valam tharum vallal

valam tharum vallal
shri shird sai baba

Thursday 23 June 2022

 ஷீர்டி சாயி சத்சரிதம்

புத்திதான் ஆசைகளுக்கு இடமளிக்கறது. ஆகவே, புத்தி அழிந்துபோகும்போது ஆத்மா எழும்புகிறது; அழியாத இடத்தை அடைந்துவிடுகிறது.

அஞ்ஞானம், மாயை, ஆசை, செயல் இவைதான் மரணத்தின் முக்கியமான வழிமுறைகள். இவையனைத்தும் அணைந்துபோகும்போது உலகவாழ்வின் பந்தங்களும் அறுந்துவிடுகின்றன.

மேகங்கள் விலகியவுடன் சுயம்பிரகாசியான சூரியன் ஒளிர்வதுபோல், பந்தங்கள் அறுந்து விழுந்தவுடன் ஆத்மா எந்த முயற்சியுமின்றித் தன்னை வெளிப்படுத்திக் கொள்கிறது.

'இந்த சரீரமே நான்; இது என்னுடைய செல்வம்'. - இதற்குத்தான் திடமான தேகாபிமானம் என்று பெயர். இதுதான் முடிச்சுகளுக்குக் காரணம். இதுதான் மாயையால் விளையும் துக்கங்களுக்கும் காரணம்.

இந்த தேகம் ஒருமுறை விழுந்தவுடன் கர்மவிதையால் இன்னொரு தேகத்தை ஏற்றுக்கொள்கிறது. இந்தத் தடவையும் கர்மவிதை முழுமையாக அழிக்கப்படாவிட்டால் மற்றுமொரு ஜன்மம் ஏற்படுகிறது.

மறுபடியும் விதை மரமாகிறது. பூர்வஜென்ம வாசனை என்னும் விதை புதுப்புது தேகங்களை ஒவ்வொரு தடவையும் அளிக்கிறது. இந்தச் சக்கரம் பூர்வஜென்ம வாசனைகள் அழியும் வரை முடிவில்லாமல் சுழன்றுகொண்டேயிருக்கிறது.

ஆசைகள் வேரோடு அழிக்கப்பட்டவுடன் இதயத்தின் முடிச்சுகள் அவிழ்ந்து விடுகின்றன. அப்பொழுதுதான் மனிதன் மரணமிலாப் பெருவாழ்வை அடைகிறான். இதுவே வேதாந்த (உபநிஷதங்கள் தரும்) உபதேசம்.

தர்மம், அதர்மம், இரண்டையுமே கடந்த நிலைக்கு விரஜ நிலை (ஆசைகளைக் கடந்த நிலை) என்று பெயர். அஞ்ஞானமும் ஆசைகளும் அழிக்கப்பட்ட நிலையில் மரணத்திற்கு எந்தவிதமான சக்தியும் இல்லாமல் போகிறது.

பூர்வஜென்ம வாசனைகளால் விளையும் ஆசைகளை அறுப்பதே பிரம்மானந்தத்தை அடையும் வழி. இந்த நிலையை எழுத்தால் விவரிக்கமுடியாது; ஆயினும் அதை எழுதி விவரிக்க முயல்கிறோம். பேச்சால் வர்ணிக்கமுடியாது; ஆயினும் அதை வாய்ச்சொல்லால் வர்ணிக்க  முயல்கிறோம்.

முழுமுதற்பொருளை நன்கு அறிந்துகொள்வதே வேண்டாத விஷயங்களுக்கெல்லாம் ஒரு முடிவு; மனத்தில் விளைந்த அனைத்து ஆசைகளின் நிறைவேற்றம். இதுவே சுருதி (வேதங்கள்), ஸ்மிருதி (வாழ்க்கை நெறிக் கோட்பாடுகள்), இவை இரண்டின் பிரமாணம்.!

பிரம்ம ஞானத்தை அடைந்தவனே பரவுலகத்தை அடைந்தவன். அது மட்டுமே கடைமுடிவாக பிரம்மத்துடன் ஒன்றிய ஆனந்தத்தை அடையும் மார்க்கம். இதைவிட உயர்ந்த நிலை வேறெதுவும் உண்டோ? தன்னை அறிந்தவன் சோகத்தை கடந்தவன் அல்லனோ?

அஞ்ஞான இருளை மூலமாகக் கொண்ட சம்சாரக்கடலை பிரம்ம ஞானம் என்னும் ஒரே உபாயத்தால்தான் கடக்கமுடியும். அதுவே அனைத்துப் பேறுகளையும் பெரும் சாதனை மார்க்கம்.