valam tharum vallal

valam tharum vallal
shri shird sai baba

Thursday, 21 May 2026

 ஷீர்டி சாயி சத்சரிதம் 


பஞ்சீகரணம் (ஐம்பூதக் கூறுகளின் சேர்க்கை) என்று எது அழைக்கப்படுகிறதோ அது மாயையின் ரூபதரிசனம்.  அதைப் புரிந்துகொள்ள உதவுவன அத்யாரோபம்! அபவாதம் என்னும் இரண்டு தத்துவங்களே. 

பஞ்சபூதங்கள் ஒன்றோடொன்று கலக்காத நிலையில், பஞ்சதன்மாத்திரைகள் என்று அழைக்கப்படுகின்றன.  இந்திரியங்களையும் மனத்தையும் புத்தியையும் ஆத்மாவின் சூக்கும சரீரத்தையும் பிராணனுடன் ஒன்றுசேர்ப்பதே அவற்றின் செயல். 

பஞ்ச பூதங்களும் ஒன்று சேர்ந்த நிலையைப் பாருங்கள்.  அந் நிலையில்தான் விராட்புருஷன் உதயமானான். பரமாத்மாவின் ஸ்தூல தேகத்தையே (பருவுடலையே) ஞானியர் விராட்புருஷன் என்று அழைக்கின்றனர். 

பருவுடல், சூக்குமவுடல் ஆகிய மனத்தோற்றங்களுக்கு காரணம், சுயசொரூபம் பற்றிய அஞ்ஞானமே.  பருவுடல், அனைத்துப் படைப்பிற்கும் ஆதாரமான பொருளிலிருந்த தோன்றியது என்பதையும் உடலுக்குக் காரணம் ஆத்மாவே என்பதையும் அறிவீர்களாக. 

கியாதிபெற்ற (புகழ்பெற்ற)  காரண சரீரம் (ஐம்பூதச் சேர்க்கையால் பருவுடலுக்குக் காரணமாயுள்ள நுண்ணுடல்) சைதன்னியத்தின் பிரதிபிம்பமே.  அது கேவலம் அஞ்ஞானத்தால் விளைந்தது.  அதன் உண்மையான பெயர், அனைத்துப் படைப்பிற்கும் ஆதாரமான பொருளின் தோன்றாநிலை என்பதே. 

இதற்கு காரணம் ஆத்மா பற்றிய அஞ்ஞானமே.  ஆத்மா, அவயங்களுடன் சேர்ந்ததும் இல்லை; சேராததும் இல்லை; இரண்டுமே இல்லை. பிரம்மமும் ஆத்மாவும் ஒன்றே எனும் ஞானத்தால்தான் இந்த தேகத்தை அழிக்க முடியும். 

தன்னில் மூழ்கியிருப்பதே மோட்சம்.  இதைத் தவிர மோட்சம் ஏதும் இல்லை.  தன்னை அறிவதே மோட்சம்!

பிரம்மமும் ஆத்மாவும் ஒன்றேயெனும் ஞானத்தால்தான் அஞ்ஞானத்திலிருந்து விடுதலை கிடைக்கும்.  ஆகவே, அஞ்ஞானம் எது என்பதைப் புரிந்துகொள்ள அதுபற்றிய விவரணம் அவசியமாகிறது. 

அஞ்ஞானத்தால் சபல் விளைந்தது.  சபல் (பல வர்ணங்களால் சாயம் பூசப்பட்ட நிலை என்று பொருள்) பிரம்மத்திற்கு மாறுபாட்டைக் கொணர்ந்தது.  பிரம்மம், 'சத்' என்று பெயரிடப்பட்டது.  இவ்வாறாக அது பேசுவதற்கு உரிய பொருளாகியது! 

 


 

Thursday, 14 May 2026

 ஷீர்டி சாயி சத்சரிதம் 


ஜீவன் ஆசையாலும் கோவத்தாலும் பீடிக்கப்பட்டிருக்கிறது.  இவ்வுணர்ச்சிகள் ஞானத்துடன் கூடவே இருந்து, அதை மறைத்தவாறு, பிரம்ம சொரூபத்தின்மேல் வட்டமிடுகின்றன. 

இவ்வுணர்ச்சிகள் நம்மைத் தண்ணீரில்லாமலேயே மூழ்கடிக்கின்றன;  அக்கினி இல்லாமலேயே எரித்துவிடுகின்றன;  ஆயுதம் இல்லாமலேயே கொன்றுவிடுகின்றன;  கயிறு இல்லாமலேயே கட்டிவிடுகின்றன. 

இவற்றுக்கு எதிராக எந்த ஞானியாலும் தாக்குப்பிடிக்க இயலாது.  இவை எந்த ஞானியையும் பந்தயத்தில் வென்றுவிடும்.  ஒரு பிராணிக்குத் தெரியாமலேயே அதை விழுங்கிவிடும்.  இவை ஊழிக்காலத்தையும் உண்டாக்கும் சாமர்த்தியம் படைத்தவை. 

சந்தனமரத்தின் வேரில் காலசர்ப்பம் (பாம்புருவில் மரணம்) சுருட்டிக்கொண்டு படுத்திருப்பதைப்போல, ஞானமெனும் கர்ப்பத்தை ஆசையும் கோவமும் பனிக்குடமாய்ச் சூழ்ந்திருக்கின்றன. 

புலனுறுப்புகளும் புத்தியும் மனமும் ஆசையின் இல்லங்கள்.  மாயை, அவற்றின் மூலமாகச் செயலாற்றி ஞானத்தை மறைத்து ஜீவனை மோகவசப்படுத்துகிறது. 

உமக்குச் சந்தனம் வேண்டுமென்றால், பாம்பை அழிக்கவும்.  ஆசை, கோவம் ஆகிய உணர்ச்சிகள் வேய்ந்திருக்கும் முகமூடியை எடுத்தெறிந்து ஞானபொக்கிஷத்தைப் பெறவும். 

பாம்பைக் கொல்லாமல் யாராலாவது சந்தனத்தை அடைய முடியுமா?  கருநாகத்தை சம்ஹாரம் செய்யாமல் (அழிக்காமல்) யாரால் பூமிக்குள் இருக்கும் புதையலை எடுத்து லாபமடைய முடியும்?

அதுபோலவே, ஆத்ம ஞானம் பெறவும் பரம்பொருளை அடையவும் அவற்றை மறைத்திருக்கும் மாயையாகிய திரையை விலக்குவதுதான், அதற்காக நாம் செய்ய வேண்டிய ஒரே சாதனை. 

ஆதலால், முதலாவதாகப் புலன்களை வெல்லவேண்டும்.  அந்த வெற்றி, ஆசையையும் கோபத்தையும் நிர்த்துளியாக்கும் (முற்றும் அழிக்கும்). ஆசை , கோவம் இவற்றின் ஆதீனத்தில் ஜீவன் இருப்பதால், அஞ்ஞானம் ஞானத்தை முழுவதுமாக மூடியிருக்கிறது. 

தேகத்தைக் காட்டிலும் புலன்கள் சூக்குமம்;  புலன்களைக் காட்டிலும் மனம் சூக்குமம்;  மனத்தைக் காட்டிலும் புத்தி சூக்குமம்;  புத்தியைக் காட்டிலும் பரம்பொருள் சூக்குமம். 

உலகியல் தருமநீதிகள் அனைத்திற்கும் அப்பால் இருப்பது, உயர்ந்ததிலும் உயர்ந்ததான, என்றும் நிலைத்திருக்கும் பரம சத்தியம்.  அதுவே, மிகச் சிறந்த நன்மையை அளிக்கும் பரமாத்மா. அதுவே,  அமிருதம் போன்ற நம் உண்மையான உருவம். 

அந்தத் தத்துவமே தூயதும் ஞானமடைந்ததும் என்றும் அழியாததும் தளைகளிலிருந்து விடுபட்டதுமாகிய பேதமற்று நிற்கும் நிலை.  அந்தத் தத்துவமே பரமானந்தத்தில் உறைகிறது. அதுவே நம்முள் இருக்கும் சைதன்னியம். 

 


 

Thursday, 7 May 2026

 ஷீர்டி சாயி சத்சரிதம் 


இங்கு, யாகம் செய்பவர் எஜமானர்.  அவர் அஞ்ஞானத்தைத் தீயில் நெய்யாகப் பொழிகிறார்.  ஆத்மானந்தத்தில் அவர் மூழ்குவதே அவபிரத ஸ்நானம் (வேள்வியை வெற்றிகரமாக முடித்த பின் செய்யும் நீராடுகை)

தாத்பர்யம் என்னவென்றால், அஞ்ஞானம் என்னும் நெய் இல்லாது, ஞானமெனும் அக்கினியைத் தூண்ட முடியாது.  இத் தீயால் ஜீவேசுவர பேதத்தை அழித்தால்தான், அபேத ஞானம் (ஜீவாத்மாவும் பரமாத்மாவும் ஒன்றே எனும் ஞானம்) வெளிப்படும்.

