ஷீர்டி சாயி சத்சரிதம்
புலனின்பங்களை அனுபவிப்பதற்குச் செல்வம் தேவை. செல்வத்தைத் தேடுவதற்கு வானளாவிய முயற்சிகள் எடுக்கப்படும்போது சுகபோகங்களுக்கான தாகம் மேலும் மேலும் அதிகரிக்கிறது. அதிலிருந்து விடுபடவே முடிவதில்லை!
நிலம் தரிசு என்பதில் சந்தேகமே இல்லை. பெரும்பாடுபட்டாலும் ஒன்றும் விளையாத நிலம். அந்த நிலத்தை இறைவனுக்கு அர்ப்பணம் செய்யச் சொன்னான் கஞ்சன்! இந்த தானத்தால் என்ன புண்ணியம்?
மனத்தால் எந்தவிதமான பிரதிபலனையும் எதிர்பாராமல் இறைவனுக்கு அர்ப்பணம் செய்வது நிர்விகற்பம் (தூய்மையான செயல்), கஞ்சன் செய்தது போன்ற தானம் முழுபாவச் செயல். கடைசியில் துக்கத்தையே தரும்.
சிவன் கோவிலில் பூஜை செய்துவந்த ஏழை அந்தணர், கோயில் மானியமாக நிலம் சம்பாதிக்கப்பட்டது குறித்துப் பெருமகிழ்ச்சி அடைந்தார்.
ஆனாலும், சிறிது காலம் கழிந்த பிறகு ஒரு விபரீதமான சம்பவம் நிகழ்ந்தது. ஒரு கிருத்திகை நட்சத்திர நாளன்று பயங்கரமாகப் புயல் அடித்தது. அடைமழை பெய்தது. பெருஞ்சேதத்தை விளைவித்தது.
மின்னலுக்குமேல் மின்னலாக அடித்தது. வீடுகள் நாசமாயின. உரிமையாளர் எவர் என்று தெரியாதுபோயினும், வீடுகள் இருந்த பூமி மட்டும் ஆபத்துக்குள்ளாகாமல் தப்பியது. மற்றதனைத்தும் மிச்சம் மீதமின்றி எரிந்துபோயின.
பணக்காரனும் வீழ்ச்சிக்குள்ளானான். அவனும் மனைவியுடன் இறந்து போனான். டு ப கீயும் பஞ்சபூதங்களுடன் கலந்துவிட்டாள். மூவரின் வாழ்க்கையும் முடிந்துபோயிற்று.
பின்னர் அப் பணக்காரன் மதுரா நகரத்தில் ஓர் ஏழைப் பிராமணனுக்கு மகனாகப் பிறந்தான். பக்தையான அவன் மனைவி ஒரு பூஜாரியின் குடும்பத்தில் பிறந்தாள்.
அவள் கௌரி என்று பெயரிடப்பட்டாள். டுபகீயின் விதியோ வேறுவிதமாக அமைந்தது. அவள் ஒரு சிவன் கோயில் 'குரவரின்' (கோயிலில் சுற்றுவேலை செய்பவரின்) மகனாகப் பிறந்தாள்.
நாமகரண தினத்தன்று இந்தப் பையன் சனபசப்பா என்று பெயரிடப்பட்டான். இவ்வாறாக இம்மூவரும் அவரவரின் கர்மபலனுக்கேற்ப நிலைமாறினர். (அடுத்த ஜென்மம் எடுத்தனர்).
புனர்ஜன்மம் எடுத்த பணக்காரன் வீரபத்ரன் என்று பெயரிடப்பட்டான். பிரார்ப்த கர்மத்தின் (பழவினையின்) செயல்பாடு இவ்வாறே. முற்றிலும் நாம் அனுபவித்த பிறகுதான் வினைதீரும்.
சிவன் கோவில் பூஜாரியின் மேல் எனக்கு மிகுந்த பிரியம். அவர் தினமும் என்னுடைய வீட்டுக்கு வருவார். என்னுடன் சேர்ந்து புகை (சிலீம்) குடிப்பார்.
பிறகு நாங்கள் இருவரும் ஆனந்தம் நிரம்பியவர்களாய் இரவு முழுவுதும் பேசிக்கொண்டிருப்போம். ஆண்டுகள் கடந்தன. கௌரி வளர்ந்து மணப்பருவம் எய்தினாள். அவளையும் பூஜாரி தம்முடன் அழைத்துக்கொண்டு வருவார்.