valam tharum vallal

valam tharum vallal
shri shird sai baba

Thursday 1 June 2023

 ஷீர்டி சாயி சத்சரிதம்


பாபா சொன்னதை ஜோக் தேவுக்கு அவ்விதமாகவே தெரிவித்தார். என்றும் சோடைபோகாத திருவாய்மொழிப்பற்றி அறிந்த தேவ் மிக்க மகிழ்ச்சியடைந்தார்.

தேவ் முழு நம்பிக்கை வைத்திருந்தார், "பாபா கட்டாயம் வருவார். அதை நான் அனுபவிக்கும் நாள் பொன்னெழுத்துக்களால் பொறிக்கப்படவேண்டிய நாளாகும்."

ஷிர்டியைத் தவிர மூன்று கிராமங்களுக்குத்தான் பாபா செல்வார்; அதுவும் எப்போதோ ஒருமுறைதான் செல்வார். மற்றபடி நிரந்தரமாக ஷிர்டியில்தான் இருந்தார். இதையும் தேவ் நன்கு அறிந்திருந்தார்.

போகவேண்டுமென்று தோன்றினால், ஆறுமாதங்களுக்கு ஒருமுறை ரஹாதாவிற்கோ சில சமயங்களில் ருயீக்கோ  நிம்காங்விற்கோ சென்றார். மற்றபடி அவர் எப்பொழுதும் ஷிர்டியிலேயே வாசம் செய்தார்.

"இந்த மூன்று கிராமங்களைத் தவிர அவர் எப்பொழுதும் வேறெங்கும் செல்வதில்லை. அவர் எப்படி இவ்வளவு தூரம் கடந்து எனக்காக டஹாணுவிற்கு வரப்போகிறார்?-

"ஆயினும் அவர் பூரணமான லீலாவதாரி; நினைத்தமாத்திரத்தில் எங்கும் சஞ்சாரம் செய்யக்கூடியவர். போவதும் வருவதும் மைத்துப் பிறவிகளுக்கே. அவரோ எல்லாப் பொருள்களிலும் உள்ளும் புறமும் நிறைந்தவர். -

"அவர் அங்கிருந்து இங்கே வருவது, இங்கிருந்து அங்கே திரும்பிப்போவது, ஆகிய இரு செயல்களையும் வானமும் அறியாது. ஏனெனில், அவர் வானத்திலும் நிரம்பியிருக்கிறார். -

"பாபாவின் சஞ்சாரம் புரிந்துகொள்ளமுடியாதது. நகரும் நகராப் பொருள்கள் அனைத்திலும் அவர் நிரம்பியிருக்கிறார். இவ்வாறிருக்க, அவர் வருவதென்ன, போவதென்ன! நினைத்தபோது தேவையான இடத்தில் தோன்றுகிறார்!" (தேவ்வின் என்ன ஓட்டம்).

இது இப்படியிருக்க, உத்யாபன விழாவிற்கு ஒரு மாதத்திற்கு முன்பாக ஒரு சந்நியாசி தம்முடைய நோக்கம் கருதி டஹானு ஸ்டேஷன் மாஸ்டரிடம் வந்தார்.

சந்நியாசி ஒரு கோசாலைப் (பசுமடம்) பிரச்சாரகர். பசுக்களை பாதுகாக்கும் இயக்கம் ஒன்றின் தன்னார்வத் தொண்டர். அந்த இயக்கத்தின் மூலதனத்தை விருத்திசெய்யும் பொருட்டு நிதி திரட்டுவதற்காக வந்திருந்தார்.

உடையைப் பார்த்தால் வங்காளியைப் போன்றிருந்தார். ஸ்டேஷன் மாஸ்டர் அவருக்கொரு யுக்தி சொல்லிக்கொடுத்தார். "ஊருக்குள் செல்லுங்கள்; உங்களுடைய நிதி திரட்டும் முயற்சிக்குப் பலன் கிடைக்கும். -

"மாம்லேதார் (தாசீல்தார்) ஊரினுள் இருக்கிறார். நீனால் அங்கு சந்திக்கப்போகும் சேட்டுகளும் சௌகார்களும் உங்களுக்கு உதவி செய்வர். -

"மாம்லேதார் உங்களுக்கு சாதகமாக 'ஆம்' என்று சொல்லிவிட்டால், தர்மகாரியத்திற்கான நிதி சுலபமாகத் திரளும். ஆகவே, தெம்பாக ஊருக்குள் செல்லுங்கள்."