முகம் பார்க்கும் கண்ணாடி மாசுபடுவதால் மங்குவது போலவும், புகை மூடுவதால் அக்கினியின் பிரகாசம் குறைவது போலவும், காமம் குரோதம் ஆகிய தீவிர உணர்வுகளால் தோற்கடிக்கப்படும் ஞானம், அஞ்ஞானத்தால் மூடப்படுகிறது. 

ராகு சந்திரனைப் பிடிப்பது போலவும் (கிரஹணம்), நீரைப் பாசி மூடுவது போலவும், கயஞ்சோதியான ஞானத்தை மாயை மூடிவிடுகிறது. 

மஹா பெரிய ஞானிகளும் மனம் தடுமாறி அதோகதி (தாழ்நிலை) அடைகிறார்கள்.  விடுபடும் உபாயம் தெரிந்திருந்தும், இஷ்டம்போல் நடந்தது கொள்கின்றனர். 

அவர்கள் கண்ணிருந்தும் குருடர்கள். சத்சங்கத்தை விடுத்து, விலக்க வேண்டியவர்களின் கூட்டுறவை நாடுகிறார்கள்.  துர்ச்சங்கம் அவர்களைப் பலமாகப் பிடித்துக்கொள்கிறது.  துர்ச்சங்கத்தின் (கெட்ட சேர்க்கையின்)  பலவந்தத்தால் இஷ்டப்படி நடந்து கொள்கின்றனர். 

வானப்ரஸ்தத்தை ஏற்றுக்கொண்ட பிறகு இல்லறத்தில் நுழைந்து, எதைச் செய்யக்கூடாதோ அதைச் செய்கின்றனர்.  எதை வெறுத்து ஒதுங்கினார்களோ அதையே (இல்லறத்தையே) திரும்பவும் ஆவலுடன் ஏற்றுக்கொள்கின்றனர். 

பாவம் செய்யக்கூடாது என்று முயற்சி செய்பவர்கள் விதிவசத்தால் பாவம் செய்யத் தூண்டப்படுகிறார்கள்.  இந்த நிலையைப் பற்றி என் சொல்வது?  இவர்களையும் ஞானியரில் ஒருவகை என்று ஏற்றுக்கொள்ள வேண்டுமோ!

பாவத்தின் நிழலையும் தொடாது வாழவேண்டும் என்று விரும்பும் மஹா ஞானியுங்கூட, விளக்கால் கவரப்படும் வீட்டில் பூச்சியைப் போன்று, செய்யத் தகுந்த காரியம் எது, செய்யத் தகாத காரியம் எது, என்று சீர்தூக்கிப் பார்க்க மறந்துவிடுகிறார். 

பாவம் செய்வது அஞ்ஞானம்.  இதை அவர் நன்கு அறிவார்.  ஆயினும், ஆசைகளின் உந்துதலால் அவர் அதைபற்றிக் கவலைப்படுவதில்லை. 

இவ்வகையான செயல்கள் அனைத்தும் ஆசையின் சேட்டைகள். ஆசையே எல்லா அனர்த்தங்களுக்கும் காரணம்.  நிறைவேறாத ஆசை கோவரூபமும் ஏற்கும். 

ஆசையின் ஓட்டம் தடுக்கப்படும்போது ஆசையே கோவமாக மாறும்.  மோட்ச மார்க்கத்தின் ஒவ்வொரு படியிலும் தடுக்கிவிடுவது இதுவே.  இந்த இயல்பே ஞானத்துக்குத் தடை. 


 

Thursday, 30 April 2026

 ஷீர்டி சாயி சத்சரிதம் 

ஒரு பானையைக் கல்லால் அடித்தால், அதனுடைய உருவம் அழிந்து போகிறது; உடைந்துபோன துண்டுகளே மீதி.  பானையின் உருவம் மறைந்துவிட்ட போதிலும், அது இருந்ததை ஓட்டாஞ்சில்லுகள் காட்டுகின்றன. 

பானையின் உபயோகம் நாசமாகிவிட்டிருக்கலாம்.  ஆனால், பானையின் இருப்புக்கு முடிவென்பதே இல்லை.  பானை இருந்ததற்கும்  அதற்கு ஓர் உபயோகம் இருந்தது என்னும் உண்மைக்கும் ஓட்டாஞ்சில்லுகளே சாட்சி. 

எந்தச் செயலின் முடிவும் சூனியமாகாது!  முடிவு என்பதே, இருந்தது என்பதைக் குறிப்பால் உணர்த்துகிறது அன்றோ?  மனச்சாட்சியை மதிக்கும் நற்குணம், நற்புத்தியைக் குறிப்பால் உணர்த்துவதே இதற்குப் பிரமாணம். 

எல்லா க்ஷேத்திரங்களும் (புனிதத் தலங்களும்) தீர்த்தங்களும் விரதங்களும் புனிதமானவையே.  ஆனால், புனிதத்தில் புனிதமானது ஞானம்.  பிரம்ம ஞானம் இல்லாது செய்யப்படும் பஜனையும் பூஜையும் அர்த்தமற்ற செயல்கள். 

சித்தம் அஞ்ஞானத்தால் மாசுபடுத்தப்பட்டிருக்கிறது.  இறைவனிடம் பக்தி செலுத்தாமல் சித்தத்தைத் தூய்மைப்படுத்த முடியாது.  பக்தியின்றி ஞானம் முளைப்பதில்லை!

ஆகவே, முதலில் அஞ்ஞானம் எதுவென்று அடையாளம் கண்டுபிடி.  அஞ்ஞானத்தின் பிடியிலிருந்து விடுபடவேண்டுமெனில், அதன் இயல்பையும் விவரங்களையும் தெளிவாகப் புரிந்துகொள்.  பக்தியே இதை அறிய உதவும் சாதனம். 

கால்கள் முதலாக வெளிவந்து பிறந்த குழந்தையின் கண்களுக்கு மை தடவினால், பூமியினடியில் இருக்கும் புதையல் அதன் கண்களுக்குப் புலப்படும்.  அதுபோலவே, பக்தியிடம் சரணடைந்து கைதூக்கிவிடும்படி வேண்டிக்கொண்டால், அஞ்ஞானம் அகலும்;  ஞானம் உதயமாகும். 

ஞானம் பெறுவதே தன்னையறிதல். அதற்கு மூலாதாரம் அஞ்ஞான நிவிர்த்தி.  ஆனால், இறைவனிடம் பக்தி ஏற்படாமல் மாயையின்  சக்தியை வெல்லமுடியாது. 

ஞானமும் அஞ்ஞானமும் கலந்து இருக்கின்றன.  கற்களைப் பொறுக்கி எடுத்த பின்னரே அரிசியைக் கொதிநீரில் இடுவதைப்போல, அஞ்ஞானத்தை  ஜாக்கிரதையாகப் பிரித்தெடுக்க வேண்டும். 

எல்லாப் பொருள்களிலும் எல்லா உயிர்களிலும் இறைவனைக் காண்பதோடல்லாமல், ஞானக்யம் போன்ற உபாசனைகளைச் செய்பவர், பிரபஞ்சத்தையே முகமாக உடைய ஸ்ரீகிருஷ்ணனைக் காண்கிறார்.  ஞானத்தைப் பெற அவர் அஞ்ஞானத்தை எரித்துவிடுகிறார். 

இப்பொழுது ஞானயாகத்தின் சொரூபத்தைக் கவனியுங்கள்.  "அஹம் ப்ரம்ம அஸ்மி (நான் முழுமுதற்பொருளாக இருக்கிறேன்)" என்னும் வேதவசனமே இதன் வேள்வித்தூண்.  பஞ்சபூதங்களே (நிலம், நீர், தீ, காற்று, வானம்)  யாகமண்டபம்.  ஜீவேசுவர பேதமே (இறைவனுக்கும் அவனுடைய படைப்பான ஜீவராசிகளுக்கும் இடையே உள்ள வேறுபாடே) வேள்விக்குரிய விலங்கு. 

ஐம்புலன்களும் பஞ்சபிராணன்களும் இந்த யாகத்தில் இடவேண்டிய பண்டங்கள்.  மனமும் புத்தியும் யாககுண்டம்.  ஞானமெனும் அக்கினியால் யாககுண்டத்தில் வேள்வித்தீ மூட்டப்படுகிறது.







Thursday, 23 April 2026

 ஷீர்டி சாயி சத்சரிதம் 


இவ்வுலகில் வாழும் அனைத்து உயிரினங்களும் ஆதியந்தமில்லாத மாயையால் சூழப்பட்டிருக்கின்றன.  விருப்பு, வெறுப்பு போன்ற மனவிகாரங்களின்மீது மோகம் கொண்டு அனைத்து உயிரினங்களும் அஞ்ஞானத்தில் மூழ்கியிருக்கின்றன. 

ஜீவன் அஞ்ஞானத்தால் கட்டப்பட்டிருக்கிறது.  அஞ்ஞானத்தையும் ஆசைகளையும் கர்மபந்தகளையும் துண்டித்துவிட்டால், ஜீவனின் சுத்தமான உருவம் வெளிப்படும். 

