valam tharum vallal

valam tharum vallal
shri shird sai baba

Thursday 3 September 2020

 ஷீர்டி சாயி சத்சரிதம்

பாபா தாமே முந்திக்கொண்டு இப் பெண்மணியிடம் சொன்னார், "நாம் எதற்காகப் பட்டினி கிடைக்க வேண்டும்?-

"தாதா கேள்கரின் இல்லத்திற்கு சென்று சந்தோஷமாக பூரணப் போளிகளைச் செய்யும். குழந்தைகளுக்கு அளித்தபின் நீங்களும் திருப்தியாக சாப்பிடும்."

இதில் வேடிக்கை என்னவென்றால், அன்று ஹோலிப்பண்டிகை. தாதா கேள்கரின் மனைவி மாதவிலக்காகி, வீட்டினுள் சென்று எதையும் தொடமுடியாத நிலையில் இருந்தார். அன்றைய தினமே அதிர்ஷ்டவசமாக இப் பெண்மணி ஷிர்டிக்கு வந்து சேர்ந்தார்.

இப் பெண்மணியின் உபவாச உற்சாகம் கரைந்து போயிற்று. உபவாசம் இருப்பதற்கு பதிலாக அவரே சமையல் செய்ய நேர்ந்தது. ஆயினும் அவர் பாபாவின் ஆணையை மிகுந்த பிரேமையுடன் நிறைவேற்றினார்.

பாபாவின் சேவடிகளுக்கு வந்தனம் செய்துவிட்டு, தாதாவின் வீட்டிற்குச் சென்று பூரணப்போளியும் விருந்தும் சமைத்து மற்றவர்களுக்கு பரிமாறித் தாமும் உண்டார்.

எவ்வளவு சுந்தரமான காதை! உள்ளிடைக் கருத்து எவ்வளவு அழகாகச் சித்தரிக்கப்பட்டிருக்கிறது! குருவின் வார்த்தைகளில் இதுபோல் ஸ்திரமான (ஆழ்ந்த) நம்பிக்கை வைப்பவர்களின் உத்தாரணம் வெகுதூரத்தில் இல்லை.

சமர்த்த சாயி இதே மாதிரியான கதையொன்று ஞாபகத்திற்கு வந்தபோது, அனைத்து பக்தர்களுக்கும் அதை எடுத்துரைத்தார். கதை கேட்பவர்களே! பயபக்தியுடன் கேளுங்கள்.

பரமார்த்த வாழ்வை விரும்பும் ஒருவர், பலமான முயற்சிகளை எடுப்பதற்கும் திடமான சாதனைகளை செய்வதற்கும் சொற்பமாக சாகசம் புரிவதற்கும் தயாராக இருக்கவேண்டும்.

ஞானிகளின் பாததீர்த்தமாகிய கதாமிருதத்தை   நம்முடைய நித்திய மங்களம் கருதி பருகவேண்டும். ஞானியரின் பாதங்களில் விநயத்துடன் சரணடைந்துவிட்டால், இதயம் பரிசுத்தமாகிவிடும். (சாயி சொன்ன கதை இங்கிருந்து ஆரம்பம்.)

"நான் சிறுவனாக இருந்தபோது கிடைத்ததை கொண்டு வாழ்க்கை நடத்தி, ஒரு சமயம் பிழைப்புக்காக வேலைதேடிப் புறப்பட்டேன். -

"நடந்து நடந்து பீட்காங்வுக்கு வந்துசேர்ந்தேன். அங்கே சிறிது ஓய்வெடுத்தேன். ஆனால், என்னுடைய பக்கீரோ எனக்கு ஆனந்தம் அளிக்கக்கூடிய வேறு திட்டம் வைத்திருந்தார். -

"அங்கு எனக்கு ஜரிகை வேலைப்பாடு செய்யும்  தொழில் கிடைத்தது. நான் அயராமல் உழைத்தேன். என்னுடைய உழைப்பிற்கு நல்ல பலன் கிடைத்தது. அது பக்கீரின் பராக்கிரமம் அன்றோ!-

"அங்கு எனக்கு முன்னர் நான்கு சிறுவர்கள் வேலை செய்துகொண்டிருந்தனர். திறமைசாலிகள் என்று பெயரெடுத்தவர். அவர்களும் என்னுடன் வேலை செய்தனர்.