valam tharum vallal

valam tharum vallal
shri shird sai baba

Thursday 25 October 2018

ஷீர்டி சாயி சத்சரிதம்

பாபாவின் மனத்தில் எழுந்த எண்ணம் இதுவே. ராமதாசியைத் தம்மிடம் கூப்பிட்டுச் சொன்னார், "எனக்குத் தாங்க முடியாத வயிற்றுவலி வந்துவிட்டது; குடலே வெடித்துவிடும்போல் இருக்கிறது. -

"இந்த வயிற்றுவலி நிற்கப் போவதில்லை. போம், சீக்கிரமாகச் சென்று கொஞ்சம் சோனாமுகி சூரணம் (பேதி மருந்து) வாங்கி வாரும். ஒரு சிட்டிகை வாயில் போடாவிட்டால் இந்தப் பிடிவாதமான வயிற்றுவலி போகாது".

அப்பாவி ராமதாசி இதை நம்பிவிட்டார்! உடனே தாம் படித்துக்கொண்டிருந்த போதியில் பக்க அடையாளம் வைத்துவிட்டு பாபாவின் ஆணைக்கு கீழ்ப்படிந்து பஜாருக்கு ஓடினார்.

ராமதாசி படியிறங்கியவுடனே பாபா என்ன செய்தாரென்றால், தம்முடைய இருக்கையில் இருந்து எழுந்து வந்து பாராயணப் புத்தகக்கட்டுக்கு அருகே சென்றார்.

பல புத்தகங்களுக்கிடையில் விஷ்ணு சஹஸ்ர நாம போதி அதில் இருந்தது. அதைக் கையிலெடுத்திக்கொண்டு தம்முடைய இருக்கைக்கு  திரும்பி வந்தார்.

பாபா சொன்னார், "சாமா, உனக்குத் தெரியுமா? இந்த போதி பரம மங்களத்தை அளிக்கக் கூடியது. ஆகவே, நான் இதை உனக்குத் தருகிறேன். நீ இதை இன்றிலிந்து வாசிக்க ஆரம்பி.-

"ஒருசமயம் நான் பெருந்துன்பத்தால் பீடிக்கப்பட்டேன். அமைதியிழந்து கொதிப்படைந்த நிலையில் இதயம் படபடவென்று அடித்துக்கொண்டது. உயிர் பிழைப்பேன் என்ற நம்பிக்கையை இழந்தேன். -

"அந்த நேரத்தில், ஓ! உனக்கெப்படிச் சொல்லுவேன் சாமா! இந்தப் போதி மிகவும் உபயோகமாக இருந்தது; இது இல்லாமல் நான் உயிர்பிழைத்திருக்க மாட்டேன்! இதுவே என்னுயிரைக் காத்தது!-

"போதியை ஒருகணம் மார்பின் மேல் வைத்துக்கொண்டேன். ஆஹா! உடனே என்னுடைய இதயத்தின் படபடப்பு அடங்கியது. அல்லாவே போதியுனுள் இறங்கியிருப்பது போல் உணர்ந்தேன். நான் உயிர்பிழைத்தது போதியினாலேயே!-

"ஆகவே, சாமா, இதை உன்னுடையதாக எடுத்துக்கொள். மெதுவாகக் கொஞ்சம் கொஞ்சமாக தினமும் வாசிக்க ஆரம்பி. ஒரு நாளைக்கு ஒரு நாமாவின் மீது மனதை ஈடுபடுத்தினாலும் இது உனக்கு மிகுந்த ஆனந்தத்தை அளிக்கும்."

 சாமா பதில் கூறினார், "பாபா, எனக்கு இந்தப் போதி வேண்டா! அந்த ராமதாசி என்மீது கடுங்கோபம் கொள்வார். அவர் இல்லாமலிருந்த நேரத்தில் நான்தான் இந்தத் தகாத செயலைச் செய்து விட்டதாக நினைப்பார்.-

" அவர் இயற்கையாகவே துஷ்டர்; முன்கோபி; பிடிவாதக்காரர்; சுலபமாகத் தன் வயமிழக்கக் கூடியவர். அனாவசியாமாக ஏன் ஒரு சண்டையைக் கிளப்ப வேண்டும்? வேண்டா, வேண்டா, எனக்கு எந்தச் சச்சரவும் வேண்டவே வேண்டா !-