பசுவின் மடி நிறைந்து முலைக்காம்புகளில் பால் ஒழுகிக்கொண்டிருக்கிறது. இறுக்கமாக மடியில் ஒட்டிக்கொண்டிருக்கும் உண்ணிகளுக்கோ, அசுத்தமான ரத்தத்தின்மீது தான் பேராசை. பாலின்மேல் அவற்றுக்கென்ன இச்சை?

தவளையையும் வண்டையும் கவனியுங்கள்.  அழகான தாமரை மலர்களே அவை  வாழும் சூழல். வண்டு, வாசனை மிகுந்த மகரந்தத்தைச் சுவைக்கிறது.  தவளையோ சேற்றில் இருப்பதைத்தான் புசிக்கிறது. 

தனக்கு எதிரிலேயே ஞானப் பொக்கிஷம் இருப்பதை மூடன் காண்கிறான். ஆயினும், அஞ்ஞானத்தின்மீதே அவன் ஆவல் காட்டுகிறான்.  மூடனுக்கு அஞ்ஞானமே ஞானமாகத் தெரிகிறது!

அஞ்ஞானத்தை நிர்மூலமாக்கிவிட்டால், பிரம்ம ஞானம் தானாகவே தோன்றுகிறது.  ஆதலின், அஞ்ஞானம் எது என்று ஆரம்பித்திலேயே தீர்மானம் செய்வது அவசியம் என்று அறிவீர்களாக. 

பிரம்ம ஞானத்திற்கு சமமாகப் பவித்திரமானது மூவுலகங்கிலும் எதுவும் இல்லை.  அதனுள் உயிரையும் உபதேசம் மாபெரும் முக்கியவத்துவம் வாய்ந்தது.  அது இன்று ஜீவனுக்குப் பயனில்லை. 

அறிவு சம்பந்தமான விஷயமாக பிரம்மம் இருந்திருந்தால், புலன்களில் ஏதாவது ஒன்று அதைக் காட்டியிருக்கும்;  அல்லது நிரூபித்திருக்கும். 

'பிரம்ம தத்துவம் புலன்களுக்கு அப்பாற்பட்டதெனினும், அரிவாள் கிரஹிக்கக்கூடியது' என்று ஸ்ம்ருதிகள் (வாழ்நெறி நூல்கள்)  அதிகாரபூர்வமாக அறிவித்திருக்கின்றன. ஆயினும், சுருதிக்கு (வேதத்திற்கு) இக் கருத்து சம்மதம் இல்லை. 

புத்திசக்தி போன்றவை இல்லாது போய்விட்டால், எதையும் கிரஹித்துக் கொள்ளவேண்டிய தேவையே இல்லாமல் போகிறது; முழுமுதற்பொருள் என்று ஒன்று இருக்கிறது என்று ஒத்துக்கொள்ள இடமில்லாமல் போகிறது. 

'எவையெவையெல்லாம் புலன்களால் உணரக்கூடியனவோ, அவையவையெல்லாம் இருக்கின்றன; மற்றவை இல்லை' என்பது எல்லாரும் அறிந்த பிரசித்தியான ஒரு கோட்பாடு. இக் கோட்பாட்டை முழுமையாக ஏற்றுக்கொண்டால், பிரம்மம் என்று ஒன்று எப்பொழுதுமே இருந்திருக்கமுடியாது என்றாகிறது. 

விளக்கம் இவ்வாறு அமைகிறது.  ஆனால், இது அனர்த்தம்! புத்தி, என்றும் அழிவின்றி நிரந்தரமாக இருக்கிறது என்பதே ஆழ்ந்ததும் பரந்ததுமான ஆராய்ச்சி சிந்தனையால் விளைந்த பாரம்பரியமான விளக்கம். 

பிரளய காலத்தில் புத்தி மறைந்து போகலாம். ஆனாலும், தான் இருந்த அனுபவத்தால் அது தொடர்ந்து வாழ்கிறது. ஆத்மாவே, பிரபஞ்சத்தின் மூலம். இதில் சந்தேகமே இல்லை. 

 


 

Thursday, 16 April 2026

 ஷீர்டி சாய் சத்சரிதம் 


நித்தியம் எது, அநித்தியம் எது? இதைப்பற்றிச் சிந்திக்க வேண்டும்;  செவிகளால் கேட்க வேண்டும்; இடைவிடாது தியானம் செய்ய வேண்டும்.  சமம், தமம் ஆகிய ஆறு சாதனைகளில் வெற்றிபெற வேண்டும்.  அப்பொழுதுதான் அஞ்ஞானத்திலிருந்து நிவிர்த்தி அடைய முடியும்.

'இவ்வுலகம் என்னிடமிருந்து வேறுபட்டது - ஓர் அளவுக்கு உட்பட்டவன் நான் - இனத்திலிருந்து ஒதுக்கப்பட்ட தனியன் நான் - இந்த உடலே நான்';  ஈதனைத்தும் கலப்படமற்ற அஞ்ஞானம். 

ஞானத்தைப்பற்றி எடுத்துக்கூறி விவரித்திருக்கும் பரம கருணாமூர்த்திகளான வேதாந்த சாஸ்திர பாஷ்யகாரர்கள், அனுபந்த சதுஷ்டத்தின் பிரகாரம் விஸ்தாரமாக விவரித்திருக்கின்றனர். 

அதிகாரி, விஷயம், சம்பந்தம் ஆகியவை முதல் மூன்று அனுபந்தங்கள். நான்காவது அனுபந்தம், பிரயோஜனம்.  பிரயோஜனம் குறித்த விரிவுரையில் 'அஞ்ஞான நிவிர்த்தியே பிரயோஜனம்' என்று அவர்கள் விளக்கம் அளித்திருக்கின்றனர்.

வேதாந்தத்தின் முக்கிய விஷயம் 'ஜீவாத்மாவும் பரமாத்மாவும் ஒன்றே' என்பதுதான். இந்த ஐக்கிய தத்துவத்தின் உள்ளே எப்படியோ புகுந்துவிட்ட ஐயமே அஞ்ஞானம்.  அதிலிருந்து நிவிர்த்தி பெறுவதே பிரயோஜனம். 

மூலமான இந்த அஞ்ஞானத்திலிருந்து நிவிர்த்தி அடைவதே தன்னை உணர்வதால் பெறும் ஆனந்தம்.  ஆதலால், ஏதாவதொரு யுக்தியை உபயோகித்து அஞ்ஞானத்தை நாசம் செய்வது அவசியமாகிறது. 

பேத சிந்தனையைக் கைவிடாத மனிதரை ஞானியென்று கருதமுடியாது.  தேகாபிமானம் உள்ளவரின் ஞானம் பூரணமான அஞ்ஞானமே. 

தம்மை ஞானமுள்ளவர் என்று பகட்டிக்கொண்டு அயோக்கியச் செயல்களில் ஈடுபடுவர், சபிக்கப்பட்ட உணர்வு நிலையில் வாழ்கிறார்.  அவர் கும்பகர்ணனைப் போல் நித்திரையில் ஆழ்ந்திருக்கிறார். 

வேதங்களின்படி வாழ்க்கை நடத்த இயலாமலும், வருணாசிரம தர்மத்தை அனுஷ்டிக்க முடியாமலும் வாழ்பவருக்கு, சித்தத்தை தூய்மைப்படுத்த அஞ்ஞானத்தை அகற்றுவதுதான் ஒரேவழி. 

சத்துவம், ராஜஸம், தாமஸம் ஆகிய முக்குணங்களாலும், ஒலி முதலாகிய இன்ப நுகர்ச்சிகளாலும், பிறவி உறுப்பு மற்றும் வாய் போன்ற துவாரங்களின் மூலமாகவும், படைக்கும் தெய்வமாகிய பிரம்மதேவர் உட்பட அனைவரும் ஏமாற்றப்பட்டிருக்கின்றனர். 


 

Thursday, 9 April 2026

 ஷீர்டி சாயி சத்சரிதம் 

'ஞானத்தால்தான் மோட்சம் அடையப்படுகிறது' என்னும் வேத சித்தாந்தம் அப்பட்டமான உண்மை.  ஆனால், பாவச்செயல்கள் நாசமாகாதவரையில் ஞானம் உதயமாகாது. 

தூய ஞானத்தில் மூழ்கியவரிடமிருந்து விருப்பங்கள் விலகிவிடும்.  மாயையின் பந்தங்கள் அவருக்கு கிடையா.  தீய குணங்களுக்கும் அவரிடம் இடமில்லை. 

பரம ஞானியான சுகதேவருக்கும் விகற்பத்தால் (சந்தேகத்தால்)  கேடு விளைந்தது. விகற்பத்தால் விளையும் அஞ்ஞானத்தை குருவைத் தவிர வேறு எவராலும் அகற்றமுடியாது. 

விகற்பம் (கோணல் சிந்தனை) ஞானத்துள் புகுந்தவுடன், ஞானியும் பற்றுடையவர் ஆகிறார்.  ஒரு குடம் பாலில் ஒருதுளி புளித்த கஞ்சி விழுந்துவிட்டாலும், பால் முழுவதும் திரிந்து போகின்றதன்றோ?

