valam tharum vallal

valam tharum vallal
shri shird sai baba

Friday 22 February 2019

ஷீர்டி சாயி சத்சரிதம்

ஆனால், கோதாவரிக் கரையை அடைந்தபோதோ, அழகான இயற்கைக்காட்சிகளில் மயங்கிக் கொய்யா வாங்க மறந்துவிட்டனர். ஞாபகம் திரும்பியபோது, குதிரைவண்டி அக்கரை சேர்ந்துவிட்டிருந்தது.!

அங்கிருந்து ஷீர்டி நான்கு கிராமங்களுக்கு அப்பால் இருந்தது. குதிரைவண்டி முழு வேகத்துடன் ஓட ஆரம்பித்தது. கடைசியில் பார்த்தால், ஞாபகம் வந்த பிறகு எங்குமே கொய்யாப்பழம் காணப்படவில்லை.

திடீரென்று பார்த்தால், ஒரு கிழவி கூடையொன்றைத் தலையில் சுமந்துகொண்டு குதிரைவேண்டியை நோக்கி ஓடிவருவதை கண்டனர். அவளுக்காக வண்டியை நிறுத்தினர். கொய்யாப்பழம் அவர்களைத் தேடிவந்தது கண்டு பெருமகிழ்ச்சியடைந்தனர்.

ஆனந்தத்தால் நிரம்பிய லக்மீச்சந்த் மிகுந்த அக்கறையுடன் நல்ல பழங்களாகப் பொறுக்கி எடுத்துக்கொண்டார். கூடையில் மீதியிருந்த பழங்களைப் பற்றிக் கிழவி சொன்னாள், "என்னுடைய சார்பில் இந்தப் பழங்களை பாபாவுக்கு சமர்ப்பித்துவிடுங்கள்".

கொய்யாப்பழத்தைப் பற்றி ஞாபகம் வந்ததும் பிறகு அது அறவே மறந்து போனதும் எதிர்பாராமலேயே கிழவியைச் சந்தித்ததும் கிழவியின் சாயி பக்தியும் இருவரையும் ஆச்சரியத்தில் மூழ்கடித்தன.

லாலாஜியின் மனம் வாதித்தது, "ஆரம்பித்தில் ஒரு கிழவனார் கனவில் தோன்றினார். அவரையே சமயச் சொற்பொழிவு நடந்த இடத்திலும் கண்டேன். இந்த கிழவியும் அவருக்கு ஏதாவதொரு விதத்தில் உறவாக இருப்பாளோ?"

இது இவ்வாறு இருக்க, குதிரை வண்டி பயணத்தைத் தொடர்ந்து ஷிரிடி கிராமத்தை சீக்கிரமாக அடைந்தது. மசூதியின் உச்சியில் பறந்துகொண்டிருந்த கொடிகள் தூரத்தில் இருந்தே தென்பட்டன. இருவரும் பயபக்தியுடன் கைகூப்பி வணங்கினர்.

ஷீர்டி சென்றடைந்தவுடனே பூஜை சாமான்களை எடுத்துக்கொண்டு நேராக மசூதிக்குச் சென்றனர். சாயியைக் கண்ணால் கண்டதும் அவர்களுடைய இதயம் ஆனந்தத்தால் நிரம்பி வழிந்தது.

தாழ்வாரத்தின் வாசல் வழியாக சபா மண்டபத்தினுள் நுழைந்தனர். தூரத்திலிருந்தே பாபாவின் உருவதைக் கண்டதும் இருவருக்கும் உணர்ச்சிவசத்தால் தொண்டை அடைத்தது.

ஏங்கித் தவித்த தரிசனம் கிடைத்தவுடன் லக்மீச்சந்த் தம்மை மறந்து பாபாவின் பாதங்களில் லயித்துவிட்டார். உள்ளிருந்து ஆனந்தம் பொங்கப் பொங்க, பசியும் தாகமும் பறந்தோடின.

சுத்தமான ஜலத்தைக் கையில் எடுத்துக்கொண்டு பாபாவின் திருவடித்தாமரைகளை கழுவினார். அர்க்யம், பாத்யம் போன்ற சகல பூஜை விதிமுறைகளையும் செய்தார். தேங்காயையும் வாழைப்பழங்களையும் அர்ப்பணம் செய்தார்.

தூபம், தீபம், தாம்பூலம், தக்ஷிணை போன்ற வழிபாட்டுச் சடங்குகளையும் செய்து மானசீகமாக பாபாவை வலம் வந்தார். மாலையை அணிவித்துவிட்டு பாபாவினுடைய பாதங்களுக்கருகில் அமர்ந்தார்.