத்து விடுவார்."

அவ்விடத்தில் வேலை முடிந்துவிட்டதால், தாகூர் புனே ஜில்லாவிலுள்ள ஜூன்னருக்கு மாற்றப்பட்டார். அங்கே போவதற்கு மிக உயரமானதும் கடப்பதற்கு அபாயகரமானதுமான நானேகாட்டைக் கடந்துதான் செல்லவேண்டும். 

அந்த வழி ஆபத்துக்கள் நிறைந்தது. எருமை மாட்டின்மேல் சவாரி செய்துதான் கடக்க வேண்டும். போக்குவரத்து வாஹனம் வேறெதுவுமில்லாததால், ஓர் எருமைக்கடா, சவாரி செய்வதற்காக அண்மையில் இருந்து கொண்டுவரப்பட்டது. 

எதிர்காலத்தில் வாழ்க்கையில் முன்னேறிய பின், அவருக்கு குதிரையோ மோட்டார் வாகனமோ கிடைக்கலாம். ஆனால், அன்றைய நிலையில் அங்கே கிடைத்த எருமைக்கடாவின் மேல்தான் அவருடைய பிரயாணத்தை சாமர்த்தியமாக சமாளிக்க வேண்டியிருந்தது. 

எருமைக்கடாவின் உதவியின்றி மலையைக் காலால் நடந்து கடக்க முடியாது. வேறு எந்த வாகனமும் அங்கே கிடையாது. இதுவே நானே காட்டின் அற்புதம்; வாகனமும் அபூர்வம்!

ஆகவே, அவர் தம் மனத்தை உறுதிசெய்துகொண்டு  எருமைக்கடாவின் முதுகில் ஒரு சிறுமெத்தையைக் கட்டிச் சேணம் பூட்டச் செய்து, மிகவும் சிரமப்பட்டு ஏறி உட்கார்ந்தார். 

ஏறி உட்கார்ந்துவிட்டாரே தவிர, ஏற்றம் மிகச் செங்குத்தாக இருந்தது. அபூர்வமான வாஹனமாகிய எருமைக்கடாவின் திடீர் அசைவுகளும் ஆட்டமும் குலுக்கலும் சாய்தலுந்தானே என்னே! அவருடைய முதுகு சுளுக்கிக்கொண்டு வலித்தது. 

ஒரு வழியாகப் பயணம் முடிந்தது. ஜூன்னரில் காரியாக்கிரமங்கள் நன்கு நிறைவேறின. பதவியிட மாற்ற ஆணையும் வந்தது. அவ்விடத்தில் இருந்து கிளம்பிவிட்டார். 

பதவி இடமாற்றம் கல்யாண் என்னும் நகருக்கு கிடைத்தது. அங்கு நானா சாந்தோர்கரை சந்தித்தார். சாயிநாதரின் கீர்த்தியை அவரிடமிருந்து கேட்டவுடன் டாகூருக்கும் தரிசனம் செய்ய வேண்டுமென்ற ஆவல் எழுந்தது. 

அடுத்த நாளே அதற்கு வேளையும் வந்தது. சாந்தோர்கர் ஷீர்டி செல்ல ஆயுத்தம் செய்துகொண்டே சொன்னார், "வாரும், இம்முறை நாமிருவரும் கூட்டமாகச் செல்லலாம்.-Thursday, 9 March 2017

ஷீர்டி சாயி சத்சரிதம்

இந்தப் பதவியை மக்கள் ஒருகாலத்தில் பெரிதும் மதித்தனர். உத்தியோகஸ்தர்களுக்கும் இப் பதவியின் அதிகாரத்தை அனுபவிக்க வேண்டும் என்ற பெருவேட்கை அப்பொழுது இருந்தது. பரஸ்பரம் ஆனந்தமடைந்தனர். ஆனால், அக்காலம் இப்பொழுது மலையேறிவிட்டது.

தற்காலத்தில் இப் பதவியில் இருக்கும் சிரமத்தையும் பிடுங்கல்களையும் யாரால் விவரிக்க முடியும்? இப் பதவி சுகமான உத்தியோகமாக இருந்தது பழைய காலம். இப்பொழுதோ பொறுப்புகளின் சுமையே அதிகம். வருமானமென்னவோ நிறைய உண்டு.