ஆதலின், முதலில் அஞ்ஞானத்தை அடையாளம் கண்டுகொள். அதிலிருந்து விடுபட்டால் மனம் தூய்மையடைகிறது.  அதன் பிறகே எல்லையற்ற ஞானம் தோன்றும்;  பேதமில்லாத சமாதி நிலை கிடைக்கும். 

எந்நேரமும் செல்வத்தின் மாட்சிமையைப்பற்றியே நினைத்துக்கொண்டு, உலகியல் சுகங்களில் திருப்தி அடையாமல், மனைவியையும் மக்களையும்பற்றி இடைவிடாது சிந்தனை செய்பவரின் ஞானம் ஞானமன்று; அது அஞ்ஞானம். 

செல்வம், மனைவி, மக்கள் ஆகியவற்றில் மோகம் கொண்டவர் ஞானியாக இருப்பினும் , தமக்கு எது நல்லது என்பதை அறியாதவர்.  ஆகவே, பக்தி இல்லாத அவருடைய ஞானம் அஞ்ஞானத்தால் மறைக்கப்பட்டிருக்கிறது. 

ஜீவசமுதாயமே அஞ்ஞானத்தால் மூழ்கிக் கிடக்கிறது. அஞ்ஞானத்திலிருந்து விடுபட்டு ஞானியாகி,  ஞானத்தையும் கடந்த நிலையை அடைவதே முழுமுதற்பொருளுடன் ஒன்றிய நிலை என்பது உறுதி. 

அஞ்ஞானம் வெளியே சென்றுவிட்டால், ஞானம் தோன்றும்.  மன்னிப்பதில் விரைவு காட்டுபவர் ஞானமுள்ளவர்.  ஆனால், பற்றுகளை விடாதவரையில் அவர் மாயைக்கு வசப்பட்டே வாழ்கிறார். 

மற்ற எல்லா மனிதர்களையும் மயக்கிய மாயை, ராமர் கிருஷ்ணர் போன்ற அவதார புருஷர்களுக்கும், சனகர் சனத்குமாரர் போன்ற முனிவர்களுக்கும், ஆணைக்கு அடிபணிந்த வேலையாளாக இருந்தது. 

அனைத்து உயிர்களிலும் இதயவாசியாக இறைவன் உறைகின்றான். ஆயினும், யாருமே இந் நிலையை அறிந்தாரில்லை! மாயையின் கற்பனைக்கப்பாற்பட்ட அந்தஸ்தும் அளவிடமுடியாத சக்தியும் அத்தகையன!

ஆதலால், 'நான்தான் செய்வோன்; நான்தான் செயலால் விளையும் இன்பங்களை அனுபவிப்பவன்'  என்னும் பொய்யான அகந்தையைத் தூக்கியெறிந்துவிட்டு இதயவாசியிடம் சரணடையாதவரையில், நாம் முக்தி அடையமுடியாது. 

 


 

Thursday, 2 April 2026

 ஷீர்டி சாயி சத்சரிதம் 


நமஸ்கரித்தும் கேட்டும், பணிவிடை செய்தும் அந்த ஞானத்தை அறிந்துகொள்.  தத்துவத்தை அறிந்த ஞானிகள் உனக்கு ஞானத்தை உபதேசிப்பார்கள். கீதை 4  - 34  (பொழிப்புரை)

இதுதான் கீதையின் மூல சுலோகம்.  இந்த சுலோகத்தின் இரண்டாவது அடியில் ஞானம் எனும் சொல்லுக்கு முன்னால், அகாரம் தொக்கிநிற்கும் குறியைச் சேர்த்தால், அச் சொல் அஞ்ஞானம் என்று மாறுபடும். 

அகாரம் தொக்கிநிற்கும் குறியைப்பற்றி நினைக்காமல் விட்டுவிட்டால், ஞானம் என்பதுதான் பதம். இதில் சந்தேகமேயில்லை.  அதற்கு விரோதமாக, துராகிருதம் (உரிமை இல்லாத இடத்தில் வலிய நிகழ்த்தும் செயல்) செய்ய விரும்புபவர் யாரும் இல்லை.  ஏனெனில், அந்தப் பதமும் அர்த்தமும் எல்லாராலும் நன்கு ஏற்றுக்கொள்ளப்பட்டவையாகும். 

"ஞானத்தால்தான் கைவல்லியம் (வீடுபேறு) அடையப்படுகிறது." இந்த வேதவசனம் அனைவராலும் ஒப்புக்கொள்ளப்பட்ட கருத்து. ஆயினும், 'தத்துவம் அறிந்தவர்களின் உபதேசத்தின் மூலமாகத்தான் ஞானம் பெறப்படவேண்டும்' என்று இந்த வேதவசனத்தை நீட்டித்துக் கருத்தைக் கட்டுப்படுத்துவது அனாவசியம். 

நான் ஆத்மா; நிர்மலன்; சுத்தன்; புத்தன்; சுதந்திரமானவன்; ஆதியந்தமில்லாத சாட்சி மாத்திரமே. எல்லா உயிர்களிலும் ஒளிரும் தூய உணர்வு நான்.  'இருப்பது ஒன்றே; இரண்டாவதாக ஏதும் இல்லை' எனும் உணர்வு விளைவிக்கும் ஆனந்தத்தால் நான் நிறைந்திருக்கிறேன். 

மேலும், நான் அஞ்ஞானம் அல்லேன்; அஞ்ஞானம் என்னுடைய செயல் அன்று.  அதர்வண வேதத்தின் மஹாவாக்கியமான 'அயம் ஆத்மா ப்ரஹ்ம' (இந்த ஆத்மா முழுமுதற்பொருள்) என்னும் சொற்றொடரில் இடம்பெறும் ஆத்மா நானே.  இருக்கு வேதத்தின் 'ப்ரக்ஞானம் ப்ரஹ்ம ' (ஆத்மாவின் சஞ்சலமற்ற ஒருங்கிணைந்த தூய அறிவுநிலை முழுமுதற்பொருள் ) என்னும் மஹாவாக்கியத்தின் பொக்கிஷமும் நானே. 

யஜுர் வேதத்தின் 'அஹம் ப்ரம்மாஸ்மி ' (நான் முழுமுதற்பொருளாக இருக்கிறேன் ) என்னும் மஹாவாக்கியத்தை இடைவிடாது மனத்தில் இருத்துதலே வித்யா (மெய்ஞ்ஞானம்)  என்று அறிக.  நான் பாவி,  பாக்கியமற்றவன், தெய்வ அருள் இல்லாதவன் என்பது போன்ற எண்ணங்களுக்கு இடமளிப்பதே அவித்யா (அஞ்ஞானம்).

இரண்டுமே ஆதியந்தமில்லாத மாயையின் புராதனமான சக்திகள். ஒன்று (அவித்யா) பந்தத்தை விளைவிக்கும்.  மற்றொன்று (வித்யா) பந்தங்களிலிருந்து விடுவித்து முக்தியை அளிக்கும். 

பெயர், உருவம் ஆகிய சகலமான பிரமைகளும் மாயை விளைவிக்கும் குழப்பங்களே.  மாயையின் சக்தியை விளக்கமுடியாது; கடப்பது அதனினும் கடினம். 

கற்பனையில் என்னென்ன உதிக்கின்றனவோ அவை அனைத்தும் மாயையின் வசிப்பிடங்கள்.  கட்டுக்குப்பட்ட நிலை, முக்தியடைந்த நிலை, ஆகிய கருத்துக்கள் நிச்சயமாகக் கற்பனையிலிருந்து பிறந்தவையே! 

 


 

Thursday, 26 March 2026

 ஷீர்டி சாயி சத்சரிதம் 


பாபாவுக்கு எப்படி சம்ஸ்கிருத ஞானம் இருந்திருக்க முடியும்?  சிலருக்கு இந்த சந்தேகம் இருக்கலாம்.  ஞானிகளுக்குத் தெரியாதது எதுவுமே இல்லை என்றும், சந்தேகத்திற்குக் காரணம் வேறெங்கேயோ புதைந்து இருக்கிறது என்றும் அறிவீர்களாக.

கதை கேட்பவர்களே, 'ஒன்றைக் (பரம்பொருளைக்) கண்டவன் அனைத்தையும் கண்டவனாகிறான்' என்பது பிரமாணம்.  இந்த வேதவசனத்தை ஒப்புக்கொள்ளாதவர் எவரும் உளரோ?  இந்த அபரோட்ச ஞானம் (காட்சி அறிவு) சாயி பாபாவுக்கு இருந்தது. 

பிரபஞ்சம் முழுவதையும் உள்ளங்கை நெல்லிக்கனிபோல் சம்பூரணமாக (முழுமையாகப்) பார்க்கும் சக்தி பெற்ற ஞானிகள் அறியாத விஷயம் ஏதும் உண்டோ?" சூரியன் பிரகாசிப்பதும் அவர்களாலேயே அன்றோ!

அத்தகைய ஞானம் படைத்தவர்களிடம் அஞ்ஞான இருள் எப்படி ஒட்டிக்கொள்ள முடியும்?  அவர்களிடம் அனைத்து வித்தைகளும் பொதிந்துகிடக்கின்றன. சம்ஸ்கிருத மொழி மட்டும் என்ன பெரிய கொக்கு?

