valam tharum vallal

valam tharum vallal
shri shird sai baba

Thursday 8 February 2018

                                                     ஷீர்டி சாயி சத்சரிதம்

                                      24 . ஒளி வீசும் நகைச்சுவை உணர்வு

ஓம் ஸ்ரீ விநாயகனே போற்றி! ஸ்ரீ சரஸ்வதியே போற்றி!
ஸ்ரீ குரு மஹாராஜனே போற்றி! குலதேவதைக்கும் ஸ்ரீ சீதாராமனுக்கும்
என்னுடைய பணிவான வணக்கங்கள். பூஜ்யகுரு ஸ்ரீசாயிநாதருக்கும் பக்தியுடன் சிரம் தாழ்த்தி வணங்குகிறேன்.

கடந்த அத்தியாயத்தின் இறுதியில் கூறியவாறு, கருணைக்கு கடலான சாயி நாத குரு கேலியும் ஹாஸ்யமும் (நகைச்சுவையும்) செய்வதன் மூலமாக எவ்வாறு போதனையளித்தார் என்பதை இப்பொழுது விவரமாக சொல்கிறேன்; கேளுங்கள்.

'நான் சொல்லப்போகிறேன்' என்று விளம்புவதே அஹங்காரம்தான். குருபாதங்களில் அஹங்காரம் அற்றவனாக இருக்க வேண்டும். கதை அப்பொழுதுதான், கேட்பவர்களின் இதயத்தை தொடும் சக்தி பெரும். பய பக்தியுடன் கதையைக் கேளுங்கள்.

சாதுக்களும் ஆன்றோர்களும் மஹாபுருஷர்களும் எப்பொழுதுமே தூயவர்கள்; குற்றமற்றவர்கள். நிர்மலமான, மேகமற்ற ஆகாயத்தை போன்று சுத்தமானவர்கள்; தோஷமற்றவர்கள்.

சாயி மஹாராஜின் பூக்களை பாடுவது இகத்திலும் பரத்திலும் நன்மை பயக்க கூடிய சாதனையாகும். 'நான் யார்' எனும் சிந்தனை செழிக்கும்; மனம் ஒருமுகப்படும்.

ஆன்மீக முன்னேற்றம் அடையவேண்டுமென்று நினைப்பவர் இக் கதைகளை பயபக்தியுடன் கேட்கவேண்டும். வேறு முயற்சி ஏதுமில்லாமலேயே அவர் பரமானந்தத்தை அனுபவிப்பார்; வாழ்க்கையை அர்த்தமுடையதாக உணர்வார்.

கதை கேட்பவர் மன அமைதி பெறுவார்; உலக வாழ்வுபற்றிய பிராந்தி (ஆதாரமில்லாத மனக்கலக்கம்) விலகும்; பரமானந்த மெய்துவார்; நற்கதி சிரமமின்றி கிடைக்கும்.

பக்தர்களின் எண்ண ஓட்டங்களையும் உணர்வுகளையும் சமர்த்த சாயி மனக்கண்ணால் அறிவார். அவர்களுக்கு என்ன செய்ய வேண்டுமோ அதைச் செய்து தமது உறுதி மொழியை நிறைவேற்றுவார்.

சமர்த்த சாயி என் புத்தியை தூண்டிவிட்டு அவருடைய வார்த்தைகளை என்னைச் சொல்ல வைக்கிறார். உலகியலாகவும் ஆன்மீகமாகவும் சாதனைகள் புரியவல்ல அவருடய செய்தியின் சாரத்தை என்னுடைய முழுத்திறமையையும் உபயோகித்துச் சொல்கிறேன்.

மக்கள் எவரும் குருடல்லர்; அவர்களுக்கு மாலைக்கண் நோயும் இல்லை. 'தேகமே நான்' என்று நினைத்துக் கொண்டிருப்பவரும் தமக்கு எது நன்மையளிக்கும் என்று அறிந்துகொள்ளாதவரும் கண்ணிருந்தும் குருடர் அல்லரோ?