மேலும், எவ்வளவு கடுமையாகவும் நேர்மையாகவும் உழைத்தாலும், மாமலத்தார் பதவிக்கு டெபுடி கலெக்டருக்கு இணையாக முன்பிருந்த மரியாதையும் காம்பீர்யமும் தற்பொழுது இல்லாமற்போய் விட்டன.

மேலும், இந்த அதிகாரமான பதவியை அடைவதில் பணம் செலவு செய்யாமலும் சிரமப்பட்டு தொடர்முயற்சியாக படிக்காமலும் யாரால் வெற்றிபெற முடியும்?

முதலில் பி.ஏ. பரீட்சையில் வெற்றிபெற வேண்டும். பிறகு, வரிவசூல் இலாகாவில் மாதம் ரூ. 30 /- சம்பளத்தில் குமாஸ்தா வேலை கிடைக்கும். பிறகு, இந்த மார்க்கத்தில் மெதுவாக முன்னேற வேண்டும்.

காலம் வந்தபோது அவர் மலைகளைத் தாண்டி (மேற்குத் தொடர்ச்சி மலைகள்) கிழக்கு நோக்கிச் சமவெளிக்குப் போகவேண்டும். நிலங்களை அளக்கும் பயிற்சி பெறவேண்டும். சர்வேயர்களுடன் தங்கியிருக்க வேண்டும். அப்பொழுதுதான் இலாகாவின் துறைத் தேர்வுகளில் வெற்றிபெறமுடியும்.

பிறகு, உயர்பதவிகளில் இருப்பவர்களில் யாராவது ஒருவர் வைகுண்ட பதவி அடைவதால் ஏற்படும் காலியிடம் இவருடைய முன்னேற்றத்திற்கு உதவியாக இருக்கும்.

போதும் இந்த வத வதவென்ற விவரணம். உளறிக்கொண்டே போவதில் பிரயோஜனம் என்ன? இம்மாதிரியான அதிகாரிகளில் ஒருவர் சாயியை சந்தித்த காதையைக் கேளுங்கள்.

பெல்காமிற்கு சமீபத்தில் வட்காங்வ் என்றொரு கிராமம் இருக்கிறது. அங்கு, ஓர் சமயம் சர்வேயர் (நில அளவு செய்பவர்கள்) பிரிவு ஒன்று வந்து முகாமிட்டது.

அந்த கிராமத்தில் ஒரு ஞானி இருந்தார். டாகூர் அந்த ஞானியை தரிசனம் செய்து பாதங்களில் வணங்கி, ஆசீர்வாதமும் பிரசாதமும் பெற்றார்.

அந்த சமயத்தில் அந்த ஞானி, நிச்சலதாஸர் இயற்றிய விசார சாகரம் எனும் நூலைப் படித்துக்கொண்டிருந்தார்.

சிறிது நேரம் கழித்து, டாகூர் விடைபெறுவதற்காக எழுந்தபோது அந்த ஞானி மகிழ்ச்சியுடன் அவரிடம் என்ன சொன்னார் என்பதைக் கேளுங்கள். 


Thursday, 2 March 2017

ஷீர்டி சாயி சத்சரிதம்

ஆயிரக்கணக்கில் மக்கள் அங்கு தரிசனத்திற்கு கூடினர்; நானும் அங்கு எதற்காக ஓட வேண்டும். இனூஸ் செய்த தொந்தரவு பொறுக்கமுடியவில்லை என்பதற்காகவா நானும் தரிசனம் செய்யப் போகவேண்டும்? என்னுடைய கௌரவம் என்னாவது?

ஒவ்வொரு தடவையும் இவ்வாறான சிந்தனை ஏதாவது மனதில் உதித்தது. கடைசிவரை நான் தரிசனத்திற்கு போகவேயில்லை. என்னுடைய நிழலை பார்த்து நானே பயந்தேன் போலும்! துரதிஷ்டம் என்னை தடுத்துவிட்டதாகவும் எடுத்துக் கொள்ளலாம்.

பல ஆண்டுகள் இவ்விதமாக உருண்டன. பிறகு நான் அங்கிருந்து பணிமாற்றம் செய்யப்பட்டேன். பல ஆண்டுகளுக்கு பிறகு நல்ல காலம் பிறந்தது; ஷிரிடியுடன் அகண்டமான (முழுமையான) உறவு ஏற்பட்டது.