ஆயினும், சாயி லீலா வாசகர்களில் சிலர் சொல்கின்றனர். "நானாவை நம்பமுடியாது.  ஞானம்  எனும் சொல்லை அஞ்ஞானமாக மாற்றும் அகாரம் தொக்கிநிற்கும் குறியைத் தேவையில்லாமல் சேர்த்துக்கொள்வது.  நானா சுயமாகச் செய்த கற்பனையே. -

"தம்முடைய புலமையை முழுமையாகப் பறைசாற்றுவதற்காக அகாரம் தொக்கி நிற்கும் இந்த அஞ்ஞான காண்டத்தை அவரே ஜோடித்திருக்கிறார்.  அர்த்தமில்லாத ஒரு விதண்டாவாதத்தைக் கிளறி விட்டிருக்கிறார். -

"அகாரம் தொக்கி நிற்கும் குறியைத் தேவையில்லாமல் சேர்த்து, ஞானைத்தை அஞ்ஞானமாக்கி, கீதைக்கு விபரீதமான விளக்கம் ஒன்றைக் கொடுத்திருக்கிறார்."

ஆயினும், உண்மையான நிலையைக் கவனித்து சூட்சமமாக சிந்தித்தால், சாயி லீலா பத்திரிகையில் வெளிவந்த முப்பத்தொன்பதாவது அத்தியாயத்தின் கருத்தில் முரண்பாடு ஏதும் இல்லை என்பது நன்கு விளங்கும். 

நானா நம்பத் தகுந்தவரா, நம்பத் தகாதவரா என்பதுபற்றி எவரெவருக்கு என்னென்ன அபிப்பிராயங்கள் இருந்தபோதிலும், அவர் அளித்திருக்கும் விருத்தாந்தத்தைப் பயனற்றதாகவோ அர்த்தமில்லாத பிதற்றலாகவோ நாம் கருதக்கூடாது. 

நானாவின் மீதிருக்கும் வெறுப்பை ஒதுக்கிவைத்துவிட்டு, மனத்திரிபுக்கு உட்படாமல் கண்ணோட்ட தோஷத்தைத் தூர விரட்டிவிட்டால், சந்தேகிகளுக்கு குற்றமற்ற காட்சி முழுமையாக கிடைக்கும். 

சாயி லீலாவின் உத்தமோத்தமமான முப்பத்தொன்பதாவது  அத்தியாயத்தை மறுபடியும் படிக்காமல், இந்த அத்தியாயத்தில் மேற்கொண்டு சுலபமாக முன்னேற முடியாது. 

ஸ்ரீ கிருஷ்ணரின் திருவாய்மொழியாக வெளிவந்த ஸ்ரீ மத் பகவத் கீதையில் ஞானகர்மசந்யாச யோகம் என்னும் நான்காவது அத்தியாயத்தின் முப்பத்து நான்காவது சுலோகத்தில் 'அஞ்ஞானம்' தொடர்பான உபதேசம் நிகழ்ந்தது. 

தத்வித்தி ப்ரணிப்பாதேன பரிப்ரச்னேன சேவாய!
உபதேக்ஷ்யந்தி தே ஞானம் ஞானினஸ்தத்வதர்சினஹ !! கீதை 4  - 34  (மூலம்)

 


 

Thursday, 19 March 2026

 

ஷீர்டி சாயி சத்சரிதம் 

 

இக் கேள்விக்கு நானா தெளிவாகப் பதிலுரைத்தார், "நான் கீதை பாடம் ஓதுகிறேன். மற்றவர்களுக்கு உபத்திரவமாக இல்லாமல் இருப்பதற்காக சன்னமாக ஓதுகிறேன்."

"சரி சரி; அதே இங்கே கூடியிருப்பவர்களுக்காக. ஆனால் , எனக்குக் கேட்கும்படியாக தெளிவாக ஓதும். நீர் பாடத்தைச் சரியாகப் புரிந்துகொண்டிருக்கிறீரா என்று பார்க்கிறேன்" என்று சாயி சொன்னார்.

நானா பாபாவுக்கு வந்தனம் செலுத்திவிட்டுத் 'தத்வித்தி ப்ரணிப்பாதென' என ஆரம்பிக்கும் முப்பத்துநான்காவது சுலோகத்தை உரத்த குரலில் ஓதினார். அதைக் கேட்டு பாபா திருப்தியடைந்தார்.

பின்னர், அந்த சுலோகத்தின் அர்த்தமென்ன என்ற கேள்விக்கு நானா விரிவாக்கப் பதிலுரைத்தார். நானாவின் விளக்கம் பூர்வாச்சார்யார்கள் (பண்டைய குருமார்கள் ) அளித்திருந்த பாதையிலேயே அமைந்தது. பாபாவும் தலையசைத்து அங்கீகரித்தார்.

பாபா நானாவை மறுபடியும் கேட்டார், "நானா, இந்தச் செய்யுளின் இரண்டாவது அடியின் முதற்பகுதியை பாரும். 'உபதேக்ஷ்யந்தி தே ஞானம்' என்னும் சொற்களின் பொருள் பற்றிச் சிந்தனை செய்யும்.-

"ஞானம் என்னும் சொல்லுக்கு முன்பாக, ' ' எழுத்து தொக்கி நிற்கும் குறியைச் சேர்த்துக் கொள்ளலாமா என்று பாரும். இவ்வாறு செய்தால், இச் சொல் 'அஞ்ஞானம்' என மாறுபடும். சுலோகத்தின் பொருள் எதிர்மறை ஆகிவிடுமா என்றும் யோசியும். -

"சங்கரானந்தர், ஞானேச்வரர் , ஆனந்தகிரி, ஸ்ரீதரர் , மதுஸூதனர் போன்ற பாஷ்யகாரர்கள் (பேருரையாளர்கள்) 'ஞானம்' என்னும் சொல்லுக்கு அளித்திருக்கும் விளக்கம்.

"அதை சகலரும் ஏற்றுக்கொண்டுள்ளனர். அதை நானும் அறிவேன். ஆயினும், ' ' எழுத்து தொக்கி நிற்கும் குறியைச் சேர்த்துக்கொள்வதால் விளையும் அற்புதத்தை தெரிந்துகொண்டே நாம் ஏன் அதைக் கோட்டை விடவேண்டும்?"

இவ்வாறு கூறியபின், கருணாமேகமான சாயி, சகோரபட்சிகளும் சாதகப்பட்சிகளுமான தம் பக்தர்களுக்காகப் பொழிந்த போதனாமிருதம் ஏற்கெனவே விவரிக்கப்பட்டுவிட்டது. (அத்தியாயம் 39 )

ஆனால் , சாயி லீலா பத்திரிக்கை வாசகர்களில் சிலர் அந்த விளக்கத்தை மெச்சவில்லை என்பதும், சந்தேகப்படுகிறார்கள் என்பதும் ஆச்சரியத்தை அளிக்கிறது.

ஆகவே, சில பிரமாணங்களால் , 'அஞ்ஞானம்' என்னும் சொல் இங்கு நன்கு பொருந்துவதை நிரூபிக்கும் வகையில் சந்தேகிகளைத் திருப்தி செய்வதற்காக melum ஒரு சிறிய முயற்சி செய்கிறேன்

 


 

Thursday, 12 March 2026

 ஷீர்டி சாயி சத்சரிதம் 


இங்கே, சொல்லின் மாத்திரையை (எழுத்தொலியை) நிர்ணயிப்பவர் சாயியைத் தவிர வேறெவரும் அல்லர். கேட்கப்படும் விஷயமும் கேட்பவரும் கேட்கும் செய்கையும் அவரே ஆவார்.  இம்மூன்றும் ஒன்றுபட்டவையே என்பதை மறந்துவிடக்கூடாது. 

காதுகள் பயபக்தியுடன் உஷாராக இல்லாமலோ, மனம் லயிக்காமலோ படிப்பது பாராயணம் ஆகுமோ?  சொற்களின் பொருளை எப்படி அறிந்துகொள்ள முடியும்?

இந்தக் கதைகளைத் தற்பெருமையுடன் கேட்கக்கூடாது.  கேட்பவர்கள் தங்களை மனத்தால் சாயியாகவோ பாவித்துக்கொள்ள வேண்டும். அந் நிலையில்தான் கேட்பவர்கள் பயன் பெறுவர்.  அந்த அகண்டமான (இடையறாத) அத்துவைத உணர்வைக் கட்டிக்க காப்பாற்றுங்கள். 

அந் நிலையில்தான் இந்திரியங்களின் இயல்பான நாட்டங்கள் சாயியின் ரூபத்தில் நிச்சயமாக ஒன்றும். நீரிலிருந்து எழும் அலைகள் நீரிலேயே ஒடுங்கிவிடுகின்றன அல்லவோ?  அவ்வாறே இந்திரியங்களின் கொட்டங்களும் ஒடுங்கும்! 

