valam tharum vallal

valam tharum vallal
shri shird sai baba

Thursday 31 March 2022

 ஷீர்டி சாயி சத்சரிதம்


ஆகவே, ஹம்சராஜ் சாயியை அனுமதி வேண்டிக் கெஞ்சினார். ஆனால் மஹால் சாபதியை ஒரு பைசாவைக்கூட தொட சாயி அனுமதிக்கவில்லை. சாயி சொன்னார், "என்னுடைய பக்தர் திரவியத்தை தேடமாட்டார். அவர் ஒருபொழுதும் செல்வத்தின் வைபவத்தில் மாட்டிக்கொள்ளமாட்டார்.

இப்பொழுது இரண்டாவது விருந்தாளி பேச ஆரம்பித்தார். "நானும், என் சூசகத்தைப் புரிந்துகொண்டேன். மொத்த கதையையும் சொல்கிறேன்; கேளும், கேட்டால் மிகுந்த மகிழ்ச்சி அடைவீர்.-

"ஒரு பிராமணர் எனக்கு முப்பத்தைந்து ஆண்டுகளாகப் பணி செய்துவந்தார். அவர் அயராது உழைப்பவர்; நம்பிக்கைக்குப் பாத்திரமானவர். துரதிர்ஷ்டவசமாக அவருடைய புத்தி மயங்கியது. என்னுடைய பணத்தை அபகரித்தார் -

"என்னுடைய வீட்டில் சுவருக்குள் அடங்கிய அலமாரி ஒன்று இருந்தது; அவர் யாருக்கும் தெரியாமல் சுவரின் கற்களை மெதுவாக நகர்த்தி ஒரு துவாரம் செய்து கொண்டார். -

"பாபா முன்பு குறிப்பிட்ட அலமாரியின் பின்பக்கம்தான் அவர் துவாரம் செய்த இடம். அதற்காக, எல்லாரும் தூங்கிக்கொண்டிருந்தபோது சுவரின் கற்களை நகர்த்தினார். -

"பாபா, 'என்னுடைய பணம் திருடு போய்விட்டது' என்று சொன்னாரவல்லவா? அது முற்றிலும் உண்மை ஒரு கற்றை ரூபாய் நோட்டு திருடப்பட்டது.

"அக் கற்றையின் மதிப்பு சரியாக முப்பதாயிரம் ரூபாய். பாபாவுக்கு இந்த விவரமெல்லாம் எப்படித் தெரிந்தது என்று எனக்கு விளங்கவில்லை. ஆனால், கஷ்டப்பட்டு சம்பாதித்த பணம் பறிபோனதைக் கண்டு நான் இரவுபகலாக அழுதுகொண்டிருந்தேன். -

"திருட்டைக் கண்டுபிடிக்க எடுத்த முயற்சிகளால் நான் களைப்படைந்தேன். மன உளைச்சலாலும் சோகத்தாலும் நான் நீர்ச்சுழலில் மாட்டிக்கொண்டவன் போல் பதினைந்து நாள்கள் அவஸ்தைப்பட்டேன். மேலும் வழி தெரியவில்லை. -

"ஒருநாள் நான் மனமுடைந்தவனாக வாரந்தாவில் உட்கார்ந்திருந்தபோது, உரக்க கேள்விகளைக் கேட்டுக்கொண்டு ஒரு பக்கீர் வீதி வழியாக நடந்துவந்தார்.

"என்னுடைய சோகம் ததும்பிய முகத்தைப் பார்த்துவிட்டு சோகத்திற்கு காரணம் என்னவென்று கேட்டார். நான் விவரமனைத்தும் சொல்லிமுடித்தபிறகு நிவாரணம் பெறுவதற்கு அவர் ஓர் அறிவுரை அளித்தார் -

"கோபர்காங்வ் தாலுகாவிலுள்ள ஷீர்டி என்னும் கிராமத்தில் சாயி அவ்லியா (முஸ்லீம் ஞானி) வாசம் செய்கிறார். அவரிடம் பிரார்த்தனை செய்துகொண்டு ஒரு நேர்த்திக்கடன் ஏற்றுக்கொள்ளும்.-

"உமக்கு மிகவும் விருப்பமான உணவுப்பொருள் ஒன்றைச் சாப்பிடாமல் நிறுத்திவிடும். அவரை தரிசனம் செய்யும்வரை அதைச் சாப்பிடாமல் விட்டுவிடுவதாக அவரிடம் சொல்லும்.-