valam tharum vallal

valam tharum vallal
shri shird sai baba

Thursday 25 April 2024

 ஷீர்டி சாயி சத்சரிதம்


ஒவ்வொரு வீட்டிலும் குழப்பம் நிலவியது; மக்கள் கூக்குரலிட்டனர்; இதயம் படபடவென்று துடிக்க இங்குமங்கும் ஓடினர்.

மஹராஜ் தேகத்தை விடுத்துவிட்டார். கிராம மக்கள் அனைவரும் தங்களுடைய உயிருக்கே உலைவந்தது போல் உணர்ந்தனர். "இறைவா! எவ்வளவு கொடுமையான வேளை இது! இதயத்தைப் பிளக்கிறதே !" என்று மக்கள் கூவினர்.

அனைவரும் மசூதியை நோக்கி ஓட ஆரம்பித்தனர். சபாமண்டபம் நிரம்பி வழிந்தது. இதயத்தைப் பிளக்கும் காட்சியைக் கண்டு மக்கள் துக்கத்தால் தொண்டை அடைக்க விம்மி விம்மி அழுதனர்.

'ஷிர்டியின் வைபவம் தொலைந்துபோயிற்று!  சுக சௌபாக்கியங்கள் அனைத்தையும் இழந்துவிட்டோம்' என்று நினைத்து எல்லாருடைய கண்களிலும் கண்ணீர் நிரம்பியது. மக்கள் அனைவரும் தைரியம் இழந்தனர்.

அந்த மசூதியின் மஹத்துவந்தான் என்னே! முக்தி தரும் சப்தபுரிகளில் ஒன்றாகக் கருத்தப்பட்டதன்றோ ! 'துவாரகா மாயி' என்று பாபா சர்வ நிச்சயமாகப் பெயரிட்ட இடமன்றோ?

நிர்யாணமாக (கடைசிப் பயணமாக)  இருப்பினும், துவாரகா மாயியே இறையுடன் ஒன்றாகக் கலக்கக்கூடிய தலம். எவர் இறைவனை இடையறாது சிந்திக்கிறாரோ அவருக்கு அங்கு இடம் உண்டு.

காருண்யம் மிகுந்த தாயுந்தந்தையுமானவரும் , பக்கதர்களுக்கு விச்ராந்தி அளிக்கும் புகலிடமானவருமான குருராஜர், சாயீராயர், இத்தன்மை படைத்தவர்; என்றும் ஞாபகத்தில் இருப்பவர்.

பாபா இல்லாமல் ஷீர்டி பாழடைந்தது. பத்துத் திசைகளும் சூனியமாக தெரிந்தன. பிராணனை இழந்த உடல்போல் ஷீர்டி காட்சியளித்தது.

குளத்தில் நீர் வற்றிப்போகும்போது மீன்கள் துள்ளிப் புரண்டு துடிக்கும். அதுபோலவே ஷீர்டி மக்களும் துக்கத்தால் துடித்தனர்; களை இழந்தனர்.

தாமரை இல்லாத நீர்நிலையைப் போலவும், புத்திரன் இல்லாத இல்லதைப் போலவும், தீபம் இல்லாத கோயிலைப் போலவும், மசூதியும் சுற்றுப்புறமும் களையிழந்து போயின.

தலைவன் இல்லாத குடும்பத்தைப் போலவும், அரசன் இல்லாத நகரத்தைப் போலவும், செல்வம் இல்லாத கஜானா போலவும், பாபா இல்லாத ஷீர்டி வனமாகியது.

சிசுவுக்குத் தாயார் எப்படியோ, சாதகப் பறவைகளுக்கு மேகநீர் எப்படியோ, அப்படியே ஷிர்டியில் வாழ்த்த மக்களுக்கும் சகல பக்தர்களுக்கும் பாபாவின் அன்பு.

ஷீர்டி, ஹீனமும் தீனமும் அடைந்து மரணமுற்றதுபோல் ஒளியிழந்தது. நீரிலிருந்து அகற்றப்பட்ட மீன்களை போல மக்கள் வேதனையால் துடிதுடித்தனர்.

மக்களனைவரும், கணவனால் கைவிடப்பட்ட பெண்மணியைப் போலவும், தாயிடமிருந்து பிரிக்கப்பட்ட குழந்தையைப் போலவும், வழி தவறிய பசுவின் கன்றைப் போலவும் பரிதவித்தனர். 




Thursday 18 April 2024

 ஷீர்டி சாயி சத்சரிதம்


பக்தர்களுக்குக் கைதூக்கி வாழ்த்துக் கூறியவர் தம்முடைய பூதவுடலை ஷிர்டியில் நீத்துவிட்டபோதிலும், நகரும் நகராப் பொருள்கள் அனைத்திலும் நிறைந்திருக்கிறார். லீலைக்காக அவதாரம் எடுக்கக்கூடிய சாமார்த்தியமுடையவர் அல்லரோ!

'சமர்த்த ஸாயிதான் பிரம்மத்துடன் ஐக்கியமாகிவிட்டாரே, இப்பொழுது ஷிர்டியில் என்ன இருக்கிறது?' இது போன்ற சந்தேகங்களுக்கு மனத்தில் இடமளிக்க வேண்டா. ஏனெனில், ஸ்ரீ சாயி மரணத்துக்கு அப்பாற்பட்டவர்.

ஞானிகள், பரோபகாரம் கருதி கர்ப்ப வாசம் இல்லாமல் தம்மைத்தாமே வெளிப்படுத்திக்கொள்ளக் கூடியவர்கள். ஞானிகள் பாக்கியவந்தர்கள்; பிரம்ம சொரூபமானவர்கள்; உருவமேற்று அவதாரம் செய்பவர்கள்.

அவதார புருஷர்களுக்கு ஜனன நிலையும் இல்லை; மரண நிலையும் இல்லை. வந்த வேலை முடிந்தவுடன் சொந்த ரூபத்திற்குத் திரும்பித் தோன்றாநிலையில் ஒன்றிவிடுகின்றனர்.

மூன்றரை முழ நீள உடல்தானா பாபா? அவருக்கு ஓர் உருவத்தையோ குறிப்பிட்ட வண்ணத்தையோ கற்பிப்பது அயுக்தமான (பொருத்தமில்லாத) பேச்சு அன்றோ?

அணிமா, கரிமா ஆகிய எட்டு மஹா சித்திகள் அவர் வருவதாலும் போவதாலும் குறைவதுமில்லை; நிறைவதுமில்லை. அகண்டமான சம்ருத்தி (நிறைவு) அவருக்குச் சொந்தமானது. அதுவே அவருடைய புகழ்.

இம்மாதிரியான மஹானுபாவர்களின் உதயம் உலக மங்களத்திற்காகவே. உதயம் நீடித்தலிலும் நிற்றலிலும் ஒரு தொடர்ச்சியைக் காணலாம். ஞானிகள் உலக மக்களைக் கைதூக்கிவிட எப்பொழுதும் தயார்.

ஆத்மாவில் ஒன்றி, அழிவில்லாத நிலையில் இருக்கும் இவர்களுக்கு ஜனனம்பற்றிய  பிராந்தியும் (மனா மயக்கமும் ) மரணம் பற்றிய பிராந்தியும், கனவில் ஏற்படும் சுகங்களையும் சம்பத்துக்களையும் போலாகும்.

இதையே வேறுவிதமாக பார்த்தாலும், ஞானச் சுரங்கமாகவும்  ஆத்மாவில் மூழ்கியவராகவும் வாழ்பவருக்கு, உடலைப் பேணுதலும் வீழ்த்துதலும் சரிசமானம்.

ஆக, அவர்களனைவரும் மலைபோன்ற துக்கத்தில் அமிழ்த்திவிட்டு பாபாவின் உயிரற்ற உடல் சாய்ந்தது. ஷீர்டி கிராமமெங்கும் 'ஹாஹா' என்ற அவல ஓலம் கட்டுக்கடங்காமல் எழும்பியது.

பாபா நிர்யாணம் அடைந்த செய்தி கிராம மக்களை அம்புபோல் துளைத்தது. தினசரி நடவடிக்கைகள் தடங்கி நின்றன. கலவரமடைந்த மக்கள் சிதறி இங்குமங்கும் திசை தெரியாது ஓடினர்.

அமங்கலச் செய்தி பரவி, மக்களின் தலைமேல் இடிபோல் விழுந்தது. சிந்தனையாளர்கள் திகைப்புற்று அமர்ந்தனர். மற்றவர்கள் ஓலமிட்டு அழுதனர்.

பேரன்பாலும் பொங்கும் துக்கத்தாலும் தொண்டை அடைத்தது; கண்களில் நீர் பெருகியது. மக்கள் 'சிவ சிவ ஹரே' என்று புலம்பினர்.

 


 

Thursday 11 April 2024

 ஷீர்டி சாயி சத்சரிதம்


சூரியனை கிரஹணம் பிடித்திருக்கிறது என்றும், அது கண்ணக்குத் தெரியாமல் போய்விட்டது என்றும் மக்கள் சொல்லுகின்றனர். ஆனால், அது வெறும் பார்வையின் குணதோஷமே, ஞானியரின் மரணமும் அப்படியே.