அந் நிலையில்தான் ஞானத்தை நாடுபவர்கள் விநோதத்தால் விளையும் மகிழ்ச்சியையும் உல்லாசத்தையும் பெறுவர்;  கவிதை விரும்பிகள் பாடல்களிலுள்ள சொற்பொழிவையும் ஒலிநயத்தையும் பொருட்சுவையையும் ரசிப்பர்.  இவ்வாறாக, இக் காவியம் எல்லாருக்கும் ஆனந்தம் அளிக்கும்!

முன்னதாக, இந்த சத் சரித்திரத்தின் முப்பத்தொன்பதாவது அத்தியாயத்தில், ஓர் உத்தமமான பக்தருக்கு சமர்த்த சாயி உபதேசம் அளித்த விவரம் எடுத்துரைக்கப்பட்டது. 

ஆக, பாபாவின் அருகில் அமர்ந்துகொண்டு அந்த பக்தர் ஸ்ரீமத் பகவத் கீதையின் நான்காவது அத்தியாயத்தை ஆரம்பத்திலிருந்து ஒப்பித்துக்கொண்டிருந்தார். 

பாபாவுக்குப் பாதசேவை செய்துகொண்டே மெல்லிய குரலில் கீதையை ஓதிக்கொண்டிருந்தார். முப்பத்துமூன்றாவது சுலோகம் முடிந்தபின் முப்பத்துநான்காவது சுலோகத்தை ஆரம்பித்தார். 

லயமடைந்த நிச்சலமான மனத்துடன் சன்னமான குரலில் ஓதுகை நிகழ்ந்ததால், மற்றவர்களுக்கு அது கேட்கவில்லை.  ஆகவே, ஓதுகையின் மூலநூல் எதுவென்றும் தெரிந்துகொள்ள முடியவில்லை. 

முப்பத்துநான்காவது சுலோகத்தை அவர் ஆரம்பித்தபோது, அந்த உத்தமமான பக்தருக்கு சன்மார்க்கத்தைக் காட்டி அனுக்கிரஹம் செய்யவேண்டும் என்ற எண்ணம் பாபாவின் இதயத்தில் உதித்தது. 

அந்த பக்தரின் பெயர் நானா (நாராயண கோவிந்த சாந்தோர்கர்).  பாபா அவரிடம் கேட்டார், "நானா, நீர் எதை முணுமுணுவென்று ஓதுகிறீர் ஓய்?  அதை வாய்திறந்து ஸ்பஷ்டமாக (தெளிவாக) ஓதினால் என்ன?

"இத்தனை நேரமாக முணுமுணுவென்று ஏதோ ஓதுகை நடப்பதை நான் கவனித்துக்கொண்டிருக்கிறேன்.  ஆனால், சொற்களின் ஒலி தெளிவாக வெளிப்படவில்லை.  ஓய்! இவ்வாறு ஓதுவதன் சூக்குமம் என்ன?"

 


 

Thursday, 5 March 2026

 ஷீர்டி சாயி சத்சரிதம் 


அவரை சூரியனுக்கு உபமானமாகக் கூறமுடியாது.  ஏனெனில், சூரியன் மாலையில் மறைந்துவிடுகிறான்.  சந்திரனுக்கும் ஒப்பிடமுடியாது.  ஏனெனில், சந்திரன் தேய்ந்து வளர்பவன்.  சாயி எப்பொழுதும் சம்பூர்ணமானவர் அல்லரோ!

அவருடைய பாதங்களில் ஹேமாட் பணிவுடன் வணங்குகிறேன்.  இந்தக் கதையை சிரத்தையுடனும் குவிந்த மனத்துடனும் ஆர்வத்துடனும் கேட்கும்படி கதை கேட்பவர்களை அன்புடன் வேண்டுகிறேன். 

நிலத்தைச் சீர்பட உழுதாகிவிட்டது. விதைகளையும் விதைத்தாகிவிட்டது .  ஆயினும், கிருபை நிரம்பிய மேகங்களாகிய நீங்கள் மழையாகப் பொழியாவிட்டால், விதைகள் முளைத்து, விளைச்சல் காண்பது எவ்வாறு?

ஞானியரின் கதைகள் காதில் விழும்போது, பாதகங்கள் விலகும்.  கதை கேட்பவர்களுக்குப் புண்ணியம் விளையும்.  ஆஹா! அந்த அமோகமான விளைச்சலை அறுவடை செய்து லாபமடையுங்கள்!

சாலோக்யம் (இஷ்ட தேவதையின் உலகத்தில் உறைதல்)   போன்ற நான்கு வகை முக்திகளின்மீது நமக்கு ஆசை ஏதும் இல்லை.  சாயியிடம் நிச்சலமான பக்தி நிலவட்டும்.  அதுவே நாம் அடையக்கூடிய பரம பிராப்தி (சிறப்பான பெரும்பேறு).

அடிப்படையாகச் சிந்தித்தால், நாம் கட்டுப்பட்டவர்கள் அல்லர்! ஆகவே, விடுதலைக்கும் (முக்திக்கும்) நமக்கும் என்ன சம்பந்தம்?  'ஞானிகளின் மீது பக்தி' என்னும் விழிப்புணர்ச்சி ஏற்படட்டும். அதுவே, இதயத்தைப் பரிசுத்தமாகிவிடும். 

'நான்/நீ' என்னும் எண்ணத்திலிருந்து விடுபடுவோமாக.  அதுவே நமக்கு இயல்பான நிலையை அளிக்கும்.  அதுவே நமக்கு பேதமில்லாத பக்தியையும் அளிக்கும்.  சாயியிடம் நாம் வேண்டுவது இதையே. 

போதியைப் பாராயணம் செய்பவர், படிப்பதற்காகப் புத்தகத்தைக் கையில் எடுக்கும்போது, வாசிக்கப்படும் விஷயத்தையும் வாசிக்கும் செய்கையையும் தம்மையும் ஒன்றாகக் காணவேண்டும்.  இதுவே கதை கேட்பவர்களுக்கு யான் விநயமாக விடுக்கும் வேண்டுகோள். 

ஹேமாட் பந்தை விட்டுத்தள்ளுங்கள்;  காரணம், சத் சரித்திரத்தை இயற்றியவர் அவர் அல்லர். பக்தர்களின் நன்மைக்காக சாயியால் உபயோகப்படுத்தப்பட்ட ஒரு கருவி மாத்திரமே அவர். 

தெய்வாதீனமாகக் கண்டெடுத்த முத்துசிப்பையைத் தூக்கியெறிப்பவர் அதுனுள் இருக்கும் முத்தையும் இழந்துவிடுகிறார்.  நன்மை பயக்கக்கூடிய விஷயங்களில் எவரும் உதாசீனம் காட்டக்கூடாது.  அரசமரம் எப்படி உற்பத்தியாகியிருந்தால் நமக்கென்ன? நிழலை அனுபவித்தால் போதுமே! 


 

 

Thursday, 26 February 2026

 ஷீர்டி சாயி சத்சரிதம் 


சம்சார இருளை அகற்றும் சூரியனே! ஆத்மானுவபம் பெட்ரா ஞானிகளின் மணிமகுடமே! பக்தர்களின் மனமாகிய சகோர பட்சிகளுக்குச் சந்திரனே; கற்பகத்தருவே! குருபரராகிய (பரமகுருவாகிய) தேவரீரை வணங்குகின்றேன். 

குருராயரின் மஹிமை எல்லையற்றது.  அதை வர்ணிக்கப் புகும் முயற்சியில் பேச்சு கர்வம் இழக்கிறது.  ஆகவே, குருவின் பாதங்களில் தலையைச் சாய்த்து ஊமையன் போல் மௌனமாக இருப்பதே நன்று. 

பூர்வஜென்மத்தில், குறைபடாத, பூரணமான தவம் செய்யாதவனுக்கு உலகியல் வாழ்வின் மூன்று தாபங்களையும் அழிக்கக்கூடிய ஞானியின் தரிசனம் கிடைக்காது. 

ஆன்மீக முன்னேற்றம் அடையவோ, மோட்சம் சித்திக்கவோ, தம்முடைய பொதுவான நலன் கருதியோ, ஒரு ஞானிக்கு அணுக்கத் தொண்டர் ஆகிவிட்டவர் வேறெதையும் நாடமாட்டார். 

ஞானியரின் கூட்டுறவு பெரும் பாக்கியமாகும். அதன் மஹிமையை யாரால் வர்ணிக்க முடியும்?  நல்ல பக்தர்களுக்கு விவேகத்தையும் பற்றின்மையையும் பரம சாந்தியையும் அது கொண்டுவருகிறது. 

சாயி பிரபஞ்சப் பேருணர்வின் உருவே ஆவார்.  தோன்றா நிலையிலிருந்து தோன்றிய நிலைக்கு மாறியவர்.  அவருடைய பற்றற்ற தன்மையை யாரால் எந்த அளவுக்கு அறுதியிட்டு விவரிக்க முடியும்?

கிருபாளுவான சாயி, விசுவாசமுள்ள பக்தர்களுக்கும் பிரேமையுடன் கேட்பவர்களுக்கும் தம்முடைய சுவையான சரித்திரத்தை அன்புடன் சொல்கிறார். அவர்களுக்கு இந்தச் சரித்திரம் ஒரு கோயில் அன்றோ!