தாத்பரியம் என்னவென்றால், ஞானிகளின் சங்கம் அபாக்யசாலிகளுக்குக் கிடைப்பதில்லை. இறைவனுடைய கிருபை இருந்தால் சுலபமாக கிடைக்கிறது. அது இல்லையெனில் குருதரிசன யோகமே அமைவதில்லை.

செவிமடுப்பவர்களே, இப்பொழுது இவ்விஷயமாக ஒரு சுவாரஸ்யமான கதை சொல்கிறேன்; பயபக்தியுடன் கேளுங்கள். காலங்காலமாக ஞானிகள் எவ்வாறு ஒருவருக்கொருவர் கமுக்கமான உறவும் பரிவர்தனையும் வைத்திருந்தனர் என்பதை பாருங்கள்.

காலம், வர்த்தமனாம் (நிகழ்வுகள்) இவற்றுக்கு ஏற்றவாறும் அவர்களுடைய விருப்பத்திற்கேற்றவாறும் காரண காரியத்துடன் ஞானிகள் அவதாரம் செய்கிறார்கள். ஆயினும், அவர்கள் பரஸ்பரம் (ஒருவருக்கொருவர்) வேறுபட்டவர்களாவர்.

தேசமும் காலமும் காரணமும் வேறுபட்டாலும், ஒரு ஞானிக்கு மற்றொரு ஞானியின் மனம் நன்கு தெரியும். உள்ளுக்குள் அவர்கள் அனைவரும் ஒருவரே.

எவ்வாறு ஓர் உலகையாளும் சக்கரவர்த்தி ஒவ்வொரு தேசத்திலும் ஓர் அதிகாரியை நியமித்து தம்முடைய சாம்ராஜ்யத்திற்கு முன்னேற்றத்தையும் செழுமையையும் கொண்டுவருகிறாரோ,-

அவ்வாறே ஆத்மானந்தமாகிய சக்கரவர்த்தி பல இடங்களில் தோன்றி சூக்குமமான முறையில் தம்முடைய ராஜ்ஜியம் என்னும் சக்கரத்தை சுழற்றுகிறார்.

ஆங்கில படிப்புப் படிக்கும் பாக்கியம் கிடைத்து பி.ஏ பட்டம் பெற்ற தாகூர் என்ற நற்குடிமகன் ஒருவர் இருந்தார். படிப்படியாக வாழ்க்கையில் உயர்ந்து பெயர் பெற்ற அதிகாரியாக விளங்கினார்.

சில வருடங்களில் அவர் ஒரு மாம்லதாராக உயர்ந்தார். மேலும் உயர்ந்து டெபுடி கலெக்டர் பதவி பெற்றார். தெய்வப் பிராப்தியாக அவருக்கு சாயி பாபாவிடம் உபதேசம் பெறும் அதிர்ஷ்டம் வாய்த்தது.

மாம்லத்தார் பதவி தூரத்திலிருந்த பச்சைப் பசேலென்று தெரியும் மலையைப் போன்று வசீகரமானதுதான். அருகில் சென்று பார்த்தால்தான் எட்டி மரங்கள் அடர்ந்திருப்பது தெரியும். ஆயினும், கௌரவத்தில் என்னவோ அது உயர்ந்த பதவிதான். 


Thursday, 23 February 2017

ஷீர்டி சாய் சத்சரிதம் 

21 . அருள் மழை பொழிந்தது!

ஓம் ஸ்ரீ விநாயகனே போற்றி! ஸ்ரீ சரஸ்வதியே போற்றி!

கடந்த அத்தியாயத்தில் ஏற்கனேவே குறிப்பிட்டவாறு தாகூரும் மற்றவர்களும் இம்மஹா புருஷரை எப்படி தரிசனம் செய்தார்கள் என்பதை விவரிக்கிறேன். ஒருமுகப்பட்ட மனதுடன் கேளுங்கள். 

கேட்பவர்களை ரோமாஞ்சனம் (மயிர்கூச்செறிதல்) அடையச் செய்யாததும் ஆனந்தத்தால் ஊஞ்சலாட செய்யாததுமான, பிரவசனம் செய்பவரின் சொற்கள் வியர்த்தனமானவை அல்லவா?