ஞானிகளுக்கு உடல் என்பது கேவலம் ஒரு உபாதி.அவர்களுக்கு ஏது பிறவிப்பிணி? பழவினையால் ஏதேனும் பந்தம் இருப்பினும் அதை அவர்கள் அறியமாட்டார்கள்.

உருவமற்ற நிலையில் இருந்தபோது அடியவர்களின் பக்தியால் நிரம்பி வழிந்ததாலும், பக்தர்கள் பூர்வஜென்மங்களில் சம்பாதித்த புண்ணியத்தால், அவர் தம்மைத்தாமே வெளிப்படுத்திக்கொண்டார். பக்தர்களுக்கு கைதூக்கி வாழ்த்துக் கூறுவதற்காகவே ஷிர்டியில் காணப்பட்டார்.

'பக்தர்களுக்காகத் தோன்றிய காரியம் முடிவடைந்தது; ஆகவே, அவர் உடலை உதிர்த்துவிட்டார். ' என்று சொல்லப்படுகிறது. இந்த வார்த்தைகளை யார் நம்புவர்? யோகிகளுக்கு போவதும் வருவதும் உண்டோ?

இச்சாமரண சக்தி (விரும்பியபோது உயிர் பிறக்கும் சக்தி) படைத்த சமர்த்த சாயி, தேகத்தை யோகாக்கினியில் எரித்துவிட்டு மூலப்பிரகிருதியுடன் கலந்துவிட்டார். ஆயினும், பக்தர்களுடைய இதயத்தில் என்றும் வாசம் செய்கிறார்.

எவருடைய நாமத்தை நினைத்தால் ஜனனமரண எண்ணமே ஓடி மறைந்துவிடுகிறதோ, அவருக்கு மரண அவஸ்தை ஏது? முதலிலிருந்த தோன்றா நிலைக்கு அவர் திரும்பிவிட்டார் என்றே அறிதல் வேண்டும்.

பௌதிக நிலையிலிருந்து தாவி, தோன்றாநிலையில் பாபா கலந்தார். அந்த நேரத்தில், தம்மிலேயே மூழ்கிய நிலையை அனுபவித்துக்கொண்டிருந்தபோதிலும் , பக்தர்களை விழிப்புடன் இருக்கச் செய்தார்.

எந்த உருவம் தெய்வீக உயிரோட்டத்துடன் இயங்கியதோ, அந்த உருவம் பக்தர்களுடைய இதயத்தில் ஆழமாகப் பதிந்துவிட்டது. அந்த தேகம் மறைந்து போயிற்று என்று எப்படிச் சொல்ல முடியும்? மனம் அந்த வார்த்தைகளை ஏற்க மறுக்கிறது.

ஆதியும் அந்தமுமில்லாத இந்த சாயி பிரளய (ஊழிக்) காலத்திலும் இருப்பார். ஜனனமரண அபாயத்தில் என்றுமே மாட்டிக்கொள்ளமாட்டார்.

மஹராஜ் ஞானேச்வர் எங்கே போனார்? மூன்று நூற்றாண்டுகளுக்குப் பிறகும் தரிசனம் தந்தார் அல்லரோ! ஞானி ஏகநாதர் அவரை சந்தித்தார். அந்த உபகாரத்துக்கு உலகம் அவருக்கு கடைமைப் பட்டிருக்கிறது.

கிருபாசனமுத்திரமான ஏகநாதர் பைடனின் ஜோதியாக எவ்வாறு பிரகாசித்தாரோ, அவ்வாறே துகாராம் மஹராஜ் தெஹூவிலும், நரசிம்ம சரஸ்வதி ஆலந்தியிலும் பிரகாசித்தனர்.-

பரளியில் சமர்த்த ராமதாசர்; அக்கல்கோட்டில் அக்கல்கோட் மஹாராஜ்; ஹுமானாபாத்தில் மாணிக்கப் பிரபு; அவ்வாறே ஷிர்டியில் இந்த சாயி.

மனம் எப்படியோ அப்படியே பாவம். பாவம் எப்படியோ அப்படியே என்றும் அனுபவம். புகழ் பெட்ரா சித்திகளை உடையவருக்கு மரண நிலை ஏது? 






Thursday 4 April 2024

 ஷீர்டி சாயி சத்சரிதம்


தம்மிலேயே மூழ்கி எந்நேரமும் 'அல்லா மாலிக்' ஜபம் செய்பவருக்கு, சன்னிதானத்தில் பக்தர்கள் இருப்பது எப்படி ஒரு பிரதிபந்தமாக (மாற்றுத் தளையாக - தடையாக) ஆக முடியும்?

அவரைப் பொறுத்தவரை பிரபஞ்சமே இல்லாமற்போய் வீடுபேற்றில் உறைந்துவிட்டார். 'இரண்டுண்டு' என்னும் பாவம் வேருடன் பிடுங்கி எறியப்பட்டுவிட்டது. தம்முடைய நிஜமான சொரூபத்திலேயே மூழ்கியிருந்தார்.

இதில் ஒவ்வொரு அக்ஷரமும் சத்தியம்; அணுவளவும் அசத்தியம் இல்லை. ஆயினும் உலகத்திற்கு வழிகாட்டுவதால்தான், ஞானியர் தங்களுடைய அவதார நோக்கமான கடமையை நிறைவேற்றியவர்கள் ஆகின்றனர்.

ஞானிகள் ஆறு குணதோஷங்களிலிருந்தும் (காமம், குரோதம், லோபம், மோகம், மதம், மாச்சரியம் ஆகியவை) விடுபட்டவர்கள். நிரந்தரமாக உருவமற்ற நிலையில் இருப்பவர்கள். பக்தர்களைக் கைதூக்கிவிடுவதற்காகவே உருவம் ஏற்பவர்கள். அவர்களுக்கு ஏது மரணம்?

தேகமும் இந்திரியங்களும் ஒன்றுசேர்வது ஜனனம்; அவை பிரிவது மரணம். பாசபந்தங்களில் மாட்டிக்கொள்வது ஜனனம்; அவற்றிலிருந்து விடுபடுவது மரணம்.

பிறப்பை இறப்பு தவிர்க்கமுடியாதவாறு தொடர்கிறது; ஒன்றிலிருந்து மற்றதைப் பிரிக்கமுடியாது. ஜீவனுடைய இயற்கையான லக்ஷணம் மரணம் நிலை; ஜீவன் உயிருடன் இருப்பது செயற்கையான நிலை.

தம்மிச்சையாக அவதாரம் செய்பவர்களுக்கும், காலனின் தலைமேல் காலை வைத்து மரணத்தை அடித்து வீழ்த்தும் சக்தி பெற்றவர்களுக்கும், வாழ்நாள் எத்தனை ஆண்டுகள் என்பது பற்றி என்ன விசாரம்!

பக்தர்களுக்கு மங்களம் விளைவிக்க வேண்டும் என்ற ஒரே விருப்பத்தால் பல அவதாரங்கள் எடுப்பவர்களை ஜனனமும் மரணமும் எப்படிக் கட்டிவைக்க முடியும்? இரண்டுமே மாயையான கற்பனைகள் அல்லவோ?

தேகம் கீழே விழுவதற்கு முன்னமேயே தேஹத்தைச் சாம்பலாக்கிவிட்டவருக்கு மரணம் பற்றி என்ன பயம்? அவர் மரணத்தை வென்றவர் அல்லரோ?

மரணமே தேகத்தின் இயற்கையான நிலை. மரணமே தேகத்தின் சுகமான நிலை. உயிரோடு இருப்பதுதான் தேகத்தின் செயற்கையான நிலை. இது சிந்தனையாளர்களின் கருத்து.

ஜன்மமென்பது என்னவென்று அறியாத ஆனந்தமோஹனமான சமர்த்த சாயிநாதரின் உடல் எவ்வாறு மரணமடைய முடியும்? தேகம் என்று ஒன்று இருக்கிறது என்ற உணர்வை உதறியவல்லரோ சாயி!

சாயீ பூரணமான பாரா பிரம்மம். அவருக்கேது ஜனனமும் மரணமும்? 'பிரம்மமே சத்தியம்; ஜகமனைத்தும் மாயை' என்றுணர்ந்தவருக்கு உடலைப்பற்றிய உணர்வு ஏது?

அவர் பிராணனைத் தரித்ததும், ஒரு நிலையில் அதை விடுத்ததும், ஏறும் காணமுடியாதவாறு உலகெங்கும் சுற்றிவந்ததும், அவருடைய யோகசக்தியால் விளைந்த, பக்தர்களைக் கைதூக்கிவிடுவதற்காகவே செய்யப்பட்ட லீலைகள்.

 


 

Thursday 28 March 2024

 ஷீர்டி சாயி சத்சரிதம்


பெற்ற சொற்களை அனைவரும் அறிவர். உலகவழக்கைக் காக்கும் ரீதியில் இறையடியார்கள் இந்த நியதின்படி நடந்துகாட்டினர்.