----------------------------------------------------------------------------

சாயியின் கை எவருடைய சிரத்தில் வைக்கப்படுகிறதோ, அவருடைய அகம்பாவம் தவிடுபொடி ஆகிறது.  'அதுவே நான்' என்னும் உணர்வு மனத்தில் உதிக்கிறது.  பார்க்கும் இடமெல்லாம் ஆனந்தம் நிரம்பி வழிகிறது. 

பாமரனாகிய என்னுடைய சக்தி எம்மாத்திரம்?  அவருடைய கீர்த்தியை என்னால் எப்படிப் பாடமுடியும் ? பக்தர்களின் மீது உண்டான பிரீதியால் அவரே இந்தப் போதியைக் கிருபையுடன் வெளிப்படுத்தியிருக்கிறார். 

அந்த சாயியின் பாதங்களில் நான் விழுந்து வணங்குகின்றேன்.  கதை கேட்பவர்களுக்கு வந்தனம் செய்கிறேன்.  ஞானியரையும் சாதுக்களையும் சான்றோர்களையும் வணங்குகின்றேன்.  அவர்கள் அனைவரையும் பிரேமையுடன் ஆலிங்கனம் செய்கிறேன். (தழுவுகிறேன்)

சாயி சஹஜமாகவும் வேடிக்கையாகவும் பேசுவார். ஆனால், அந்த வார்த்தைகளின் கர்ப்பத்தில் பூரணமான நீதிநெறிகள் நிறைந்திருக்கும். எவர் நித்தியாசந்தியில் மூழ்கியிருந்தாரோ, அவரை தியானம் செய்பவர்கள் மகத்தான அனுபங்களைப் பெறுகின்றனர். 

 


 

Thursday, 19 February 2026

 ஷீர்டி சாயி சத்சரிதம் 

ஓம் ஸ்ரீ விநாயகனே போற்றி! ஸ்ரீ சரஸ்வதியே போற்றி!
ஸ்ரீ குருமஹாராஜனே போற்றி! குலதேவதைக்கும் ஸ்ரீ சீதாராமச்சந்திரனுக்கும் 
என்னுடைய பணிவான வணக்கங்கள்.  பூஜ்யகுரு ஸ்ரீசாயிநாதனை 
பக்தியுடன் சிரம் தாழ்த்தி வணங்குகின்றேன். 

எனக்கு இந்தப் பிறவியை அளித்த அன்னையும் தந்தையும் செய்திருக்கும் உபகாரத்திற்கு ஓர் எல்லையே இல்லை. அன்னையின் மலக்குடலில் ஒரு புழுவாக நான் ஜனிப்பதைத் தவிர்த்து, எனக்கு மனிதப் பிறவியை அளித்திருக்கின்றனர். 

குருடனாகவோ முடவனாகவோ ஊமையனவாகவோ செவிடனாகவோ ஒற்றைக் கண்ணனாகவோ திக்குவாயனாகவோ பிறந்து, நான் என் தாயாருக்குப் பயனற்ற பிரசவ வேதனையைக் கொடுக்கவில்லை.  ஆரோக்கியமான சிசுவாகவே பிறந்தேன். 

எவர்களுடைய பாதங்களில் தேவர்களும் வணங்குவார்களோ, அத்தகைய உன்னதமான பிராமண குலத்தில் பிறந்திருக்கிறேன்.  இது எனக்கு ஈசுவரனின் கிருபையால் கிடைத்தது; முழுக்க முழுக்க இறையருளால் விளைந்தது. 

நாம் கோடானுகோடி ஜென்மங்கள் எடுக்கிறோம்.  ஒவ்வொரு பிறவியிலும் ஒரு மாதா பிதா. ஆயினும், ஜனனமரணச் சுழலிருந்து நம்மை விடுவிக்கும் பெற்றோர் அமைவது அரிதினும் அரிது. 

ஜன்மத்திற்கு காரணமானவர் முதலாவது தந்தை.  பூணுல் அணிவித்துப் பிரம்மோபதேசம் செய்பவர் இரண்டாவது தந்தை.  அன்னமளித்துப் பாவிப்பவர் மூன்றாவது தந்தை.  பயத்திலிருந்தும் பீதியிலிருந்தும் விடுவிப்பவரோ நான்காவது தந்தை. 

உலக வாழ்வில் இவர்கள் நால்வருமே முக்கியமானவர்கள்.  ஆயினும், கிருபாளுவான (அருளுடையவரான) சத்குருவுக்கு இணையான தந்தை வேறெவரும் இல்லை.  சத்குருவின்  அற்புதமான லீலைகளைப் பாருங்கள்!

அன்னையின் கர்ப்பத்தில் வீரியத்தைப் பொழிந்து, யோனித்துவாரம் வழியாகக் குழந்தையைப் பிறக்கச் செய்பவர் உலகியல் ரீதியில் மாத்திரமே பிதா.  ஆனால், சத்குருவோ உலகநடையிலிருந்து வேறுபட்ட பிதா. 

சத்குரு, வீரியத்தின் சம்பந்தமே இன்றி, நீசமான யோனித்துவாரத்தின் சம்பந்தமும் இன்றித் தம் புத்திரனக்குப் பிறவி அளிக்கிறார். பூரணமாக அனுக்கிரஹம் செய்கிறார். 

நம்மை ஜனனமரணச் சுழலிலிருந்து விடுவிப்பவரும் கருணை நிரம்பியவரும் ஞானப்பிரகாசத்தை அளிப்பவரும் வேதங்களில் மறைந்திருக்கும் பேருண்மைகளை விளக்கி நமக்குப் புரியவைப்பவரும்  எங்கும் நிறைந்திருப்பவருமான சத்குருவை  நான் வணங்குகிறேன். 


 

Thursday, 12 February 2026

 ஷீர்டி சாயி சத்சரிதம் 

மெய், வாய், கண், மூக்கு, செவி ஆகிய புலனுறுப்புகளை முரட்டுக் குதிரைகளாகவும் தொடுவுணர்வு, சுவை, பார்வை, வாசனை, ஓசை ஆகிய புலனின்பங்களை அளிக்கக்கூடிய எல்லா விஷயங்களையும் நரகத்திற்கு மார்க்கங்களாகவும் கருதவேண்டும். 

விஷயசுகங்களின் மீது சிறிதளவு பற்று இருந்தாலும் பரமார்த்த (வீடுபேறு) சுகத்தை அது நாசம் செய்து விடும்.  ஆகவே, அதை மிச்சம் மீதியின்றித் தியாகம் செய்துவிடுங்கள். அப்பொழுதுதான் உங்களுக்கு மோட்சம் கிடைக்கும். 

கை, கால் முதலிய புறவுறுப்புகள் பற்றிழந்துவிட்டாலும், அந்தக்கரணம் ஏங்குமானால் ஜனன மரணச் சுழற்சிக்கு முடிவேற்படாது.  விஷயசுகங்கள் அவ்வளவு அபாயகரமானவை!

விவேகமுள்ள சாரதி கிடைத்தால், லகான்களை லாவகத்துடன் கையாள்வார். அப்பொழுது, புலனின்பங்களாகிய குதிரைகள் கனவிலும் சிறிதளவும் நெறிதவறிச் செல்லமாட்டா. 

சமநிலை கலையாத மனமுடையவனும் அடக்கும் சக்தி பெற்றவனும் உஷாரானவனும் தொழில்நுட்பம் தெரிந்தவனும் சாமார்த்தியசாலியுமான மனிதன் தேரோட்டியாகக் கிடைக்கும் பாக்கியம் ஏற்படுமானால், விஷ்ணு பதம் வெகுதூரத்தில் இருக்கிறது?

அந்தப் பதமே பர பிரம்மம் (முழுமுதற்பொருள்). வாசுதேவன் என்பது அதற்கு மற்றொரு பெயரே. அந்தப் பதமே அனைத்திலும் சிறந்த, உயர்ந்த, என்றும் நிலையான, அப்பாலும் கப்பாலாய் இருக்கும் நிலை. 

ஆக, இந்த அத்தியாயம் முடிவடைகிறது.  அடுத்தாற்போல்  வரும் அத்தியாயம் இதைவிட வசீகரமானது. சான்றோர்களாகிய பக்தர்களின் மனத்தைக் கவர்ந்து இழுக்கும். கிரமமாக கேளுங்கள். 

பிரிவதற்கு முன்பாக - சிருஷ்டியை நிர்வகிப்பவரும் புத்திசக்தியைத் தூண்டிவிடுபவரும் எவரோ, அந்த சத்குருவின் சேவடிகளில் ஹேமாட் தலைசாய்த்து வணங்குகிறேன். 

எல்லாருக்கும் க்ஷேமம் உண்டாகட்டும்! ஞானிகளாலும் சான்றோர்களாலும் உணர்வூட்டப்பட்டு, சாயிபக்தன் ஹேமாட் பந்தால் இயற்றப்பட்ட, 'ஸ்ரீ சமர்த்த சாயி சத் சரித்திரம்' என்னும் காவியத்தில், "மஹானை சோதித்தல் - மனத்தை அடக்குதல்' என்னும் நாற்பத்தொன்பதாவது அத்தியாயம் முற்றும். 