கேட்பவர்களை மனம் மகிழச் செய்யாததும் உணர்ச்சி வசத்தால் தொண்டையை அடைக்கச் செய்யாததும் ஆனந்தக்கண்ணீர் பெருகி கன்னத்தில் வழியும்படி செய்யாததுமான கதை என்ன கதை? உபயோகமில்லாத கதை. 

மனோகரமான பேச்சை உடையவரும் உலகம் காணாத உபதேசமுறைகளைக் கையாள்பவரும் தினந்தினம் புதுப்புது அற்புத லீலைகளை புரிபவருமான பாபாவின் பாதங்களில் என் நெற்றியை வைத்து வணங்குகிறேன். 

தெய்வ அனுக்கிரஹம் இல்லாமல் எவருக்கும் சாதுக்களையும் ஞானிகளையும்  தரிசிக்கும் பாக்கியம் கிடைக்காது. அவ்வாறான ஒரு மஹாபுருஷர் அருகிலேயே வந்தாலும் பாவிகளின் கண்களுக்கு அவர் தெரியாமற் போய்விடுவார். 

இது எந்த அளவிற்கு உண்மையென்பதை நிரூபிக்கத் தேசமெங்கும் அலைய வேண்டியதில்லை; அந்நிய தேசத்துக்கும் செல்ல வேண்டியதில்லை. ஏன், கேப்டவர்களுக்கு என்னுடைய அனுபவத்தையே எடுத்துரைக்கிறேன். 

பாந்த்ரா நகரத்தில் பீர் மௌலானா என்ற பிரசித்தி பெற்ற சித்தர் ஒருவர் வாழ்ந்து வந்தார். அவருடைய புண்ணிய தரிசனத்திற்காக ஹிந்துக்களும் பார்சிக்களும் மற்ற மதத்தை சார்ந்தவர்களும் அறிஞர்களும் பெருமக்களும் வந்தனர். 

நான் அந்த நகரத்தில் அப்பொழுது மாஜிஸ்திரேட்டாக உத்தியோகம் பார்த்துவந்தேன். பீர் மௌலானாவுக்கு இனூஸ் என்ற பக்தரொருவர் சேவை செய்துவந்தார். இந்த இனூஸ் என்னை தரிசனத்திற்கு வருமாறு இரவு பகலாக தொந்தரவு செய்துகொண்டிருந்தார். 


Thursday, 16 February 2017

ஷீர்டி சாயி சத்சரிதம்

அடுத்த அத்தியாயத்தில் விநாயக் தாகூரின் காதையும் இன்னும் சில கதைகளும் சொல்லப்படும். செவிமடுப்பவர்கள் பயபக்தியுடன் கேட்டால் ஆன்மீக முன்னேற்றம் ஏற்படும்.

இக் காதைகள் இனிமையானவை; கேட்பதால், மஹாபுருஷர்களை தரிசனம் செய்யவேண்டுமென்ற பக்தர்களின் ஆவலும் பூர்த்தியாகும்.

தினமணி (சூரியன்) உதித்தவுடன் இருள் எவ்வாறு விரட்டப்படுகிறதோ, அவ்வாறே இக்கதாமிருதம் மாயையை விரட்டிவிடும்.

சாயியின் லீலைகள் எண்ணத்திற்கும் செயல் / விளைவு சிந்தனைக்கும் அப்பாற்பட்டவை. அவரைத் தவிர வேறு யாரால் அவற்றை விவரிக்க முடியும்? நான் ஒரு கருவி மாத்திரமே அல்லேனோ? அவரே என்னை பேசவைப்பார்.

எல்லாருக்கும் க்ஷேமம் உண்டாகட்டும்! ஞானிகளாலும் சான்றோர்களாலும் உணர்வூட்டப்பட்டு, சாயி பக்தன் ஹேமாட் பந்தால் இயற்றப்பட்ட, 'ஸ்ரீ சாயி சத் சரிதம்' என்னும் காவியத்தில், 'ஈசாவாஸ்ய பாவார்த்த போதனம்' என்னும் இருபதாவது அத்தியாயம் முற்றும்.

ஸ்ரீ சத் குரு சாயிநாதருக்கு அர்ப்பணம் ஆகட்டும்.

சுபம் உண்டாகட்டும். 


