valam tharum vallal

valam tharum vallal
shri shird sai baba

Friday 8 March 2019

ஷீர்டி சாயி சத்சரிதம்

மூன்றாவது நாளில், இந்த நிறைவேறாதுபோன ஆசையை எவ்விதமான உபாயங்களால் நஷ்டஈட்டுடன் பாபா திருப்தி செய்துவைத்தார் என்னும் அற்புதத்தைப் பாருங்கள்.

ஜோக் பூஜைக்குரிய சாமான்களான சந்தனம், அட்சதை, மலர்கள், விளக்குகள், மணி ஆகிய பொருள்களுடன் மசூதிக்கு வந்தார். பாபாவை வினவ ஆரம்பித்தார்.

"பாபா, இன்று நைவேத்தியாமாக என்ன கொண்டு வர வேண்டும்?" மஹராஜ் ஆணையிட்டார், "எனக்கு ஒரு தட்டு நிறைய ஸாஞ்சா கொண்டுவரும். பூஜை, ஆரத்தியெல்லாம் பிறகு செய்துகொள்ளலாம்."

பூஜை சாமான்களை அங்கேயே வைத்துவிட்டு ஜோக் உடனே அங்கிருந்து சென்றார். திரும்பி வந்தபோது எல்லாருக்கும் விநியோகம் செய்யும் அளவிற்கு சிரா(ரவா கேசரி) கொண்டுவந்தார்.

சிறிது நேரம் கழித்து மதிய ஆரத்தி நடந்தது. பக்தர்கள் கொண்டுவந்திருந்த நைவேத்தியங்கள் எல்லாம் தட்டுகளில் ஒவ்வொன்றாக பாபாவைச் சென்றடைந்தன. பாபா அப்பொழுது பக்தர்களிடம் சொன்னார், -

"இன்று ஒரு விசேஷமான நாள். ஆகவே இன்றைய பிரசாதம் சாஞ்சாவாக இருக்கவேண்டுமென்று விரும்புகிறேன். சாஞ்சாவுக்குச் சொல்லியனுப்புங்கள். சீக்கிரமாக கொண்டுவாருங்கள். எல்லாருக்கும் யதேஷ்டமாக (விரும்பியவரை) கிடைக்க வேண்டும்."

பக்தர்கள் சென்று இரண்டு போகணிகள் நிறைய சாஞ்சா கொண்டுவந்தனர். லக்மீச்சந்த் ஏற்கெனவே பசியுடன் இருந்தார். வாய்வுப் பிடிப்பால் இடுப்புவலியும் இருந்தது.

வயிற்றிலிருந்த பசியும் இடுப்பிலிருந்த வலியும் லக்மீச்சந்தை நிலைகொள்ளாமல் செய்து கொண்டிருந்தன. இந்நேரத்தில் பாபா என்ன திருவாய்மொழிந்தார் என்பதைக் கவனத்துடன் கேளுங்கள்.

பாபா கூறினார், "இப்பொழுது பசியுடன் இருப்பது நன்று. இடுப்பில் வலி இருக்கிறது; அதற்கு மருந்து தேவை. ஆனால், இது சாஞ்சா உண்ணும் நேரம். ஆரதிக்குத் தயாராகும்."

லக்மீச்சந்தின் மனதில் இருந்த எண்ணம் பாபாவின் வார்தைகளாகத் தெளிவாகவும் பிரகடனம் போன்றும் வெளிவந்தது. ஒலியே எழுப்பாமல் ஏற்பட்ட எதிரொலி! மஹராஜ் அந்தர் ஞானத்தால் அனைத்தையும் அறிந்திருந்தார்.

ஆரத்தி முடிவடைந்தது. மதிய உணவில் ஒரு பண்டமாக சாஞ்சா பரிமாறப்பட்டது. லக்மீச்சந்தின் ஆசை நிறைவேறியது. அவர் ஆனந்தமடைந்தார்.

இந்தக் கட்டத்திலிருந்த அவருக்கு பாபாவின் மீதிருந்த அன்பு பெருகியது. தேங்காய், ஊதுவத்தி, மாலைகள் ஆகியவற்றை சமர்ப்பணம் செய்வது ஒரு நியமம் ஆகிவிட்டது. பூஜையும் அதையொட்டிய செயல்களும் தொடர்ந்து நடந்தன. லக்மீச்சந்துக்கு க்ஷேமத்தைக் கொண்டுவந்தன.