valam tharum vallal

valam tharum vallal
shri shird sai baba

Thursday 3 August 2023

 ஷீர்டி சாயி சத்சரிதம்


சாயியின் சிற்பத்தைப் பார்த்தவுடனே உணச்சிவசத்தால் எனக்கு உடல் முழுவதும் மயிர்க்கூச்செரிந்தது. இதயம் அன்பினாலும் ஆனந்தத்தாலும் பொங்கி வழிந்தது. உடனே சாயி பாதங்களில் தலையை வைத்தேன்.

சாயியின் விசித்திரமான லீலையைக் கண்டு அதை ஒரு பேரதிசயம் என்று நினைத்தேன். தம்முடைய சக்தியை இவ்வாறு வெளிப்படுத்தி என்னை அவர் ஆசீர்வதித்திருக்கிறார்' என்று நினைத்தேன்.

மனத்தில் பேரெழுச்சியும் ஆர்வமும் ஏற்பட, அந்தப் புடைச்சிற்பம் அவருக்கு எங்கிருந்து கிடைத்தது என்று கேட்டேன். அல்லீ முஹமது சொன்னார், "நான் இதை ஒரு கடையிலிருந்து விலைகொடுத்து வாங்கினேன்."

பிறகு அவர் ஒரு கணமும் தாமதியாது சொன்னார், "நாங்கள் இப்பொழுது சென்றுவருகிறோம். நீங்களெல்லாம் நிம்மதியாகச் சாப்பிடுங்கள்.-

"நான் இப்பொழுது முகாந்தரத்தைச் சொல்ல ஆரம்பித்தால், சாப்பிட உட்கார்ந்திருப்பவர்கள் அனாவசியமாகக் காத்திருக்கும்படி நேரும். நான் எல்லாவற்றையும் சாவகாசமாகச் சொல்கிறேன்".

நானும் அதுதான் சரியென்று நினைத்தேன். மேலும், கடைசி வினாடியில் பாபாவின் சிற்பம் வந்துசேர்ந்த ஆனந்தத்தில் நான் மூழ்கிப்போயிருந்தேன். ஆகவே, அவர்களுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் நான் சொன்னேன். -

"நல்லது, நீங்கள் சென்றுவாருங்கள்." நானும் கதைகேட்பவர்களுக்கு பாபாவின் புடைச்சிற்பம் வந்துசேர்ந்த விவரத்தைப் பின்னர்ச் சொல்கிறேன். அதை இன்றே சொல்லவேண்டிய அவசியம் என்ன!

ஆகவே, அவர்களிருவரும் கிளம்பிச் சென்றபிறகு, ஏற்கெனவே பாபாவுக்காக இடப்பட்டிருந்த மணையின்மேல் புடைச்சிற்பம் வைக்கப்பட்டது.

எல்லாரும் சந்தோஷமடைந்தனர். சாயி லீலை கற்பனைக்கெட்டாதது. சிற்ப ரூபத்தில் வந்து கனவில் சொன்ன வார்த்தைகளை சத்தியமாக்கிவிட்டார்!

ஒருவேளை யாராவது விருந்தாளி வந்தால், தங்களுடன் அவரும் பந்தியில் அமர்வார் என்று எதிர்பார்த்திருந்தவர்கள் அடைந்த ஆச்சரியந்தான் என்னே!

புடைச்சிற்பத்திலிருந்த அழகான மூர்த்தியைப் பார்த்து அனைவரும் பரம சந்தோஷமடைந்தனர். சற்றும் எதிர்பாராதவிதமாக அது வந்துசேர்ந்ததை கண்டு எல்லாரும் ஆச்சரியமடைந்தனர்.

சிற்பம் மணையின்மேல் பிரதிஷ்டை செய்யப்பட்ட பிறகு, அர்க்யம், பாத்யம் போன்ற சடங்குகளுடன்கூடிய பூஜை செய்யப்பட்டது. பிரேமையுடனும் பக்தியுடனும் படையல் சமர்பிக்கப்பட்டபிறகு பிறகு எல்லாரும் உணவுண்டனர்.

அன்றிலிருந்து இன்றுவரை, ஒவ்வொரு ஹோலிப்பண்டிகையன்றும் இந்தச் சிற்பத்திற்கு ஆச்சாரவிதிகளின்படி எட்டு உபசாரங்கள் கொண்ட பூஜை நடந்துவருகிறது.