பாபாவின் முடிவு நெருங்கியது; இன்னும் நாள்களே இருந்தன. ஆகவே, பாபா வஜே அவர்களை ராமவிஜயம் (ராமாயணம்) படிக்கச் சொல்லி நியமித்தார்.

வஜே மசூதியில் அமர்ந்தார். போதி பாயராயணம் ஆரம்பித்தது. பாபாவும் செவிமடுக்க ஆரம்பித்தார். எட்டு நாள்கள் கழிந்தன.

பிறகு பாபா ஆணையிட்டார், "போதி பாராயணம் தடையின்றித் தெளிவாக நடக்கட்டும்." வஜே மேலும் மூன்று நாள்கள் இரவுபகலாக வாசித்துக்கொண்டேயிருந்தார்.

மொத்தம் பதினொன்று நாள்கள் உட்கார்ந்து வாசித்தார். பின்னர் வலுவிழந்து சோர்ந்துபோனார். வாசித்துக்கொண்டிருத்தபோதே குரல் மங்கியது. இவ்வாறு மூன்று நாள்கள் கழிந்தன.

பிறகு பாபா என்ன செய்தாரென்றால், போதி வாசிப்பை சமாப்தம் (முடிவு)  செய்துவிட்டு, வஜேயை அப் பணியிலிருந்து விடுவித்தார். தாம் அமைதியாகவும் சாந்தமாகவும் இருந்துகொண்டார்.

'வஜேயை விடுவித்து அனுப்பியதற்கு காரணம் என்னவென்று சொல்லுங்கள்" என்று கதைகேட்பவர்கள் கேட்கலாம். என் மதிக்கு எட்டிய அளவுக்குச் சிறப்பாகச் சொல்கிறேன். கவனத்துடன் கேளுங்கள்.

ஞானிகளும் சாதுக்களும் சான்றோர்களும் தேகத்தை உதிர்க்கும் காலம் வரும்போது போதிபுராணத்தைப் படிக்கச் சொல்லிக் கவனத்துடன் கேட்பார்கள்.

ராஜா பரீக்ஷீத்திற்கு சுக மகரிஷி ஏழு நாள்கள் பாகவதம் (ஸ்ரீகிருஷ்ணரின் கதை) வாசித்தார். அதைக் கேட்டுத் திருப்தியடைந்த ராஜா தேகத்திலிருந்து விடுதலை பெற்றார்.

பகவானுடைய லீலைகளைக் கேட்டுக்கொண்டும், பகவானுடைய உருவத்தைக் கண்களால் பார்த்துக்கொண்டும் உயிர் நீப்பவர் நிச்சயமாக நற்கதியடைகிறார்.

இதுவே, உலகியல் வாழ்வில் ஈடுபட்டிருப்பவர்களின் நிலைமை, ஞானிகளோ நிரந்தரமாக இக் கோட்டபாட்டின்படி நடந்துகாட்டினர். உலக மக்களுக்கு வழிகாட்டும் பாதையிலிருந்து ஞானிகள் என்றும் விலகுவதில்லை. சிந்தித்துப் பார்த்தால், ஞானிகளின் அவதார நோக்கமே மக்களுக்கு வழிகாட்டுவதுதான்!

உடலை உதிர்க்கும்போது துக்கமோ சோகமோ படாதிருத்தல், பௌதிக உடலின்மேல் ஆசைகொள்ளாதவர்களின் சுபாவம் அன்றோ!

கதைகேட்பவர்களுக்கு இங்கு ஒரு சந்தேகம் எழலாம். பிரம்மானந்த சுகத்தில் திளைத்துக்கொண்டிருப்பவர்கள் மாயையாலும் மோஹத்தாலும் பாதிக்கப்படுகின்றனர் என்று சொல்லுவது பொருத்தமாகுமா?


 

Thursday 21 March 2024

 ஷீர்டி சாயி சத்சரிதம்

ஞானிகள் தம்முள் இருக்கும் தேஜஸைத் (ஒளியைத்) தூண்டிவிட்டு அதில் தங்களுடைய தேஹங்களை எரித்துவிடுவர். பாபாவும் அந்த விதமாகவே செயல்பட்டார்.

எது நேர்ந்திருக்கவே கூடாதோ அது நடந்து முடிந்துவிட்டது. மஹராஜ் சாயுஜ்யம் (முழுமுதற் பொருளுடன் ஒன்றுதல்) அடைந்துவிட்டார். மக்கள் அடியோடு மனமுடைந்து அழுது தீர்த்தனர்.

"அய்யகோ! நான் அவரை விட்டு விலகிப் போகாமலிருந்திருந்தால் எவ்வளவு நன்றாக இருந்திருக்கும்! கடைசி சந்திப்பைக் கோட்டைவிட்டுவிட்டேனே! ஒருவேளை நான் உபயோகமாக ஏதாவது சேவை செய்திருப்பேனோ என்னவோ! ஓ, எப்படி, எப்படி என் மனம் நெருக்கடியான நேரத்தில் அவ்வாறு குழம்பியது?"

இதுபோன்ற நாலாவிதமான எண்ணங்கள் மக்களுடைய மனத்தை துக்கப்படவைத்தன. ஆயினும், பாபாவின் மனத்திலிருந்த எண்ணங்களை யாரால் அறிந்துகொள்ள முடிந்தது?

தொண்டையில் கரகரவென்று இழுக்கவில்லை; மூச்சும் திணறவில்லை; இருமலுமில்லை; ஜீவன் துடிக்கவுமில்லை. பாபா உல்லாசமாகப் பிரயாணம் கிளம்பிவிட்டார்!

அய்யகோ! இப்பொழுது சாயிதரிசனம் எங்கே? இனிமேல் கால்களை பிடித்துவிடுவது எப்படி? பாதங்களை அலம்புவது எங்கனம்? தீர்த்தத்தை அருந்துவது எவ்வாறு?

அந்திமவேளை நெருங்கிவிட்டதென்று தெரிந்து, சுற்றிலுமிருந்த, பிரேமை மிகுந்த பக்தர்களை கலைந்த போகச் சொல்லி அவர்களை மனவேதனை அடையச் செய்தது ஏன்?

ஒருவேளை இப்படி இருக்குமோ? நிர்யாணகாலத்தில் உயிருக்குயிரான பக்தர்களை பார்த்துக்கொண்டிருந்தால்பாபாவின் மனத்தில் அந் நேரத்தில் அன்பின் அலைகள் போங்க வாய்ப்பு இருந்தது.

இம்மாதிரியான பிரேமபந்தங்கள் சாயுஜ்யம் அடைவதற்குத் தடையாக  அமையும். இவற்றை சரியான நேரத்தில் அறுத்தெரியாவிட்டால், மனம் எவ்வாறு வாசனைகளிலிருந்து (பற்றுகளிலிருந்து) விடுபடும்?

பற்றுகளிலிருந்து விடுபடாமல் ஜீவன் பிரிந்தால், அக்கணமே சம்சார வாழ்வில் ஒரு புதிய ஈடுபாடு ஜனனமாகிறது. கூடவே எத்தனையோ புதிய எதிர்பார்ப்புகளையும் அவாக்களையும் கூட்டிவருகிறது.

ஞானிகளும் சாதுக்களும் என்றும் இந் நிலையைச் சட்டென்று தவிர்த்துவிடுவர். அந்தப் பாரம்பரியத்தை காப்பாற்ற வேண்டும் என்று பாபா மனத்தில் நிர்த்தாரணம் செய்துகொண்டார்.

அந்திமகாலத்தில் சாந்தியாக இருக்கவேண்டும்; ஏகாந்தமாக இருக்கவேண்டும்; அச்சத்திற்கும் கலக்கத்திற்கும் இடம் கொடுக்கக்கூடாது. அந் நிலையில்தான் மனம் இஷ்டதெய்வத்தை தியானம் செய்ய முடியும். இவ்வுணர்வை, வாழ்வின் இறுதிக்கு கட்டத்தில் எவரும் நிலைநிறுத்த வேண்டும்.

'அந்திமத்தில் மதி எப்படியோ, அப்படியே கதி'. (உயிர் பிரியும் நேரத்தில் மனம் எதை நினைக்கிறதோ அதற்கேற்றவாறு மறுபிறவி ஏற்படுகிறது.) இந்தப் பிரசித்தி 




Thursday 14 March 2024

 ஷீர்டி சாயி சத்சரிதம்


இந்த அத்தியாயத்தில், தம்முடைய முடிவு நெருங்கிய காலத்தில் பாபா எவ்வாறு ஒரு பிராமணரை ராமாயணம் படிக்கச் செவிமடுத்தார் என்ற விவரமும்,-

சமாதி அமைய வேண்டிய இடம் முன்கூட்டியே திட்டமிடப்பட்ட விவரமும், நினைவுச்சின்னமாக பாபா பாதுகாத்துவந்த செங்கல் எதிர்பாராதவிதமாகக் கீழே விழுந்து உடைந்த விவரமும் சொல்லப்படும். இவையனைத்தையும் கவனமாகக் கேளுங்கள்.

