valam tharum vallal

valam tharum vallal
shri shird sai baba

Thursday, 27 March 2025

 ஷீர்டி சாயி சத்சரிதம்

பக்தர்கள் இருவருடைய கட்டாயத்தால் பாபாவும் ஒரு முடிவுக்கு வந்துவிட்டார். அவர் கூறியதாவது, எனக்கு வீடு வாசலில்லை; உட்காருவதற்கென்றும்கூட ஓர் இடமில்லை; எனக்குச் சொத்துபத்துக்கள் எதற்காக?-

"முதலில் கடைக்குப் போய் ஒரு சேர் தனிப்பருப்பு வாங்கிக்கொண்டு வாருங்கள். ஆடுகளை வயிறுமுட்டும் வரை தின்னவையுங்கள். பிறகு ஆடுகளை ஆட்டிடையரிடமே திருப்பி அனுப்பி விடுங்கள்."

ஆணையை நிறைவேற்றும் வகையில் உடனே ஆடுகளுக்குப் பருப்பு தீனியாகக் கொடுக்கப்பட்டது. காலந்தாழ்த்தாமல் உடனே ஆடுகள் ஆட்டிடையரிடம் திருப்பி ஒப்படைக்கப்பட்டன.

பரோபகாரமே உருவெடுத்த சாயி உண்மையிலேயே ஓர் அவதாரபுருஷர். தாத்யாவோ வேறெவரோ, நல்லெண்ணத்தையோ இரக்கத்தையோ அவர் மனத்தில் ஊட்டிவிட முடியுமா என்ன!

அன்புடன் ஆடுகளுக்குப் பருப்பை ஊட்டி, வயிறு நிறைந்துவிட்டது என்று தெரிந்த பின்னர், "இவ்வாடுகளை சொந்தக்காரரிடமே திருப்பிக் கொடுத்துவிடுங்கள். மந்தையுடன் போய்ச் சேரட்டும்" என்று பாபா சொன்னார்.

இவ்விதமாகப் பணமும் போயிற்று! ஆடுகளும் போயின! அப்பொழுது பாபா ஆடுகளுடைய வினோதமான பூர்வஜென்ம கதையை முழுக்க எடுத்துரைத்தார்.

பாபாவுக்குத் தாத்யாவும் சாமாவும் ஒன்றே. இருவரிடமுமே அவர் சமமாக அன்பு செலுத்தினார். அவர்களுடைய கோபத்தை தணிப்பதற்காக, பாபா மனோரஞ்சிதமான இக் கதையை விரிவாகச் சொன்னார்.

சாயி தாமாகவே அவ்வாடுகளின் முன்ஜன்ம கதையை எடுத்தியம்பினார். நீங்களும் கேளுங்கள்.

"முற்பிறவியில் இவ்விரு ஆடுகளும் அதிருஷ்டம் வாய்ந்தவை. மனிதர்களாகப் பிறந்து என்னுடன் இருந்தார்கள். ஆனால், அவர்களும் கர்மவினையை அனுபவிக்க வேண்டியிருந்தது.

"நீங்கள் பார்த்த இவ்விரு ஆடுகள் இதற்கு முந்தைய பிறவியில் சகோதரர்கள். ஒருவரோடுவர் கோரமாக சண்டையிட்டுக்கொண்டு இறந்தார்கள்; விளைவு இவ்விதம் ஆகியது. -

"ஆரம்பகாலத்தில் இருவருக்குமிடையே மிக்க பாசம் இருந்தது; சகோதரர்கள் இருவரும் எப்பொழுதும் ஒன்றாகவே சாப்பிடுவார்கள்; ஒன்றாகவே தூங்குவார்கள். பரஸ்பரம் நல்வாழவையே விரும்பினர். இருவருக்குமிடையே மகத்தான ஒற்றுமை நிலவியது,-

"ஒரு தாய் வயிற்றில் பிறந்த சகோதரர்களாயினும், கர்மவினையாலும் விதிவசத்தாலும் பணம் குவிக்கவேண்டுமென்ற பேராசை அவர்களுக்குள் விரோதத்தை உண்டாக்கியது.-

"அண்ணன் ஒரு படு சோம்பேறி; ஆனால், தம்பியோ ஊக்கமுள்ளவன்; இரவுபகல் பாராமல் உழைப்பவன். உழைப்பின் விளைவாகத் தம்பி பெரும்பொருள் குவித்தான். இதைப் பார்த்த அண்ணனிடம் பொறாமை விளைந்தது.-