valam tharum vallal

valam tharum vallal
shri shird sai baba

Thursday 12 October 2017

ஷீர்டி சாயி சத்சரிதம்

எந்த ஞானியையும் ஜாதியை வைத்தோ, உணவுப் பழக்க வழக்கங்களாலோ, மற்ற நடைமுறைச் செயல்களாலோ, எடை போட முடியாது. ஞானிகளுடைய நிலைமை இதற்கெல்லாம் அப்பாற்பட்டது.

ஜடமான ஜீவர்களை கைதூக்கி விடுவதற்காகப் பரோபகாரமே உருவான ஞானிகள் அவதாரம் செய்கின்றனர். இது, எல்லாம் வல்ல இறைவனின் கருணையால் நிகழ்கிறது.

பூர்வஜென்ம புண்ணியம் இருந்தால்தான் ஞானிகளின் சரித்திரத்தைக் கேட்கவேண்டுமென்ற ஆவல் எழும். அதன் விளைவாக, மகிழ்ச்சியும் சுகமும் லாபமாகும்.

ஒரு சமயம் யோகாப்பியாசம் செய்பவர் ஒருவர் நானா சாந்தோர்கருடன் மசூதிக்கு வந்தார்.

அவர் பதஞ்சலி முனிவர் அருளிய யோகசாஸ்திரத்தை நன்கு கற்றவர். ஆயினும் அவருடைய அனுபவம் என்னவோ விசித்திரமாக இருந்தது. எவ்வளவு முயற்சி செய்த போதிலும், ஒரு கணமேனும் சமாதி அனுபவம் கிட்டவில்லை!

"யோகீச்வரரான சாயி எனக்கு அருள் செய்தால், தடங்கல்கள் விலகிக் கட்டாயம் சமாதி அனுபவம் கிட்டும்".

இந்த நோக்கத்துடன் அவர் சாயி தரிசனத்திற்கு வந்தார். அந்த நேரத்தில், பாபா சோளரொட்டியுடன் வெங்காயத்தை சேர்த்துச் சாப்பிட்டுக் கொண்டிருந்ததை பார்த்தார்.

பழைய சோளரொட்டியையும் காய்ந்துபோன வெங்காயத்தையும் பாபா வாய்க்கருகில் கொண்டுபோனபோது, 'இவர் எப்படி என்னுடைய பிரச்சினையை நிவிர்த்தி செய்யப் போகிறார்' என்ற பெரியதொரு சந்தேகம் அவர் மனதை தாக்கியது.

இந்த விகற்பமான சிந்தனை யோகியின் மனத்தெழுந்தபோது, அந்தர் ஞானியான (பிறர் மனம் அறியும் ஞானியான) சாயி மஹராஜ், "நானா! வெங்காயத்தை ஜீரணம் செய்ய முடிந்தவனே அதனை உண்ணலாம்!"-

"ஜீரணிக்கும் சக்தியுடையவன் எனது பயமும் இல்லாமல் வெங்காயத்தை தின்னவேண்டும்!" என்று கூறினார். இதைக் கேட்ட யோகி வெட்கத்தால் தலைகுனிந்து தூய மனதுடன் பாபாவை சரணடைந்தார்.

சிறிது நேரம் கழித்து, பாபா தாம் எப்பொழுதும் தரிசனம் தரும் இடத்திற்கு வந்து அமர்ந்தவுடன் யோகம் பயில்பவர் நிர்மலமான மனதுடன் பாபாவுக்கருகில் சென்றமர்ந்தார்.

பணிவுடன் அவர் கேட்ட சந்தேகத்திற்கு பாபா திருப்திகரமாக பதில் அளித்தார். யோகம் பயில்பவர் உதீயையும் ஆசீர்வாதங்களையும் பெற்றுக்கொண்டு ஆனந்தமாக திரும்பிச் சென்றார்.

இம்மாதிரியான கதைகள் அநேகம் உண்டு. பக்தி பாவத்துடன் கேட்கப்பட்டால், துக்கமும் மோகமும் அனர்த்தமும் (கேடு, துன்பம்) நிவிர்த்தியாகும்; பக்தரின் வாழ்வு மேம்படும். 


No comments:

Post a Comment