அதுபோலவே, முன்பொரு சமயம் பாபா பிரம்மாண்டத்தில் தம்முடைய பிராணனை மூன்று நாள்கள் வைத்தபோது (நிர்விகல்ப சமாதி நிலை), அது சமாதி நிலை இல்லை என்றும், பாபா இறந்துவிட்டார் என்றும் ஷீர்டி மக்கள் உறுதிபட நினைத்துப்பற்றியும் கேளுங்கள்.

உத்தரகிரியைகள் (இறுதிச் சடங்குகள்) செய்வதற்குத் தயார் செய்துகொண்டிருந்தபோது பாபா திடீரென்று உயிர்தெழுந்ததைக் கண்டு மக்கள் திடுக்கிட்ட விவரத்தையும் கேளுங்கள்.

ஆயினும், இது யாரும் கேட்க விரும்பாத நிர்யாணக் கதை. பாபா தேஹத்தை விடுத்தது பற்றிய சங்கதிகள், கேட்பவர்களுக்கு மனவேதனையையும் சிரமத்தையும் அளிக்கும்.

இருந்தபோதிலும், சாதுக்கள் மற்றும் ஞானிகளுடைய முக்தி சம்பந்தமான கதைகள், கேட்பவர்களையும் சொல்லுபவரையும் புனிதப்படுத்தும். ஆகவே, விஸ்தாரத்திற்கு (விரிவுக்கு) பயந்து, பகுதி பகுதியாக முடிந்தவரை கேட்டு சமாதானமடையுங்கள்.

பூதவுடலை உகுத்ததால், எளிதில் அடையமுடியாததும் மறுபிறப்பில்லாததும் என்றும் அழியாததுமான பேரின்ப நிலையை பாபா அடைந்தார்.

தேஹத்தை தரித்தபோது அவர் உருவ நிலையில் இருந்தார். தேஹத்தைத் தியாகம் செய்ததால், அருவ நிலைக்கு மாறிவிட்டார். ஓர் உடலில் எடுத்த அவதாரம் முடிந்தது; எல்லா உடல்களிலும் வியாபித்திருக்கும் நிலைக்குத் திரும்பிவிட்டார்.

ஓரிடத்தில் இருந்த நிலைமையை முடித்துக்கொண்டு எங்கும் நிறைந்த நிலைமைக்குத் திரும்பினார். ஆதியந்தமில்லாத முழுமுதற்பொருளுடன் இரண்டறக் கலந்துவிட்டார்.

எல்லாருடைய வாழ்க்கையையும் சாயியை மையமாக வைத்தே சுழன்றது; இல்லை; சாயியே அவர்கள் எல்லாருடைய பிராணன் என்று சொல்வதே பொருத்தம். சாயி இல்லாது, ஷீர்டி கிராம மக்கள் ஹீனர்களாகவும் தீனர்களாகவும் ஆயினர்.

தேகம் அசைவின்ரிச் சில்லிட்டுப்போக ஆரம்பித்தபோது ஒரு பெரும் ஓலம் எழுந்தது. பாலர்களிலிருந்து வயசாதிகர்கள் வரை அனைவரும் தங்களுடைய வாழ்க்கைக்கே முடிவு வந்துவிட்டது போலப் பெருந்துயரத்தில் மூழ்கினர்.

ஜுரம் போன்ற உடல் உபாதிகள் உலகியல் வாழ்வில் கட்டுண்டவர்களைத்தான் பிடிக்கும். எக்காலத்திலும் யோகிகளை நெருங்கி அவமரியாதை செய்வதில்லை. 




Thursday 7 March 2024

 ஷீர்டி சாயி சத்சரிதம்


43 . மஹாசமாதி (இரண்டாம் பகுதி)


ஓம் ஸ்ரீ விநாயகனே போற்றி! ஸ்ரீ சரஸ்வதியே போற்றி!
ஸ்ரீ குருமஹாராஜனே போற்றி! குலதேவதைக்கும் ஸ்ரீ சீதாராமச்சந்திரனுக்கும்
என்னுடைய பணிவான வணக்கங்கள். பூஜ்யகுரு ஸ்ரீசாயிநாதனை
பக்தியுடன் சிரம் தாழ்த்தி வணங்குகிறேன்.

கடந்த அத்தியாயத்தில் சமர்த்த சாயியின் நிர்யாணயம் விவரிக்கப்பட்டது. விட்டுப்போனதும் நிறைவு பெறாததுமான விவரங்கள் இந்த அத்தியாயத்தில் சம்பூரணம் (நிறைவு) செய்யப்படும்.

சமர்த்த சாயியின் மீது எனக்கு ஏற்பட்ட அற்புதமான பிரேமை அவருடைய அருள் வெளிப்பாடே, சாயியின் பொற்பாதங்களில் மூழ்கிய ஹேமாட் அவருடைய இந்தச் சரித்திரத்தை எழுதுகிறேன்.

அவரே பிரேமபக்தியை அளிக்கிறார்; சரித்திரத்தின் மஹிமையை மேம்படுத்துபவரும் ஒரே. இக் காரணம் பற்றியே அவரை ஆராதிக்கும் நெறிமுறை பெருமை வாய்ந்தது. அதுவே உலகியல் பற்றுகளிலிருந்து நம்மைப் பிரிக்கிறது.

ஆதலின், நான் என் உடலாலும் பேச்சாலும் மனத்தாலும் அவரை ஆயிரம் தடவைகள் வணங்குகிறேன். சிந்தனை செய்வதால் அவருடைய  மஹிமையை உணரமுடியாது; அனன்னியமான சரணாகதியால்தான் முடியும்.

மூட்டையாகச் சேர்ந்திருக்கும் பாவங்களையும் மலங்களையும் கழுவித் தள்ளி மனத்தூய்மை அடைவதற்கு இதர சாதனைகளால் பயனில்லை.

மனத்தூய்மை பெறுவதற்கு ஹரிபக்தர்களின் கீர்த்தியை நினைப்பதும் பஜனையாகவும் கீர்த்தனையாகவும் பாடுவதையும்விட சுலபமான சாதனை எவ்வளவு தேடினாலும் அகப்படாது.

ஆகவே, நாம் முன்பு சொன்ன காதையை விட்ட இடத்தில் பிடிப்போம்; அத்திப்பற்றிச் சிறிது ஆலோசனை செய்வோம். நம்முடைய ஆனந்தத்தின் இருப்பிடமான சாயியைப்பற்றிய வியாக்கியானதைத் தொடர்ந்து சொல்லுவோம்.

அவருடைய நிர்யாணம் ஏன் விஜயதசமியன்று நிகழ்ந்தது என்பதும், எவ்வாறு தாத்யாவைச் சாக்குபோக்காக வைத்து வரும்பொருள் உரைக்கப்பட்டது என்பதும், ஏற்கெனவே விவரமாகச் சொல்லப்பட்டன.

தேகத்தை விடுக்கப்போகும் சமயத்திலும் தருமம் செய்யவேண்டியதுபற்றி விழிப்புடன் இருந்தது, லக்ஷ்மி பாயிக்கு தானம் செய்தது, ஆகிய அனைத்து விஷயங்களும் பின்னர் எடுத்துரைக்கப்பட்டன . 




Thursday 29 February 2024

 ஷீர்டி சாயி சத்சரிதம்


செயல் புரியும் உலகியல் வாழ்வில் ஈடுபட்டவர்போல் தோன்றினாலும், அவர் சிறிதளவும் செயலேதும் புரியவில்லை. 'நான்' என்ற உணர்வை முழுவதும் இழந்துவிட்டதால் கர்மத்தில் அகர்மத்தைக் (செயல் புரிவதில் புரியாமையைக்) கண்டார் பாபா.

"கர்மவினை அனுபவிக்காமல் அழியாது". கர்மவினைப்பற்றிய இந்த சூக்குமம் வேதத்தில் சொல்லப்பட்டிருக்கிறது. பிரம்ம ஞானம் பெற்றவருக்கு இதுபற்றிக் குழப்பம் ஏதும் இருக்கமுடியாது. ஏனெனில், அவர் எல்லா வஸ்துக்களிலும் பிரம்மத்தையே பார்க்கிறார்.

செயலின் பலன், செயலிலிருந்தே விளைகிறது. துவைத பாவத்தின் (இரண்டு உண்டு என்னும் கோட்பாட்டின்படி ) இந்த நியதி பிரசித்தமானது. பிரம்மத்தை அறிந்தவர்கள் கிளிஞ்சலையும் வெள்ளியையும் சமமாகப் பார்ப்பதுபோல், இந்த நியதியையும் பிரம்மமாகவே கருதுகின்றனர்.

எல்லாருக்கும் கருணை காட்டும் அன்னையான சாயி, எப்படி மரணத்தின் பிடியில் சிக்கிக்கொண்டார்? கரிய இரவு, பகலை விழுங்கிய கதையாயிற்றே!

ஒவ்வொரு மாதத்தின் வரையறையை மனத்தில் கொண்டு இந்த அத்தியாயத்தை இங்கு முடிப்போமாக! மிக விஸ்தாரமாக்கிவிட்டால் கேட்பவர்கள் அயர்ந்து போவார்கள்.