Wednesday, 8 February 2017

ஷீர்டி சாயி சத்சரிதம்

இவ்வுலகத்தைப் பற்றிய இந்த விவேகம் மனதிற்கு ஏற்புடையதாகவிட்டாலும், பணத்தையும் பொன்னையும் தேடி அலைவதையாவது விட்டுவிடு.

இதையும் செய்யமுடியாவிட்டால், நீ சாகும்வரை, நூறு வருடங்களாயினும் சரி, கர்மம் செய்துகொண்டிருப்பதற்குத்தான் தகுதியுடையவன்!

அந்தக் கர்மமும் சாஸ்திரங்களில் விதிக்கப்பட்டவாறு உன்னுடைய வர்ணத்திற்கும் ஆசிரமத்திற்கும் ஏற்றவாறே செய்யவேண்டும். அக்கினிஹோத்திரம் போன்ற கர்மாக்களை விதிகளின்படி சடங்குபூர்வமாக மனம் பரிசுத்தமடையும் வரை செய்ய வேண்டும்.

தன்னைத் தூய்மைப்படுத்திக்கொள்ள இது ஒரு வழி(கர்ம யோகம்); இரண்டாவது வழி சர்வ சங்க பரித்யாகம் (எல்லாத் தொடர்புகளையும் துறந்துவிடுதல் - துறவறம்). இவ்விரண்டையும் அனுசரிக்கமுடியாத நிலையில், வாழ்க்கையின் சுகங்களையும் துக்கங்களையும் விதி வழங்கியவாறு அனுபவித்துக்கொண்டு, உழல வேண்டியதுதான்.

ஒவ்வொரு பக்தனுடைய ஆன்மீக அதிகாரத்தை நன்கு அறிந்த சத்குரு, பிரம்ம வித்தையான உபநிஷத ஞானத்தை எல்லாருக்கும் கொடுத்துவிட மாட்டார். ஏனெனில், அபேத பாவத்தை அடையாதவனுக்கு உபநிஷதம் வெறும் சொற்களே.

ஆயினும், ஞானத்தை தேடுபவர்கள் முதற்கட்டத்தில் இதையே கேட்பதால், 'சொல்லுக்குச் சொல் நிலை' ஞானத்தையும் அளிக்கவேண்டியிருக்கிறது. ஆகையினால்தான், 'வேலைகாரச் சிறுமி விளக்கமளிப்பாள்' என்று சொல்லி, பாபா அவரைத் திருப்பி அனுப்பினார்.

பாபாவே விளக்கமளித்து அனுப்பிவிட்டிருந்தால், இந்த சுவையான நிகழ்ச்சி நடைபெற்றிருக்காது. 'இருப்பது ஒன்றே; அதைத் தவிர வேறெதுவுமே இல்லை' என்ற தத்துவம் தாசகனவின் மனதில் பதிந்திருக்காது.

காகா வீடு வேலைகாரச் சிறுமியும் நான் அல்லேனோ? 'நான்தான் அவள்' என்றும் குறிப்பை பாபா அவருக்களித்து, அவருடைய நேரிடை அனுபவத்தாலேயே உபநிஷதத்தின் தாத்பரியத்தை விளக்கினார்.

பரமேச்வரனுடைய அனுக்கிரஹம் சிறிதளவும், சத் குருவினுடைய அனுக்கிரஹம் விஷேஷமாகவும் இல்லாவிட்டால், ஆத்மஞான மார்க்கத்தில் பிரவேசிக்க முடியாது. ஒரு சித்தரின் உபதேசம் தேவை.

ஆத்மஞானத்தைப் பற்றிய சாஸ்திரங்களையே காதால் கேளுங்கள். 'நான் அனைத்திலும் வியாபித்திருக்கிறேன்; என்னைத் தவிர எங்குமே வேறெதுவுமில்லை' என்ற சிந்தனை செய்யுங்கள்.

இவ்வாறாக, ஆத்ம தத்துவத்தை அறிந்துகொண்டு, நானும் என்னுடைய ஆத்மாவும் ஒன்றே என்ற கருத்தை தியானம் செய்பவனுக்கு ஆத்மா பிரசன்னமாகும் (காட்சியளிக்கும்).

இவ்வாறாக ஆத்ம நிரூபணம் நடக்கும்போது, ஆத்மாவுடன் நிச்சலமான சேர்க்கை ஏற்படும்போது, பரமாத்மா கையில் அகப்படுகிறது.