ஸ்ரீஸத்குரு   சாயிநாதருக்கு அர்ப்பணம் ஆகட்டும். 

சுபம் உண்டாகட்டும். 


 

Thursday, 5 February 2026

 ஷீர்டி சாயி சத்சரிதம் 


அர்த்தத்தைத் தெளிவுப்படச் சொல்ல நானாவுக்கு ஜீவன் இல்லை. ஆகவே, அவர் சுற்றிவளைத்து ஏதேதோ பதில் சொன்னார்.  மாதவராவின் சந்தேகம் மேலும் வலுத்தது!  அவருடைய மனம் நிம்மதியாக இருக்க மறுத்தது. 

பின்னர், மாதவ்ராவ் செய்த நிர்பந்தத்தால், நானா இதயம் திறந்தார்.  மசூதியில் நடந்ததனைத்தையும் விவரமாக எடுத்துரைத்தார்.  மாதவராவுக்குப் புதிர் விடுபட்டது! 

பாபா எவ்வளவு உஷாராக இருந்தார்!  யாருடைய சிந்தனை எங்கே சிதறினாலும், எவர் அனைவருக்கும் சாட்சியாக நிறைந்திருக்கிறாரோ, அவருக்கு எல்லா நிகழ்வுகளும் பிரத்யட்சமாகத் (கண்கூடாக) தெரிகின்றன!

இந்த வியப்பூட்டும் விருத்தாந்தத்தை கேட்டு நீங்கள் ஆச்சரியம் அடைந்திருப்பீர்கள்.  இதன் சாராம்சத்தின்படி ஒழுகினால் மிகச் சிறந்த உடைமைகளை ஆகாத சமநிலையும் கம்பீரமும் பெருகும். 

மனம் சஞ்சல ஜாதியைச் சேர்ந்தது.  அதைக் கட்டவிழ விடக்கூடாது.  புலன்கள் கட்டுக்கடங்காமல் தலைதெறிக்க ஓடலாம்.  ஆனால், சரீரம் பொறுமை காக்க வேண்டும். 

புலன்களை நம்பக்கூடாது.  ஆகவே, புலனின்பங்களில் நாட்டம் வைக்கக்கூடாது.  கொஞ்சம்கொஞ்சமாக அப்பியாசம் செய்தால் மனத்தின் சஞ்சலம் போய்விடும். 

புலன்களுக்கு என்றும் அடிமையாகாதீர். அவற்றை முழுமையாகக் கட்டுப்படுத்த முடியாமல் போகலாம்.  ஆயினும், நியமிக்கப்பட்ட விதிகளின்படியும் முறையாகத் திட்டமிட்டும் சரியான சமயத்தில் அவற்றைக் கட்டுப்படுத்துதல் அவசியம். 

ரூபம் என்னும் விஷயம் கண்களின் பார்வைக்குச் சொந்தம்.  அழகை பயமின்றி ரசிக்க வேண்டும். இங்கு நாணத்திற்கு என்ன வேலை?  ஆனால், துர்புத்திக்கு (கெடுமதிக்கு) இடம் கொடுக்கக்கூடாது. 

இறைவனின் படைப்பில் உள்ள அழகை அப்பழுக்கற்ற மனத்துடன் ரசிக்கலாம்.  தூயமனம் இயல்பாகவே புலன்களைக் கட்டுக்குள் கொண்டுவரும்.  இன்பங்களைத் துய்ப்பதென்பது மறந்துபோகும். 

தேரைச் சரியான இலக்குக்கு ஓட்டிச்செல்வதற்குத் தேரோட்டிதான் மூலகாரணம். அதுபோலவே, நமக்கு நன்மை செய்யும் புத்தி, உஷாராகச் செயல்பட்டு புலங்களின் இழுப்புகளைக் கட்டுக்குள் வைக்கும். 

தேர் எங்கே செல்லவேண்டும் என்பதைத் தேரோட்டிதான் நியமனம் செய்கிறான்.  அவ்வாறே, புத்தி, புலன்களைக் கட்டுப்படுத்தி, சரீரம் தன்னிஷ்டம்போல் செயல்படாமலும், மனம் சஞ்சலத்திலேயே மூழ்கிப்போகாமலும் நம்மைக் காப்பாற்றுகிறது. 

சரீரம், புலன்கள், மனம், ஆகியவற்றுடன் கூடிய ஜீவன், இன்பங்களையும் துன்பங்களையும் அனுபவித்து முடித்த பிறகு, விஷ்ணுபதத்தை அடைகிறது. இவ்வாறு நிகழ்வது புத்தியின் சாமர்த்தியத்தினால்தான்!

 


 

Thursday, 29 January 2026

 ஷீர்டி சாயி சத்சரிதம் 


வந்தனம் செய்தபோது, அவர்களுள் ஒரு பெண்மணி தம் முகத்திரையைச் சற்று விலக்கினார்.  பேரெழில் வீசிய அந்த முகத்தைக் கண்ட நானா தம் உள்ளத்துள் மோகங்கொண்டார். 

சுற்றியிருந்தவர்கள் கவனித்துக்கொண்டிருந்தபோது அவ்வழகிய முகத்தை உற்றுப் பார்ப்பதற்கு நானா சங்கடப்பட்டார்.  தாம் எவ்வாறு நடந்துகொள்ள வேண்டும்? மோகமென்னவோ கட்டுக்கடங்கவில்லை!

பாபாவின் முன்னிலையில் நானா பெருங்கூச்சமடைந்தார். தலையை நிமிர்த்த முடியவில்லை.  ஆனாலும், தயங்கித் தயங்கி கண்வீச்சு அந்தத் திசைக்குத் திரும்பியது.  நானா இருதலைக்கொள்ளி எறும்பானார். 

இதுவே நானாவின் உள்மன நிலை. எல்லோருக்குள்ளும் உறையும் பாபா இதை அறிந்துகொண்டார்.  மற்றவர்களால் இதை எப்படி உணர முடியும்?  சொல்லுக்கு என்ன அர்த்தம் என்றுதான் அவர்களால் மல்லுக்கட்ட முடியும்!

நானாவின் உள்மனத்தையும் அதில் நடந்துகொண்டிருந்த போராட்டத்தையும் நன்கு உணர்ந்த பாபா அவரை சுயநிலைக்குக் கொண்டுவருவதற்காக ஓர் உபதேசம் செய்தார். அதைக் கேளுங்கள். 

"நானா, எதற்காக மனக்கலக்கம் அடைகிறீர்? எது தன்னுடைய தர்மத்தின்படி இயல்பாகச் செயல்படுகிறதோ, அது யாராலும் தடுத்து நிறுத்தப்படக்கூடாது. ஏனெனில், அதில் கேடு ஒன்றும் இல்லை.-

"பிரம்மதேவருடைய சிருஷ்டியைப் பார்த்து நாம் ரசிக்காவிட்டால், அவருடைய புத்தி சாதுர்யமும் திறமையும் வீணாக்கப் போய்விடும்.  நாளடைவில் எல்லாம் சரியாகிவிடும். -

"வாயிற்கதவு திறந்திருக்கும்போது புறக்கடைக் கதவை ஏன் அணுகவேண்டும்? மனம் தூய்மையாக இருந்தால், சங்கடம் ஏதும் இல்லை.-

"மனத்தில் கெட்ட எண்ணம் இல்லாதவன், எதற்காக, யாரைப் பார்த்து பயப்பட வேண்டும்? கண்கள் அவற்றின் வேலையாகிய காண்பதைச் செய்கின்றன. அதுபற்றி நீர் ஏன் சங்கடப்படுகிறீர்?"

இயல்பாகவே விஷய ஆர்வம் அதிகம் கொண்ட மாதவ்ராவ், அப்பொழுது அங்கிருந்தார். தம்முடைய ஆர்வத்தைப் பூர்த்தி செய்துகொள்வதற்காக, "இந்தப் பேச்சுக்கு என்ன அர்த்தம்" என்று நானாவைக் கேட்டார். 

இவ்வாறு மாதவ்ராவ் கேட்டபோது நானா சொன்னார், "ஓய், கொஞ்சம் நிழலும்! நாம் வாடாவுக்குத் திரும்பிச் செல்லும்போது, பாபா விளம்பிய வார்த்தைகளில் உட்கருத்து என்னவென்பதை விவரமாகச் சொல்கிறேன்".

வழக்கம்போல க்ஷேமகுசல விசாரிப்பு முடிந்தது. நானா சமர்த்த சாயியை வந்தனம் செய்தார். தாம் தங்கியிருந்த இடத்திற்கு நானா திரும்பியபோது மாதவராவும் அவருடன் சென்றார்!

உடனே மாதவ்ராவ் வினவினார், "நானா, நாளடைவில் எல்லாம் சரியாகிவிடும் என்று பாபா சொன்னதற்கும், அதற்கு முன்பு சொன்ன வார்த்தைகளுக்கும் என்ன பொருள் என்பதை எனக்குத் தெளிவுப்படச் சொல்லுங்கள்".