valam tharum vallal

valam tharum vallal
shri shird sai baba

Thursday 24 June 2021

 ஷீர்டி சாயி சத்சரிதம்

இந்த டாக்டர் சாயி பாபாவின்மீது மிகுந்த பிரேமை வைத்திருந்தார். பாபாவும் அவரைச் செல்லமாக பாவூ என்று அழைத்தார். அவரை தினமும் மிகுந்த அன்புடன் குசலம் விசாரிப்பார்.

மசூதியில், மரத்தாலான கிராதியின் அண்மையே காலையிலும் மாலையிலும் பாவூவின் இடம். நெடுநேரம் பாபாவும் பாவூவும் அநேக விஷயங்களைப்பற்றி பரஸ்பரம் கருத்துப் பரிமாற்றம் செய்துகொள்வர்.

பாவூ இல்லாமல் பாபா சிலீம் பிடிக்கமாட்டார்; பீடி பிடிக்கும்போது பாவூ அருகில் இருக்கவேண்டும்; நியாயம் பேசுவதற்கும் பாவூ அருகில் இருக்கவேண்டும். சுருங்கச் சொன்னால், பாவூ இல்லாமல் பாபாவுக்கு பொழுது இனிமையாக நகராது.

அதுவே அப்போதைய நிலைமை. ஆயினும் நரம்புச்சிலந்தி நோயின் வேதனை பொறுக்கமுடியாமற்போன நிலையில் பாவூ படுத்த படுக்கையாகிவிட்டார். வலியும் வேதனையும் மனக்கொந்தளிப்பையும் சோகத்தையும் அளித்தன.

இவ்வளவு நெருக்கடியான நிலையிலும் அவருடைய வாய் இடைவிடாது சாயி நாம ஜெபத்தைச் செய்து வந்தது. "போதும், இந்த யாதனை (நரக வேதனை); மரணமே இதைவிட மேல்" என்று சொல்லி அவர் சாயியிடம் சரணாகதி அடைந்தார்.

அவர் பாபாவுக்கு ஒரு செய்தி அனுப்பினார், "இந்தத் துன்பத்தை அனுபவித்து நான் ஓர் எல்லைக்கே வந்துவிட்டேன். அங்கமெல்லாம் எத்தனையோ ரணங்கள்! இனியும் சகித்துக்கொள்ள எனக்குத் திராணியில்லை!-

"நல்வழி நடக்கும் நான் ஏன் இந்த வேதனையை அனுபவிக்கவேண்டும்? கெட்ட செயல்களின் பாதையில் நான் சென்றதில்லையே. நான் என்ன பாவம் செய்தேன். என்மீது இவ்வளவு துன்பத்தையளிக்கும் அவஸ்தை இறங்கியிருக்கிறது ?-

"நரம்புச்சிலந்தி நோயின் வேதனை மரணவேதனைக்கு ஒப்பாக இருக்கிறது. பாபா, என்னால் இப்பொழுது இந்த வேதனையை சகித்துக்கொள்ள முடியவில்லையே! நான் மரணமடைவதே நல்லது. என்ன யாதனை மீதமிருக்கிறதோ அதை அடுத்த பிறவியில் அனுபவித்துக்கொள்கிறேன்.-

"அனுபவிக்க வேண்டியதை அனுவபித்தே தீரவேண்டும். அதற்காகவே பல ஜென்மங்கள் எடுக்க வேண்டியிருக்கலாம். ஊழ்வினையால் விதிக்கப்பட்டதைத் தவிர்க்க முடியாது. மந்தமதி படைத்த எனக்கும் இது தெரிந்திருக்கிறது.

"என்னுடைய கர்மவினையை அனுபவிப்பதற்குப் பத்து ஜென்மங்கள் வேண்டுமானாலும் சந்தோஷமாக எடுக்கிறேன். அனால், இந்த ஜென்மத்தை இத்தோடு முடித்துக்கொடுத்து எனக்கு தருமம் செய்யுங்கள்.-

"போதும், போதும், போதும்  இந்த ஜென்மம்! எனக்கு இந்த ஜென்மத்திலிருந்து விடுதலை தாருங்கள். என்னால் இந்தக் கஷ்டத்தை இனியும் அனுபவிக்கமுடியாது. இதுவே உங்களிடம் நான் செய்யும் பிரார்த்தனை, ஒரே பிரார்த்தனை".

சித்தர்களின் அரசராகிய சாயி இந்தப் பிரார்தனையைக் கேட்டு தயையால் உள்ளம் நெகிழ்ந்தார். டாக்டர் பிள்ளைக்கு ஆறுதல் கூற ஆர் பொழிந்த கருணாமிருதத்தை கேளுங்கள்.