valam tharum vallal

valam tharum vallal
shri shird sai baba

Friday 3 January 2020

ஷீர்டி சாயி சத்சரிதம்

சொந்தம் கொண்டாடப்படாதவை அனைத்தும் அரசாங்கத்திற்குச் சொந்தம். திடீர் மரணங்கள் முறையாக விசாரிக்கப்பட வேண்டும். ஆகவே, இந்தச் சாக்குபோக்கைச் சொல்லி பாபா பிணத்தைப் புதைக்க விடாமல் தடுத்தார்.

பின்னர் எல்லாம் அவ்வாறே நடந்தது. விதிமுறைகளுடன் சடங்குகள் செய்யப்பட்டுப் பிரேதம் தகுதியான இடத்தில் புதைக்கப்பட்டது. சாயியின் இலக்கு இவ்வாறு ஒழுங்குமுறையாக நிறைவேறியது.

கேட்பவர்களுக்கு நான் இப்பொழுது இன்னொரு கதை சொல்கிறேன். பயபக்தியுடனும் கவனத்துடனும் கேளுங்கள். சாயி எங்கும் நிறைந்தவர் என்பது உங்களுக்கு புலனாகும்.

மாங்கர் என்ற குடும்பப் பெயரும் பாலாராம் என்ற பெயரும் கொண்ட ஒருவர் பாபாவின் பரம பக்தர் . அவர் ஒரு இல்லறவாசியாக வாழ்ந்துவந்தார்.

வாழ்க்கையின் ஒரு கட்டத்தில்   மாங்கரின் மனைவி இறந்துபோனார். இல்லறத்தின் கடமைகளை செய்யமுடியாது போயிற்று. அவருடைய மனம் அமைதியிழந்தது. ஆயினும், மனைவியின் மரணமே அவருக்குப் பிற்காலத்தில் பெரும்பேற்றைக் கொணர்ந்தது.

பூர்வபுண்ணிய பலனாக அவருக்கு சாயி பாதங்களின் சங்கம் கிடைத்தது. சாயியிடம் நிச்சலமான பக்தி வளர்ந்தது. உலக வாழ்வின்மீது பூரணமான விரக்தி ஏற்பட்டது.

தெய்வ அருள் பெற்ற மாங்கர் ஆசாபாசங்கள், மனைவி, மக்கள் ஆகிய சகல பந்தங்களையும் அறுத்தெறிந்துவிட்டு இல்லற வாழ்வில் இருந்து தம்மை விடுவித்துக் கொண்டார்.

பிறரிடம்  பணி செய்வது சம்சார வாழ்க்கைக்கு மோகனமாலை; ஆன்மீக வாழ்க்கைக்கோ பெரிய இடைஞ்சல். உலக பாரத்தை தம் மகனின் தலைமேல் ஏற்றிவிட்டு விட்டுத் தம்மைப் பொறுத்தவரை அதற்குப் பூட்டுப் போட்டு விட்டார்  மாங்கர்.

இதுவும் ஒரு வகையான சந்நியாசமே. சந்நியாசம் ஏற்றுக்கொள்வதில் பல வழிமுறைகள் உண்டல்லவோ ! ப்ரம்ம ஞானம் அடையவேண்டுமென்று ஏற்கப்படும் சந்நியாசம் பெரும்பாலும் வெற்றியடைவதில்லை. ஒவ்வொரு படியிலும் தொந்தரவு கொடுக்கக்கூடும்.

மாங்கரின் அனன்னிய பக்தியை கண்ட உதாரமூர்த்தியான சாயி, அருள் செய்து அவருடைய துறவு மனப்பான்மையை திடப்படுத்தினார்.

அனந்த (அளவற்ற) ஜென்மங்களில் செய்த வினைகளின் விளைவு அவர்மேல் கவிழ்ந்துகொண்டு மனத்தைச் சஞ்சலப்படுத்தி நிலைபெறமுடியாமல் செய்தது. மனோராஜ்யத்தின் பேரலைகள்  மாங்கரின் மனத்திண்மையை கலைத்தன.

ஆகவே, சாயி, தம்முடைய இடம் ஷீர்டி மட்டும் அன்று;தாம் காலத்தையும் இடத்தையும் கடந்தவர் என்று மாங்கருக்கு நேரிடை அனுபவத்தால் நிரூபிப்பதற்காக அவருக்கு ஆணையிட்டார்.-

"நீர் ஷிர்டியில் இருந்தது போதும்! இந்தப் பன்னிரண்டு ரூபாயை பிராயணச் செலவுக்காக எடுத்துக்கொண்டு மச்சிந்தரகட்டுக்குப் (ஒரு கோட்டை) போய், 'ஆனந்தம் பெறுவேன்' என்ற நிச்சயமான தீர்மானத்துடன் அங்கு வாசம் செய்யும்."