valam tharum vallal

valam tharum vallal
shri shird sai baba

Friday 6 September 2019

ஷீர்டி சாயி சத்சரிதம்

குவாலியர் வந்து சேர்ந்தவுடன் ரூபாய் நாணயத்தை டாக்டர் ஹாடேவிடம் கொடுத்து, ஷிர்டியில் நடந்ததனைத்தையும்  நண்பர் விவரமாக சொன்னார். இதைக் கேட்ட ஹாடே அளவற்ற மகிழ்ச்சியடைந்தார்.

அவர் மனத்தில் இவ்வாறு நினைத்தார், "என்னுடைய மனோகதியை அறிந்த பாபா, நான் என்ன வேண்டுமென்று விரும்பினேனோ, எது வேண்டும் என்று தீர்மானம் செய்தேனோ, அவ்வாறே என்னுடைய மனோரதத்தை பூர்த்தி செய்துவிட்டார்.

காப்டன் ஹாடே இவ்வாறு நினைத்தபோதிலும், அது அவருடைய கற்பனையே. ஏனெனில், ஞானிகள் எந்தப் ப்ரயோஜனத்திற்காக என்ன யோஜனை செய்கிறார்கள் என்பதை யாரால் புரிந்துகொள்ள முடியும்?

அம்மாதிரி நிச்சயமாக ஏதாவது சொல்லப் புகுமுன், இதற்கு நேர்மாறான நிகழ்ச்சியொன்றைப் பார்க்கவேண்டும். முடிவில், ஞானியின் எண்ண ஓட்டங்களை ஞானி மாத்திரமே அறிவார் என்பது விளங்கும்.

ஒருவர் கொடுத்த  ரூபாயைத் திருப்பி கொடுத்துவிடுகிறார். இன்னொருவர் கொடுத்த ரூபாயைப் பாக்கெட்டில் போட்டுக்கொள்கிறார். காரணம் என்னவென்றோ பாபாவின் மனதில் என்ன இருந்ததென்றோ எப்படி நிச்சயமாக சொல்ல முடியும்?

அவருடைய காரணம் அவருக்குத்தான் தெரியும். கிடைத்த அற்புதமான நல்வாய்ப்பைக் கோட்டைவிடாமல் அவருடைய லீலையை பார்த்து அனுபவிக்கவே நம்மால் முடியும். இது சம்பந்தமான கதையொன்றை கேளுங்கள்.

ஒருசமயம் பாபாவின்மீது அளவற்ற பிரேமை கொண்ட வாமன்ராவ் நார்வேகர் என்ற பக்தர், பாபாவுக்கு பக்தியுடன் அர்ப்பணம் செய்வதற்காக அழகான ஒரு ரூபாய் நாணயம் ஒன்றைக் கொண்டுவந்தார்.

அந்த நாணயத்தின் ஒரு பக்கத்தில் ராமர், லக்ஷ்மணர், சீதை இவர்களின் உருவம் பொறிக்கப்பட்டிருந்தது. மறுபக்கத்தில் கூப்பிய கரங்களுடன் ஆஞ்சநேயரின் அழகான உருவம் இருந்தது.

பாபாவின் கையால் தொடப்பட்டு உதீ பிரசாதத்துடன் திருப்பி அளிக்கப்பட வேண்டுமென்பதே பாபாவுக்கு அந்த நாணயத்தை அர்ப்பணம் செய்ததன் நோக்கம். ஆகவே, அது பாபாவின் கையில் இடப்பட்டது.

பாபாவுக்கென்னவோ எல்லார் மனத்திலும் இருந்த விருப்பங்களும் தெரியும். ஆயினும், நாணயம் கையில் விழுந்தவுடனே அதை பாக்கெட்டில் போட்டுக்கொண்டார்.

வாமன்ராவ் என்ன விரும்பினார் என்பதை மாதவ்ராவ் பாபாவிடம் தெரிவித்து, நாணயத்தை திருப்பிக் கொடுத்துவிடும்படி கெஞ்சினார்.

"ஏன் இதை அவரிடம் திருப்பிக் கொடுக்க வேண்டும்? இதை நாமே வைத்துக்கொள்ள வேண்டும்" என்று பாபா தெளிவாக வாமன்ராவின் கண்ணுக்கெதிரிகாவே சொல்லிவிட்டார்.

"ஆயினும், அவர் இதற்கு விலையாக ரூ. 25 /- கொடுப்பாரானால், அதற்குப் பதிலாக இந்த ரூபாயை கொடுப்பேன்" என்று பாபா மேலும் சொன்னார்.