valam tharum vallal

valam tharum vallal
shri shird sai baba

Thursday, 28 May 2026

 ஷீர்டி சாயி சத்சரிதம் 


ஆதியில் அது புலன்களின் உணர்வுக்கு அப்பாற்பட்ட பொருளாக இருந்தது.  ஆயினும், பேசும் சக்தி அதை புத்தியால் கிரஹிக்க கூடிய பொருளாக மாற்றியது.  அதன் பிறகே அது மனத்துள் புகுந்து ஓங்காரமாக வெளிப்பட்டது. 

எவர் ஓங்கார பிரம்மத்தை தியானம் செய்தவாறு இறைவனை நினைத்துக்கொண்டே தேகத்தை உதறுகிறாரோ, அவர் பிறவி எடுத்ததன் பயனை அடைகிறார். 

ஓங்காரமென்னும் ஒலிவடிவ பிரம்மத்தின் மூலமாகத் தோன்றாநிலையில், இருந்த பொருள் தன்னையே தோற்றுவித்துக்கொண்டது.  தோன்றாநிலையிலிருந்த பொருளிலிருந்து 'மஹத்' தத்துவம் (அறிவுத் தத்துவம்) தோன்றியது.  தன்னுடன் அஹம்பாவத்தையும் (நான் என்னும் எண்ணம் - உள்ளச் செருக்கு) கொணர்ந்தது!

அஹங்காரத்தில் பஞ்சதன்மாத்திரைகள் இருக்கின்றன. அவற்றிலிருந்து பஞ்ச பூதங்கள் வெளிவருகின்றன.  பஞ்ச பூதங்களின் வயிற்றிலிருந்து இவ்வுலகம் பிறக்கிறது. 

நாம் இவ்வுலகத்தில் காணும் உருவங்களும் லட்சணங்களும், அஞ்ஞானம் மாயை இவற்றின் வெளிப்பாடுகளே.  அஞ்ஞானத்தை அழிக்கும் நிமித்தம், அதைப்பற்றி விவரிப்பது அவசியமாகிறது. 

மிகத் தூயதும் நிர்மலமானதுமான ஆத்மாவின் சுய சொரூபத்தையும் அதிலிருந்து வேறுபட்ட சபலையும் கலக்க முடியாது. 

லட்சிய பிரம்மம் வேறுபட்டது என அறியவும்.  அது, வார்த்தைகளால் விவரிக்க முடிந்த ப்ரம்மத்திலிருந்து மிகவும் வேறுபட்டதாகும்.  ஆதலால்,  இந்த அஞ்ஞானத் திரைகள் உபதேச பலத்தால் அகற்றப்படவேண்டும். 

தூக்கத்தில் ஏற்படும் கனவின்போது கண்கள் மூடியிருந்த போதிலும், மனம் மூன்று உலகங்களையும் சுற்றிவருகிறது.  இவை அனைத்திற்கும் அஞ்ஞானமே காரணம். 

ஒரு பொருள் பார்ப்பதற்கு ஒன்றாகத் தெரிகிறது.  ஆனால், உண்மையில் அது வேறொரு பொருள். உண்மையில் கயிறு; ஆனால், கண்ணுக்குத் தென்படுவது பாம்பு! தன்னுள் வெள்ளி இருப்பதுபோலக் கிளிஞ்சல் தோற்றமளிக்கிறது அன்றோ! 

காண்பது சூரியனின் ஒளிகிரணங்களைத்தான்.  ஆயினும், மக்கள் அதைக் கானல் நீர் என்று சொல்கின்றனர்.  இது மாயையின் விளையாட்டு.  இதன் எதிரில் ஞானிகளும் பலமிழந்து விடுகின்றனர். 

ஒரு தீவட்டியைக் கையிலேந்தி வேகமாக யாராவது சுழற்றினால், அக்கினி வட்டம் போன்ற ஒரு தோற்றம் உருவாகிறது.  இதுவும் மாயையின் விளையாட்டு. 

உண்மையில் அது ஒரு தீப்பந்தம்.  சக்கர உருவில் தீ இருப்பதற்கு இடமேயில்லை.  அதுபோலவே, மாயையும் மோகமும் சேர்ந்துகொண்டு தேவையில்லாத இந்த உலகியல் வாழ்வை உற்பத்தி செய்திருக்கின்றன. 

இவ்வாறான நிர்த்தாரணத்தால் பிரம்மையை ஒட்டிவிட்டால், உலகியல் வாழ்வு நொடிப்பொழுதில் மங்கிப்போகிறது.  'நான் இவ்வுடல்தான்' என் வீடு' 'என் மனைவி' ஆகியன எல்லாம் ஒரு பயனற்ற பயிற்சியின் தாழ்நிலைக்கு தள்ளப்படுகின்றன. 

புத்திரன், ஆடுமாடுகள் போன்ற ஆசாபாசங்களால் முழுக்க முழுக்க சிக்கிக்கொண்டவர்கள், தங்களைப் பண்டிதர்களென்றும் ஞானிகளென்றும் சொல்லிக் கொண்டாலும், லவலேசமும் (சிறிதளவும்) சுகமடையமாட்டார்கள்.