மஹாசமாதிபற்றிய மற்ற விவரங்களைப் பின்னர்க் கிரமமாக கேட்கலாம். எவருடைய கிருபையால் யான் பெரு பெற்றவனாக ஆனேனோ, அந்த சமர்த்த சாயியை ஹேமாட் சரணடைகிறேன்.

எல்லாருக்கும் க்ஷேமம் உண்டாகட்டும்! ஞானிகளாலும் சான்றோர்களால் உணர்வூட்டப்பட்டு, சாயிபக்தன் ஹேமாட் பந்தால் இயற்றப்பட்ட, 'ஸ்ரீ சமர்த்த ஸாயீ சத் சரித்திரம்' என்னும் காவியத்தில், 'ஸ்ரீ சாயிநாத நிர்யாணம்' என்னும் நாற்பத்திரண்டாவது அத்தியாயம் முற்றும்.



ஸ்ரீ சத்குரு சாயி நாதருக்கு அர்ப்பணம் ஆகட்டும்.


சுபம் உண்டாகட்டும். 




Thursday 22 February 2024

 ஷீர்டி சாயி சத்சரிதம்

உடலை உதறும் நேரம் நெருங்கிவிட்டது என்று அறிந்து, புட்டி, காகா , ஆகியவர்களிடம் பாபா சொன்னார், "போங்கள்; வாடாவிற்குச் சென்று போஜனத்திற்குப் பிறகு வாருங்கள்."

சுற்றியிருந்தவர்களின் முகத்தில் பிரதிபலித்த சஞ்சலமும் கவலையும் பாபாவின் மனத்தைத் தடுமாறச் செய்தது போலும். அவர் எல்லாருக்கும் ஆணையிட்டார், "போங்கள், போங்கள், போய்ச் சாப்பிட்டுவிட்டு வாருங்கள்."

இவ்வாறாக, நிரந்தரமாக அவருடைய சங்கத்தை அனுபவித்தவர்களும், இரவுபகலாக அவருடன் இருந்த நண்பர்களும், பாபாவின் ஆணையை மீறமுடியாத நிலையில் மனம் குழம்பியவாறே அங்கிருந்து எழுந்து சென்றனர்.

பாபாவின் ஆணையை மீற அவர்கள் விரும்பவில்லை; அவருடைய சன்னதியிலிருந்து அகலவும் விரும்பவில்லை. பாபாவின் மனத்தைப் புண்படுத்த விரும்பாது போஜனத்திற்காக வாடாவிற்குச் சென்றனர்.

பாபாவின் உடல்நிலை கவலைக்குரியதாக இருந்தபோது, சோறென்ன; நீரென்ன! அவர்களுடைய பிராணன் பாபாவிடம் இருந்தது; பிரிவைப்பற்றிய நினைவை அவர்களால் ஒருகணமும் சகித்துக்கொள்ள இயலவில்லை.

எப்படியோ போய், வாடாவில் சாப்பாட்டிற்காக அமர்ந்தனர். சாப்பிட்டுக்கொண்டிருந்தபோதே அவசர அழைப்பு வந்தது. சாப்பிடுவதை நிறுத்திவிட்டு ஓடோடி வந்தனர். இருந்தபோதிலும், கடைசி சந்திப்பைக் கோட்டைவிட்டுவிட்டனர்!

ஆயுளென்னும் எண்ணெய் தீர்ந்துவிட்டது; பிராணாஜ்ஜோதி  மங்கியது. அங்கே, பாயாஜி, ஆப்பா கோதேவின் மார்பின்மேல் சாய்ந்தவாறு மீளாத்துயில்கொண்ட பூதவுடல் கிடந்தது.

படுக்கையில் படுத்தவாறோ தூக்கத்திலோ உயிர் பிரியவில்லை. ஆசனத்தில் அமைதியாக அமர்ந்துகொண்டு, தம்முடைய கைகளாலேயே தானம் கொடுத்த பிறகு பாபா தேகத்தை உதறினார்.

தம்முடைய மனோகதியை எவரும் அறியாதவாறு சட்டென்று தம் உடலை உதறினார்; முழுமுதற்பொருளுடன் ஐக்கியமாகிவிட்டார்.

ஞானிகள் மாயையின் சக்தியால் தங்களையே சிருஷ்டி செய்துகொண்டு அவதாரம் செய்கின்றனர். மக்களைத் துன்பத்திலிருந்து கைதூக்கிவிடும் காரியம் முடிந்தவுடனே தோன்றாநிலையோடு ஒன்றிவிடுகின்றனர்.

ஒரு நடிகன் பல வேஷங்களில் நடிக்கலாம்; ஆனாலும், தான் யார் என்பதைப் பூரணமாக அறிந்திருக்கிறான். இவ்வாறிருக்க , தம்மிச்சையாக அவதாரம் செய்தவருக்கு மரணம் என்ன சங்கடம்?

உலகத்தின் க்ஷேமத்திற்காக அவதரித்தவர், வேலை முடிந்தவுடன் அவதாரத்தை முடித்துக்கொண்டார். அவரை எப்படி ஜனனத்தாலும் மரணத்தாலும் கட்டிப்போட முடியும்? அவர் லீலைக்காக மானிட உருவத்தை ஏற்றுக்கொண்டவர் அல்லரோ?

பர பிரம்மம் என்று பெருமை பெற்றவருக்கு முடிவு எப்படி சம்பவிக்க முடியும்? 'என்னுடையது என்று எதுவும் இல்லை' என்ற அனுபவம் பெற்றவருக்கு இருப்பதோ இல்லாமற்போவதோ என்ன துன்பத்தை அளிக்க முடியும்?

 


 

Thursday 15 February 2024

 ஷீர்டி சாயி சத்சரிதம்

இந்த சுலோகத்தின் முதல் அடியில் ஐந்து ஒழுங்கு நெறிமுறைகளும், இரண்டாவது அடியில் நான்கு ஒழுங்கு நெறிமுறைகளும், பரிந்துரைக்கப்பட்டு இருக்கின்றன. பாபாவும் அதே நோக்கத்துடன் அந்தக் கிரமத்தையே அனுசரித்தார் என்று என் உள்மனம் சொல்கிறது.

சிஷ்யன், 1 கர்வமில்லாதவனாகவும் 2 பொறாமை இல்லாதவனாகவும் 3  சாமர்த்தியம் உள்ளவனாவாகவும் 4 மமதை இல்லாதவனாகவும் 5 திடமான அன்புள்ளவனாவாகவும் ,-

6 அவசரப்படாதவனாகவும் 7  அர்த்தத்தை அறிய ஆவலுள்ளவனாகவும் 8 அசூயை (குறைபடும் இயல்பு -  பிறர் செழிப்பு கண்டு ஏக்கம்/வெறுப்பு ) இல்லாதவனாகவும் 9 வீண்பேச்சுப் பேசாதவனாகவும் இருந்துகொண்டு குருவை உபாசிக்கவேண்டும்.

சாயிநாதரின் நோக்கமும் இதுவாகவே இருந்திருக்க வேண்டும்; அதை இந்த ரூபத்தில் வெளிப்படுத்தினார். ஞானிகள் தங்களுடைய பக்தர்களின் நல்வாழ்வுக்காக எந்நேரமும் கருணை பொங்கும் இயல்புடையவர்கள் அல்லரோ!

லக்ஷ்மீ பாயீ, உணவுக்கும் உடைக்கும் நல்ல வசதி படைத்த பெண்மணி. அவருக்கு ஒன்பது ரூபாய் ஒரு பெரிய தொகை அன்று. தாமே அந்த அளவிற்கு தருமம் செய்ய கூடியவர் அவர். ஆயினும், அவருக்கு அளிக்கப்பட்ட இந்த தானம் அபூர்வமானதன்றோ!

அவருடைய பாக்கியம் மிகச் சிறந்தது. அதனால்தான் அவருக்கு இவ்விதமான அற்புதம் நிகழ்ந்தது. சாயியின் கரகமலங்களில் இருந்து நவரத்தினங்களுக்கு இணையான, ரூபாய் நாணயங்கள் ஒன்பதை பெற்றுக்கொண்டார்.

ஒன்பது ரூபாய் பணம் அவர் கைவழியாக எத்தனையோ தடவைகள் செலவாகியிருக்கும்; இனியும் பல தடவைகள் செலவாகும். ஆனால், இந்த ஒன்பது ரூபாய் இமாலயச் சிறப்புடையது; அவருடைய வாழ்நாள் முழுவதும் சாயியை நினைவூட்டப்போகும் தானம் அன்றோ!

தேகத்தை விடுக்கும் நேரம் வந்துவிட்டது. ஆயினும், தம்முடைய நினைவு லக்ஷ்மீ பாயீக்கு மரணப்பரியந்தம் இருக்கவேண்டுமென்பதை மனத்தில் கொண்டு, முதலில் ஐந்து ரூபாயும் பின்னர் நான்கு ரூபாயும் பாபா தானமாகக் கொடுத்தார்.

