valam tharum vallal

valam tharum vallal
shri shird sai baba

Thursday, 30 September 2021

 ஷீர்டி சாயி சத்சரிதம்

நாக்கு ஒரு சுவையை அனுபவிக்கும்போது சாயி சுவையுடன் கலந்துவிடுகிறார். இதன் பிறகு, சுவையும், நாக்கும், சுவைக்கும் செயலும் ஒன்றாகிவிடுவதில் அதிசயம் என்ன இருக்கிறது?

கர்மேந்திரியங்கள் அனைத்தின் கதியும் இதுவே. அவையெல்லாம் சாயியை சேவித்தால், கர்மவினைகள் அனைத்தும் அழியும். செயல்களின் விளைவுகளிலிருந்து விடுதலையும் கிடைக்கும்.

காவியம் நீண்டுகொண்டே போகிறது; இது சாயியின் பிரேமையால் விளைந்ததே. நாம் இப்பொழுது ஏற்கெனவே கோடிகாட்டப்பட்ட விஷயங்களுக்கு திரும்பிச் சென்று விட்ட இடத்திலிருந்து தொடர்வோமாக.

அருவ வழிபாட்டில் தீவிர நம்பிக்கை வைத்து உருவ வழிபாட்டிற்கு முதுகைக் காட்டுபவராக இருந்த நபர் ஒருவர், என்ன இருக்கிறதென்று தெரிந்துகொள்ளும் ஆர்வப்பசியால் மட்டுமே உந்தப்பட்டு ஷிர்டிக்குச் செல்ல உற்சாகம் கொண்டார்.

ஆகவே அவர் சொன்னார், "சாது தரிசனம் செய்வதற்கு மட்டுமே நாம் ஷிர்டிக்கு வருவோம். அவருக்கு வணக்கம் செலுத்தமாட்டோம்; தக்ஷிணையும் கொடுக்க மாட்டோம்".

"இந்த இரண்டு நிபந்தனைகளுக்கும் ஒத்துக்கொண்டால்தான் நாம் ஷிர்டிக்கு வருவோம்". நண்பர் இதற்கு ஒத்துக்கொண்டவுடன் அந்த நபர் ஷிர்டிக்குத் தெம்புடன் கிளம்பினார்.

நண்பரின் பெயர் காகா மஹாஜனி; பாபாவின் மீது பவித்திரமான பக்தியும் பிரேமையும் வைத்திருந்தவர். அந்த ஆசாமியோ சந்தேகங்களும் தவறான நம்பிக்கைகளும் நிரம்பிய பாத்திரம்.

இருவரும் ஒரு சனிக்கிழமை இரவு பம்பாயிலிருந்து கிளம்பி ஞாயிற்றுக்கிழமை காலையில் ஷீர்டி வந்துசேர்ந்தனர்.

சாயிதரிசனம் செய்வதற்கு இருவரும் உடனே மசூதிக்கு சென்றனர். அப்பொழுது என்ன நடந்ததென்பதை கவனமாக கேளுங்கள்.

காகா மஹாஜனி மசூதியின் முதற்படியில் கால் வைத்தவுடனேநண்பரைத் தூரத்திலிருந்தே பார்த்துவிட்ட பாபா, மதுரமான குரலில் கேட்டார், "நீர் ஏன் வந்தீர் ஐயா?"

அன்பு ததும்பிய இவ்வார்த்தைகளை கேட்ட காகா மஹாஜனியின் நண்பர் சூக்குமமான குறிப்பை உடனே அடையாளம் கண்டுகொண்டார். வாக்கியத்தின் அமைப்பும் வார்த்தைகள் உச்சரிக்கப்பட்ட பாணியும் அவருக்குத் தம் தந்தையை நினைவூட்டின.

"நீர் ஏன் வந்தீர் ஐயா?" என்ற வார்த்தைகள் வெளிவந்த ஸ்வரம் (நாதம்) காகா மஹாஜனியின் நண்பரை வியப்பில் ஆழ்த்தியது.

இனிமையான அந்தக் குரல் அவருக்குத் தம் (காலமான) தந்தையை ஞாபகப்படுத்தியது. குரலும் வார்த்தைகள் வெளிவந்த பாணியும் அவருக்குச் தந்தையினுடையதை போலவே இருந்தன. பாவனைச் செயல், பூரணமாக யதார்த்தமாகவும் துல்லியமாகவும் இருந்தது.