valam tharum vallal

valam tharum vallal
shri shird sai baba

Thursday 7 April 2022

 ஷீர்டி சாயி சத்சரிதம் 

"பக்கீர் என்னிடம் இதைச் சொன்னவுடன் ஒரு நிமிடமும் தாமதியாது நான் அரிசிச் சோற்றை விட்டுவிட்டேன். 'பாபா, என்னுடைய திருடுபோன பணம் திரும்பக் கிடைத்து, உங்களை தரிசனம் செய்த பிறகுதான் மறுபடியும் நான் அரிசிச் சோறு தின்பேன்' என்று விரதம் எடுத்துக்கொண்டேன்.-

"இதன்பிறகு பதினைந்து நாள்கள் கழிந்தன. பிராமணருடைய மனதில் என்ன தோன்றியதோ, கடவுளுக்குத்தான் வெளிச்சம்! அவர் தாமாகவே என்னிடம் வந்து திருடிய பணத்தைத் திருப்பிக் கொடுத்தார்.-

"அவர் சொன்னார், 'என்னுடைய புத்தி என்னை ஏமாற்றிவிட்டது. அதனால்தான் இச்செயல் என்னால் செய்யப்பட்டது. நான் என் தலையை உமது பாதங்களில் வைக்கிறேன். உன்னை மன்னித்துவிட்டேன் என்று சொல்லுங்கள்.'-

"அதன்பிறகு எல்லாம் நல்லபடியாக நடந்தது. சாயியை தரிசனம் செய்யவேண்டுமென்ற தீவிர ஆவல் ஏற்பட்டது. அதுவும் இன்று நிறைவேறியது. பாக்கியசாலியாகவும், தன்யனாகவும் (எல்லா சம்பத்துக்களையும் பெற்றவனாகவும் ) ஆனேன். -

"ஆனால், நான் சங்கடத்தில் ஆழ்ந்து சோகமாக வராந்தாவில் உட்கார்ந்துகொண்டிருந்தபோது எவர் எனக்கு ஆறுதல் அளித்தாரோ, அவரை நான் மறுபடியும் சந்திக்க முடியவில்லை.-

"எவர் என்மேல் பரிதாபப்பட்டு என்மீது அக்கறை கொண்டு ஷிர்டியை சுட்டிக்காட்டி சாயியைப்பற்றி எனக்குத் தெரிவித்து அனுக்கிரஹம் செய்தாரோ, அவரை நான் மறுபடியும் சந்திக்க முடியவில்லை.-

"எவர் நான் சற்றும் எதிர்பாராது தெருவழியே சூக்குமமான கேள்விகளை கேட்டுக்கொண்டு வந்தாரோ, எவர் என்னைக் கடைசியில் நேர்த்திக்கடன் ஏற்றுக்கொள்ள வைத்தாரோ, அவரை மறுபடியும் பேட்டி காண முடியவில்லை. 

"உண்மையில், உங்களுடைய அவுலியா ஸாயிதான் அந்தப் பக்கீராக வந்தார் என்று தோன்றுகிறது. அவரே விருப்பப்பட்டு எங்களுக்கு தரிசனம் அளித்தார். -

"ஏதாவது விருப்பம் நிறைவேற வேண்டுமென்றால் மக்கள் ஒரு ஞானியை தரிசனம் செய்ய விரும்புகின்றனர். நான் அவ்வாறு தரிசனம் செய்ய நினைக்கவில்லை. ஆயினும் நான் இழந்த பொருளைத் திரும்பப் பெறுவதற்காக, எடுத்தவுடன் என்னை ஞானிதரிசனம் செய்யப் பக்கீர் தூண்டினார். -

"எவரிடம் நேர்த்திக்கடன் ஏற்றுக்கொண்டதால் நான் இழந்த செல்வத்தை சுலபமாகத் திரும்பப் பெற்றேனோ, அவர் என்னுடைய முப்பத்தைந்து ரூபாய் தக்ஷிணைக்கு ஆசைப்படுவது என்பது கனவிலும் நடக்காத காரியம். -

"நேர்மாறாக, அஞ்ஞான மனிதர்களை ஆன்மீக நாட்டங்கொள்ளச் செய்வதற்காகவும் நம்முடைய மங்களைத்தை உத்தேசித்து நம்மை நல்வழிப்படுத்துவதற்காகவும் நிரந்தரமாக தக்ஷிணை என்னும் சாக்குப்போக்கை உபயோகிக்கிறார். -

"இந்த அவதாரம் இதற்காகவே ஏற்றுக்கொள்ளப்பட்டது. அப்படி இல்லையென்றால், பாமரர்களும் பக்தி இல்லாதவர்களுமாகிய நாம் எவ்வாறு பிறவிக்கடலைக் கடக்க முடியும்? இதை நிதானமாக யோசித்துப் பாருங்கள்!-