தமதருகில் இருந்தவர்களைச் சாப்பிடப் போகச் சொல்லி, மனத்தளவில் தாம் தெளிவாகவும் உஷாராகவும் இருந்ததை பாபா வெளிப்படுத்தினார். ஆனாலும், ஓரிரு கிராமவாசிகள் அங்கேயே இருக்க விரும்பினர்.

நெருக்கமான நேரம் என்பதை அறிந்து, பிரேமை மிகுந்த கிராமவாசிகள் சிலர், தங்களை பாபாவிடம் இருந்து அகன்று போகச் சொல்லக்கூடாது என்று பிடிவாதம் பிடித்தனர்.

ஆனால், உயிர் பிரியும் நேரத்தில் மோஹத்தில் மாட்டிக்கொள்ளக்கூடாது என்று பயந்தவர்போல் பாபா விரைவாக அனைவரையும் வெளியே அனுப்பிவிட்டார்.



Thursday 8 February 2024

 ஷீர்டி சாயி சத்சரிதம்


தட்டுகளில் பரிமாறப்பட்ட உணவு ஆறிப்போகலாம்; சாப்பிட உட்கார்ந்தவர்கள் காத்திருக்கும்படி நேரலாம்; ஆனாலும் லக்ஷ்மீ பாயியின் சோளரொட்டி வரும்வரை உணவு தொடப்படாது.

பிற்காலத்தில், தினமும் பிற்பகல் மூன்றரை மணியளவில் லக்ஷ்மீயின் கைகளால் செய்யப்பட்ட இடியாப்பம் வேண்டுமென்று பாபா கேட்பார். அவரருகிலேயே உட்கார்ந்து அதை உண்பார். இது சில நாள்களுக்கு நடந்தது.

பாபா அதில் சிறிதளவே உண்பார். மீதியை லக்ஷ்மீயின் மூலமாகவே ராதாகிருஷ்ண பாயிக்கு கொடுத்தனுப்புவார். காரணம், ராதாகிருஷ்ண பாயீக்கு பாபா அருந்திய உணவில் மீதியை உண்பதில் பிரியம் அதிகம்.

பாபா தேகத்தை உதறிய விவரத்தைச் சொல்லிக்கொண்டிருக்கும்போது சம்பந்தமில்லாத சோளரொட்டி பற்றிய வெறும்பேச்சு எதற்கு என்று கதை கேட்பவர்கள் நினைக்க வேண்டா. சாயி எங்கும் நிறைந்தவர் என்பதற்கு நிதரிசனம் (எடுத்துக்காட்டு) இக் கிளைக்கதை.

கண்ணுக்குத் தெரியும் இவ்வுலகின் நகரும் நகராப் பொருள்கள் அனைத்திலும், அவ்வாறே மேலுலகத்திலும் சாயி நிரந்தரமாக வியாபித்திருக்கிறார். எவர் பிறப்பும் இறப்பும் இல்லாவதரோ , அவரே இந்த சாயீ.

சோளரொட்டிக் கதையின் சாராம்சம் இந்த ஒரு தத்துவமே. லக்ஷ்மீ பாயீ பற்றிய இனிமையான இக் காதலி தானாகவே என் மனத்தில் உதித்தது, கதைகேட்பவர்களின் நன்மைக்காகவே என்று நான் மனப்பூர்வமாக நம்புகிறேன்.

லக்ஷ்மீ பாயீயின் சேவை மகத்தானது! சாயீ அதை எப்படி மறக்கமுடியும்? அவர் அதை ஞாபகத்தில் வைத்திருந்தார் என்பதை நிதரிசனம் செய்யும் அற்புதத்தைச் சொல்கிறேன்; பயபக்தியுடன் கேளுங்கள்.

பிராணன் தொண்டைவரை வந்துவிட்டிருந்த போதிலும், சரீரத்தில் கொஞ்சமும் திராணி இல்லாதுபோன போதிலும், உயிர் பிரியும் நேரத்தில் பாபா தமது கைகளாலேயே லக்ஷ்மீ பாயீயிக்குக்குத் தானம் கொடுத்தார்.

தம்முடைய பாக்கெட்டில் கையை விட்டு முதல் தடவை ஐந்து ரூபாயும் இரண்டாவது தடவை நான்கு ரூபாயும் வெளியே எடுத்து லக்ஷ்மீ பாயீயின் கையில் வைத்தார். இதுவே பாபாவின் கடைசி செயல்!

இச் செயல் நவவித பக்திபற்றி பாபா அளித்த சூசகமா? அல்லது, நவராத்திரிப் பண்டிகையில் செய்யப்படும் துர்க்கா பூஜையையொட்டி சிலன்கண் (விஜயதசமி) நாளன்று எல்லையைக் கடக்கும் சடங்கில் அளிக்கப்படும் தக்ஷிணையா?

அல்லது, ஸ்ரீமத் பாகவதத்தில் ஸ்ரீகிருஷ்ணர் உத்தவருக்கு அளித்த உபதேசத்தில் விவரித்த, சிஷ்யர்களுக்குண்டான ஒன்பது ஒழுங்கு நெறிமுறைகளை ஞாபகப்படுத்தினாரா?

ஸ்ரீமத் பாகவதத்தில் 11  ஆவது காண்டத்தில் 10 ஆவது அத்தியாயத்தில் 6  ஆவது சுலோகத்தின் அற்புதத்தைப் பாருங்கள். இந்த சுலோகம் குருவிடமிருந்து சிஷ்யன் எவ்வாறு பயனடைய வேண்டும் என்பதையும், எந்தெந்த ஒழுங்கு நெறிமுறைகளைக் கையாளவேண்டும் என்பதையும் விவரிக்கிறது. 




Thursday 1 February 2024

 ஷீர்டி சாயி சத்சரிதம்


"லட்சுமி, எனக்குப் பசி எடுக்கிறது." "பாபா, நான் இப்போதே பொய் உங்களுக்குச் சில சோளரொட்டிகள் கொண்டுவருகிறேன்."

என்று சொல்லிக்கொண்டே லக்ஷ்மி தம் இல்லத்திற்குச் சென்றார். சோளரொட்டி காய்கறி பதார்த்தம், சட்டினி இவற்றைச் சுடச்சுடச் செய்து எடுத்துக்கொண்டு தாமதம் இன்றித் திரும்பி வந்தார். அந்தச் சிற்றுண்டியை பாபாவின் எதிரில் வைத்தார்.

பாபா அந்தத் தட்டை எடுத்து ஒரு நாயின் முன்னே வைத்தார். லக்ஷ்மீ பாயி உடனே கேட்டார், "பாபா, நீங்கள் என்ன இவ்வாறு செய்கிறீர்கள்?"-

"நான் ஓடோடிச் சென்று என்னுடைய கைகளாலேயே  சீக்கிரமாக ரொட்டி செய்துகொண்டு வந்தேன். அதற்குப் பலன் இதுதானா? உணமையான மகிழ்ச்சியை நாய்க்கன்றோ கொடுத்துவிட்டீர்கள்!-

"நீங்கள் பசியாக இருந்தீர்கள்; அந்தப் பசியைத் தணிப்பதற்கு இதுதான் வழியா? ஒரு துண்டுகூட நீங்கள் வாயில் இடவில்லை; நான் இங்கே தவித்துக்கொண்டு நிற்கிறேன்!"

பாபா அப்பொழுது லக்ஷ்மீ பாயீயிடம் கூறினார், "நீ ஏன் வீணாகி வருத்தப்படுகிறாய்? நாயின் வயிறு நிறைந்தால், நான் திருப்தியடைகிறேன் என்று அறிவாயாக.-

"இந்த நாய்க்கு உயிர் இல்லையா? எல்லாப் பிராணிகளுக்கும் பசி என்பது ஒன்றுதான். அது ஊமை; நான் பேசுகிறேன். எனினும், பசியில் எதாவது பேதம் உண்ட என்ன?-

"பசியால் வாடும் எந்த உயிருக்கும் அன்னதானம் செய்பவர் உண்மையில் அதை என்னுடைய வாயில் இடுகிறார் என்று அறிவாயாக! இது எங்கும், என்றும், பிரமாணம் என்றும் அறியவாயாக."

இது அன்றாடம் நடக்கும் சாதாரண நிகழ்ச்சி; ஆயினும் போதனையோ ஆன்மீக பாஷை. சாயியின் உபதேசபரமான திருவாய்மொழி இவ்வாறே; பிரேமையெனும் ரசத்தால் பரிபக்குவம் செய்யப்பட்டது.

மக்கள் அன்றாடம் பேசும் எளிய மொழியில் பேசியே ஆன்மீகத் தத்துவங்களை உபதேசித்தார் பாபா. யாருடைய தோஷத்தையும் (குறையையும்) ரகசியத்தையும் சுட்டிக்காட்டாது. ஆன்மீக போதனை அளித்து சிஷ்யர்களை மகிழ்வித்தார்.

பாபாவின் இந்த உபதேசத்திலிருந்து லக்ஷ்மி பாயியின் தினப்படிச் சோளரொட்டி சேவை ஆரம்பித்தது. தினமும் பகல் வேளையில் சோளரொட்டி சையது அதை உடைத்துப் பாலில் ஊறவைத்து பிரேமையுடன் பாபாவுக்கு சமர்ப்பணம் செய்தார்.

பாபாவும், பிரேமையுடனும் பக்தியுடனும் அளிக்கப்பட்ட அந்தச் சோளரொட்டியைத் தினமும் சாப்பிட ஆரம்பித்தார். சில சமயங்களில் அது நேரத்துடன் வந்து சேராவிட்டால், பாபா சாப்பிடுவதற்கு எழுந்திருக்கமாட்டார்.

லக்ஷ்மீயின் சோளரொட்டி நேரம் தவறினால், தட்டுகளில் உணவு பரிமாறப்பட்டிருந்தாலும், சாப்பிடும் வேளை கடந்து விட்டிருந்தாலும், பாபா ஒரு கவளம் உணவையும் வாயில் இடமாட்டார்.  




Thursday 25 January 2024

 ஷீர்டி சாயி சத்சரிதம்


பகல் நேரத்தில் சுமார் பத்து மணி ஆகியது; நிர்யாண நேரம் நெருங்கிக்கொண்டிருந்தது. யாருடைய உதவியும் இல்லாமல் பாபா தாமே எழுந்து உட்கார்ந்தார். குழப்பமேதுமில்லாத தெளிவான மனத்துடன் இருந்தார்.

அப்பொழுது பாபாவின் முகத்தைப் பார்த்த பக்தர்களின் மனத்தில் சமுத்திரம் போன்ற பெரிய நம்பிக்கை எழுந்தது. பயங்கரமான அமங்கல வேளை கடந்துவிட்டது என்றே நம்பினர்.

அவர்கள் அனைவரும் சஞ்சலப்பட்டவாறே சோகமாக உட்கார்ந்திருந்தபோது பாபாவின் நிர்யாண நேரம் நெருங்கிக்கொண்டிருந்தது. அப்பொழுது என்ன நடந்ததென்று கேளுங்கள்.

உயிர் பிரியப்போவதற்கு முன்னாள் அவருடைய மனத்தில் என்ன தோன்றியதோ தெரியவில்லை. அது தர்மம் செய்யவேண்டிய வேளை என்றறிந்து தம்முடைய கப்னி பாக்கெட்டில் கைவிட்டார்.

சிறந்த லக்ஷணங்கள் பொருந்தியிருந்தவரும், பெயருக்கேற்ற நடத்தை கொண்டிருந்தவரும் , சாயி பாதங்களிலேயே எப்பொழுதும் மூழ்கியிருந்தவருமான, லக்ஷ்மி பாயி என்பவர் அப்பொழுது அவருடைய சந்நிதியில் இருந்தார்.

கணநேரத்தில் பூதவுடலை உதறிவிடப் போகிறோம் என்று அறிந்த பாபா, மிகுந்த கவனத்துடன் திரவிய தானம் அளித்தது இவருக்கே.

இந்த லக்ஷ்மி பாயி சிந்தேதான், பாபா வசித்த மசூதியில் எல்லா வேலைகளையும் குறையேதுமின்றி நியம நிர்பந்தங்களுக்கு உட்பட்டுச் செவ்வனே செய்தவர்.

தினமும் பகல் நேரத்தில் பாபாவின் தர்பார் எல்லாருக்கும் திறந்தவாறே செயல்பட்டது. பெரும்பான்மையான நேரத்திற்கு எவரும் தடைசெய்யப்படவில்லை. ஆனால், இரவிலோ கெடுபிடிகள் அதிகம்.

மாலை நேரத்தில் பாபா தம் சுற்றுலாவை முடித்துக்கொண்டு மசூதிக்குத் திரும்பிய பிறகு, மக்கள் தம் தம் வீடுகளுக்குத் திரும்பிய பிறகு, மறுபடியும் மறுநாள் காலையில்தான் பாபாவை தரிசிக்க மசூதிக்கு வருவார்கள்.

ஆயினும், பக்த மகால்சாபதி, தாதா, லக்ஷ்மி பாயி ஆகியவர்களுடைய பக்தியை மெச்சி, இரவில் அவர்கள் வருவதை பாபா தடைசெய்யவில்லை.

மேலும், இந்த லக்ஷ்மி பாயீதான் பாபாவுக்கு தினமும் நேரம் தவறாது சோளரொட்டியும் காய்கறி பதார்த்தமும் அன்புடன் அனுப்பியவர். அவருடைய சேவையை யாரால் வர்ணிக்க முடியும்?

இந்தச் சோளரொட்டிக் கதையை கேட்டால் பாபாவுக்குப்  பிராணிகளின்மீதும் இருந்த தயை விளங்கும். அவர் நாய்களிடமும் பன்றிகளிடமும் கூட தம்மை ஐக்கியம் செய்துகொண்டதைக் கேட்டுக் கதைகேட்பவர்கள் ஆச்சரியமடைவீர்கள்.

ஒருசமயம் பாபா தம்முடைய மார்பைச் சுவரின்மேல் சாய்த்துக்கொண்டு பிரேமையுடன் உரையாடிக்கொண்டிருந்தபோது லக்ஷ்மி பாயீ அங்கு வந்தார்.

தாத்யா பாடீல் அருகில் இருந்தார்; இன்னும் சிலரும் அங்கு இருந்தனர். லக்ஷ்மீ பாயீ பாபாவுக்கு நமஸ்காரம் செய்தார். அப்பொழுது பாபா அவரிடம் சொன்னார். -

 


 

Thursday 18 January 2024

 ஷீர்டி சாயி சத்சரிதம்


சிஷ்ய பரிவாரத்துடன் சமாதிக்கு முன்பாக நின்றுகொண்டு இரவுபகலாக பஜனையும் கீர்த்தனையும் பாடினார். அவ்வப்பொழுது பக்தர்கள் கூட்டம் நாமகோஷம் செய்தது.

தாசகணு, ஹரிநாமம் என்னும் பூக்களால் தம்முடைய கைகளாலேயே மிக மனோஹரமான மாலையொன்றைத் தொடுத்துப் பிரேமையுடன் சமாதிக்கு அணிவித்தார். அன்னதானமும் செய்தார்.

அகண்ட பஜனையின் கோஷம் ஷிர்டியைப் பூலோகவைகுண்டம்போல் தோற்றுவித்தது. தாசகணு வாரிவழங்கிய நாமகோஷம் ஷீர்டி கிராமத்தையே நிரப்பியது.

ஆயினும், பாபாவுக்கென்ன விஜயதசமிநாளின்மீது பிரீதி? வருடத்தின் மிகச் சிறந்த சுபமுகூர்த்த தினங்களான மூன்றரை நாள்களில், இந்த நாள் (விஜய தசமி), பிரயாணம் கிளம்புவதற்கு விசேஷமான சுபதினமாகக் கருதப்படுகிறது. இது அனைவர்க்கும் தெரிந்ததே.

இருந்தபோதிலும், இவ்வாறு சொல்வது பிரம்மாணமாகாது. போவது வருவது என்று ஒன்றும் இல்லாதவற்குப் புறப்பாடு என்று ஒன்று எப்படி இருக்க முடியும்? அத்தகையவர்க்கு சுபதினத்தில் என்ன பிரயோஜனம்?

எவர் எல்லாம் பற்றுக்களையும் துறந்தவரோ, எவர் தர்மம், அதர்மம் என்னும் பந்தங்களிலிருந்து விடுபட்டவரோ, எவருடைய பிராணனுக்கு வெளியேறுவது என்பது இல்லையோ, அவருக்கென்ன கடைசிப்பயணம்?

"பிரம்மத்தோடு ஒன்றாகியவர் பிரம்மத்தை அடைகிறார்". இதுவே சாயி மஹாராஜின் நிலை. அவருக்குப் போவதோ வருவதோ இல்லை. இவ்வாறிருக்க, அவர் நிர்ணய நிலையை அடைவதெப்படி?

உத்தாராயணமாக இருந்தாலென்ன, தக்ஷிணாயணமாக இருந்தாலென்ன? தீபம் அணையும்போது, ஒளி தீபத்தினுள்ளேயே சென்றுவிடுவதுபோல், இருந்த இடத்திலேயே பிரம்மத்தில் ஐக்கியமானவருக்குப் பிரயாணம் என்று ஏதும் இல்லையே!

மனிதவுடல் கேவலம், பஞ்சபூதங்களில் இருந்து கடன்வாங்கப்பட்ட பொருள். வேலை முடிந்தபிறகு எவரெவர்களுக்குச் சொந்தமோ அவரவர்களுக்குத் திருப்பிக் கொடுத்துவிட வேண்டியதுதானே!

வரப்போகும் நிகழ்ச்சிக்கு பாபா முன்னதாகவே சூசகமாக எச்சரிக்கை விடுத்து மக்களை வியப்படையச் செய்தார். அந்தப் பொன்னான வேளை தன்னுடைய கீர்த்தியை ஸ்தாபித்துவிட்டுப் போய்விட்டது.

ஜுரம் வந்தது ஒரு நிமித்த காரணமே (சாக்குபோக்குதான்). உலகியல் ரீதியையொட்டி பாபா சிலசமயம் முக்கினர்; சிலசமயம் முனகினார். ஆனால், எப்பொழுதும் உள்ளுக்குள் தெளிவான மனத்துடன் இருந்தார். 




Thursday 11 January 2024

 ஷீர்டி சாயி சத்சரிதம்

நோயால் துன்பப்பட்டுக் கொண்டிருந்தாலும் அவருடைய சித்தம் பாபாவிடமே இருந்தது. எழுந்திருக்கவோ நடக்கவோ முடியவில்லை. நோய் நாளுக்கு நாள் தீவிரமடைந்தது.

இங்கே பாபாவின் முக்கலும் முனகலும் நாளுக்குநாள் இரண்டு மடங்கு ஆகிக்கொண்டிருந்தது. அவருடைய நோயும் சீக்கிரமாக கட்டுக்கடங்காமல் போயிற்று.

பாபாவால் வரும்பொருள் கணிக்கப்பட்ட நாள் வேகமாக நெருங்கியது. பயத்தாலும் கவலையாலும் பாலா சிம்பிக்கு முத்து முத்தாக வியர்த்துக்கொட்டியது. ராமச்சந்திர பாட்டிலின் நிலைமையும் அவ்வாறே.

அவர்கள் நினைத்தனர். 'பாபா சொன்ன வார்த்தை உண்மையாகிவிடும் போலிருக்கிறது. சகுனம் ஒன்றும் சரியாக இல்லை. நோயாளியின் நிலைமை மோசமாகிவிட்டது.

வளர்பிறை தசமி உதித்தது. தாத்யாவின் நாடிதுடிப்புக் குறைந்தது. அவர் இறந்துகொண்டிருந்தார். உறவினர்களும் நண்பர்களும் முகம் வெளுத்தனர்.

பின்னர் நடந்ததோ ஓர் அற்புதம்! தாத்யாவின் உயிருக்கு ஏற்பட்ட கண்டம் விலகியது. தாத்யா பிழைத்துவிட்டார்; போனவர் பாபாதான். தத்யாவைக் காப்பாற்ற தம்முயிரை ஈந்தாரோ!

பாபாவின் திருவாய்மொழி விநோதத்தைப் பாருங்கள். தம்முடைய பெயருக்குப் பதிலாகத் தாத்யாவின் பெயரைக் கொடுத்தார்! உண்மையில், குறிக்கப்பட்ட நேரத்திலிருந்து அணுவளவும் பிசகாமல் தம்முடைய இறுதி பயணத்தைத் துவங்குவதற்கு தயார் செய்து கொண்டிருந்தார்.

நடக்கப்போவதை அனைவர்க்கும் அவர் சூசகம் காட்டியிருந்தார். ஆனபோதிலும், சம்பவம் நடக்கும்வரை யாருக்குமே அது மனத்தில் படவில்லை.

'தாத்யாவின் மரணத்தைத் தவிர்ப்பதற்காக தம்முடைய உயிரை பாபா தியாகம் செய்துவிட்டார்' என்று மக்கள் பேசுகின்றனர். பாபா இவ்விதமான பண்டம் மாற்றும் விளையாட்டு விளையாடினாரா என்பது  அவருக்கு மட்டுமே தெரிந்த விஷயம்!

பாபா தேகத்தை உதிர்த்துவிட்ட தினத்தன்று இரவுநேரத்தில், பண்டரிபுரத்திலிருந்து தாசகணுவின் கனவில் (விடியற்காலையில்) காட்சியளித்தார்.

பாபா கூறியது, "மசூதி இடிந்து விழுந்துவிட்டது; ஷிர்டியின் மளிகை கடைக்காரர்களும் எண்ணெய் வியாபாரிகளும் என்னைத் துன்புறுத்தினர். ஆகவே, நான் அங்கிருந்து கிளம்பிவிட்டேன்.- (பாபா உருவகபாஷையில் பேசுகிறார்)

"நான் இங்குவரை வந்தேன். சடுதியாக ஷிர்டிக்கு வாரும்! ஏராளமான வகுள மலர்களால் என்னைப் போர்த்திவிடும். என்னுடைய இந்த இச்சையைப் பூர்த்திசெய்யும்".

இதனிடையே, ஷிர்டியிலிருந்து அனுப்பப்பட்ட கடிதத்தின் மூலமாக, பாபா மஹாசமாதியாகிவிட்ட செய்தியை தாசகணு அறிந்தார். ஒருகணமும் தாமதியாது ஷிர்டிக்குப் புறப்பட்டார். 




Thursday 4 January 2024

 ஷீர்டி சாயி சத்சரிதம்


நோய் தீர்க்கும் எந்த உபாயத்தையும் பாக்கி வைக்கவில்லை. நோயின் உக்கிரத்தைக் குறைக்க முடியாதுபோகவே, அவருக்கு வாழ்க்கையின் மீதே வெறுப்பு ஏற்பட்டது.

அந்த மனநிலையில் அவர் இருந்தபோது, திடீரென்று ஒருநாள் பாபா அவருடைய படுக்கையின் அருகில் நள்ளிரவு நேரத்தில் தோன்றினார்.

பாடீல் உடனே பாபாவின் பாதங்களைப் பற்றிக்கொண்டு பெரிதும் மனமுடைந்தவராய் அவரிடம் சொன்னார், 'பாபா, எனக்கு எப்பொழுது நிச்சயமாகச் சாவு வரும்? இதை மட்டும் எனக்குச் சொல்லுங்கள்!-

"எனக்கு இனி உயிர்வாழ இஷ்டமில்லை; மரணம் எனக்குப் பெரிய சங்கடமொன்றுமில்லை. மரணத்தைச் சந்திக்க நான் காத்துக்கொண்டிருக்கிறேன்!"

கருணாமூர்த்தியான சாயி அப்பொழுது அவரிடம் சொன்னார், "சிறிதளவும் கவலைப்படாதீர். உயிரைப் பறிக்கக்கூடிய நிலைமையும் பீதியும் கடந்துவிட்டன. ஏன் ஓய், அனாவசியமாகக் கவலைப்படுகிறீர்?-

"நீர் சிறிதும் பயப்படவேண்டா. உம்முடைய ஹூண்டி (மரண ஓலை) திருப்பி அனுப்பப்பட்டு விட்டது. ஆனால், ராமச்சந்திரா, தாத்யாவின் (தாத்யா கண்பத் பாடீல் கோதேவின்) கதியைப் பற்றி எனக்கு விடிவு ஏதும் தெரியவில்லை!-

"1918 ஆம் ஆண்டு, தக்ஷிணாயனத்தில், ஐப்பசி மாதத்தில், வளர்பிறை தசமி திதியில் (விஜயதசமியன்று) தாத்யா மேலுலகம் செல்வான்.-

"ஆயினும், இதை அவனிடம் சொல்லாதீர். அவன் மனத்தில் மரணபயம் ஏறி உட்கார்ந்துகொள்ளும். இரவுபகலாக சோகத்தால் நைந்து போவான். யாருமே சாவதற்கு விரும்புவதில்லை."

இரண்டு வருடங்கள்தாம் இருந்தன. தாத்யாவின் வேளை நெருங்கிவிட்டது. பாபாவின் வார்த்தை வஜ்ஜிரம் போன்ற உறுதியானதாயிற்றே! பாடீல் கவலையில் ஆழ்ந்தார்.

விஷயத்தை தாத்யாவிடம் சொல்லாமல் மறைத்துவிட்டார். ஆயினும், வேறு யாருக்கும் சொல்லவேண்டா என்ற வேண்டுதலுடன் பாலா சிம்பியின் (தையற்காரர் - பாபா பக்தர்) காதில் போட்டார். இருவருமே மனம் கலங்கியவாறு இருந்தனர்.

ராமச்சந்திர பாடீல் எழுந்து உட்கார்ந்தார். அப்போதிலிருந்து அவரைப் பீடித்த வியாதி விட்டொழிந்தது. இதன் பிறகு அவருக்கே தெரியாதவாறு நாள்கள் வேகமாக ஓடின.

பாபாவின் திருவாய்மொழி எவ்வளவு துல்லியமானது என்று பாருங்கள்! 1918 ஆம் ஆண்டின் புரட்டாசி மாதம் கழிந்தது; ஐப்பசி மாதம் பிறந்தது; தாத்யா நோய்வாய்ப்பட்டு படுக்கையாக படுத்தார்.

அங்கே தாத்யா உக்கிரமான ஜுரத்தால் வாடினார்; இங்கே பாபா குளிரால் நடுங்கினார். தாத்யா தம் முழுப் பாரத்தையும் பாபாவின் மேல் போட்டிருந்தார்; பாபாவை ரட்சித்தவர் ஸ்ரீ ஹரியே!

தாத்யாவால் படுக்கையிலிருந்து எழுந்திருக்க முடியாததால், பாபாவை தரிசம் செய்ய வர முடியவில்லை. தேகத்தின் யாதனையை (யமவேதனையை) அவரால் பொறுத்துக்கொள்ள முடியவில்லை.